Bio Data !!

11 March, 2026

தமுஎச வி எம் சத்திரம் கிளை நடத்திய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை பாளை சரோஜ் நினைவகத்தில் பேராசிரியர் முத்துலட்சுமி அவர்கள் தலைமை ஏற்று நடத்தித் தந்தார். திரு வண்ணமுத்து அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.சி.த. இஷா & ச.ஜீவன் கவிதை வாசித்தார்கள். சாகித்ய அகடமி விருதாளர் முனைவர் விமலா " தமிழிலக்கியப் புலத்தில் பெண்ணியப் போக்குகள்" என்ற தலைப்பில் பேசினார். "பெண் சந்தித்த முதல் தோல்வி தான் முதன்மை இடத்திலிருந்து இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது தான் என்றார். உண்மை தானே . ஆதியிலே தாய் வழிச் சமூகமாக இருந்து ஒரு மூத்த தாய்க் கிழவியின் பேச்சு கேட்டு நடந்த சமூகம் பற்றி நாம் அறிந்தது தானே. பாரதியார் பெண் விடுதலை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் ஒருவர் " எவ்வளவு புரட்சி பேசினாலும் சாலையில் நடந்து வரும் போது உமக்கு பத்தடி தள்ளி பின்னால் தானே உங்க மனைவி மனைவி வர்ராங்க" என்று கேட்ட உடன் தன் மனைவியின் தோளில் கை போட்டு அக்ரஹாரத்தில் உடன் அழைத்துச் சென்றவர் பாரதியார் என்பதை நினைவுபடுத்தினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சத்யா ஒரு அருமையான கருத்தினைச் சொன்னார். பாலியல் பற்றி கொஞ்சமும் தெரியாத வயதில் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் அதுவே பெரியவர்களிடம் குழந்தைகளை தவறான இடங்களில் தொடாதே என அழுத்தி வலியிறுத்துவதில்லை என்றார். நம் பழக்கமே தவறு செய்யும் ஆண்களை விட்டு விட்டு பெண்களிடம் நீ சரியான உடை அணிந்து வா என சொல்வது தானே. பாப்பாக்குடி செல்வமணி அவர்கள் " உலகம் ரொம்ப மாறி விட்டது. என் மனைவி மகன்களிடம் நல்லா வீட்டு வேலை செய்யப் பழகிக்கோ. அப்போ தான் கல்யாணமாகிப் போற இடத்துல அடி வாங்காமத் தப்பலாம் " என்று சொல்லி வளர்ப்பதாகச் சொன்னார். அது நகைச்சுவைக்காக மட்டும் அல்ல உண்மையிலேயே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றத்தைத் தான் குறிப்பிடுகிறார். ஆனாலும் அந்த குழந்தைகளின் தாய் பாராட்டுக்குரியவர்களே! தமிழ்நாடு அரசு சிறந்த பெண் குழந்தை விருது பெற்ற சூடாமணிக்கு பொன்னாடை போற்றி பரிசளித்தார்கள். சமூகப் போராளி துளசியம்மாள் " பிணம் எரிப்பது உட்பட பெண்கள் பங்களிக்காத தொழில் என்று எதுவுமே இன்று இல்லை. " என்றார். அவர் சொன்ன இன்னொரு கருத்தை என்னை வெகுவாகக் கவர்ந்தது. "எட்டு மணி நேரம் உழைப்பு போராடிப் பெற்றுக் கொடுத்தார்கள். அது ஏன் எட்டு மணி நேரம் உழைப்பு என்றால். எட்டு மணி நேரம் உழைப்பு , எட்டு மணி நேரம் உறக்கம் , எட்டு மணி நேரம் ஓய்வு. ஓய்வு என்பது பெண்களுக்கான நேரம் என்றார். சரி தானே " மீ டைம் " என்று இன்றைய பெண்கள் குரல் எழுப்பும் அந்த ஓய்வுக்கான எட்டு மணி நேரத்தில் தான் பெண்கள் குடும்பத்தின் உயர்வுக்காக வெளியே சென்று உழைக்கக் கற்றுக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் போனது. எட்டு மணி நேரம் கூட வேண்டாம். நமக்கான விருப்பத்துக்காக சில மணி நேரங்களையாவது ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலையை ஐடி போன்ற துறைகளில் தம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆட்டோ ஓட்டும் பெண்களைக் கௌரவிப்பது, தோழர் நாறும்பூநாதன் வார்த்தெடுத்த தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை சூடாமணியை பாராட்டுவது, வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நடனம், கவிதை வாசித்தல் என வாய்ப்புக் கொடுப்பது என மகளிர் தின நிகழ்ச்சி களை கட்டியது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அமைத்துத் தந்த தோழர்களுக்கு பாராட்டுகள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!