Bio Data !!

27 January, 2025

ஒருவர் மேல் நமக்கு முழு நம்பிக்கை வந்து விட்டால் "அவர் செய்தால் சரியாக இருக்கும்" என்று நம்புவோம். அவர் செய்வது நமக்கு உடன்பாடு இல்லை என்றால் கூட மறுத்துச் சொல்லாமல் அவர் செய்வதன் காரணம் நமக்குப் புரியவில்லை என்று பொறுமையாய் அமைதியாய் இருப்போம். அதற்கு நமக்கு அவர் மேலும், அவர் செயல் திறன் மேலும், அவர் நேர்மை மேலும் முழு நம்பிக்கை வர வேண்டும். அப்பொழுது அந்த உறவு சுமுகமாய் போகும். அந்த காலத்தில் திருமணங்கள் அப்படித் தான் நடந்தன. கணவன் மனைவிக்கு இடையே அதிக வயது வித்தியாசம். படிப்பில் வித்தியாசம். பக்குவத்தில் வித்தியாசம். கண்ணை மூடி நம்பினார்கள். சில நேரங்களில் நம்பியவர் தவறு செய்தாலும் சகித்துச் சென்றார்கள். இப்போ அந்த வித்தியாசம் நிரவப்பட்டு குறைந்து போனதால் ஒருவருக்கு மற்றவர் மேல் முழு நம்பிக்கை இல்லை. அதனாலேயே பிணக்கு. பிரிவு. நான் நம் முன்னோர் முழு நம்பிக்கை வைத்தது சரி என்றோ தவறு என்றோ வாதிட வரவில்லை. காரணங்களை சிந்திக்கிறேன். பிள்ளைகளுக்கு பெற்றவர் மேலேயே அந்த நம்பிக்கை வைக்க முடிவதில்லை. காரணம் அவர்களை விட தமக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறார்கள். வெகு சிலவாய் ஒரு சில இடங்களில் பெற்றோரே குழந்தைகளுக்கு துரோகமும் இழைக்கின்றனர். தன்னம்பிக்கை மிகுந்துள்ள அவர்களுக்கு ஒரு நேரத்தில் யாருமில்லாமல் நிர்க்கதியாய் நிற்பது போன்ற உணர்வு வரும். இன்று யாரோ ஒருவர் மேலாவது வருத்தமோ கோபமோ சலிப்போ வராமல், அவர் சொன்னால்/ செய்தால் சரியாகத் தான் இருக்கும், என்ற நம்பிக்கை வைக்க முடிந்தால் பிறவிப் பயன் அடைந்து விட்டோம் என்று அர்த்தம். என்ன நான் சொல்றது. அப்படிப்பட்ட ஒருவரையாவது சம்பாதித்து விட வேண்டும். அது முடியாததாலேயே பலரும், முக்கியமாய் பெண்கள் கடவுள் மேல் நம்பிக்கை வைக்கிறோம். அவர் செய்தால் சரியாய் இருக்கும். இல்லை அவரே சரி செய்வார் என்ற நம்பிக்கை தான் பல பெண்கள் சாவை நாடாமல் வாழ்வதற்கு முக்கிய காரணம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!