Bio Data !!

26 September, 2010

"கண்ணொளி காப்போம் "

"கண்ணொளி காப்போம் " மற்றுமொரு அரசுத் திட்டம். ஆசிரியர்கள், மாணவர்களின் பார்வைத்திறன் குறைபாட்டை கண்டு பிடித்துக் கூற வேண்டும். அரசு அதை  சரி செய்வதற்கு ஆவன செய்யும். இது கடந்த வாரச் செய்தி.

இது என்னுடைய பள்ளி நாட்களை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக் (?) கொண்டிருந்தேன். பெரிய வகுப்பறை. வழக்கம் போல் வகுப்பில் இரண்டாம் வரிசையில் இருப்பிடம். வரலாறு புவியியலுக்கு ஒரு ஆசிரியர். அப்போலாம் இத்தனை பாடங்கள் ஏது. மொத்தமே ஐந்து பாடங்கள் தான். இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப  பாவம். ஒவ்வொரு பாடமும் ரெண்டு. அது தவிர எக்ஸ்ட்ராவா ரெண்டு.

அந்த வரலாற்று ஆசிரியர் வயதானவர். வந்ததும் நாற்காலியில் அமர்பவர் மணி அடித்ததும் தான் எழுந்து போவார். புத்தகத்தை திறந்து அதனுள் கோனார் நோட்ஸ் வைத்து வரிசையாக வாசித்துக் கொண்டே செல்வார். அதில் வரும் கேள்விகளை இடையிடையே கேள்விகளாய் கேட்டுக் கொள்வார். நம்ம யாரு? நாங்களும் கோனார் நோட்ஸ் வாங்கி புத்தகத்தை திறந்து அதனுள் வைத்துக் கொள்வோம். ஆசிரியர் மூச்சு விட எடுத்துக் கொள்ளும் இடைவெளியில் நாங்கள் அவர் விட்டதை எடுத்துக் கொடுப்போம். அவர் அதைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொண்டதில்லை.

அந்த ஒன்பதாம் வகுப்பு ஒரு ரசனையான காலம். அன்றைய பெண் குழந்தைகள் பொதுவாக பூப்படையும் காலம் அது. அதுவும் அல்லாமல் பெண்கள் பூப்படைந்தால் மொத்தம் பதினாறு நாட்கள் வெளியில் விடுவதில்லை. எனவே நாங்கள், மாணவிகள் நீண்ட விடுமுறை எடுத்து விட்டாலே  நாட்களை எண்ண ஆரம்பித்து விடுவோம். பதினாறு நாட்கள் கடந்து ஒரு பெண் வகுப்புக்கு வந்து விட்டாலே வெறும் கையால் ஆரத்தி எடுத்து குலவை இட்டு ரகளை பண்ணி விடுவோம். எல்லாம் மணி அடிக்கும் வரை தான். மணி அடித்து விட்டால் மயான அமைதி சூழ்ந்து விடும்.

அன்று மாதாந்திர பரீட்சை.  பூப்படைந்து விடுமுறை முடிந்து வந்த பெண்ணை கலாட்டா பண்ணிக் கொண்டு இருந்ததில் வரலாற்று ஆசிரியர் உள்ளே வந்ததை கவனிக்கவில்லை. வந்தவர் வேகமாக கேள்விகளை போர்டில் எழுதிப் போட்டு என் அருகே வந்து "Get up and go to the last bench" என்றார். எழுதப் போறது  பரீட்சை, அதை எங்கே இருந்து எழுதினா என்ன னு எழுந்து கடைசி பெஞ்சுக்கு போய் விட்டேன். உட்கார்ந்து போர்டை பார்த்து ஒரே முழி. பதிலே தெரியலயானு பார்க்கிறீங்களா? இல்லைங்க கேள்வியே தெரியல. கண்ணெல்லாம் மய மயங்குது. ரெண்டு கையால் கண்ணை அழுந்தத் தேச்சிட்டு பார்க்கிறேன். அப்பவும் ஒண்ணும் தெரியல. 

பேனாவைக் கீழே வச்சிட்டு ரெண்டு கைகளாலேயும் கன்னத்தைத் தாங்கிட்டு ஆசிரியரையே பரிதாபமாகப் பார்த்த படி உட்கார்ந்து விட்டேன். முதலில் கண்டு கொள்ளாதது போல் இருந்தவர் பிறகு அருகில் வந்தார். " என்ன ? படிக்கலையா?" என்றார்.
" படிச்சிட்டு தான் வந்தேன் மிஸ் ."
"அப்பறம் என்ன கேட்டு இருக்கிற கேள்விக்கு பதில் தெரியலையா? "
"இல்ல மிஸ், கேட்டு இருக்கிற கேள்வியே என்னனு தெரியல" என்றேன்.
எங்கள் குறும்புத்தனம் தெரிந்தவர் ஆதலால் சந்தேகமாகவே பார்த்த படி "என்ன சொல்றே" என்றார்.
"நிஜமா மிஸ், இங்கே இருந்து போர்டில என்ன எழுதி இருக்குதுனே தெரியல" என்றேன்.
அருகில் உள்ள மாணவிகளை பார்த்தால் காகிதத்தில் நட்ட கண்ணை நகர்த்தாமல் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.
எழுதிப் போடுவதற்காக கொண்டு வந்த காகிதத்தை  கொடுத்தார். அப்பறம் என்ன. லேட்டா ஆரம்பிச்சு எழுதி முடித்துக் கொடுத்தாச்சு. முடித்ததும் ஆசிரியர் என் தோழியின் அருகில் வந்து "அவளுக்கு கண்ணில் ஏதோ தொல்லை இருப்பது போல் இருக்கிறது. வீட்டில சொல்லச் சொன்னா அவ டபாச்சிடுவா. நீ போய் அவங்க வீட்டில சொல்லணும். கண் டாக்டரை பார்க்கச் சொல்லி . " என்றார்.

எனக்கு ஒரே வருத்தம். வைத்தியரிடம் செல்ல, விருப்பமில்லாமல் வெளியே அழைத்தால் நாலு கால்களையும் நாலு புறம் பரப்பி அடம் பிடிக்குமே நாய்க்குட்டி அது போல் மறுத்தாலும் ஆரம்ப கட்டத்திலே குறையை கண்டு பிடிக்கவும் அதிக அளவில் கண்ணின் பவர் அதிகரிக்காமல் இருக்கவும் அது உதவியது. ஒரு சின்ன நிகழ்ச்சியில் இருந்து மாணவியின் குறையை ஊகித்து, வீட்டுக்கு தகவல் அனுப்பி உதவிய அந்த ஆசிரியரை அதற்கு பின் ரொம்ப பிடித்துப் போய் விட்டது. கோனார் நோட்ஸ் கொண்டு போவதே இல்லை. பாடம் நடத்துவது போல் அவர்களின் பாவனையும் அதை கவனிப்பது போன்ற எங்கள் பாவனையும் சிக்கலின்றி தொடர்ந்தது.

ஆசிரியர்களே ! விளையாட்டா எடுத்துக் கொள்ளாமல் கண்ணொளித் திட்டத்தின் பயன்   மாணவர்களை சென்று சேர உதவுங்கள்.

13 comments:

  1. உண்மைதான்.. ஆசிரிய‌ர்க‌ளால் மாண‌வ‌ர்க‌ளின் புத்த‌க‌ம் வாசிக்கும் திற‌மையை வைத்து அவ‌ர்க‌ளின் க‌ண்க‌ளின் குறைபாடுக‌ளை சொல்ல‌ முடியும்...

    ReplyDelete
  2. மிக அருமை... dramatic ஆக இருந்தது.. அந்த பெண் விடுமுறை எடுக்க வில்லை என்றால், நீங்கள் கலாட்டா செய்ய வாய்ப்பில்லை.. கலாட்டா செய்யவில்லை என்றால், கடைசி பெஞ்சுக்கு செல்ல வாய்ப்ப்ளில்லை.. கடைசி பெஞ்ச செல்லவில்லை என்றால் இந்த பதிவுக்கு வாய்ப்பே இருந்திருக்காது..
    இதில் அந்த கால பெண் குழந்தைகள் வாழ்வின் முக்கிய தருணம் , அதை ஜாலியான அனுபவமாக மாற்ற உதவும் சக தோழியரின் விளையாட்டு சீண்டல் என அருமையான எழுத்து...

    நீங்கள் நீண்ட நாள் சிறுகதை எழுதவில்லை..அந்த குறையை இது போக்கி விட்டது... நல்ல மெஸ்சேஜ் சொல்லி இருக்கிறீர்கள்..
    என்னை கவர்ந்த வரி ...
    "விருப்பமில்லாமல் வெளியே அழைத்தால் நாலு கால்களையும் நாலு புறம் பரப்பி அடம் பிடிக்குமே நாய்க்குட்டி அது போல் "..
    ரொம்ப நாள் கழித்து உங்கள் பழைய எழுத்து நடையில் , stylish ஆக எழுதி இருக்கிறீர்கள்..மிகவும் மகிழ்ச்சி..
    ( பணி சுமை காரணமோ அல்லது வேறு என்னவோ , உங்கள் எழுத்தில் ( சிந்தனையில் அல்ல ) ஒருவகை சோர்வு காணப்பட்டது..இதில் பழைய அழகுணர்ச்சி, விறு விறுப்பு எல்லாம் முழுமையாக இருக்கிறது.. நீண்ட நாள் நண்பரை சிறிது காலம பார்க்காமல் இருந்து மீண்டும் பார்ப்பது போன்ற மகிழ்ச்சி உண்டானது..நன்றி )

    ReplyDelete
  3. //எழுதப் போறது பரீட்சை, அதை எங்கே இருந்து எழுதினா என்ன//

    //நாலு கால்களையும் நாலு புறம் பரப்பி அடம் பிடிக்குமே நாய்க்குட்டி//

    பாதி இடத்துல நின்னு சிரிச்சுட்டு இருந்தேன்..
    சிரிப்புடன் சிந்தனை.. :)

    ReplyDelete
  4. //நாலு கால்களையும் நாலு புறம் பரப்பி அடம் பிடிக்குமே நாய்க்குட்டி அது போல்//

    அதனாலத்தான் நாய்க்குட்டி மனசுன்னு பேரு வச்சுகிட்டீங்களா? :-)))

    அப்புறம், வரலாறு பாடத்துக்குமா கோனார் நோட்ஸ்? அவ்வ்..

    ReplyDelete
  5. நல்ல மெஸ்சேஜ் சொல்லி இருக்கிறீர்கள்..

    ReplyDelete
  6. என்ன சொல்றதுன்னு தெரியல பார்வையாளன்.
    முகம் தெரியாத நபர்களிடம் அன்பும் நட்பும் பாராட்டுவது நெகிழ்ச்சியுற வைக்கிறது. நானே நினைத்தேன். கதை எழுதி ரொம்ப நாளாச்சேன்னு. எழுதிருவோம்.

    ReplyDelete
  7. எழுத்தில் உங்கள சிரிக்க வைச்சிட்டேனே சிவா, பெரிய விஷயம் தான்.

    ReplyDelete
  8. ஆமாம் ஹுசைனம்மா, தமிழ் 'கோனார்' எல்லோருக்கும் தெரிந்தவர்.
    இவர் வரலாற்றுக் கோனார்

    ReplyDelete
  9. நன்றி வினோ, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    அடிக்கடி வருகை தாருங்கள். .

    ReplyDelete
  10. thank u ramesh vaithya,
    அத்தி பூத்தாற் போல் அப்பப்போ வருகை தருவதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. தலைவர் பட விமர்சனத்தை சீக்கிரம் எழுதுங்க.. படம் பார்க்கலைனா, அட்லீஸ்ட் ஜெனரலா எழுதுங்க

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!