Bio Data !!

03 October, 2010

நந்தினி !

நந்தினி பால்கனியின் கம்பிகளில் சாய்ந்து, கீழே எதையோ உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தாள். பிரபாகர் அங்கே கொஞ்ச நேரம் நின்று அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். அவள் நின்றிருந்த நிலை அவள் உடல் அமைப்பை ஒரு சிலை போல் அழகாக்கி அவனை உடனடியாக செயல்படத் தூண்டியது. மெல்ல சத்தமில்லாமல் அவள் அருகில் சென்றவன் அவள் இடுப்பை வளைத்த படி, வயிற்றில் விரல்களால் தாளமிட்டான். திடுக்கிட்டு தன்னை கட்டிக் கொள்வாள் என எதிர்பார்த்தால் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வையின் கோட்டைப் பிடித்த படி கீழே சென்றான். காரணம் புரிந்தது. அங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவள் கவனம் குழந்தைகளிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள்.

அவர்களுககு திருமணமாகி ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன. பெருசுகளின் பேச்சின் படி சொல்வதென்றால் " ஒரு பூச்சி பொட்டைக் காணோம் " இப்பொழுது தான் அவர்களின் குடும்ப வைத்தியர் சின்ன வயதில் அவனுக்கு வந்த பெரியம்மை, அணுக்களை மிகவும் பாதித்து இருக்கலாம் என்று  சொல்லி, ஒரு குழந்தையை தத்து எடுக்கும் ஆலோசனை சொல்லி இருந்தார். நந்தினி பாவம், அவள் திருமண ஆசையே குழந்தை என்பதை நடுப் புள்ளியாக கொண்ட வட்டமாக இருந்தது. தன் வாழ்வில் குழந்தைப் பேற்றுக்கு வாய்ப்பில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

பிராபகரிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. அது சிக்கனத்தை தாண்டிய கஞ்சத்தனம். "இந்தக் காலத்தில் ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்து ஆளாக்க ஏகப்பட்டதை செலவழிக்க வேண்டி இருக்கிறது. உனக்கு நான், எனக்கு நீ குழந்தை தானே" என்று சொல்லிப் பார்த்தான். நந்தினியை வெறுமையில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. சரி ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று விசாரித்தால், சட்ட திட்டங்களும், அதற்கு செய்ய வேண்டிய செலவும் கண்ணைக் கட்டியது.

இப்பொழுது தான் உணர்வு பெற்றவளாக நந்தினி,
"எப்போ வந்தீங்க? "
"அதெல்லாம் அப்போவே வந்தாச்சு. நீ என்ன யோசனையில இருக்கிற? நான் வந்து உன் இடுப்பில தாளம் போட்டதைக்  கூட உணரல்ல. வேற எவனாவது வந்திருந்தா என்னத்துக்கு ஆகுறது. "
"ச்சீய்ய்யய்" என்று வெட்கப்பட்டாள். இதற்காகவே  இவளுக்கு எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனா ஒன்று கூட ,முடியலையே. அவன் சோர்வுறுவதைக் கண்ட அவள் உற்சாகமானவள் போல் மாறி ,
"வாங்க, ஒரு டீ சாப்பிட்டு, யாரோ நண்பனை பார்க்கணும்னு சொன்னீங்களே போகலாம்,"
சாகசக் காரி, தான் எதை நினைத்து மருகுகிறோம்கிறதை மறைமுகமாக உணர்த்தி விட்டாள். அந்த நண்பன், குழந்தை தத்து எடுக்கும் விஷயமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பவன்.

"நான் ரிப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுறேன். நீயும் கிளம்பு போயிட்டு வந்திடலாம். "
புறப்பட்டு வண்டியில் ஏறும்போதும் அவள் பார்வை அந்த காலனி குழந்தைகள் விளையாடிக்  கொண்டிருக்கும் பகுதிக்கு போய் உடனே மீண்டதை கவனித்தான்.
போற வழியில் ஒரு கோயிலைக் கண்டதும் " கொஞ்சம் வண்டிய ஒரு ஓரமா நிறுத்துங்க. உள்ளே போய் சாமிகிட்ட ஒரு வேண்டுதல் போட்டுட்டு வந்திடுறேன். " என்றாள் நந்தினி.
அவள் கோவிலுக்குள் செல்ல பிராபகர் செல்லில் அந்த நண்பனை அழைத்தான் " ரிச்சர்ட், நாங்க வந்து கிட்டு இருக்கோம். நீயும் தயாரா இருந்தா, நீ சொன்ன இடத்தில போய் பார்த்திட்டு வந்திடலாம். இன்னும் பிரசவம் ஆக ஒரு வாரம் தானே இருக்குது."
"வாங்க, ஏழைப்பட்ட குடும்பம். அவங்க புள்ளை ஒரு நல்ல இடத்தில வளரணும் அது தான் அவங்க விருப்பம். "
அதற்குள் நந்தினி வருவதைக் கண்டவன் பேச்சை முடித்து வண்டியை தயார் நிலையில் வைத்தான்.
மூன்று பேரும் சேர்ந்து ஒரு சேரிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.
"சார், வண்டிய ஓரமா நிறுத்திட்டு வாங்க. மண்ணில புதைஞ்சா சிரமம் ஆயிடும். 
மேடம், கொஞ்சம் பார்த்து ஓரமா வாங்க."
அவர்கள் சென்ற வீட்டு வாசலில், கூடி,  மலர்ந்த முகத்துடன் பேசிக் கொண்டு இருந்தவர்கள், இவர்களைப் பார்த்ததும், முணுமுணுத்தபடி ஒதுங்கினார்கள்.
"என்னம்மா? ஏதும் விசேஷமா?" என்றான் ரிச்சர்ட்.
" ஆமா, செல்லம்மா , ஆம்புளைப் புள்ளை பெத்திருக்கால்ல"அதைக் கேட்டதும், பிராபகரனின் வயிற்றுக்குள்  முளைத்து, வளர்ந்து, இதயத்தில் விரிந்தது ஒரு தாமரைப் பூ. இனி நந்தினியின் முகத்தில் சிரிப்பை பார்க்கலாம்.
"பரவா இல்லை சார்,நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.  நாம நினைத்ததுக்கு ஒரு வாரம் முன்னமே பிரசவம் ஆயிடுச்சு."

ஒரு கிழிந்த பாயின் மேல் விரித்த பழைய சேலையில் துவண்ட தாமரைத்  தண்டாக படுத்திருந்தாள் செல்லம்மா. அவளுக்கு அருகே, நீர் பலூனில் இருந்து தற்பொழுது தான் தரையிறங்கிய  செல்லக் குழந்தை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். குழந்தையின் அருகே சென்ற நந்தினி அதன் பட்டு விரல்களை தன் நுனி விரலால் வருடினாள். செல்லம்மாவின்  கணவன் பிரபாகரனையும், அவன் நண்பனையும் வெளியே அழைத்து சென்றான்.
"சார், நீங்க ரொம்ப நல்லவங்க. நான் கேட்டவுடனே பணத்தை தூக்கி கொடுத்திட்டீங்க. நானும் மூணு பொம்பளை பிள்ளைகளுக்கு பிறகு உண்டாகி இருக்கிறாளே, எங்கே ஆம்பிள பிள்ளை பெறப் போறான்னு பணத்தை வாங்கிட்டேன். இப்போ  மனசு சஞ்சலமா இருக்குது சார், இவன் வளந்து பெரியவனாகிட்டான்னா, மூணு அக்காவையும் கரை ஏத்த ஏந்தலா இருப்பான். கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து,  வாங்கின பணத்தை அடைச்சிடுதேன். " என்றான்.
இருவரும் திகைத்து நிற்கும் போது செல்லம்மா தன் கணவனை உள்ளே அழைத்தாள்.
நந்தினியின் முகத்தை மெல்ல ஏந்தியபடி " ஏங்க, இந்த புள்ளை முகத்தை பாருங்க. எவ்வளவு ஏக்கம், எவ்வளவு பாசம். நமக்கு இந்த புள்ளை போனா இன்னொண்ணு. சொன்ன சொல்ல காப்பாத்துங்க. " என்றாள். 
"ஏம்மா, நந்தினி நீ ஒரு உதவி மட்டும் செய்யணும். ஆம்புளப் புள்ள, தாயி கிட்ட எவ்வளவு பால் குடிச்சாலும் அதுக்கு வயிறு ரொம்பாது.அப்படி இருக்கையில நீங்க இப்போவே கொண்டு போய்ட்டா, அதுக்கு பசி அமர்த்த முடியாது. ஒரு மூணு மாசம் நான் வைச்சிருந்திட்டு அப்பறம் தந்துடுதேன், தாயீ."
நந்தினி அவள் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதிந்து கொண்டாள். "நீங்க கவலைப் படாதீங்க. நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போ கொண்டு போறோம்." என்றாள். அதற்குள் அவள் கண்கள் நிறைந்தன .

அதன் பின் தினம் பிரபா அலுவலகம் முடிந்து வரும் போதே நந்தினி தயாராக இருப்பதும் இருவருமாக குழந்தையை பார்க்க செல்வதும் திரும்பும் போது குழந்தைக்கு தேவையான ஏதாவது ஒன்று வாங்கிக் கொண்டு திரும்புவதுமாக  மூன்று மாதங்கள் தொடர்ந்தன. நந்தினி திருமணமாகி இவ்வளவு ஆண்டுகளில் இத்தனை சந்தோஷமாக பார்த்ததில்லை என்று பிராபகரன் நினைத்தான். 
அன்று குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல தயாராக வந்திருந்தார்கள் தம்பதியர். செல்லம்மா ஏதோ ஒரு கலக்கத்தோடு குழந்தையை கையில் கொடுத்தாள். கையில் குழந்தையை  வாங்கிய நந்தினியிடம் " கண்ணு, குழந்தையை கழுத்தோடு சேர்த்து பிடுச்சுக்கோ. அது என்னனு தெரியல, இத்தன நாளாகியும் கழுத்து இன்னும் ஓரக்கல." என்றாள். நந்தினிக்கும் குழந்தையின் பார்வை ஏதோ நிலைப்படாமல் இருப்பது போல் தோன்றியது. 
"என்னங்க, போற வழியில நம்ம டாக்டர்ட குழந்தையை காட்டிட்டு போய்டுவோம். " என்றபடி நந்தினி காரில் ஏற , பிராபகர் பின் தொடர, செல்லம்மா குடும்பத்தினர் அத்தனை பேரின் கண்களும் அவர்களை தெரு முனை திரும்பும் வரை பின் தொடர்ந்தன. 

குழந்தையை  பார்த்த டாக்டர் ஒரு வெடி குண்டை சர்வ சாவகாசமாக வீசினார். 
"என்ன  பிராபகர், குழந்தையை தத்து வாங்கும் முன்ன யாரையாவது கன்சல்ட் செய்திருக்க வேண்டாமா? இட் லுக்ஸ் லைக் எ ஸ்பெஷல் சைல்ட். மூளை சரியாக வளர்ச்சி அடையாத குழந்தை போல இருக்குதே. என்னம்மா நந்தினி, நீயாவது சொல்லி இருக்க கூடாதா? " என்றார்.
நந்தினி பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். 
பிராபகர்," டாக்டர், என்ன சொல்றீங்க. சரியா பாருங்க .அப்படி நீங்க சொல்றது சரியா இருக்கிற பட்சத்தல, அப்படியே கொண்டு போய் பெத்தவங்கள்ட்டயே குடுத்துட வேண்டியது தான். பிராடு பய. " என்றான். அவன் குரல் நடுங்கிக் கொண்டு இருந்தது. 

டாக்டர் தான் சொல்வதில் சந்தேகம் இல்லை என்றும் அவர்கள் விரும்பினால் வேறு சிறப்பு மருத்துவர் யாரையாவது  பார்க்கும் படியும் சொல்லியதும்,  பிராபகர் வெளியே செல்ல, நந்தினி இயக்கப்பட்ட ரோபோ போல பின்தொடர்ந்தாள். 
"டிரைவர், வண்டிய வந்த வழியிலேயே திருப்புங்க " என்றான் பிரபா. 
உடனே நந்தினி " இல்லைங்க, நம்ம வீட்டுக்கே போகலாம்."
"அதுவும் சரி தான், என்ன சொல்லித் திருப்பிக் கொடுக்கலாம்னு நிதானமா யோசிச்சிட்டு அங்கே போகலாம்." - பிரபா
வீடு வரை நந்தினி அமைதியாகவே வந்தாள். இடையிடையே குழந்தையை பார்ப்பதும் , தன் கண்களை துடைப்பதும் தான் அவள் இன்னும் சாகவில்லை என்பதன் அடையாளம்.
வீடு வந்தும் ரொம்ப நேரம் அதே அமைதி தொடர்ந்தது. 
"என்னம்மா, நந்தினி, என்ன சொல்ற? நீயுமாச்சு, உன் புள்ளையுமாச்சு. பிடின்னு குடுத்திடலாம். ராஸ்கல், பணத்துக்கு தான் இழுப்பான். அதையும் நீயே வச்சுக்கோன்னு சொல்லிட்டா சரினுடுவான். " 
"இல்லைங்க, என்ன பாவம் செய்தோமோ, இத்தன வருஷமா எதுவுமே உண்டாகல. நமக்கே ஒரு பிள்ளை இப்படி பிறந்திருந்தா தூக்கிப் போட்டுருவோமா? இருக்கட்டும். " என்ற படி குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள். எத்தனை முறை கலங்கினாலும் , குட்டை நிமிடத்தில் தெளிவாவது போல் சட்டென தெளிந்திருந்தாள். 
காலம் உருண்டோடியது.
ரேசில் ஓடுற எல்லோருமா முதலாவது வர முடியுது. அதிலும் கடைசியாக வருபவர் ஒருவர் இருக்கத் தானே செய்கிறார். அப்படி குழந்தை மெல்ல மெல்ல முன்னேறி வந்தது.
அன்று,
குழந்தை தூங்கிக் கொண்டு இருந்தான். பிரபாகரனின் தோளில் சாய்ந்த படியே நந்தினி கிசுகிசுத்தாள், " ரெண்டு மாசமாச்சு ....."
மீண்டும் பிராபகரனின் நெஞ்சில் தாமரைப் பூ பூத்தது. 

16 comments:

  1. மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  2. நல்ல உணர்ச்சி பூர்வமான கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. க‌தை ரெம்ப‌ ந‌ல்லா இருந்த‌துங்க‌...

    ReplyDelete
  4. அட..ரொம்ப நாள் கழிச்சு கதை!!! சூப்பர் ...

    ”ஒரு கிழிந்த பாயின் மேல் விரித்த பழைய சேலையில் துவண்ட தாமரைத் தண்டாக படுத்திருந்தாள் செல்லம்மா”

    ”:எத்தனை முறை கலங்கினாலும் , குட்டை நிமிடத்தில் தெளிவாவது போல் சட்டென தெளிந்திருந்தாள்”
    என முத்திரை பதித்து இருக்கிறீர்கள்.. நல்ல கருத்தையும் சொல்லி இருக்கிறீர்கள்..
    ஆனால்......
    ...........

    ”காலம் உருண்டோடியது ” என்ற இட்த்தில் கதை சறுக்கி விட்ட்து... அந்த வரியைல் இருந்து க்தை எழுத நேரம் இல்லாமல் , கதை சுருக்கம் சொல்லி விடைபெறும் அவர்சரம் தெரிகிரது.
    ”அப்படி குழந்தை மெல்ல மெல்ல முன்னேறி வந்தது” எப்படி முன்னேறியது என சில சம்பவங்கள், சில அனுப்வங்கள் என சொல்லி காலம் உருண்டோடுவதை காட்சிகளால் சொல்லி இருக்கலாம்..
    பணி சுமை என நினைக்கிறேன்.. தொடரும் என முடிது விட்டு, பிறகு எழுதி முடித்து இருக்கலாம்..
    நல்ல விருந்தை சாப்பிடும் போது பாதியில் எழுப்பிவிட்ட உணர்வு..

    ReplyDelete
  5. அருமையான கதை.. நிகிழ வைத்துவிட்டது

    ReplyDelete
  6. நன்றி டெனிம், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

    ReplyDelete
  7. sorry, பார்வையாளன்,
    எழுதிக் கொண்டு இருக்கும் போதே ரொம்ப போர் அடிக்கிறோமோனு தோணிடுது. ஒவ்வொரு கதையும் கன்னி முயற்சியாக தானே வருகிறது. முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  8. நன்றி வினோ, எழுதி பதிந்து விட்டு பார்த்தால், இந்த வாரம் மன நிலை பாதிப்பு அடைந்தவருக்கான வாரமாம்.

    ReplyDelete
  9. அருமைங்க. ரொம்ப இயல்பான ஓட்டம்.

    ReplyDelete
  10. " ஒவ்வொரு கதையும் கன்னி முயற்சியாக தானே வருகிறது. "


    இல்லை.. எழுத்தில் அடுத்த கட்ட்த்துக்கு வந்து விட்டீர்கள்.. ஆனாலும் அதிகமாக எழுதினால் போரடிக்குமோ என்ற தன்னம்பிக்க குறைவால் , கதையின் போக்கு பாதிக்கப்படுகிரது.
    நீங்கள் நினைத்து இருந்தால் அந்த குழந்தை எப்படி வளர்ந்த்து , என்ன சேட்டைகள் செய்த்து என உங்களுக்கே உரிய பாணியில் சுருக்கமாக எழுதி இருந்தால், முழுமையாக இருந்திருக்கும்..
    எனினும் கதை கருவுக்காகவும், அதில் கானப்படும் தாயமை உணர்வு, காதல், மனித நேயம் ஆகியவற்றிற்காகவும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. மிக அற்புதமான கதை ரூஃபினா.. கேட்டதை விட படிக்கும் போது எனக்கும் தாமரை பூத்தது..:))

    ReplyDelete
  12. நன்றி தேனம்மை,
    உங்களிடம் கதை சொல்லும்போதே, கேட்டதோடு நிறுத்திடக் கூடாதே, வாசிக்கனுமேனு நினைத்தேன். நன்றி. கை எப்படி இருக்குது.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!