Bio Data !!

28 August, 2010

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

ஆசிரியர் தினத்துக்கு ரொம்ப முன் கூட்டியே ஒரு பதிவு போட்டுட்டதால, ஒரு கடுமையான ஆசிரியரைப் பற்றி ஒரு பதிவு.

அதுக்கு முன்ன ஒரு செய்தி. நேற்று மதுரையில் புத்தகத் திருவிழா சென்றிருந்தேன். சில புத்தகங்கள் வாங்கினேன். அதைப் பற்றி அடுத்த பதிவு. திருவிழாவில் சில அறிய முகங்கள் அறிமுகம் ஆனது. திரு.ஞானி, பேச நினைத்தேன் வேகமாக நடந்து கொண்டே இருந்தார். உடம்பு பரவா இல்லையா சார், அறுவை சிகிச்சை நடந்த உடம்பு கொஞ்சம் மெதுவா நடக்கலாமே?  திரு சாரு நிவேதிதா, உயிர்மை ஸ்டால் வாசலில் அமர்ந்திருந்தார். கூட ரெண்டு பேர். ஒரு வேளை அவர்களும் எழுத்தாளர்களாக இருக்கலாம். எனக்கு தெரிந்தவர்கள் இல்லை. ஒரு வேளை தனியாக இருந்திருந்தால் பேசி இருப்பேனோ என்னவோ, விகடனில் 'மனம் கொத்தி பறவை' நல்ல இருக்குனு சொல்ல நினைத்தேன். சொல்ல வில்லை. திரு மனுஷ்ய புத்திரன் , முடித்து வெளியே வரும் போது காரிலிருந்து இறங்கினார்கள்.  என் அதிர்ச்சியை  அமர்த்தி முக மலர்ச்சியோடு அவரிடம் சென்று பேசினேன். அவரும் புன்சிரிப்போடு சில வார்த்தைகள் பேசினார். மறுபடியும் ஸ்டால் சென்று கொஞ்ச நேரம் பேசி வர ஆசை தான். அன்றே திருநெல்வேலி திரும்ப வேண்டி இருந்ததால் அப்படியே திரும்பி விட்டேன். sorry சார் .
இன்னும் ஒரு மதுரை பதிவரை சந்திப்பதாக ஆவலோடு இருந்தேன். சந்தர்ப்பம் சதி செய்து விட்டது.

இப்போ  விஷயத்துக்கு  வருவோம் .
அப்பொழுது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அன்றிலிருந்து இன்று வரை, வகுப்பு ஆனாலும் சரி மீட்டிங் ஆனாலும் சரி முதல் வரிசையில் இருக்கணும். பேசுபவர்களின் ஒரு வார்த்தை கூட சிந்தி சிதறி விடாமல் முழுவதையும் உள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்புக்கு வெளியே மணப்பெண் (!?!) பெஞ்சில்  அமரும் பெரிய பெண்கள் தான் நண்பர்கள். 

இந்தக் காலம் போல பள்ளி சிறுவர்களை அடிக்கக் கூடாத காலம் அல்ல அது. எங்கள் 
வகுப்பு ஆசிரியை கடுமையானவர்கள். ரொம்பக் காலம் கழித்து அவர்களை பார்த்தேன். அதே கடுமை. ஏன்  சில மனிதர்கள் வாழ்வில் சிரிப்பை மறந்து வளர்கிறார்கள் என்று தெரியவில்லை. வகுப்பில் யார் குறும்பு செய்தாலும் இருக்கும் இடத்தில் இருந்தே டஸ்டரை  எறிவார்கள். அவர்கள் குறி பார்த்து எறிவதும், நாங்கள் அது மேலே பட்டு விடாமல் ஒதுங்குவதும் நல்ல விளையாட்டாக இருக்கும். அதை விட பெரிய விளையாட்டு ஒன்று உண்டு. சசிந்தனா என்று ஒரு பெண். பிரபல பீடிக் கடை முதலாளியின்  பெண். இருக்கும் நாலு வரிசை பெஞ்சுகளின் இடைப்பட்ட மூன்று வரிசைகளின் இடையில் அவள் ஓடுவதும், அவளை அடிக்க அந்த ஆசிரியர் பின்னேயே ஓடுவதும் எங்களுக்கு எல்லாம் நல்ல பொழுது போக்கு . 


மதிய உணவு ஒரு பெரிய வட்டமாக இருந்து எடுத்துக் கொள்வோம். அன்று சாப்பிடும் போது ஒரு சதித் திட்டம் தீட்டப் பட்டது. இந்த ஆசிரியரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர ரேவதியின் உதவி நாடப் பட்டது. ரேவதியின் தாய் ஒரு மருத்துவர். மறு
நாள் கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வந்த அவள் வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தும் போது பக்கத்தில் இருந்த பெண்ணிடம் பேசிக் கொண்டே இருந்தாள். அது சதித் திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்ப்பார்த்தது போலவே ஆசிரியர் டஸ்டரை எறிய அதைத் தடுப்பது போல் கண்ணாடி வளையல்கள் அணிந்த கையை குறுக்கே நீட்ட டஸ்டர் பட்டு  வளையல்கள் கல கலவென சிரித்து சிதறின.

அதில் சில பல  துண்டுகள் கைகளில் பட்டு வெளிப்பட்ட ரத்தமும் சதியை நினைத்து சிரித்தது. அது நாளின் கடைசி வகுப்பு. ஒரு நிமிடம் ரத்தத்தை பார்த்து ஆசிரியர் அதிர்ந்தாலும் அதிர்ச்சியை வெளிக் காட்டாமல் அமர்த்தலாக வெளியேறினார். 

வீட்டுக்கு போகும் வழியில் சதித்திட்டத்தின் அடுத்த பகுதி தீட்டப் பட்டது. மறு நாள் ரேவதியைப் பார்த்த ஆசிரியருக்கு அதிர்ச்சி  என்றால் எங்களுக்கு அதை விட பெரிய அதிர்ச்சி. நிஜமாகவே அடி பட்டு விட்டதோ? வலது கையில் முழங்கையில் இருந்து மணிக் கட்டு வரை பெரிய பேண்டேஜ் . கலக்கத்தை மறைத்துக் கொண்டே பாடம் நடத்தத் தொடங்கினார்கள் ஆசிரியர். மெல்ல எழுந்து முன்னே வந்தாள் ரேவதி. ஆசிரியரை நெருங்கி " மிஸ், எனக்கு இன்னைக்கு எழுத முடியாது" என்றாள். 
"ஏன்? என்ன ஆச்சு?"
"நீங்க நேற்று டஸ்டரை எறிந்ததில கண்ணாடி வளையல்   எல்லாம் உடஞ்சதில துண்டு கைக்குள்ள  போய் செப்டிக் ஆகிடுச்சு.ஒரே வலி மிஸ்."

இப்பொழுது தான் தன் செயலின் ஆபத்தை உணர்ந்தது போல் ஆசிரியர் தயங்க அந்தத் தயக்கத்தை சந்தர்ப்பமாக்கிக் கொண்டு மாணவர்கள் சல சலக்கத் தொடங்கினார்கள். நேரம் ஆக ஆக சலசலப்பு அதிகமாகத் தொடங்கியது. மாணவர்களை கட்டுப்படுத்தும் நிலையில் ஆசிரியர் இல்லை. கட்டுப்படுத்தினாலும் அடங்கும் நிலையில் மாணவர்கள் இல்லை. கண்களில் புறப்பட்ட செயற்கை கண்ணீரோடு திரும்பிய ரேவதி என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி சிரித்தது போல் இருந்தது. 
ஆசிரியர் தன் இயல்பில் இருந்திருந்தால் அந்த சத்தத்தை அடக்க ஒரு நொடி போதும். இப்பொழுது அவர்களை அதிர்ச்சி ஆண்டு கொண்டிருந்தது. 
"எல்லோரும் அமைதியாக படித்துக் கொண்டிருங்கள்" என்று சொல்லிய படி மாடியில் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த தன் தோழியிடம்  ஆலோசனை கேட்க சென்றார்கள்.       
அன்று ஆசிரியருக்கு நேரம் சரி இல்லை என்று தான் நினைக்கிறேன். அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்துக்குள் தலைமை ஆசிரியர் தனது வழக்கமான ரௌண்ட்ஸ் வந்து விட்டார்கள். அப்பொழுது  தலைமைஆசிரியராய் இருக்கும் கன்னியாஸ்திரிகள் நாளுக்கு ஒரு முறை பள்ளி முழுவதும் ஒரு தடவை சுற்றி வருவார்கள். ஆசிரியர்கள் மேலும் மாணவர்கள் மேலும் ஒரு கண்காணிப்பு. 

வகுப்பின் சத்தம் அவரை ஈர்க்க உள்ளே நுழைந்து ஆசிரியரை எங்கே என்றார்கள். 
முன் வரிசையில் இருந்த என்னைப் பார்த்து" போய் உங்க கிளாஸ் மிஸ் எங்கே இருந்தாலும் கூட்டி வா' என்றார்கள். 
மாடிக்கு ஓடிப் போன நான் " மிஸ் , உங்களை ஹெட்மிஸ்ட்ரெஸ் கூட்டி வரச் சொன்னார்கள்  " என்றேன்.  
அதிர்ந்த ஆசிரியர் அலறி அடித்து கீழே இறங்க அதற்குள் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் கதை சொல்லி முடித்திருந்தார்கள். ரேவதியின் கை அருகே தலைமை ஆசிரியர் கையைக் கொண்டு செல்ல அவள் அதிக பட்ச வலியைக் காட்ட கையை பின்னே உருவிக் கொண்டார்கள். 
"வாட் நான்சென்ஸ்  இஸ் திஸ்? கம் டு மை ரூம் " என்று அழுத்தமாக சொல்லிய படி தலைமை ஆசிரியர் முன்னே செல்ல ஆசிரியர் பின்னே செல்ல எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். கடைசி வரிசைக்கு சென்ற நான் கட்டு போட்டு இருந்த ரேவதியின் கையை பிடித்து  கொஞ்சம் பலமாகவே குலுக்க அவள் போலியாக வலியைக் காட்டினாள் கண்ணைச் சிமிட்டியபடி. 
ஆசிரியரின் கடுமையான செயல் அன்றே முடிவுக்கு வந்தது. 
வீட்டுக்கு செல்லும் வழியில் நான் " கண்ண கண்ண சிமிட்டியா சிரிக்கிற . கட்ட பிரிச்சு பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி" என்றேன். 
" கையை 'தொட வந்தாலே' வலிக்குது. அப்பறம் எப்படி பிரிச்சு பார்க்கிறது" என்று அவள் சொல்ல நாங்கள் சிரித்த சிரிப்பில் முகம் சுளித்து முதிய பெண் ஒருவர்
' பொம்பளப் பிள்ளையாய் அடக்கமா போகத் தெரியுதா" என்று உறுமினார்.
"அடக்கமா அப்படினா?" என்று நான் மெல்ல கேட்க மறுபடியும் பிறந்த சிரிப்பில் தெருவில் வானவில் உதித்தது. 

6 comments:

  1. அப்ப‌வே.. இந்த‌ வேலையெல்லாம் பார்த்து இருக்கீங்க‌..ம்ம்ம்ம்ம்ம்ம்

    அந்த‌ ஆசிரிய‌ர் ரெம்ப‌ அப்பாவி தான்?. :)

    ஒரு சின்ன‌ விளையாட்டை கூட‌ க‌ண்டுபிடிக்க‌வில்லையே!!!!!!..

    ReplyDelete
  2. முதலில் வாழ்த்துகள்...
    நல்ல ரசனையான எழுத்து நடை..!

    சின்ன வயசுல செம சேட்டை போல தெரியுது.... :P

    ReplyDelete
  3. குழந்தைகள் மேல டஸ்டரை எறிவது பாவமில்லையா நாடோடி? இது அந்த பாவம் இல்லை ஐயூ பாவம்

    ReplyDelete
  4. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் பகிர்வு! சூப்பர்!

    ReplyDelete
  5. ”சில புத்தகங்கள் வாங்கினேன். அதைப் பற்றி அடுத்த பதிவு”
    சீக்கிரம் எழுதுங்க.. என்ன புத்தகங்கள் வாங்குனீங்க?

    ” இன்னும் ஒரு மதுரை பதிவரை சந்திப்பதாக ஆவலோடு இருந்தேன் “
    அந்த பதிவர் நானா? சந்திப்பதா சொல்லவே இல்லை ??

    ” வகுப்பு ஆனாலும் சரி மீட்டிங் ஆனாலும் சரி முதல் வரிசையில் இருக்கணும். பேசுபவர்களின் ஒரு வார்த்தை கூட சிந்தி சிதறி விடாமல் முழுவதையும் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்”
    நாங்க எல்லாம் எப்பவும் கடைசி பெஞ்சுதான், நாங்க பேசுரது அவுங்களுக்கு கேட்டுட கூடாதே!!
    அருமையா இருந்த்து..சீக்கிரம் அடுத்த பதிவில் புத்தகங்கள் பற்றி எழுதுங்க,,

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!