Bio Data !!

08 August, 2010

கல்யாண வைபோகமே !! - நிறைவு பாகம்

இளங்  காலை.
இருட்டாயிருந்த என் படுக்கை அறைக்குள் தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி வருடத் தொடங்கி இருந்தான் சூரிய பகவான்.
நேரமாகி விட்டதோ என என் செல் போனை தடவி உயிரூட்ட அது மணி ஐந்து முப்பது என்றது. பட படத்து எழுந்த நான், என் தம்பியையும் எழுப்ப இருவரும் அறை மணி நேரத்துக்குள் புறப்பட்டு கிளம்பினோம். பீரோவில் இருந்த  ஒரு லட்ச  ரூபாயை எடுத்து ஒரு லெதர் பையில்  வைத்து வண்டியில் ஏறினேன்.
" அண்ணே! பணத்தை பிரிச்சு வச்சுக்கலாமே? எல்லாம் மொத்தமா வச்சிருக்கியே?"
'எல்லாம் எனக்குத் தெரியும்' என்று ஒரு பார்வை பார்த்தேன். அவன் அடங்கி விட்டான். இந்த திருமணம் முடியும் வரை இப்படித்தான் எல்லார் மேலேயும் கோபமா வரும் போல.

திருமண மண்டபத்தை நெருங்கும் போதே எனக்குள் பரபரப்பு தொடங்கி விட்டது.
நேராக மணமகளின் அறைக்கு போனேன், வழியில் பார்த்த சொந்த பந்தங்களை நலம் விசாரித்த படியே.
மண்டபம் முழுவதும் வேகமாக இயங்கிக் கொண்டு இருந்தது. கதவைத் தட்டியதும் யாரோ திறந்தார்கள். என்  அருமை மகள் தலையை அழுத்திப் பிடித்த படி ஒரு பெண் அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள். சத்தம் கேட்டதும் உயர்த்திய மகளின் தலையை லேசாக அழுத்திய படி வேலையை தொடர்ந்து கொண்டு  இருந்தாள்.
"எல்லாம் பார்த்து பத்திரமா பூட்டி வந்தீங்களா?" என்ற என் மனைவியை 'எல்லாம் எனக்கு தெரியும்' என்று ஒரு பார்வை பார்த்து,
"லேட் பண்ணாம வேகமா ரெடி ஆகுங்க" என்றேன்.

பான்ட் சத்தம் முழங்க பொண்ணையும் மாப்பிளையையும் சர்ச்சுக்கு அழைத்து சென்றோம். முகூர்த்த நேரம் நெருங்கியதும், நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் நெருங்கி வந்தோம். கோவில் மணி அடிக்க மாப்பிள்ளை தாலியை எடுத்து என் மகளின் கழுத்தில் முடிச்சிடத் தொடங்கினார்.
"மூணாவது முடிச்சை அக்கா போடுவாங்க" என்று சொல்வதை காதிலேயே வாங்காத படி மூணு முடிச்சையும் தானே போட்டு மணப் பெண்ணை பார்த்து மெல்ல முறுவலித்தார். சின்னஞ் சிறுசுக அதுங்களுக்குள் என்ன பேசி வைத்திருந்ததுகளோ!
எனக்கு மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கியதைப் போல் இருந்தது. இன்னம் நாலு மணி நேரம் தான். எல்லா ஆர்ப்பாட்டமும் அடங்கி விடும். நிதான வாழ்க்கைக்கு திரும்பி விடலாம்.

அதன் பின் பரிசு கொடுக்க வந்தவர்கள் ஒரு நீண்ட வரிசையில் நின்றதும், மணமக்களை வாழ்த்தி திரும்பியவர்களை என் மனைவி வரவேற்று, உணவு உண்டு செல்லுமாறு வற்புறுத்தியதும், சிறப்பான உணவுமாக எல்லாம் சிறப்பாகவே முடிந்தது.
அதான் எல்லாம் சிறப்பாவே முடிஞ்சிருக்கே அப்பறம் என்ன வழ வழ னு இழுவை ... ங்கறீங்களா?

அதுக்கு அப்பறமாத் தான் யாருமே எதிர்பார்க்காதது எல்லாம் நடந்து போச்சு.
"அக்கா இந்தா மொய் பணத்தை பிடி. பத்திரமா ஒப்படைச்சாச்சு. "
"சார், எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாச்சு. வீட்டாள் மட்டும் தான் பாக்கி. நீங்களும் சாப்பிட்டாச்சுனா  வேலையை முடிச்சிறலாம்."
"மாப்பிள்ளை, ரெண்டு பெரும் வாங்க சாப்பிடப் போகலாம்.'
"ராஜா, நாங்க சாப்பிட்டுட்டு வர்ற  வரை இங்கேயே இரு. யாரும் வந்தா கீழே சாப்பிட கூட்டி வா"
"தம்பி நீங்க சாப்பிட்டாச்சா ? இல்லையா? வாங்க வாங்க எல்லோரும் சாப்பிட்டாச்சு. நாமளும் முடிச்சிருவோம். "
எல்லோரும் கலகலப்பாக திருமணம் சிறப்பாக முடிந்ததைப் பற்றி பேசிக் கொண்டே சென்று சாப்பிட தொடங்கினோம்.
" மாப்பிள்ளை , பொண்ணுக்கு ஊட்டி விடுற மாதிரி ஒரு போட்டோ எடுத்திடுவோம். " போட்டோக்ராபர்   ரெடி யானார்.
"நாங்க ஊட்டி மாப்பிள்ளையாக்கும் அதெல்லாம் சொல்லாமலே செய்வோம்" மாப்பிள்ளை கிண்டலடித்த படியே ஜிலேபியை எடுத்து பெண்ணின் வாயில் வைத்தார்.

நான் என்னிடம் ஒப்படைக்கப் பட்ட மொய் பையையும், வீட்டிலிருந்து கொண்டு வந்த பணம் வைக்கப் பட்ட பையையும் பக்கத்தில் வைத்து சாப்பிடத் தொடங்கினேன்.எனக்கு பின்னே முழுவதும் கண்ணாடியால் ஆன தடுப்பு என்று எண்ணிய படி.
எதிர் வரிசையில் இருந்த என் தங்கை என் பின்னால் நடமாடும் ஒருவனை சந்தேகமாக பார்த்தபடி 'பணம் பத்திரம்" என்று சைகை செய்தாள். "எல்லாம் எனக்கு தெரியும்" என்று பார்வையாலேயே சொன்னேன். என் பின்னால் நிற்பவன் பணத்தை குறி வைப்பதையும் , கண்ணாடித் தடுப்புக்கு நடுவே ஒரு கதவு இருந்ததையும்  அறியாமலே.

"ஐயையோ, திருடன், திருடன்"  என் திடீரென்று கத்தினாள் என் தங்கை. ஒரு நொடி திகைத்த நான் கீழே பார்த்தேன். மொய் பை கல்லென இருக்க, அதன் மேல் இருந்த பெரும் தொகை இருந்த சிறிய பையைக் காணவில்லை. எல்லோரும் கத்திய படி ஓடத் தொடங்க ஒரு நொடியில் கல்யாண வீட்டின் சந்தோஷம் முழுவதுமாய்  கரைந்திருந்தது.  மண்டபத்தின் வாயிலில் நின்றவர்கள் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் பணத்தை எடுத்தவன் கற்பூரமாய் மாறியிருந்தான். 

எல்லோரும் சிறப்பாக இருந்ததாக சொன்ன திருமண விருந்து இலைகளிலேயே இருக்க தம் திருமண ஆனந்தத்தை மணமக்கள் முழுவதுமாக அனுபவிக்காத நிலையில் ,கொஞ்சம் கொஞ்சமாக அங்கே துக்கத்தின் நெடி பரவத் தொடங்கியது. பத்து ஆண்டுகள் தேனீக்களை போல் மகளின் திருமணத்திற்காக  பட்ட கஷ்டமெல்லாம் பந்தாடப் பட்டு விட்டது. 
தயங்கியபடி என் மனைவி மெல்ல கேட்டாள் 
"இன்னும் கொஞ்ச நேரத்தில மண்டபம் காலி பண்ணணும். வீட்டுச் சாவி தனியா தானே வைத்திருக்கீங்க." 
"இல்லையேடி, அந்த பையில தான இருக்கு.எல்லாம் எனக்கு தெரியும்னு அடிக்கடி சொல்வேனே ,  இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாம போச்சே !" 
என்று பெருங்குரல் எடுத்து அழத்தொடங்கினேன்.
என் மகள் மணமகள் நான் அழுவதைப் பார்த்து "யப்பா" என் அழத் தொடங்க,
"மரு" மகன் " மாமா, நடந்தது நடந்து போச்சு. நம்ம எல்லார் சம்பளத்தையும் சேர்த்தா தொலைந்தது ஒரு மாத சம்பளம். சின்ன தொகை தான். அடுத்து என்ன செய்றதுன்னு பார்ப்போம். ஏதாவது கார்ப்பென்ட்டர் நம்பர் இருக்கா?" என்றதும் பணம் தொலைந்ததை விட உறுதி வாய்ந்த இரு கரங்களில் என் மகளை ஒப்படைத்த திருப்தி வர அடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் இறங்கினேன்.  
(முற்றும்)
டிஸ்கி: இது எங்கள் இல்லத் திருமணத்தில் நாங்கள் இழந்த கதை. இருந்த கையறு நிலை. திருடியவனை கண்டு பிடித்தது, அதற்குள் அவன் கையில் இருந்த தொகை கரைந்து மறைந்தது தனிக் கதை. அதை ஒரு தனிப்பதிவாய்  போடலாம்னு இருக்கேன். 

10 comments:

  1. :o சாரி. நான் கதைன்னே நினைச்சேன்.

    ReplyDelete
  2. உங்க‌ வீட்டு திரும‌ண‌த்தில் ந‌ட‌ந்த‌தா? ம‌ன‌துக்கு க‌ஷ்ட‌மாக‌ இருக்கிற‌து.. அந்த‌ அனுப‌வ‌த்தை எழுத்து ந‌டையில் கொண்டு வ‌ந்து விட்டீர்க‌ள்!!!!..

    ReplyDelete
  3. //பான்ட் சத்தம் முழங்க பொண்ணையும் மாப்பிளையையும் சர்ச்சுக்கு அழைத்து சென்றோம். முகூர்த்த நேரம் நெருங்கியதும், நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் நெருங்கி வந்தோம். கோவில் மணி அடிக்க மாப்பிள்ளை தாலியை எடுத்து என் மகளின் கழுத்தில் முடிச்சிடத் தொடங்கினார்.//

    "ச‌ர்ச்"
    "தாலி"
    "மூன்று முடிச்சி"
    இதுல‌ தான் கொஞ்ச‌ம் லாஜிக் இடிக்குது

    ReplyDelete
  4. உங்க‌ளுடைய‌ க‌தையை நீங்க‌ த‌மிழிஷ்ல் இணைக்க‌ வில்லை.. நான் இணைத்து விட்டேன்..

    ReplyDelete
  5. அதிர்ச்சி அளித்த கதை... உண்மை நிகழ்வு என அறிந்த போது அதிர்ச்சி பல மடங்கு அதிகரித்தது....

    உண்மை சம்பவம் என்பதை அறிந்ததால், கதை என்ற வகையில் நான் ரசித்த வரிகளை பகிர்ந்து கொள்ள மன சாட்சி இடம் கொடுக்க வில்லை...

    என்றாலும், அவசரப்படாமல் அருமையாக எழுதி இருக்கீர்கள் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்...

    ReplyDelete
  6. no regrets, வானம்பாடிகள் சார்,
    சில அதிர்வுகள் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது

    ReplyDelete
  7. நன்றி நாடோடி,
    நாங்கள் ரோமன் கத்தோலிக்கர்கள்,
    சர்ச்சில் தாலி கட்டித் தான் திருமணம் நடக்கும்.
    குறிப்பிட்ட நாளில் மஞ்சள் கயிறில் இருந்து செயின்க்கு மாற்றுவோம்.தமிழிஷில் இணைத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  8. உண்மை சம்பவம் என்பதை அறிந்ததால், கதை என்ற வகையில் நான் ரசித்த வரிகளை பகிர்ந்து கொள்ள மன சாட்சி இடம் கொடுக்க வில்லை...//
    அது வேற இது வேற.
    நீங்கள் ரசித்ததை தயங்காமல் சொல்லுங்கள்.
    நன்றி பார்வையாளன், கதை எழுதும் போது நீங்கள் கத்தியைக் காட்டி முன்னால் நின்று மிரட்டுவது போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  9. மிடுக்குடனும் , தன்னம்பிக்கையடனும் இருந்த குடும்ப தலைவர் மனம் உடையும் நிலை வருவது , ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது . அவர் பார்வையில் சொல்லியது நல்ல யுக்தி . விரிவாக நாளை எழுதுவேன் . காலையில் படித்தேன் . இரவு ஆகியும் , அந்த அதிர்ச்சி நீடிக்கிறது . மாஸ்டர் பீஸ் .

    ReplyDelete
  10. சூரியனின் ஆக்டோபஸ் கரங்கள் , அதற்குள் கர்பூரமாக மாறி இருந்தான் போன்ற பல வரிகளை ரசித்து படித்தேன் . பணத்தை இழந்ததுடன் நிறுத்தியிருந்தால் கட்டுரை போல இருந்திருக்கும் . மாப்பிள்ளை மூலம் பாசிடிவாக முடித்ததில் எழுத்து திறன் பளிச்சிட்டது.
    கடைசி பாராவில் , முற்றிலும் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுக்கும் யுக்தி மிக அருமையாக உள்ளது. இப்படி முடிவு கொடுப்பது பல நேரங்களில் செயற்கையாக இருக்கும் , இதில் இயல்பாக இருந்தது. எக்சலண்ட் .

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!