Bio Data !!

30 June, 2010

கவிஞர் கலாப்ரியா உடன் கலக்கல் பேட்டி



கவிஞர் கலாப் ரியா  உடன் ஒரு பேட்டி., அந்த கலக்கல் கசாட்டாவை  ருசித்து பாருங்கள். 


வணக்கம் சார் , நல்லா இருக்கீங்களா? 

                                நல்லா இருக்கேன். உங்க கதை "மரண நிமிடங்கள் " படித்தேன், மனப்               போராட்டங்கள், எண்ண  ஓட்டங்களை நன்றாகவே கையாளுகிறீர்கள்


நன்றி சார்,
உங்களை பேட்டி எடுத்து ஒரு பதிவு போடணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை.  சில கேள்விகள் கேட்கலாமா?
                                     அழகா ....



முதன் முதல் உங்களுக்கு எழுத்து    திறமை இருப்பதை எப்பொழுது கண்டு பிடித்தீர்கள் ?
                                         பதினெட்டு  வயது கட்டிளங்காளையாயிருந்த போது. ( எதிர் காற்றடித்தால் மட்டும் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவேன்). 


கவிதை எழுதத் தொடங்கியது எப்படி ?
                                              கான மயிலாட கண்ட வான் கோழி மாதிரி வண்ணதாசன் அவர்களைப் பார்த்து எழுதத் தொடங்கினேன்.


உங்கள் எழுத்துலக குரு என்று திரு வண்ணதாசன் அவர்களை சொல்லலாமா?
                                        ஆமாம் கண்டிப்பாக , அவருடைய அண்ணன் திரு கணபதி அவர்கள் தான் எங்கள் எல்லோருக்கும் குரு.


திரு வண்ணதாசன் அவர்களின் தந்தை ஒரு எழுத்துலக ஜாம்பவான் ஆச்சே அவரிடமும் பாடம் கற்றிருக்கின்றீர்களா? 
                                                   இல்லை அவர்களை தூர இருந்து பார்த்தது தான், சூரியனைப் பார்ப்பதுபோல. அவர் கம்யூனிச சித்தாந்தவாதி. ஆனல் அவர் கருத்துக்களை எங்கள் மீது திணிக்க மாட்டார்    அவரும் சரி வண்ணதாசனும் சரி பாராட்டுக்கள் மூலமே பிறரை வளர்த்து எடுப்பவர்கள். 


உங்கள் கவிதைகள் என்னென்ன விருதுகள்  பெற்றிருக்கின்றன  ?
                                   திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, வைரமுத்து சமூக இலக்கியப் பேரவை விருது,கவிதைக்கணம் விருது, தேவமகள் இலக்கிய் விருது,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வழங்கும், வி,ஆர்.எஸ். கிருஷ்ணய்யர் விருது,
                                     கவிதைக்கு தானே கலைமாமணி விருது பெற்றேன். கட்டுரை தற் செயல் தான். கதைகள் பத்து தேறும்   


கலை மாமணி விருது பெற்ற போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது? 
                                ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது. பொதுவாய் விருதுகள் பற்றி பெரிய ஆர்வம் இருந்ததில்லை. 


உங்கள் ஆரம்ப கால கவிதை ஒன்று சொல்லுங்களேன்
"அழகாய்  இல்லாததால்
அவள் எனக்கு 
தங்கையாகி விட்டாள்  "
                                           அதிகம்  பேர் திட்டவும் பாராட்டவும் செய்ததால் பிரபலமான கவிதை எழுபது களில் வெளி வந்தது.
"கிடைக்காத அழகுகளுக்காய் 
கேரம் போர்டின் 
சிகப்புக் காயாய்
அலைக்கழியும் நான்...... "
என்று வரும் கவிதை "


ரொம்ப நல்லா இருக்குது சார், அந்த தங்கை கவிதை எனக்கு நல்லா நினைவு இருக்கிறது.
பதிவு உலகத்தை உங்களுக்கு அறிமுகப் படுத்தியது யார் ?

                              அந்திமழை.காம் நண்பர்.திரு இளங்கோவன் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி. என் பெண், தரணி எனக்கென ஒரு வலைப்பூ உருவாக்கித் தந்தாள். அதில் எழுதிப் பார்த்தேன். உரை நடை கொஞ்சம் கை வந்தது.


பதிவுலகின் சுஜாதா விருது வாங்கியது பற்றி உங்கள் கருத்து ?
                             முதல் உரை நடை முயற்சிக்கு விருது கிடைத்தது நம்ப முடியாத சந்தோஷம் தந்தது..சுஜாதா இருந்திருந்தால் கண்டிப்பாக இதைக் கொண்டாடுவார் என்று..எழுதும்போதே நினைத்துக் கொண்டிருந்தேன்..அது உண்மையானது போல் இருந்தது.


உங்கள் பதிவுகளில் படம் வரைவது நீங்கள் தானா ?
                             இல்லை. அது பிரபல ஓவியர் மருது  வரைவது. குங்குமம் இதழில் வருகிறது. அனுமதி பெற்று பயன்படுத்துகின்றேன். வண்ணதாசன் மிக நன்றாக வரைவார். 


உங்கள் படைப்புகள் சாகித்திய அகடமிக்கு பரிந்துரை செய்யப் பட்டிருக்கின்றனவா ?

                                   பல முறை , சாகித்திய அகடமியின் கடைசி ரவுண்டில் யாராவது தட்டிச் செல்வார்கள்.இதெல்லாம் கேள்விப்பட்டது
                                  வைர முத்து என் கவிதைகளின் ஆத்மார்த்த ரசிகர்,ஒரு முறை , ஒரு அரங்கில் சொன்னார் ' கலாப் ரியா கவிஞர்களின் கவிஞர்" என்று , (கேட்க சுகமாயிருந்தது, ஆனால் சற்று லஜ்ஜையாகவும் இருந்தது)


இப்போ எதுவும் எழுதிக் கொண்டு இருக்கிறீர்களா ?
                                 மூன்றாவது கவிதை தொகுப்பு வரப் போகிறது. என் எல்லாக் கவிதைகளையும்,  கவிதைகள் பற்றி வந்த விமர்சனங்கள் , ஆய்வுகள் எல்லாம் சேர்ந்து ஒரு தொகுப்பாக வரும். 


விரைவில் சாகித்ய அகடமி விருது பெற வாழ்த்துக்கள். நீங்கள் விருது பெற வேணும். மீண்டும் உங்களை ஒரு பேட்டி எடுத்து நான் ஒரு பதிவு போட வேணும் மீண்டும் வாழ்த்துக்கள் 
                                      நன்றி
பின் குறிப்பு : பேட்டியில் ஒரு சின்ன தவறு செய்து விட்டேன். இள வயதில் ஐயா எழுதிய கவிதையை கேட்டுப் பெற்ற நான் இன்றைய நாளில் எழுதிய கவிதையை பெற மறந்து விட்டேன். தவறைத் திருத்தி அண்மையில் எழுதிய ஒரு கவிதை இதோ கொடுத்து விட்டேன். நல்லா இருக்கா பாருங்க .


நாடகாசிரியன் மரணம்

தத்தம்
பாத்திரங்களின்
உரையாடல்களைப்
பிரித்துப் பெற்றுக்கொண்ட
ஆண் பெண் இருபாலரும்
அனேகமாய்
மனனம்
செய்து விட்டனர்
எனினும் மனசுக்குள்அவ்வப்போதுசொல்லிப் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்

வாகனம்
ஓட்டும் போது

மின் கட்டணம் கட்டும்
நீண்ட வரிசையில்

விளக்கணைத்து
தட்டுத் தடுமாறி
படுக்கை சேர்ந்து
அரைத்தூக்க மனைவியை
எழுப்பும் போது

சல்லாபிக்கும் போது

பயணச்சீட்டுக் கேட்டு
நடத்துனர்
பக்கத்தில் வரும் வரையில்
நெருங்கும்
மாதவிடாய்க்கான
தினத்தைக்
கணக்கிடும் போது

மற்றும் ஆசிரியனுக்கான
இரங்கல் கூட்டத்தில்.மௌனம் அனுஷ்டிக்கும் போது


                                -கலாப்ரியா





15 comments:

  1. வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. "தங்கை" கவிதை மிகவும் மோசம். அழகாய் இல்லாததால் தங்கை ஆகிவிட்டாள். அப்படினா தங்கை அழகாக இருந்தால்.....?

    ReplyDelete
  4. "தங்கை" கவிதை மிகவும் மோசம். அழகாய் இல்லாததால் தங்கை ஆகிவிட்டாள். அப்படினா தங்கை அழகாக இருந்தால்.....?

    ReplyDelete
  5. மிக்க சந்தோசம்..
    சொல்லப்போனால் நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்,

    பேட்டியிலிருந்து அய்யாவுக்கு நகைச்சுவை உணர்வை அறிய முடிகிறது,

    தமிழ் மொழி மாநாடு, இலங்கை பிரச்சனை பற்றி கேட்டிருக்கலாமே..

    சீரிய முயற்சி., உங்களுக்கு வாழ்த்துகள்.,
    அய்யாவுக்கு வணக்கங்கள்..!!

    ReplyDelete
  6. "அழகாய் இல்லாததால்
    அவள் எனக்கு
    தங்கையாகி விட்டாள் "

    இந்த வரிகள் எனக்கு பிடிக்கவில்லை... மிகவும் தவறான பார்வை...

    மற்றபடி பேட்டி நன்றாக இருந்தது...

    ReplyDelete
  7. நல்ல பேட்டி இப்போதுதான் மரண நிமிடங்கள் படித்தேன்...ஒய்வு..ரொம்ப கொடுமை..சுறு சுறுப்பாய் வேலை செய்பவர் ஓய்வு பெற்றவுடன்..
    தனிமையாய்..மனசு ரொம்ப கஸ்டப்படும்..!

    ReplyDelete
  8. நன்றி சித்ரா, ரொம்ப பிஸியா, பின்னோட்டம் சைஸ் சின்னதா போச்சே!

    ReplyDelete
  9. நாடோடிகள் நன்றி,
    வானம்பாடிகள் ஐயா நன்றி

    ReplyDelete
  10. நெல்சன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    நெல்சன் அது ஒரு teenage boy எழுதிய கவிதை. அந்த வயசில் இருந்து
    வா(யோ)சித்து பாருங்கள் அதன் நேர்மை புரியும்.

    ReplyDelete
  11. சிவா ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. "வீட்டில பெரிய பெரிய முடிவுகளை நானும் சின்ன சின்ன முடிவுகளை என் மனைவியும் எடுக்கிறோம் " என்ற ஒரு கணவனின் நொந்த நிலை பேட்டி பதிவு போடும் போதே கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது.

    ReplyDelete
  12. பார்வையாளன் இதையே கொஞ்சம் மாற்றிப் பாருங்களேன்,
    அழகான பெண்கள் ராக்கி கட்டுறதைப் பற்றி எத்தனை நகைச்சுவைக் காட்சிகள் பார்த்திருக்கிறோம்.

    ReplyDelete
  13. நன்றி தமிழ் வெங்கட்,
    வாழ்வில் காதலைத் தவிர துயரம் தரும் பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் காதல் மட்டுமே செல்லப் பிள்ளையாய் அத்தனை பேர் கவனத்தையும் ஈர்க்கிறது.

    ReplyDelete
  14. நன்றி ராமசாமி கண்ணன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!