Bio Data !!

13 June, 2010

சிவசு வாத்தியார் - நிறைவு பாகம்

(அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்கு  மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.)

பள்ளிக்குச் சென்றதும் மகன் அவரைக் கண்டு ஓடி வந்தான். " அப்பா , எங்களுக்கு ஒரு புது சார் வந்து இருக்காங்க. அவர் உங்கள்ட தான் படிச்சாராம். உங்களை ரொம்ப புகழ்ராருப்பா.எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாங்கப்பா அவரை பார்க்கலாம். "
மகன் பெருமையாக ஓடி சென்று அழைத்து வந்தான். வந்தது ஐயாவின் பழைய மாணவன். "இன்று வரை தன் வாழ்வின் எந்த அடியும் அவரை நினைத்து தான் எடுப்பதாகவும் எந்த இடத்திலும் தவறியதில்லை என்றும், தன்னைப் போல் அவருடைய பல மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் தான் எடுக்கும் வகுப்பு மாணவர்களிடம் அவரை குறிப்பிடத் தவறியதில்லை" என்றும் பேசிக் கொண்டே சென்றார். 

ஆசிரியர் ஒரு வித மயக்க நிலைக்கு போய் விட்டார். தான் எடுக்கும் எந்த முடிவும் தன்னை மட்டும் பாதிப்பதில்லை இன்னும் எத்தனை பேரை?ஓய்வு பெரும் வரை யாவது.  வெளி உலகுக்காக இந்த வாழ்க்கை வாழ்ந்து தான் ஆக வேண்டும். முடிவு எடுத்த பின் மகளை அவசர அவசர மாகப் பார்த்து விட்டு ஊர் போய் சேர்ந்தார். அதன் பின் இருவரும் நடை பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். 

அவரது மனம் சஞ்சலப் படுவதை புரிந்து கொண்ட சந்துரு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொண்டான். அவளைப் பற்றி பிறர் மூலம் பல விஷயங்களை அறிந்து கொண்டு அவளே தன்னிடம் சொன்னது போல் சிவசு ஐயாவைப் பார்க்கும் போதெல்லாம் சொன்னான். தன் மனைவியிடம் வெளிப்படையாக பேசி இருந்தால்  சுலபத்தில் சரி செய்யக் கூடிய விஷயத்தை இடியாப்பச் சிக்கலாக்கினார். அவளிடம் பேசுவதையே முற்றிலுமாக குறைத்துக் கொண்டார். 

சியாமளாவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. பள்ளி விழாவன்று சொன்ன சொல்லுக்காகத்தான் இந்த தண்டனை என்று நினைத்துக் கொண்டாள். அங்கே மேலும் மேலும் அக்னி சேர்ந்து கொண்டே இருப்பதை அவள் அறியாமலே போனாள். அவரது வைராக்கியம் அவள் அறிந்த ஒன்று என்பதால் அவரிடம் பேசிப் பார்க்கும் தைரியம் இல்லாமல் போனது. திரௌபதியின் ஒற்றைச் சிரிப்பு ஒரு இதிகாசத்தையே உருவாக்கியது. இவளது ஒற்றை சொல் இவள் வாழ்வையே பறித்தது. 

 சிவசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதற்கு மேல் பிறருக்காக வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்த பாரம் நெஞ்சில் கருங்கல்லாய் இறங்குகிறது. ஒரு வக்கீலைப் பார்த்து தன் பிரச்சினையை பட்டும் படாமலும் சொல்லி விட்டார்." இப்படியே மிச்ச நாளையும் போக்கி விடலாமே . இந்த வயதில் விவாகரத்து தேவையா" என்ற அவரின் கேள்விக்கு " நான் மட்டும் இந்த வாத்தியார் தொழில் பார்க்காமல் இருந்தால் என்றோ அவளை விட்டு பிரிந்து இருப்பேன். அவளாவது சந்தோஷமாய் இருந்திருப்பாள். என்னைக் கட்டிய பாவத்துக்கு இவ்வளவு நாள் என்னோட இருந்தது போதும். மிச்ச நாளாவது அவள் விருப்பப்படி இருக்கட்டும். சந்துரு சொன்னதெல்லாம் வைச்சு பார்த்தா எந்த வயசிலும் அவளை ஏத்துக்கிடுவான் போலத் தான் தெரியுது. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்களேன்" என்று பரிதாபமாகச் சொன்னதும் வக்கீலும் சம்மதித்து விட்டார்.

சியாமளா வக்கீலிடம் இருந்து வந்த நோட்டீஸ் ஐப் பார்த்து பதறிப் போனாள். ஐயா பேசாமல் இருந்தாலும் மிச்ச நாட்களை அவரைப் பார்த்துக் கொண்டே ஓட்டி விடலாம் என்று இருந்தாள். இது பேரிடி. வருடங்கள் பல கடந்ததால் அவளால் அவரிடம் பேச முடிய வில்லை. தயங்கி தயங்கி அவர் அருகில் போய் பேசுவதற்கு நின்றாலும் அழுகை தான் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவரோ அதற்குள் இடத்தை காலி செய்து விட்டு இருந்தார். இப்படிப்பட்டவர்கள் தன்னைப் போல் வைராக்கியம் யாருக்கு உண்டு என்ற வெட்டி ஜம்பத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு மீதி அனைத்தையும் இழக்கிறார்கள். சியாமளா இந்த பிரச்சினையை யாரிடமும்  கொண்டு செல்வதாய்  இல்லை. நேராக குடும்ப வழக்கு நடக்கும் இடத்திற்கே சென்று என்ன ஆனாலும் தான் அவரை பிரிவதாக இல்லை என்றும் ஆயுள் முடியும் வரை அவருடனே வாழ விரும்புவதாகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். 

அவள் எடுத்த முடிவை பற்றி அறியாமல்கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார் சிவசு  வாத்தியார்.அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம் " நீங்கள் நினைப்பது போல் எனக்கும் சந்துருவுக்கும் எதுவும் இல்லை நான் உங்களுடனே வாழ விரும்புகிறேன் " என்று அவள் சொல்லி விட மாட்டாளா என்று மனதின் ஒரு ஓரம் அவருக்கு முனங்கிக் கொண்டு தான் இருந்தது. 


(முற்றும்)


(இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும். பதிவர் ஒருவரின் விருப்பத்திற்காக மனச் சிக்கலை கொண்டு ஒரு கதை எழுதிப் பார்த்தேன். வெற்றி பெற்றேனா தெரியவில்லை. ஒரு நல்ல செய்தியை சொன்ன நிறைவிருக்கிறது. முடித்து விட்டேன் நாடோடி, நன்றி ) 



13 comments:

  1. உண்மையிலேயே ம‌ன‌சு நிறைவா இருக்கு.... க‌தையின் முடிவு அருமை.... க‌தையின் க‌டைசியில் சொன்ன‌ நீதியும் அருமை... உண்மையில் உங்க‌ளுக்கு பூங்கொத்து தான்....

    ReplyDelete
  2. (இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும். பதிவர் ஒருவரின் விருப்பத்திற்காக மனச் சிக்கலை கொண்டு ஒரு கதை எழுதிப் பார்த்தேன். வெற்றி பெற்றேனா தெரியவில்லை. ஒரு நல்ல செய்தியை சொன்ன நிறைவிருக்கிறது. முடித்து விட்டேன் நாடோடி, நன்றி )



    ...... நாடோடி சாருக்கு நன்றி, ஒரு கருத்துள்ள கதை எங்களுக்கு கிடைத்தது.
    ஒரு நல்ல அர்த்தமுள்ள தொடர் கதை, தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. நன்றி நாடோடி, முடித்து வைக்க சொன்ன ஆள தொடங்கி வைக்க சொன்ன ஆளா சித்ரா நினைச்சிட்டாங்க.
    பூங்கொத்துக்கு நன்றி நாடோடி.

    ReplyDelete
  4. சித்ரா கதை எழுத சொன்ன பதிவர் பார்வையாளன்,
    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  5. இன்னும்
    இதுபோல்
    நிறைய..
    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. அருமையான நடை.

    ReplyDelete
  7. மனப்போராட்டங்களையும்திருப்பங்களையும் உங்கள் மொழி நன்றாகவே கையாளுகிறது. வாழ்த்துக்கள்.சீக்கிரமாய் இன்னொருன்றை ஆரம்பியுங்கள்.

    ReplyDelete
  8. இப்படி சொல்லி இருக்க தேவை இல்லை.. கதை ஓட்டத்தில் , வாசகர்களுக்கே இது புரிந்து விடுகிறது..
    எங்களுக்கு புரியலையோனு, அநியாயத்துக்கு சந்தேக பட்டுடீங்க..

    டெர்ரர் கதையா , துரோக கதைய என்றெல்லாம் சஸ்பென்சாக கொண்டு சென்று, மன ரீதியாக மாற்றி, கதை போக்கை திறம்பட எடுத்து சென்று இருக்கிறீர்கள்,

    படிப்பவர்கள் எல்லோருக்குமே, அவர்கள் வெளிபடையாக பேசி பிரசினை தீர்த்து கொள்ளலாமே என தோன்றும் அளவுக்கு திறம்பட கதை செல்கிறது. திடீரென கதாசிரியர் குறிக்கிடுவது, செயற்கையாக இருந்தது... அதை நீங்கள் , பின்னூட்டத்தில் சொல்லி இருந்து இருக்கலாம்..

    கதையும் போக்கு , மிக மிக சிறப்பாக இருந்தது . கதை கருவும் அருமை... - இதற்கு பூங்கொத்து

    நீதி சொன்னதற்கு ---- ஒரு திட்டு

    ReplyDelete
  9. தெளிவா பேசுறேனா ?

    நீதி சொன்னது தப்பில்லை.. அருமையான கருத்து தான்.. தேவையான கருத்துதான் ..

    ஆனால், தனியாக நீதி சொல்லி இருக்க தேவை இல்லை.. கதையின் போக்கிலேயே , அந்த கருத்து வாசகனை வந்து அடைந்து விடுகிறது.

    """"இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும்."""

    இப்படி தனியாக சொல்வது, கதையின் அழகை கெடுக்கிறது..

    சிலர் இதை ரசிக்க கூடும்.. நான் சொல்வது என் ரசனை சார்ந்த தனி பட்ட கருத்து மட்டுமே ..

    ReplyDelete
  10. நீதி சொன்னதற்கு யாராவது திட்டுவாங்களா பார்வையாளன்.
    இருந்தாலும் நீங்கள் தெளிவா தான் சொல்லி இருக்கீங்க. அந்த இடம் நானே வேண்டுமா என்று யோசித்து பின்ன இருக்கட்டுமேனு விட்டுப் போன இடம் தான். நன்றி.

    ReplyDelete
  11. கலாப்பிரியா சார், நன்றி தங்கள் பாராட்டுக்கு. "நண்பனின் குறைகளை தனியே சொல். பாராட்டுக்களை பொதுவில் வை" இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள். நன்றி

    ReplyDelete
  12. நன்றி வானம்பாடிகள் ஐயா,
    கொஞ்சம் பதில் போட பின் தங்கி விட்டேன் மன்னிக்கவும்

    ReplyDelete
  13. ஹாய் சிவா, இப்படித்தான் காராத்தே கமெண்ட் லாம் போடாம நல்ல பிள்ளையா உற்சாகப் படுத்தணும். நன்றி

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!