Bio Data !!

Showing posts with label இப்படியும் சில மனிதர்கள்.. Show all posts
Showing posts with label இப்படியும் சில மனிதர்கள்.. Show all posts

21 September, 2012

அருணா பாஸ்கரன் ....

அருணா பாஸ்கரன் யார் என்று சொல்கிறேன் என்று முந்திய பதிவில் சொல்லி இருந்தேன்.

சுதந்திர போராட்ட வீரர் எஸ். டி ஆதித்தன் தான் இவரது தந்தை. அவரது கனவில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வர் வந்து " உனக்கு குழந்தை வடக்கே உள்ளது " என சொல்லி இருக்கிறார். தினத்தந்தி அதிபர் ஆதித்தனார் இவரது சித்தப்பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் மற்றுமொரு சித்தப்பா. அருணாச்சலேஷ்வர் நினைவாகத் தான் தனக்கு வடக்கே இருந்து பெண் குழந்தை கிடைத்ததும் அருணா என்று பெயர் வைத்திருக்கிறார்.

இவர் சுதந்திரத்திற்கு பின் நடந்த முதல் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நின்று முதல் எம். பி ஆனார். ஒரு முறை டெல்லி செல்லும் பொது முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பிரேம்நாத் ஷர்மா என்பவர் இவரிடம் " எத்தனை குழந்தைகள்? " என்று கேட்க கலங்கியபடி தனக்கு குழந்தைகள் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஷர்மா மூன்றாவதாக குழந்தை உண்டாகி இருக்கும் தன்  மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தால் தத்து கொடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். அதே போல் பெண் குழந்தை பிறந்து எஸ். டி  ஆதித்தன் அவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் தான் அருணா.

நடிகர் சரத்குமார் இவரது அத்தை மகன். எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி இவரது சம்பந்தார். அருணா அவர்களது எழுத்துக்கள் நடக்கும் நிகழ்வை கண் முன் கொண்டு நிறுத்துவதால் " மேடம் , நீங்க கதை எழுதலாமே ?" என்றேன். எங்க  வீட்டில "அருணா, எழுதுறதை இத்தோட நிறுத்திக்கோ, இதுக்கு மேல நீ எழுதினா கதை விடுறேன்னு சொல்லிடுவாங்க " னு சொல்றாங்கன்னு சொல்ல "நானும் உங்களை கதை விடத்தான் மேடம் சொல்றேன் " என்றேன். சிரித்தபடியே பேச்சை முடித்துக் கொண்டோம் .

17 September, 2012

தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும்

நாட்டில தலை போகுற காரியங்கள் பல நடக்கும் போது நாம புத்தகத்தை வாசித்துக் கிட்டு அதை விமர்சனமும் செய்து கொண்டு இருக்கிறோமேனு  தோணினாலும் நிறைய விஷயங்களில் நமது மனதுக்கு சரி என்று படுவதை சொல்ல முடியாத காரணத்தால் பிரச்னை இல்லாத இந்த பகுதியை தொடருகிறேன்.

சில வருடங்கள் முன்னால விஜய்  டி வீ யில் பூர்வ ஜென்மத்தில் தான் அக்பரின் மனைவி என்று சொல்லி ஒரு நிகழ்ச்சி நடந்தது. நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அப்போவே எங்க அம்மா இந்த பொண்ணு எங்க பள்ளி மாணவி என்று சொன்னார்கள். அவர்கள் எழுதிய "தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும் "  என்ற புத்தகம் படிக்கக் கிடைத்தது. ஆசிரியர் அருணா பாஸ்கரன். ஆடலில் சிறந்த மாணவி, விளையாட்டில் ஸ்டேட் லெவல் மாணவி என்று பல விஷயங்கள் இருந்ததால் பல ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த மாணவியை என் தாய் நினைவில் நிறுத்தி வைத்திருந்தார்கள். 

ஆசிரியரின் தொலைபேசி எண் கிடைத்ததால் தொடர்பு கொண்டு என் தாயை நினைவு இருக்கிறதா எனக் கேட்டேன். "டீச்சரிடம் நான் ஏகப்பட்ட வசவு வாங்கிக் கட்டி இருக்கிறேன். அது எப்படி மறக்கும் " என்றார்கள். விஜய்  டி வீ நிகழ்ச்சியை பற்றிக் கேட்டப் போது  அமானுஷ்ய அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என ஒரு நிகழ்சிக்காக கேட்டு இருக்கிறார்கள். உடன அருணா அவர்கள் தொடர்பு கொண்டு "அமானுஷ்ய அனுபவம் " என்றால் என்ன என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் "சிலர் பேயை சந்தித்து இருப்பார்கள், சிலர் இறை சக்தியை. சிலருக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் கூட வந்து இருக்கலாம் " என்று சொல்லி இருக்கிறார்கள். அப்பொழுது தான் தான் பூர்வ ஜென்மத்தில் ஜ்யோதாபாய் அக்பராக இருந்ததாக தனக்கு அடிக்கடி தோன்றுவதாக கூறியதும் அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. 

இறை பக்தி மிகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் அதனாலேயே பல முறை கடவுள்களையும் சித்தர்களையும் கனவில் கண்ட அனுபவங்களை இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள். நாம் பல விதமான கனவுகள் காண்கிறோம். ஆனால் கடவுளர்கள் கனவில் வருவது ரொம்ப அபூர்வமாகத் தான் இருக்கிறது. அண்மையில் கூட பாடகி சுதா ரகுநாதன் தனது கனவில் ஒரு தடவை கூட பிள்ளையார் வந்ததே இல்லை என்ற தன் ஏக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அருணா அவர்களுக்கு சித்தர்கள் கனவில் வருவது   வருடத்திற்கு இரு முறை நடப்பதாக இருந்திருக்கிறது. 

'பூர்வ ஜென்ம நினைவு என்பது சந்தோஷமாக அனுபவிக்கக் கூடிய ஒரு  இனிமையான உணர்வு அல்ல " என்கிறார் அருணா. தொண்டையில் எதுவோ சிக்கி துப்பவும் முடியாத விழுங்கவும் முடியாத துயரம் தான் அது" என்கிறார். 

தன் ஆசையாக ஒன்றை சொல்கிறார். கார் நிறைய போர்வைகளை அள்ளிச் சென்று டெல்லியில் குளிரில் உறங்கும் ஏழைகளுக்கு அவர்கள் அறியாமல் போர்த்தி விட வேண்டும் என்கிறார். அங்கே அவரது அழகான மனம் தெரிகிறது. இவரது கணவர் ரோட்டரி கவர்னராக இருந்த காலத்தில் கிடைத்த ஷால்களை சென்னையில் சிக்னலில் கார் நிற்கும் போது கையேந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இவருக்கு இருந்திருக்கிறது. 

இவரது பிள்ளைகள் இவரது அனுபவங்களை நம்பாமல் இருந்தாலும் , இவரது கணவர் ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் போகப் போக முழுமையாக நம்பி இருக்கிறார்கள். புத்தகத்தின் முன்னுரையாக  திரு பாஸ்கரன் "இந்த புத்தகத்தில் அவள் எழுதி இருக்கும் ஒவ்வொரு சம்பவமும் நிகழ்ச்சியும் உண்மையாக நடந்தவை. அவளின் ஒவ்வொரு நினைவுகளும் , உணர்வுகளும் அவள் உண்மையாக அனுபவித்தவை " என்று எழுதி இருப்பதே அதை உறுதி செய்கிறது. வித்தியாசமான் வாசிப்பு . 

அருணா அவர்கள் ஒரு பிரபலமான குடும்பத்தின் அங்கத்தினர். அவர் யார் என்பதை விரைவில் பகிர்கிறேன் 


07 December, 2011

சிந்தியுங்கள் நண்பர்களே!!

நெல்லையில் ரெண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு செய்தி. சைக்கிளில் சென்ற ஒரு பள்ளி மாணவியின் மேல் ஒரு கார் மோதி இருக்கிறது. அந்த காரில் இருந்தது சென்னையில் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவன். சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண்ணுக்கு  மருத்துவமனை சென்று கொஞ்ச நேரத்திலேயே மரணம். 

செய்திகள் கசிகின்றன. இதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பது போக போகத் தான் தெரியும். மாணவன் சென்னையில் படித்தாலும் நெல்லையை சேர்ந்தவன். கொஞ்ச காலமாகவே அந்த பெண்ணை பைக்கில் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறான். பள்ளியில் இருந்தும் காவல் துறையில் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. மாணவன் தவறுதலாக இடித்தானா அல்லது வேண்டுமென்றே செய்தானா என்பது தெரியவில்லை ஆனால் பெற்றவர்களுக்கு பிள்ளையை இல்லை என்றாக்கி விட்டான்.

காதல் என்பது அந்த வயதில் வர வேண்டிய ஒன்று என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மறுப்பவரை மறந்து ஒதுங்கி செல்வது தான் மனித நாகரீகம். ஒருவரிடம் தன் காதலை சொல்லும் போதே அதற்கான பதில் 'எஸ்' என்றும் இருக்கலாம் 'நோ' என்றும் இருக்கலாம்  என்ற எதிர்பார்ப்போடு சொல்லுங்கள் . அப்பொழுது அவர்கள் சொல்லும் 'நோ' உங்களை காயப்படுத்தாது. இல்லை என்றால் 'என்னை எப்படி மறுக்கலாம்' என்று சுய கௌரவம் பாதிக்கப்பட்டதாக நினைத்து ,அதுவே எல்லை மீறும் போது
 விபரீதமாக நடந்து கொள்ள நேரிடும். "சரிகா ஷா" மரணித்த பின்னும் இன்னும் நினைவுகளில் உயிரோடு தானே  இருக்கிறாள்.

மோதிய பையன் வசதி படைத்தவனாய் இருந்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம். ஏன் ஒரு மத போதகராய் மாறி வெளி நாட்டிற்கு குடி பெயர்ந்து  கூட விடலாம். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோரை நினைத்து பாருங்கள். இழந்தது இழந்தது தான். எந்த பெண்ணும் கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் தேவதாசாகவே தேங்கி விடுவதில்லை. கடந்து செல்வது தான் புத்திசாலித்தனமும் கூட. அப்படி இருக்கையில், தன் அன்பை ஏற்றுக் கொள்ளாத பெண்ணை (அதற்கு பல நியாயமான காரணங்கள் இருக்கலாம்)  முகத்தில் ஆசிட் ஊற்றுவது, கொலை முயற்சி செய்வது, அவள் நிமதியான வாழ்க்கையை சிதைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். 

காதலை மறுதலிப்பதை தன்னை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வது எவ்வளவு முட்டாள்தனமானது. அண்மையில் பார்த்து கோபம் கொண்ட ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது. "மயக்கம் என்ன ?" ஒரு பெண்ணை எவ்வளவு முன்னெச்சரிக்கை அற்றவளாக காட்ட முடியுமோ அவ்வளவு தரம் தாழ்ந்து காட்டப்பட்ட கதை நாயகி. அவள் செய்யும் நல்ல செயல்கள் கூட திணிக்கப்பட்டதாகத் தான் தெரிகிறது. ஒரு திரைப்படம் எளிதாக விஷ விதைகளை ஊன்ற முடியும். தன்னை மறுப்பவளை எந்த வழியிலாவது அடைவது இல்லையேல் அழிப்பது என்ற கதை கண்ணோட்டம் மாறினால் தான் நடை முறையில் இருக்கும் இத்தகைய சோகங்களும் முடிவுக்கு வரும் 

 சிந்தியுங்கள் நண்பர்களே!! 

டிஸ்கி: இன்று செய்தி : தப்பிச் செல்ல முயன்ற மாணவனை காவல் துறை பிடித்து விட்டது. 

30 November, 2011

எண்ணச் சிதறல்கள் !!


***இன்று என் அம்மா எழுபத்தைந்து ஆண்டுகளை முடித்து வெற்றிகரமான எழுபத்தியாராம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். உங்கள் சார்பாக எனது வாழ்த்துக்களை கூறி விட்டேன்.பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பேத்தியின் மகன் என்று குடும்ப மரம் விழுது பரப்பி இருப்பதில் ஆக சந்தோஷத்தில் இருக்கிறார்கள், முப்பத்தி எட்டாம் வயதில் விதவையான என் தாய். அவர்களை அதே சந்தோஷத்தோடு நூறு வயது வரை கொண்டு செல்ல அந்த இறைவன் உதவ வேண்டும். கடந்த வருடம் எங்கள் அம்மாவை ஒரு பேட்டி கண்டு பதிவு போட்டேன். அதை பார்க்க
***இப்போ இருக்கிற கிளைமேட்டில், ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து அம்மாவுக்கு ஒரு பரிசுப் பொருளாக ஒரு சேலையையும் எடுத்துக் கொண்டு (வழக்கமான முறைப்படி எல்லோரும் பணியில் இருக்கும் காரணத்தால் விழா தனியாக விடுமுறை தினத்தன்று) காரை ஓட்டிக் கொண்டு சர்ச்சுக்கு செல்லும் போது உலகமே சொர்க்கமாய் இருந்தது. அந்த நேரத்தில் வேக வேகமாய் நடை பயில்பவர்களில் அதிகம் பேர் வயதானவர்கள் தான். அதிலும் ஒருவர் இரு கைகளையும் வேக வேகமாக வீசி நடந்து கொண்டிருந்தார். காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவருடன் கொஞ்ச தூரம் அப்படியே நடக்க ஆசையாக இருந்தது.  

***இப்பொழுது எங்கள் ஊரில் சவேரியார் கோவிலில் திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. சவேரியாரை பற்றி ஒரு கூடுதல் தகவல் தெரிந்து கொண்டேன். அது உங்களுக்காக. சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கப்பலில் செல்கிறார் சவேரியார். அவருடன் செல்கிறார் அன்டோனியோ. செல்லும் வழியிலேயே உடல் நலம் குன்றி இறந்து போகிறார். அருகில் உள்ள நாட்டில் அவரை புதைத்து விட்டு தொடர்ந்து செல்கிறார்கள். கிட்டத்தட்ட எண்பது நாட்களுக்குப் பின் திரும்பி அதே இடம் வரும் போது என்ன தோன்றியதோ அன்டோனியோ இறங்கி சென்று புதைத்த இடத்தின் கல்லை அகற்றி பார்க்கிறார்.

 இறந்த சவேரியாரின் உடல் அப்படியே இருக்கிறது. கப்பலின் கேப்டனிடம் காட்டுவதற்காக சிறிது சதைப் பகுதியை அறுத்து எடுக்கிறார். ரத்தம் வழியத் தொடங்குகிறது. அதை கொண்டு காட்டியதும்  பிரமித்த கேப்டன் அவர் உடலை கப்பலில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கிறார். புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்த பிறகு அவரது உடல் கோவாவுக்கு கொண்டு செல்லப் படுகிறது. அங்கே அவரது அழியாத உடல் இன்னும் இருக்கிறது கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக.

***"பாலை" என்னும் படத்தை எடுத்து ஒரு இயக்குனர் பட்டுக் கொண்டிருக்கும் பாடுகளை கண்களில் நீர் வர அவர் சொல்லும் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. கடும் முயற்சி எடுத்து எடுக்கப் பட்ட படமாகத் தெரிகிறது. சில திரை அரங்குகளில் வெளியிடப் பட்ட இரண்டே நாட்களில் அதுவும் கூட்டம் அதிகமாக வரக் கூடிய ஞாயிறு அன்று படத்தை தூக்கி விட்ட கொடுமையை கண்களில் நீர் வர விவரிக்கிறார். வேதனையாக இருந்தது. ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு பெண் ஆவேசமாக "TODAY THE GOVERNMENT IS RULED BY RICH BUSINESS PEOPLE" என்று கூறியது நினைவுக்கு வந்தது. இன்று நம்மை ஆள்வது பணக்காரர்கள் தானா?

***இன்று ஒரு அதிசயம் நடந்தது. எனது அலைபேசியில் ஒரு கால் சென்னையில் இருந்து. " ஹலோ ! RUFI  நான் மாலதி பேசுறேன்."
எனக்கு உடனே நினைவுக்கு வந்தது இடுப்பு வரை மடித்துக் கட்டிய தலைப் பின்னலுடன், சராசரிக்கும் குறைவான உயரத்தில் சாந்தமாக, என்னுடன் பள்ளியில் படித்த தோழி , அவள் எங்கே அழைக்கப் போகிறாள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது தொடர்பு விட்டு போய். "எந்த மாலதி"
"ஹேய் ! நான் தான்ப்பா உன்கூட ஸ்கூல் ல சேர்ந்து படிச்சேனே"
அட! அதே மாலதி! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனேன். 
சென்னையில் தரமணியில் எங்கள் அலுவலகம் ஒன்றிற்கு சென்டிருக்கிறாள். எதற்கும் கேட்டுப் பார்ப்போமே என்று என்னைப் பற்றி ஒருவரிடம் விசாரித்திருக்கிறாள். அவர் தனக்கு தெரியாது என்று சொல்லி அங்கே நெல்லையில் இருந்து மாற்றம் வாங்கிக் கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் கேட்கச் சொல்லி இருக்கிறார். ஊப்ஸ்!! அந்த பெண்ணுக்கு என் தொலை பேசி எண் தெரியும் என்பதால் உடனே தொடர்பு கிடைத்து விட்டது. என்ன ஒரு COMMUNICATION  DEPARTMENT !    பள்ளி நண்பர்கள் என்றாலே தனி அன்பு தான். அவள் பல ஆண்டுகள் டென்டிஸ்ட் ஆக பணி புரிந்து இன்று பணி விடுத்து அழகான இல்லத் தலைவியாக இருக்கிறாளாம். என் தங்கைகள் இருவரையும் பெயர் சொல்லி விசாரித்தாள். ஆச்சரியப்பட்டேன். இன்று உண்மையிலேயே மிகச் சிறந்த நாள் தான்.
I AM HAPPY TO THE EXTREME MALATHI !!

இன்னும் இதே போல் எங்கள் நட்பு வட்டத்துக்குள் வர வேண்டிய தோழி ஒருத்தி இருக்கிறாள். பெயர் செந்தமிழ்செல்வி (அழகான பெயர் ) அந்தப் பெயருக்காகவே அவளை ரொம்ப பிடிக்கும். அவள் கவிதையும் நான் கவிதை என்ற பெயரில் எதையோவும் எழுதுவோம். கல்லூரி கடைசி தினத்தன்று அவளும் நானும் சேர்ந்து கவிதை எழுதி மாற்றி மாற்றி வாசித்தோம். கண்ணதாசனும் எதோ ஒரு கடை நிலை மனிதனும் மாறி மாறி எழுதியதைப் போன்று இருந்தது. எங்கே இருக்கிறாய் செல்வி?

16 November, 2011

"போதுமப்பா சந்திப்பைப் பற்றிய பதிவு " எனப் புலம்பாதீர்கள்.

தேனம்மையிடம் நான் சென்னை வருவதாக சொன்னதும் வேடியப்பனின்(எனக்கு பின்னால் புத்தகங்களுக்கே  பலம் கொடுத்து நிற்கிறாரே அவரே தான்) discovery book ஸ்டாலுக்கு வந்து விடலாம் அது தனக்கும் பக்கமாக இருக்கும் என்று சொன்னார்கள். காலை 10 .30க்கு சந்திப்பதாக ஏற்பாடு. நான் 8 ஆம் தேதி காலையில் என் கணவரின் தம்பி வீட்டிலிருந்து வந்து விடுவதாக சொல்லி இருந்தேன் . என்ன ட்ராபிக் ! என்ன ட்ராபிக் !  11 .30 க்கு தான் வர முடிந்தது. தான் VIP ஆக கூட்டம் தொடங்கிய பின் தான் வர வேண்டும் என்று எண்ணி 11 .00 மணிக்கு வந்திருக்கிறார் 'மாண்பு மிகு' செல்வக்குமார் அவர்கள். நான் அதற்கும் அரை மணி லேட் எப்பூடி?
வேடியப்பன்
வேடியப்பன் மிக அமைதியான மனிதராக இருக்கிறார். போட்டோ வுக்கு கொஞ்சம் பெரிய ஆளாக தெரிகிறார் உண்மையில் சின்ன பையன் தான். தேவைக்கு அதிகமாக ஒரு சொல் கூட உதிர்ப்பதில்லை. அங்கே உள்ள புத்தகங்களை பற்றி  நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். நான் போகும் போதே நண்பர்கள் அனைவருக்கும் ஏதாவது புத்தகம் பரிசளிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதை அவர்கள் தேர்வில் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப சரியான புத்தகங்களை வேடியப்பன் தேர்வு செய்து கொடுத்தார். நண்பர் செல்வகுமார் தனது அடுத்த ப்ராஜெக்ட் காந்திஜியைப் பற்றியது என்பதால் அது சம்பந்தமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டார். அவரது மிகச் சிறந்த முயற்சியில் அணிலின் பங்காய் இந்த புத்தகங்கள் இருப்பதில் எனக்கு பெருமை. வேடியப்பன் அவர்களுக்கும்  புத்தகம் பரிசளிக்க ஆசை இருந்தது. அது கடலைக்கடை வாசலில் கடலை வண்டி போட்டு விற்பதை போல் ஆகும் என்பதால் அந்த விருப்பம் கை விடப் பட்டது.

அங்கே இருக்கும் போதே செல்வகுமார் அலைபேசியில் அழைப்பு.  எண்ணைப் பார்த்ததும்,சத்தம் வராமல் "கௌசல்யா" என்று உதடசைத்து என் கையில் கொடுத்தார். "ஹலோ!!அண்ணா!" என்றார் கௌசல்யா
"நான் அண்ணா இல்லம்மா அக்கா!" என்றேன்
"அக்கா.....எனக்கு பொறாமையா இருக்குதுக்கா" என்றார். அந்த குரலில் பொறாமை இல்லை அன்பு தான் பொதும்பிக் கொண்டிருந்தது.
செல்வகுமார் சிறப்பான மனிதர். "HELLO ! GOOD MORNING !RUFINA!" என்று சொல்லும் போதே அவருக்குள் இருந்து அந்த உற்சாகம் நம்முள் படர ஆரம்பித்து விடும். அதன் பிறகு அவர் பேசி முடிக்கும் வரை உல்லாச ஊஞ்சலாட்டம் தான். அவரது "முத்தக் கவிதைகள்" பிரசித்தி பெற்றவை. மனுஷர் முத்தத்தை பற்றி ஆராய்வதில் கமலஹாசனுக்கு அடுத்து நிற்பார் என நினைக்கிறேன். சொல்ல முடியாது முந்தி விட்டாலும் ஆச்சரியம் இல்லை. 
ஜேம்ஸ், தேனம்மை, ரூபினா , செல்வா, ஜிபின்
                                                                                
மேலே இருப்பதில் நாலு பேரை பற்றி இப்பொழுது உங்களுக்கு தெரியும். தரையில  இருக்கிறாரே அவர் தான் என் கணவரின் தம்பி. என் புகுந்த வீட்டில் ஒரே அலை வரிசையில் இருப்பது நாங்கள் இருவரும் தான். சந்திப்பின் எல்லா போட்டோக்களும் அவர் எடுத்தது தான். ஆனால் அவரை மட்டும் இப்படி எடுத்து விட்டோம். ஏதோ இதுவாவது கிடைத்ததே! "தினத்தந்தியில்" Economic Times ஒரு பக்கம் வருமே அது இவர் கை வண்ணம் தான். அது இன்றைய நிலை. உண்மையிலேயே பெரிய மனிதர். திரை உலகில் இவரது முதல் படமே பெரிய ஹிட். "குணா" படத்தில் உதவி இயக்குனர். அது பல ஆண்டு கடும் சோதனைக்கு பிறகு தான். இருந்தும் திரை உலகின் நெளிவு சுளிவுகள் இவருக்கு பழகியே வராத காரணத்தால் பத்தாண்டுகளுக்கு பின் வலுக் கட்டாயமாக வெளிக் கொணர்ந்தோம். ஷேக்ஸ்பியரின் "மாக்பெத்" இவரது முயற்சியால் தமிழாக்கம் பெற்று வெளியிடப் பட்டிருக்கிறது. மற்றும் ஒரு புத்தகம் விரைவில் வெளியிடப் படும் முயற்சியில் இருக்கிறது. இவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. பாயாசத்தின் முந்திரிகளாய் அப்பப்போ இடையில் சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும். 

இனி வருவது, இறுதியாக வருவது ஒரு முக்கியமான VIP ...காத்திருங்கள் 

12 November, 2011

discovery book palace சந்திப்பு !


இவர் நம்ம பதிவுலகத்துக்கு சம்பந்தம் இல்லாதவர். நான்கு ஆண்டுகளாக பழக்கம். ஆனால் இந்த முறை சென்னை செல்லும் போது தான் முதன் முறையாக பார்க்கிறேன். உடல் சரியில்லாமல் கொஞ்சம் டல்லாக இருக்கிறார். படு ஸ்மார்ட் பார்ட்டி. 

நான்கு ஆண்டுகளுக்கு முன் என் அலுவலக நண்பர் CCNA வில் 100 /100 வாங்கியதாக செய்தித் தாளில் பார்த்தவுடன் CCNA மேல் ஒரு காதல். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என அன்றைய ஹீரோ வான ஆர்குட் க்ரூப்ஸ் இல் தேடிய போது சிக்கினார். நாகர்கோயில் காரர் என்றதும் ஒரு பாசம் (என் திருமண வாழ்வின் முதல் ஆறு வருடங்கள் இருந்த ஊர் அல்லவா?)அன்று முதல் நண்பர்கள். அப்பொழுது ஒரு மென் பொருள் நிறுவனத்தில் சுமார் அரை லட்சம் மாதம் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆனால் எந்த நேரத்திலும் வேலையை விட்டு கனவுத் தொழிற்சாலைக்குள் (அதே தான் சினி பீல்ட் தாங்க) தொபுக்கடீர்னு குதிக்க தயாராக இருந்தார். வீட்டுக்கு , ஏன் அவங்க அம்மா அப்பாவுக்கு கூட ஒரே பிள்ளை. அதனால நான் பேசும் போதெல்லாம் அதை டிஸ்கரேஜ் செய்து கொண்டே இருப்பேன். 

திடீர்னு ஒரு நாள் "நான் வேலையை விட்டுட்டேங்க. வாழ்க்கையில ரிஸ்க் எடுத்தாத் தான் சாதிக்க முடியும்"  னு சொன்னார். எனக்கு பகீர்னது. வளரும் பயிர் சின்ன வயதில் மிக உயர்ந்த வேலை. அதை விட உயர்வாக அதை விடுவதில் இருந்த துணிச்சல்.   ஒன்றும் சொல்வதற்கில்லை. வேலையை விட்டாச்சு. அதன் பின் கண்டிப்பாக நம்பிக்கை ஊட்டி தான் பேச வேண்டும். 

கொஞ்ச காலம் ரொம்பவே கஷ்டப்பட்டார். IT துறையில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர் சிரம தசையில் இருந்தார். கட் அண்ட் பேஸ்ட் அது தாங்க எடிட்டிங் துறையில் தான் இவருக்கு ஆர்வம் இருந்தது. ஒரு சில வளர்ந்த எடிட்டர்களிடம் உதவியாளராக சேர முயன்றார். நடக்கவில்லை.  இன்றைய டெக் உலகத்தில் இவரது கம்ப்யூட்டர் அறிவு மிக எளிதாக தொழில் கற்றுக் கொள்ள வைத்தது. சங்கத்தில்  சந்தாதாரராக இருந்தால் தான் அவர் பெயர் வெள்ளித்திரையில் வரும். அதற்கு ஒரு பெரிய தொகை தேவையாக இருந்தது. வேலையை விட்டது வீட்டுக்கு தெரியாது. இந்த நிலையில் சில காலம் இவர் செய்த எடிட்டிங் க்கு இவர் சொந்தம் கொண்டாடாமல் இருந்து பின் சங்கத்தில் சந்தாதாரராகி விட்டார். பல விளம்பரப் படங்கள் செய்திருக்கிறார். "திருமண மாலை" சில காலம் எடிட்டிங் செய்தார். இவர் எடிட்டிங் செய்த படம் முதன் முதலாக இவர் பெயரில் அநேகமாக ஜனவரியில் வெளிவரும். 

சொந்தத்தில் இப்பொழுது எடிட்டிங் ஸ்டுடியோ வைத்திருக்கிறார். அங்கே போய் படங்கள் எப்படி எடிட் செய்யப் படுகின்றன என்று செய்முறை விளக்கம் தந்தார். பறந்து பறந்து அடிக்கிற பாச்சா வெல்லாம் இனிமே என்னிடம் பலிக்காது. அதெல்லாம் எப்படி என்று சொல்லித் தந்து விட்டார்.

சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்க அப்பா சென்னையில் "உலகம் சுற்றும் வாலிபன்" ஷூட்டிங் பார்க்க ஒரு சிபாரிசில் கூட்டி போயிருந்தார்கள். க்ளோப் உருண்டையில் இருந்து மஞ்சுளா ஆடிய படியே படிகளில் கீழே இறங்கி வரும் காட்சி.  சுற்றி இருப்பவர்கள் வீரிய மௌனம் கடைப் பிடிக்க வேண்டி இருந்தது. சின்ன சத்தம் வந்தாலும் இயக்குனர்களுக்கு கோபம் வந்து விடும். ஆனால் இப்பொழுது எடிட் பண்ணாமல் ஒரு காட்சி காட்டினார். அதில் பின்புலத்தில் பேசிக் கொள்வதெல்லாம் கேட்கிறது. "நோ ப்ராப்ளம். அதை எரேஸ் செய்திடுவோம்" னு சொன்னார்.         

அதன் பின் டப்பிங் ஸ்டுடியோ பார்த்தேன். ஏற்கனவே AIR  இல் நிகழ்சிகள் வழங்கி பழக்கம் இருப்பதால் கொஞ்சம் 'தெரிஞ்ச மாதிரி' கேள்வி எல்லாம் கேட்டேன். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகணும்கறது எனது நெடு நாள் கனவு. இப்போ வாழ்நாளில் பாதி ஓடி விட்டது, பார்ப்போம் ! ! ஹோட்டல் அக்க்ஷயாவில் பிரைட் ரைசும், சாம்பார் வடையும் வாங்கித் தந்தார். அன்று நான் சைவம் சாப்பிடும் மூடில் தான் இருந்தேன். அந்த சாம்பார் வடைக்காகவாவது மறுபடியும் சென்னை செல்ல வேண்டும். 

நிறைந்த மனதோடு, டிஸ்கவரி புக் பாலஸில்  நடக்கப் போகும் பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து பிரிந்தேன். இன்னும் தொடர எண்ணம் உண்டு ....

அவர் பேரை சொல்லாமலே விடுறேன்னு பார்க்கிறீங்களா ? வாய்க்குள்ளே நுழையாத ஒரு பெயர் இப்போதைக்கு விட்டுருவோம் இன்னொரு மழை நாளில் சொல்கிறேன்.

04 August, 2011

நெல்லையில் மற்றுமோர் பதிவர் சந்திப்பு!

(மீ த first , 'மனதோடு மட்டும்' கௌசல்யா, 'வெடிவால்' சகாதேவன் ஐயா  'யானைக்குட்டி' ஞானேந்திரன் {நான் சரியா தானே சொல்றேன்}த கிரேட் செல்வா, 'வலைச்சரம்' சீனா ஐயா, 'உணவு உலகம்' சங்கரலிங்கம் ) 
அது ஓர் தித்திப்பான காலைப் பொழுது. அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கத் தொடங்கிய நேரம், அன்பை மழை எனப் பொழியும் தோழி தேனம்மையிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. "ஒரு நண்பர் சென்னையில் இருந்து நெல்லை வந்திருக்கிறார் அவர் நெல்லை பதிவர்களை சந்திக்க விரும்புகிறார். அவரிடம் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்திருக்கிறேன். " என்றார்கள். மாதத்தின் ஆரம்ப நாள். வழக்கமான அரசு அலுவலகங்களின் monthly  statement  திரு விழா கொண்டாட்டத்தில் இருந்ததால், அவர் பெயர் செல்வா என்பதைத் தவிர வேறு அதிக தகவல்கள் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் "சரி " என்றேன்.

சிறிது நேரத்தில் செல்வாவிடம் இருந்து அழைப்பு. 
உற்சாகமாக "குட் மார்னிங் ரூபினா" என்றார். அழைப்பதில் நமது பெயரை சேர்த்து சொன்னாலே அன்னியோன்யம் வந்துவிடும் என்னும் ரகசியம் அறிந்தவர்.
"இன்று மதியம் விமானத்தில் செல்வதாய் இருந்தேன். நெல்லை பதிவர் சந்திப்பைப் பற்றி சித்ரா சொன்னதில் இருந்து நெல்லை பதிவர்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்" என்றார். எனக்கு தெரிந்த பதிவர்கள்  நெல்லையில் நாலே நாலு  பேர் தான் இருக்கிறார்கள்.  அது வரை அவர் திரைப்படம் இயக்குவதற்காக வந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது. அவரும் சொல்லவில்லை. நெல்லைக்கே 'அண்ணா'  ஒருவர் இருக்கிறாரே சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர் சிறப்பாக செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவர் பக்கம் கை காட்டினேன். 

அவர் மாகி நூடுல்ஸ் போல குறைந்த நேரத்தில் ருசிகரமான ஒரு ஏற்பாட்டை செய்து விட்டார். நாலு பேர் பத்து பேர் ஆனோம். இது வரை முகம் தெரிந்தவர்கள் சந்திப்பிற்காக கூடி இருக்கிறோம். இப்படி பார்த்திராத ஒருவருக்காக வேறு ஊர்களில் இருந்து வந்து காத்திருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று  சொல்லி சொல்லி மாய்ந்து போனார் செல்வா. நாகர்கோவிலில் இருந்து விஜயன், மதுரை யில் இருந்து வலைச்சரம் சீனா ஐயா, மற்றும் நெல்லைவாசிகள். சீனியர் பதிவர் 'வெடிவேல்' சகாதேவன் ஐயா அவர்கள் கலந்து கொண்டது ஆச்சர்ய சந்தோஷம். விஜயனைப் பார்த்ததும் நாஞ்சில் மனோ நினைவு வந்ததோ என்னவோ சங்கரலிங்கம் சார், அங்கே இருந்தே மனோவை அலைபேசியில் அழைத்து வெறுப்பேற்றினார்கள். அந்த நேரம் விமானம் கிடைத்திருந்தால் வந்திருந்தாலும் வந்திருப்பார். 

செல்வா அவர்கள் அமைதியாகவே நிறைய சாதனைகள் செய்து இருக்கிறார். கணினி வந்த புதிதில் தான் வாங்கி வைத்திருந்த கணினியைப் பார்க்க டெல்லியில் இருந்து வந்தார்கள் என்று சொல்லி ஆச்சர்யப் படுத்தினார். தான் ஒரு குறும் படம் எடுத்திருப்பதாகவும் நாங்கள் பார்க்க விரும்பினால் காட்ட இருப்பதாகவும் சொன்னார். ஏக மனதான விருப்பத்தின் அடிப்படையில் அங்கேயே பார்க்க தயாரானோம். அந்த குறும்படத்தின் கதாநாயகர் கீழே உள்ளார். அவர் காட்டிய முக பாவங்களில் காதலில் விழுந்த நான் இன்னும் எழுந்தபாடாய் இல்லை. ட்ராக் பாட வந்தவர் அதிர்ஷ்டம் அழைத்து ஒரிஜினல் பாடகர் ஆனது போல் அந்த கதா பாத்திரத்துக்கு நடிக்க வேண்டியவர் வராததால் செல்வா அவர்களின் சித்தப்பாவே நடித்து இருக்கிறார். இயக்குனர்கள் நடிக்க சொல்லித்தரலாம். நடிகர்கள் நடிக்க முயலலாம். அந்த உணர்வு அந்த முக பாவனையில் அப்படியே பொருந்திப் போக வேண்டும். அது அவருக்கு நடந்தது. குறும் படத்தின் ஒளிப்பதிவும் செல்வாவே தான். 
அவர் லாப் டாப்பில் க்ளோஸ் அப்பில் வந்த நொடியில் எடுத்ததால் கொஞ்சம் சிதைந்த படமாக இருக்கிறது. இருந்தும் அந்த நாசியும் உதடுகளும் எவ்வளவு வேதனையை உணர்த்துகின்றன. உடல்கள் அழியலாம் ஆனால் ஆன்மா அழிவதில்லை என்னும் கருத்தை உள்ளடக்கி இருந்தது குறும் படம். கடற்கரையில் தன் மகள் சுனாமியில் இறந்ததை சொல்லி " மண்ணில் புதைத்த எதுவும் முளைக்காமல் போனதில்லை. என் மகளும் மறுபடியும் பிறந்திருப்பாள். எனக்கு தாயாய், தோழியாய், மனைவியாய் இன்னும் எல்லா உறவுகளும் அடங்கிய அன்பைத் தரும் ஒரு பெண்ணை மனைவியாய் அடைய தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாய். அப்படி ஒரு பெண்ணை சந்தித்தால் எனக்கு கண்டிப்பாக தெரியப் படுத்து. அவளில் தான் என் மகளின் ஆன்மா உறைந்திருக்கும். நான் அவளை பார்க்க விரும்புகிறேன்." Hats  off  to  U  " செல்வா சார். இந்த குறும்படத்தை ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். சுனாமியின் பாதிப்பு சுண்டல் சாப்பிடுவது போல் ஆகி விட்ட அந்த நாட்டில் இந்த குறும் படம் திரையிடப் பட இருக்கிறது. வாழ்த்துக்கள்!!

சங்கலிங்கம் அவர்களின் நண்பரின் ஹோட்டலில் தான் சந்தித்தோம். அவருக்கு வலை பூக்களில் இருந்த ஈடுபாடு அந்த அரை முழுவதும் ஆச்சர்யக் குறிகளாய் நிரம்பி இருந்தது. அல்வா (!?!) பப்ஸ், நல்ல தொரு லெமன் டீ என மனதோடு வயிறும் நிறைந்தது. 'மனதோடு மட்டும்' கௌசல்யாவின் கணவர் ஒரு தனித்துவம் நிறைந்த நபர். எந்த ஒரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வோம். ஆனால் பல வெற்றிகளை சாதிக்கப் போகும் இந்தப் பெண்ணின் பின்னால் இருக்கும் ஆண் அவர்.

கருவாளி, யானைக்குட்டி வலைப்பூக்களின் சொந்தக்காரர்கள் இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி எழுதலாம். அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமை இடைஇடையே அவர்களின் கலந்துரையாடலில் வெளிப்படுகிறது. வலைச்சரம் சீனா ஐயா அமைதியாக அங்கே இருந்து அத்தனை பேருக்கும் சிபி ஸ்டைலில் மார்க் போட்டது போல் இருந்தது. நான் பாஸ் ஆகி விட்டேனா என்று அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

மற்றும் ஒரு சித்த மருத்துவரும் கலந்து கொண்டார். ரயிலைப் பிடிக்கும் அவசரத்திலும் அங்கே வந்து எல்லோரோடும் அறிமுகம் செய்து கொண்டார். "என்ன ஒரே நாய்க்குட்டி, யானைக்குட்டி யா இருக்கு " என்றார். எனது நாய்க்குட்டி மனசு, மற்றொரு வலைப்பூ யானைக்குட்டி. செல்வாவை சந்தித்ததன் மகிழ்வை காட்டி எல்லோரோடும் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு ரயிலைப் பிடிக்க பறந்தார். 

எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க ஆசை தான். வீட்டு வாசலில் ஒரு கம்போடு (நாய்க்குட்டி ஆச்சே!)கணவர் காத்திருப்பது போல் ஒரு நிமிடம் கண் முன் ஒரு காட்சி வந்து போனதால், அனைவரிடமும் விடை பெற்று வீடு நோக்கி விரைந்தேன். எனக்கு ஆணாய்ப் பிறக்க வில்லையே என்ற ஆதங்கம் ஒரு நொடி வந்து போனது. 

28 August, 2010

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

ஆசிரியர் தினத்துக்கு ரொம்ப முன் கூட்டியே ஒரு பதிவு போட்டுட்டதால, ஒரு கடுமையான ஆசிரியரைப் பற்றி ஒரு பதிவு.

அதுக்கு முன்ன ஒரு செய்தி. நேற்று மதுரையில் புத்தகத் திருவிழா சென்றிருந்தேன். சில புத்தகங்கள் வாங்கினேன். அதைப் பற்றி அடுத்த பதிவு. திருவிழாவில் சில அறிய முகங்கள் அறிமுகம் ஆனது. திரு.ஞானி, பேச நினைத்தேன் வேகமாக நடந்து கொண்டே இருந்தார். உடம்பு பரவா இல்லையா சார், அறுவை சிகிச்சை நடந்த உடம்பு கொஞ்சம் மெதுவா நடக்கலாமே?  திரு சாரு நிவேதிதா, உயிர்மை ஸ்டால் வாசலில் அமர்ந்திருந்தார். கூட ரெண்டு பேர். ஒரு வேளை அவர்களும் எழுத்தாளர்களாக இருக்கலாம். எனக்கு தெரிந்தவர்கள் இல்லை. ஒரு வேளை தனியாக இருந்திருந்தால் பேசி இருப்பேனோ என்னவோ, விகடனில் 'மனம் கொத்தி பறவை' நல்ல இருக்குனு சொல்ல நினைத்தேன். சொல்ல வில்லை. திரு மனுஷ்ய புத்திரன் , முடித்து வெளியே வரும் போது காரிலிருந்து இறங்கினார்கள்.  என் அதிர்ச்சியை  அமர்த்தி முக மலர்ச்சியோடு அவரிடம் சென்று பேசினேன். அவரும் புன்சிரிப்போடு சில வார்த்தைகள் பேசினார். மறுபடியும் ஸ்டால் சென்று கொஞ்ச நேரம் பேசி வர ஆசை தான். அன்றே திருநெல்வேலி திரும்ப வேண்டி இருந்ததால் அப்படியே திரும்பி விட்டேன். sorry சார் .
இன்னும் ஒரு மதுரை பதிவரை சந்திப்பதாக ஆவலோடு இருந்தேன். சந்தர்ப்பம் சதி செய்து விட்டது.

இப்போ  விஷயத்துக்கு  வருவோம் .
அப்பொழுது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அன்றிலிருந்து இன்று வரை, வகுப்பு ஆனாலும் சரி மீட்டிங் ஆனாலும் சரி முதல் வரிசையில் இருக்கணும். பேசுபவர்களின் ஒரு வார்த்தை கூட சிந்தி சிதறி விடாமல் முழுவதையும் உள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்புக்கு வெளியே மணப்பெண் (!?!) பெஞ்சில்  அமரும் பெரிய பெண்கள் தான் நண்பர்கள். 

இந்தக் காலம் போல பள்ளி சிறுவர்களை அடிக்கக் கூடாத காலம் அல்ல அது. எங்கள் 
வகுப்பு ஆசிரியை கடுமையானவர்கள். ரொம்பக் காலம் கழித்து அவர்களை பார்த்தேன். அதே கடுமை. ஏன்  சில மனிதர்கள் வாழ்வில் சிரிப்பை மறந்து வளர்கிறார்கள் என்று தெரியவில்லை. வகுப்பில் யார் குறும்பு செய்தாலும் இருக்கும் இடத்தில் இருந்தே டஸ்டரை  எறிவார்கள். அவர்கள் குறி பார்த்து எறிவதும், நாங்கள் அது மேலே பட்டு விடாமல் ஒதுங்குவதும் நல்ல விளையாட்டாக இருக்கும். அதை விட பெரிய விளையாட்டு ஒன்று உண்டு. சசிந்தனா என்று ஒரு பெண். பிரபல பீடிக் கடை முதலாளியின்  பெண். இருக்கும் நாலு வரிசை பெஞ்சுகளின் இடைப்பட்ட மூன்று வரிசைகளின் இடையில் அவள் ஓடுவதும், அவளை அடிக்க அந்த ஆசிரியர் பின்னேயே ஓடுவதும் எங்களுக்கு எல்லாம் நல்ல பொழுது போக்கு . 


மதிய உணவு ஒரு பெரிய வட்டமாக இருந்து எடுத்துக் கொள்வோம். அன்று சாப்பிடும் போது ஒரு சதித் திட்டம் தீட்டப் பட்டது. இந்த ஆசிரியரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர ரேவதியின் உதவி நாடப் பட்டது. ரேவதியின் தாய் ஒரு மருத்துவர். மறு
நாள் கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வந்த அவள் வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தும் போது பக்கத்தில் இருந்த பெண்ணிடம் பேசிக் கொண்டே இருந்தாள். அது சதித் திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்ப்பார்த்தது போலவே ஆசிரியர் டஸ்டரை எறிய அதைத் தடுப்பது போல் கண்ணாடி வளையல்கள் அணிந்த கையை குறுக்கே நீட்ட டஸ்டர் பட்டு  வளையல்கள் கல கலவென சிரித்து சிதறின.

அதில் சில பல  துண்டுகள் கைகளில் பட்டு வெளிப்பட்ட ரத்தமும் சதியை நினைத்து சிரித்தது. அது நாளின் கடைசி வகுப்பு. ஒரு நிமிடம் ரத்தத்தை பார்த்து ஆசிரியர் அதிர்ந்தாலும் அதிர்ச்சியை வெளிக் காட்டாமல் அமர்த்தலாக வெளியேறினார். 

வீட்டுக்கு போகும் வழியில் சதித்திட்டத்தின் அடுத்த பகுதி தீட்டப் பட்டது. மறு நாள் ரேவதியைப் பார்த்த ஆசிரியருக்கு அதிர்ச்சி  என்றால் எங்களுக்கு அதை விட பெரிய அதிர்ச்சி. நிஜமாகவே அடி பட்டு விட்டதோ? வலது கையில் முழங்கையில் இருந்து மணிக் கட்டு வரை பெரிய பேண்டேஜ் . கலக்கத்தை மறைத்துக் கொண்டே பாடம் நடத்தத் தொடங்கினார்கள் ஆசிரியர். மெல்ல எழுந்து முன்னே வந்தாள் ரேவதி. ஆசிரியரை நெருங்கி " மிஸ், எனக்கு இன்னைக்கு எழுத முடியாது" என்றாள். 
"ஏன்? என்ன ஆச்சு?"
"நீங்க நேற்று டஸ்டரை எறிந்ததில கண்ணாடி வளையல்   எல்லாம் உடஞ்சதில துண்டு கைக்குள்ள  போய் செப்டிக் ஆகிடுச்சு.ஒரே வலி மிஸ்."

இப்பொழுது தான் தன் செயலின் ஆபத்தை உணர்ந்தது போல் ஆசிரியர் தயங்க அந்தத் தயக்கத்தை சந்தர்ப்பமாக்கிக் கொண்டு மாணவர்கள் சல சலக்கத் தொடங்கினார்கள். நேரம் ஆக ஆக சலசலப்பு அதிகமாகத் தொடங்கியது. மாணவர்களை கட்டுப்படுத்தும் நிலையில் ஆசிரியர் இல்லை. கட்டுப்படுத்தினாலும் அடங்கும் நிலையில் மாணவர்கள் இல்லை. கண்களில் புறப்பட்ட செயற்கை கண்ணீரோடு திரும்பிய ரேவதி என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி சிரித்தது போல் இருந்தது. 
ஆசிரியர் தன் இயல்பில் இருந்திருந்தால் அந்த சத்தத்தை அடக்க ஒரு நொடி போதும். இப்பொழுது அவர்களை அதிர்ச்சி ஆண்டு கொண்டிருந்தது. 
"எல்லோரும் அமைதியாக படித்துக் கொண்டிருங்கள்" என்று சொல்லிய படி மாடியில் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த தன் தோழியிடம்  ஆலோசனை கேட்க சென்றார்கள்.       
அன்று ஆசிரியருக்கு நேரம் சரி இல்லை என்று தான் நினைக்கிறேன். அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்துக்குள் தலைமை ஆசிரியர் தனது வழக்கமான ரௌண்ட்ஸ் வந்து விட்டார்கள். அப்பொழுது  தலைமைஆசிரியராய் இருக்கும் கன்னியாஸ்திரிகள் நாளுக்கு ஒரு முறை பள்ளி முழுவதும் ஒரு தடவை சுற்றி வருவார்கள். ஆசிரியர்கள் மேலும் மாணவர்கள் மேலும் ஒரு கண்காணிப்பு. 

வகுப்பின் சத்தம் அவரை ஈர்க்க உள்ளே நுழைந்து ஆசிரியரை எங்கே என்றார்கள். 
முன் வரிசையில் இருந்த என்னைப் பார்த்து" போய் உங்க கிளாஸ் மிஸ் எங்கே இருந்தாலும் கூட்டி வா' என்றார்கள். 
மாடிக்கு ஓடிப் போன நான் " மிஸ் , உங்களை ஹெட்மிஸ்ட்ரெஸ் கூட்டி வரச் சொன்னார்கள்  " என்றேன்.  
அதிர்ந்த ஆசிரியர் அலறி அடித்து கீழே இறங்க அதற்குள் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் கதை சொல்லி முடித்திருந்தார்கள். ரேவதியின் கை அருகே தலைமை ஆசிரியர் கையைக் கொண்டு செல்ல அவள் அதிக பட்ச வலியைக் காட்ட கையை பின்னே உருவிக் கொண்டார்கள். 
"வாட் நான்சென்ஸ்  இஸ் திஸ்? கம் டு மை ரூம் " என்று அழுத்தமாக சொல்லிய படி தலைமை ஆசிரியர் முன்னே செல்ல ஆசிரியர் பின்னே செல்ல எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். கடைசி வரிசைக்கு சென்ற நான் கட்டு போட்டு இருந்த ரேவதியின் கையை பிடித்து  கொஞ்சம் பலமாகவே குலுக்க அவள் போலியாக வலியைக் காட்டினாள் கண்ணைச் சிமிட்டியபடி. 
ஆசிரியரின் கடுமையான செயல் அன்றே முடிவுக்கு வந்தது. 
வீட்டுக்கு செல்லும் வழியில் நான் " கண்ண கண்ண சிமிட்டியா சிரிக்கிற . கட்ட பிரிச்சு பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி" என்றேன். 
" கையை 'தொட வந்தாலே' வலிக்குது. அப்பறம் எப்படி பிரிச்சு பார்க்கிறது" என்று அவள் சொல்ல நாங்கள் சிரித்த சிரிப்பில் முகம் சுளித்து முதிய பெண் ஒருவர்
' பொம்பளப் பிள்ளையாய் அடக்கமா போகத் தெரியுதா" என்று உறுமினார்.
"அடக்கமா அப்படினா?" என்று நான் மெல்ல கேட்க மறுபடியும் பிறந்த சிரிப்பில் தெருவில் வானவில் உதித்தது. 

15 June, 2010

இப்படியும் சில மனிதர்கள் !!

நான் சந்தித்த, வித்தியாசமான மனிதர்களைப் பற்றி   அப்பப்போ  பகிர்ந்துக்கலாம்னு இருக்கிறேன்.
இதை எழுதலாம்னு நினைக்கிறப்போ எனக்கு முதல்ல நினைவு வந்தது சுபாஷினி. எனக்கு பிடித்த பத்து பெண்களிலேயே எழுதி இருக்கணும் ஆனா அதை அவங்க விரும்ப மாட்டாங்களோனு விட்டேன். ஒரே சண்டை. எப்படி என்னை விடலாம்னு.
எனக்கு ஹலோ எப் .எம் மில் பேசுற பழக்கம் உண்டு. "நிலா முற்றம்" எனக்கு பிடித்த நிகழ்ச்சி. (இப்போ ஏனோ இல்லை) பேசுவதற்கும் தோதான நேரம். பதிவுலகம் வரும் முன் என்  எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு வடிகால்.
ஒரு நாள் எப்.எம் மில் பேசிய சுபாஷினியின் குரல் என்னை ஈர்த்தது. ஒரு அழுத்தத்துடன் தன் எண்ணங்களை பதிய வைத்த குரல். ரசித்ததுடன் மறந்து விட்டேன்.
அன்று ஒரு நாள் எனது இல்ல தொலைபேசியில் அதே குரல். எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே என் ஒரு நொடி நினைத்து "சுபாஷினி" என்றேன்.
"நான் சுபாஷினி தான் பேசுறேன். நீங்க பேசுறதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் (அட!) நண்பர் ஒருவர் தான் உங்க எண்ணைக் கொடுத்தார். அதுவும் ரொம்ப கட்டாயத்துக்கு அப்பறம். ....."
அதன் பின் இருவரில் யார் நிலா முற்றத்தில் பேசினாலும் அடுத்தவர் பாராட்டுவதும், மாறு பட்ட கருத்துக்களை சொல்வதும் வழக்கமானது.அநேகமாக தினமும் பேசிக் கொள்வோம். எனக்கு கல்லூரி காலத்துக்குப் பின் எனக்கு கிடைத்த மிக நல்ல தோழி. 
ஒரு நாள் இதே போல் பேசிக் கொண்டு இருக்கும் போது மிகச் சாதாரணமாக " எனக்கு சில காலங்களுக்கு முன் கண் பார்வை போய் விட்டது" னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியில் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க ஆரம்பித்தது. 
"என்ன சொல்றீங்க" னு தயங்கி தயங்கி கேட்டேன்.
" ஆமாப்பா, என்னோட ரெண்டாவது பையன் பிறந்து கொஞ்ச காலத்துக்கு பிறகு திடீர்னு கண் பார்வை மங்க ஆரம்பித்தது. இப்போ முழுவதுமாய் போயிடுச்சு. " னாங்க.
எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. சுதாரித்துக் கொண்ட நான் பேச்சின் போக்கை சட்டென மாற்றி "இன்னைக்கு  எதுவும் ஸ்பெஷல் ப்ரோக்ராம் 'பார்த்தீங்களா'?" என்றேன்.
உபயோகமான பல தொலைக்காட்சி நிகழ்சிகளை "கேட்டு" என்னிடம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் உண்டு. 
எனது யோசனை பலித்தது. இறுக்கமான சூழல் மாறி இயல்பான நிலைக்கு இருவரும் வந்தோம். எப்படி பார்வை போனது, எப்படி சமாளிக்க கற்றுக் கொண்டார்கள் என்று மற்றொரு சாவதானமான பொழுதில் கேட்டுக் கொண்டேன். கண் பார்வை இன்மை என்பதே ஒரு சோகம் என்றால் அதை வளர்ந்த நிலையில் இழப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. ஆனால் அந்த சோகச் சொட்டு துளியும் இல்லாமல் உற்சாகமாக தன் சம்பந்தப் பட்ட காரியங்களை சுயமாக சமாளித்து, குடும்பத் தலைவியாய் ஒரு குறையும் இல்லாமல் திறம்படச் செய்யும் ஒரு பெண்மணி. 
வலைப்பூவில் நான் எழுதும் கதைகளுக்கு முதல் வாசகி. ஆம். எனது கதைகள் நிகழ்வுகளை கண் முன் கொண்டு நிறுத்துகிறது னு சிலர் பின்னூட்டம் இடுவது உண்டு. அதன் ரகசியம் இது தான். நான் எழுதியதும் சுபாஷினி இடம் தான் முதலில் வாசித்துக் காண்பிப்பேன். அவர்கள் புரியத் தயங்கும் சில இடங்களுக்கு இன்னும் கொஞ்சம் மெருகு கூட்டுவேன். அதில் அவர்களுக்கும் ஒரு சந்தோஷம்." உங்கள் வலைப்பூவில் என் பங்கும் இருக்கிறதே " என்று பூரிப்புடன் சொல்வார்கள். 
தான் சிந்தித்து வைத்த கவிதைகளை நாங்கள் பேசும் போது சுபாஷினி சொல்வது வழக்கம் உங்கள் கவிதைகளை நீங்களே உச்சரித்து ரெகார்ட் செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்வதுண்டு. 
தான் இழந்த சந்தோஷங்களை இன்று வரை பேச்சில் குறிப்பிட்டதில்லை. வருத்தமான தருணங்களை வருணித்ததே இல்லை. துன்பக் கடலில் இருந்து வெளியேற அவர்களுக்கு ஒரு சின்ன துரும்பு போதும். 
மொத்தத்தில் நான் அறிந்த ஜான்சி ராணி. இப்படியும் சில மனிதர்கள். 
ஒரு விஷயத்தை மறந்திட்டேனே. சிகரமும், இமயமும் சேர்ந்து நடித்த 'ரெட்டைச் சுழியின்' சில பகுதிகள் இவர்கள் வீட்டில் எடுக்கப் பட்டது தான்.