chella நாய்க்குட்டி
15 November, 2025
#காதலின்நான்காம்நிலை
காதலின் நான்காவது நிலையில் போராட்டங்கள் அதிகரிக்கும். இருவருக்கும் தினசரி வாழ்க்கையே திண்டாட்டமாக இருக்கும். எதிர்ப்புகள் வலுக்கும். அதை நேர் கொள்ள இருவரும் இறுக்கமாக கைகளைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் தேவை தானா என இருவரில் ஒருவர் நினைத்தாலும் அங்கே காதல் பணால்.
போராட்டங்கள் அதிகரிக்கும் போது ஒரு சில புல்லுருவிகள் உள் நுழையப் பார்க்கும். அது வரை பெரிதாய் ரசிக்காமல் இருந்தவர்களைக் கூட வேறொருவர் காதலிக்க ஆரம்பித்ததும் தனக்கு வேண்டும் எனத் தோன்றும். எப்படியாவது தட்டிப் பறிக்கத் துடிக்கும்.
இந்தப் போராட்டங்கள் பல ரூபம் எடுத்து வரும். ஆணவக் கொலைகளாய். பெற்றோரின் உணர்ச்சி மிகுந்த ப்ளாக் மெயில்களாய், மொட்டை கடிதாசிகளாய் , அனானிமஸ் கால்களாய். அன்பு என்பது மிகவும் அழுத்தமாக இருந்தால் மட்டுமே இந்த நிலையைக் கடந்து திருமணம் வரை செல்ல முடியும்.
அப்பாடா காதலின் நிலைகளை ஒரு வழியா முடிவுக்கு கொண்டு வந்து திருமணத்தில் விட்டுட்டீங்களான்னு கேட்டா இன்னும் முடியலங்க. இன்னும் இருக்குது.
13 November, 2025
காதல் தன் மூன்றாம் நிலைக்கு வரும் போது. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு முழு நம்பிக்கை வருவதால் தம் காதலை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் துணிவோம். இதற்கு முன்பே பலர் நம்மைக் கவனித்திருப்பார்கள். நம் உடைகளில் காட்டும் தனிக் கவனம். நம் முகங்களில் ஏற்படும் பொலிவு. இப்படி ஒளிந்து மறைந்து பூக்கும் மலர் கூட தன் மணத்தால் தன்னிருப்பைக் காட்டிக் கொடுப்பது போல நம் உள்ளத்தில் பூத்திருக்கும் அன்"பூ" நம்மை வெளிப்படுத்தி இருக்கும்.
இப்போது எரிமலை தன் அக்கினிக் குழம்பை வெளியேற்றத் தொடங்கும். ஒருவரைப் பற்றி ஒருவரிடம் வதந்"தீ" பற்ற வைக்கத் தொடங்குவார்கள். "இவங்க அவ்வளவு நல்லவங்க கிடையாது. கவனமா பழகுங்க" என அறிவுறுத்தத் தொடங்குவார்கள்.
இந்த காதலுக்கு வரும் முட்டுக்கட்டை பல விதமாகத் தொடங்கும். ஒன்று நேரிலேயே குற்றங்குறைகளைச் சொல்வார்கள். அதை இருவரில் ஒருவர் ஏற்றுக் கொண்டாலும் காதல் அங்கேயே சாகும். இதில் அனேகமாக பெண்கள் வெளிப்படையாகவே கோபப்பட்டு பிரிவார்கள். ஆண்கள் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பது கௌரவக் குறைச்சல் என்பதால் அமைதியாக , கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உறவை அறுத்துக் கொள்வார்கள்.
காரணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமலே தமக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளாமலே "எதுக்கு வம்பு" என சத்தமில்லாமல் உறவை அறுத்துக் கொள்பவர்கள் உண்டு. ஏன் அறுத்துக் கொள்வார்கள் என்கிறேன் என்றால் பூத்து மணம் வீசிய அன்பு பறித்து எறியப்பட்டதன் காரணம் தெரியாதவர்களுக்கு அது ரணம். உயிர் பிரியும் கொடுமை.
இருவருமே ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கையோடு இருந்தால் பின் அவர்கள் வீட்டுக்குச் செய்தி போகும். பல சமயங்களில் அதற்கு முன்பே அரசல் புரசலாய் செய்தி எட்டி இருக்கும். வெளிப்படையாய் கண்டிக்க சாட்சியங்களுக்கு காத்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.
இருவரில் ஒருவர் மிரட்டலுக்கு பயந்து விட்டால் கூட காதல் அங்கேயே தற்கொலை செய்து கொள்ளும். எதிர்க்கும் துணிவும், இந்த அன்பு நிச்சயமாய் தமக்கு வேண்டும் என்ற திடகாத்திரமான பிடிவாதமும் இருந்து , இருவரும் காத்திரமாக தம் காதல்ல தொடர நினைத்தால் காதல் தன் அடுத்த நிலைக்குப் பயணிக்கும்.
நான்காம் நிலை தொடரும்.
10 November, 2025
#எண்ணச்சிதறல்கள்.
ஜாய் கிறிஸ்சில்டா. ஒரு காலத்தில் நடிகை விஜயலக்ஷ்மி வீடியோவா போட்டு ஓஞ்ச மாதிரி இப்போ இந்தப் பொண்ணு போட்டு கிட்டு இருக்கிறாங்க. அவங்க பேசுறதுல ஏமாற்றப்பட்ட ஆதங்கம் தெரியுது. வயிற்றில் குழந்தையோட ஏகப்பட்ட பிரச்னைகள் சந்திச்சதால குழந்தையின் உடல் நலத்திலும் குறைபாடு.
முதல் கணவரிடத்தில் இருந்து விவாகரத்து வாங்கும் போது தன் மகனுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க நினைத்திருக்கிறார். அப்போ விவாகரத்து காலம தாழ்த்தப்படுதுங்கிறதால "உன்னையும் உன் மகனையும் நான் நல்லா கவனிச்சுக்கிறேன் . ஏன் compensation கேட்டு டிலே பண்றன்னு சொன்னதால ம்யூச்சுவலா விவாகரத்துக்குக் கையெழுத்து போட்டு கொடுத்ததா சொல்றாங்க. இப்போ இவரும் ஏதோ சூழலில் வயிற்றில் ஒரு குழந்தையையும் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார். அந்த ஆற்றாமை தான் பேச்சில் தெரிகிறது. பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு மட்டும் தானா? DNA test எல்லாம் இருக்கும் இந்த காலத்திலேயே என் பிள்ளை தானா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அப்போ அந்தக் காலம்??? நினைச்சே பார்க்க முடியவில்லை நம் முது பெரும. கிழவிகள் பட்டிருக்கக் கூடிய பாடுகளை.
தான் பெரிய நடிகர்களுக்கு உடைகளைத் தேர்வு செய்யும் பணியில் இருந்ததாகவும் , ரங்கராஜ் ரொம்ப பொஸ்ஸஸிவ்வாக இருந்ததால் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே இருந்து முழு நேரமாக அவரைக் கவனித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
அதே போல் ரங்கராஜ் பக்க செய்திகளும் இருக்கலாம். நமக்கு எது உண்மை எது பொய்யென சரியாகத் தெரியாத போது அதைப் பற்றி கருத்து சொல்ல நான் வரவில்லை.
**இந்த நிகழ்விலிருந்து நாம் படிக்க வேண்டிய படிப்பினையை மட்டும் சொல்ல நினைக்கிறேன். நாம் சம்பந்தப்பட்ட என்ன முடிவை எடுக்க வேண்டும் என்றாலும் அதை அடுத்தவர் தீர்மானிப்பதையோ , அல்லது நம்மை அந்த முடிவுக்கு உந்தித் தள்ளுவதையோ நாம் அனுமதிக்கக் கூடாது. **
**நமக்கான முடிவை நாம் தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே திருமணம் ஆனவருடன் ரிலேஷன்ஷிப்பில் வர நேர்ந்தால் சட்டப்படி பிரிந்திருக்கிறார்களா என்பதை நிச்சயம் செய்து கொண்டே உறவில் இறங்க வேண்டும். At least குழந்தை உண்டாகும் முன்னாவது உறுதி செய்து கொள்ள வேண்டும்.**
எந்த ஒரு கால கட்டத்திலும் அவர்கள் போடும் "தங்கங்களையும், தேவதைகளையும் , அழகிகளையும்" நம்பி நம் வேலையை விட்டு கொடுக்கவே கூடாது. பெற்றவர்கள் எவ்வளவு ஆசையோடு தம் பிள்ளைகளை தம் காலில் நிற்க வைக்கிறார்கள். அதை அவ்வளவு சுலபமாக உதறித் தள்ளி விடக் கூடாது.
சில விஷயங்களை நிர்ப்பந்தித்தால் கூட, ஆரம்பத்தில் நாம் மாட்டோம் என்று அழுத்திச் சொல்லி விட்டால் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். அட்லீஸ்ட் இழப்பு கொஞ்சம் குறைவாகவாவது இருக்கும்.
சோஷியல் மீடியா நமக்கு நியாயம் பெற்றுத் தராது. அடுத்தடுத்த விஷயங்களுக்கு மாறி மாறிப் போய்க் கொண்டே இருப்பார்கள். அதனால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாக செய்த பிறகே ஒரு உறவுக்குள் இறங்க வேண்டும்.
**மூன்றாவது நம் எதிர் பாலினர் அழகாக இருப்பதாலேயே அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அழகையும் உண்மையையும் இணைத்தே சிந்திக்கிறோம். அதை முதன் முதலாக நிறுத்த வேண்டும். **
கவனமாக இருங்கள். யாருமே 100% அக்மார்க் நல்லவர்களல்ல. 100% நம்பத் தகுந்தவர்களுமல்ல.
உஷாரா இருங்க.
09 November, 2025
#காதலின் இரண்டாம் நிலை
காதலின் முதல் நிலையிலேயே பல காரணங்களால் நிறுத்திக் கொள்பவர்களும் உண்டு. இரண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனா செட் ஆகாதுன்னு மேலே கொண்டு போகல என்பார்கள். நமக்குப் பிடித்தவர்களுக்கு நம்மைப் பிடித்திருக்கிறது என்பதே போதுமானதாய் இருக்கும்.
காதலின் இரண்டாம் நிலை.
இருவருக்கும் பிடித்திருந்தாலும் உள்ளூற ஒரு சந்தேகம் ஊடாடிக் கொண்டே இருக்கும்.
உண்மையிலேயே நம்மைப் பிடிக்குமா? நம்மைப் போலவே பலரையும் பிடித்திருக்குமா? நம்மை நமக்காகவே பிடிக்குமா? வேறு ஏதேனும் hidden agenda இருக்குமா? இது இரண்டு பேருக்கு உள்ளுமே தனித் தனியாய் ஓடும்.
ஆனால் அதை மறைத்தபடியே பழகிக் கொண்டிருப்பார்கள். ஆரம்பப் பழக்கத்தில் எல்லோருமே நல்லவர்கள். தம் எதிர் மறை பகுதிகளை மறைத்துக் கொள்வார்கள். சிலர் நேர்மையாய் இருக்க விரும்புபவர்கள் தம் குறைகளைச் சொல்வார்கள். ஆனால் அந்த ஆரம்ப மோகத்தில் அது பெரிதாய்த் தெரியாது.
நெருக்கமாக இருப்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். ஆணோ பெண்ணோ இதைப் பெருமையாய் எடுத்துக் கொண்டு பிறரிடம் பறை சாற்றுபவர்களும் உண்டு. இருவருமே வெளியே தெரியாமல் கொண்டு போவதும் உண்டு.
இந்த இரண்டாம் நிலை நீடிக்கும் போது ஆரம்ப ப்ரியம் குறைந்து விலகிக் கொள்வோம் இது நாம் நினைத்த அளவுக்கு அபூர்வமானதல்ல என்று நாகரீகமாக பிரிந்து விடுபவர்களும் உண்டு.
நாம் இருவரும் ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப் பட்டு இருக்கிறோம். இவர் தான் என் குறைகளை நிறைவு செய்பவர். என் பலவீனத்தில் இவருக்கு பலம். என் பலத்தில் இவருக்குப் பலவீனம் எனப் புரிந்து ஈகோ இல்லாமல் இருந்தாலோ , இல்லை ஈகோ இல்லாதது போல் காட்டிக் கொண்டாலோ காதல் தன் மூன்றாம் நிலைக்கு நகரும்.
07 November, 2025
விளக்கம் சொல்; விலகிச் செல்.
என்னை
அன்பு செய்தாய்.
காதலால்
கனிவித்தாய்.
காரணங்கள் நான்
தேடவில்லை.
இப்போது
விலகிச் செல்கிறாய்.
ஏன்?
ஏன்?
ஏன்?
என அலைபாய்கிறது
மனது.
வலிக்கிறது தோழா
விளக்கம் சொல்.
விலகிச் செல்.
Subscribe to:
Comments (Atom)
