
ஒரு நல்ல கதை படிச்சேன். ஆனா முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை . இதை பதிவாய்ப் போட்டால் முடிவை பற்றிய பல கருத்துக்கள் கிடைக்குமே!.
கதையைப் படிங்க அப்பறம் பேசுவோம்.
கதைப் பெயர் : அச்சு இயந்திரம்
கதை ஆசிரியர் : ஜெகாதா
அகல்யா கதை நாயகி. ஒரு வெகு ஜனப் பத்திரிகையை கடுமையாக சாடும் வழக்கம் கொண்டவள். "விபச்சாரி" என்னும் சிறு கதை ஒரு பத்திரிகைக்கு அனுப்புகிறாள். அந்த பத்திரிகை ஆசிரியர் நேரில் வந்து பார்க்கச் சொல்லி தகவல் அனுப்புகிறார். நேரில் வந்ததும்
" அகல்யா என்ற முகவரித் தபாலை உடைத்தாலே தயவு தாட்சணியம் இன்றி சீறி பாயும் பெண் புலி நீதானா?" இளக்காரமாய் கேட்கிறார் ஆசிரியர்.
"விபச்சார நடிகை *** தற்கொலை செய்ததற்கு பத்திரிக்கை ஆசிரியன் தான் காரணம்னு சொல்ற மாதிரி கதை எழுதி இருக்கிற என்ன நெஞ்சழுத்தம் உனக்கு ." ஆசிரியர்.
"நடிகையோட சாவுக்கு நீங்களும் உங்க பத்திரிகையும் தான் காரணம்."அகல்யா
"இந்த செய்தியைப் போட்டது ஆசிரியரோட குற்றம்னா விபச்சாரம் பண்றது குற்றம் இல்லையா? " ஆசிரியர்.
"விபச்சாரமே தொழிலாகிப் போன சந்தையில் நடிகை என்ற காரணத்தால் அவ ஒருத்திக்குப் பின்னால் மட்டும் சுற்றி சுற்றி வட்டமிட்டது தான் காரணம். அது இந்திய கலாசாரத்தை பாதுகாக்க செய்த ஏற்பாடுன்னு என்னால நம்ப முடியல.
அவள் செய்தது விபசாரம்னா அதை உலகறியப் படுத்தி காசு சம்பாதிச்சது அதை விட பெரிய விபச்சாரம். இதை மாதிரி எனக்கு நடந்தா தற்கொலை பண்ண மாட்டேன் கொலை பண்ணுவேன்."
"நீ உண்மையிலேயே துணிச்சலானவள் தான்."
"நான் துணிச்சல் உள்ளவ தான் நீங்கள் துணிச்சல் உள்ளவர்னா உங்க பத்திரிகையில பிரசுரம் பண்ணுங்க பார்க்கலாம்."
உடல் நடுக்கத்தை மறைத்து கொண்டு வீராப்பாக வெளியேறுகிறாள் அகல்யா.
அச்சத்தில் குளிர் ஜுரம் வந்து விடுப்பு முடிந்து அலுவலகம் போகிறாள். வழியில் பத்திரிகை விளம்பரம் "விபச்சாரி , சிறுகதை அகல்யா "
இந்த நேர்மையை ஆசிரியரிடம் அவள் எதிர்பார்க்கவில்லை.
அலுவலகத்தில் எல்லோரும் அவளையே பார்ப்பது போல் இருந்தது.
தனது மேஜையில் அந்த பத்திரிக்கை. பலரும் புரட்டியதன் அடையாளமாய்
கசங்கி இருந்தது. வேகமாக புரட்டினாள்.தலை கிர்ரென்றது. அந்த கதைக்கு படமாக அவளை ஒரு ஆடவனுடன் நிர்வாணமாக. "அய்யோ அதான் எல்லோரும் அப்படிப் பார்த்தாங்களா? "
நெஞ்சமெல்லாம் தீயாக காந்தியது.
பேயோ பிசாசோ கண்டவள் போல் தலை தெறிக்க ஓடிய அகல்யா மாடியில் இருந்து அப்படியே தலை குப்புற விழுந்தாள்.
அகல்யா செய்தது சரியா?
அவள் வேறு என்ன செய்திருக்கலாம்?
படிக்கிறதோட விட்டுடாம கொஞ்சம் பின்னூட்டமும் போடுங்களேன்.