Bio Data !!

19 December, 2011

"சந்தைப்பேட்டை"


கடந்த ஞாயிறு அன்று ஒரு இடத்துக்கு செல்ல முடிவு செய்தோம். கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் சிலர் சேர்ந்து ஒரு முப்பது பேர் சாப்பிடும் அளவில் உணவு தயார் செய்து, கூடவே சில துணி மணிகளையும் எடுத்துக் கொண்டு சென்றோம். சென்ற இடத்துக்கு பெயர் "சந்தைப்பேட்டை" நெல்லையில் இருந்து புளியம்பட்டி செல்லும் வழியில் இருக்கிறது. சின்னதாக "சவேரியார்" கோயில். உள்ளே போய் இறங்கியதும் வெறிச்சென்று இருந்தது. எனக்கு இது தான் முதல் தடவை. ஆனால் என் கூட வந்திருந்தவர்கள் வழக்கமா நிறைய பேர் இருப்பார்கள் இப்போ எங்கே ஒருவரையும் காணோம் என்று சொல்லிய படியே உணவு பாத்திரங்களை இறக்கினார்கள்.

ஒரு வயதான அம்மா வந்து "இங்கே நாங்கள் இருபத்தியைந்து குடும்பங்கள் இருக்கிறோம். கிறிஸ்துமஸ்க்கு துணி குடுக்கிறாங்கன்னு எல்லோரும் பாளையம்கோட்டைக்கு போய் இருக்கிறாங்க" னு சொன்னாங்க. அப்பொழுது தான் கவனித்தேன் ஒவ்வொரு மரத்தின் அடிவாரத்திலும் ஒருவர். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பக்கத்தில் சென்று பார்க்கும் போது திடுக்கிட்டேன். ஒவ்வொருவரும் மரத்தோடு இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டப் பட்டிருந்தார்கள். எனக்கு "சேது" படம் ஞாபகம் வந்தது. எங்களை பார்த்ததும் ஒருவர் குப்புறப் படுத்து இரண்டு கால்களையும் ஆட்டிய படியே "எல்லோரும் ஓடி வாங்க பாயாசம் வருது. பாயாசம் வருது" என்று சத்தமாக சொன்னார்.


 நல்ல வேளையாக நாங்கள் சாப்பாட்டுடன் பாயாசமும் கொண்டு வந்திருந்தோம். அவர் பேசுவது எல்லாம் தெளிவாகத் தான் இருந்தது. அப்புறம் ஏன் இப்படி? இப்படியே ஒவ்வொருவர் பக்கத்திலும் சென்று உணவும், பாயாசமும் வைத்து, ஒரு ஷர்ட் டும் கொடுத்து நகர்ந்தோம். ஒருவரின் கண்களில் உலகத்து சோகம். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்னும் ஒருவர் தானாகவே குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார். கழுத்தில் கனத்த மாலை அணிந்து இருந்த ஒருவர் உணவை வாங்கியவுடன் "வாட்டர்! வாட்டர் !" என்றார். நாங்கள் என்ன செய்வது என்று யோசிக்குமுன் ஒரு பெரிய பாட்டிலை எங்களை நோக்கி வீசி பைப் இருக்கும் திசை நோக்கி " போய்யா, போ..... போ...." என்பது போல் கை காட்டினார். இன்னும் ஒருவர் ஆட்டோக்காரரிடம் மறைவாக சைகையால், சிகரெட் கிடைக்குமாவென கேட்டிருக்கிறார்.

நோயாளிகள் மரத்தோடு கட்டப்பட்டும் அவர்களுடன் வந்த உறவினர்கள் தங்கள் பெட்டி படுக்கையோடு ஒதுக்கமா ஒரு இடத்திலும் இருக்கிறார்கள். வயதான ஒரு தாத்தா கையில் கெளட்டா பெல்ட் வைத்திருந்தார். "இது எதுக்கு தாத்தா?" என்றேன்.
"எங்க சாப்பாட்டில காக்கா வாய் வச்சிருது. அதை விரட்ட தான் இது."
"யாருக்கு உடம்பு சரியில்ல?" கொஞ்சம் பயந்து கொண்டே தான் கேட்டேன். நோயாளியா ? நோயாளியின் உறவினரா என்பது நிச்சயமாக தெரியாத நிலையில்.
"என் பொண்டாட்டிக்கு தான் உடம்பு சரியில்லை. ஒரே பையனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம். அவன் மாமியார் இவளுக்கு செய்வினை வச்சிட்டா. ஒரே பொலம்பல். தாங்க முடியாம தான் இங்கே கொண்டு வந்தோம். " என்றவர் தொடர்ந்து அரசியல் பேச ஆரம்பித்து விட்டார். "வெள்ளைக்காரன் ஆட்சியில் இப்படி எல்லாம் செய்வினை வைக்க முடியுமா? சுட்டுருவான். இப்போ நாம சுதந்திரம் வாங்கி இருக்கோம்னு தான் பேரு. எல்லோரும் கொள்ளை அடிக்கிறாங்க. பணக்காரங்க தான் வாழ முடியும். ஏழை பாழைங்க புழைக்க ஒரு வழியும் இல்லை. " என்றவர் கொஞ்ச நேரம் கழித்து "எதோ தோணினதை சொல்லிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா " என்றார்.
"அதெல்லாம் பரவா இல்லை தாத்தா. எல்லோரும் அமைதியா தானே இருக்காங்க ஏன் எல்லோரையும் கட்டி போட்டு இருக்காங்க?" என்றேன்.
"அமைதியா தான் இருப்பாங்க. ஆர்ப்பாட்டம் ஆரம்பிச்சிட்டா யாரும் பக்கத்தில இருக்க முடியாது. அவங்க உறவுக்காரவங்க தான் எல்லாம் கவனிச்சு செய்து விடணும்." என்றார்.

திரும்பி வந்ததில் இருந்து எனக்கு  மனதே சரியில்லை. அவர்கள் செய்வினை என்று சொன்னாலும் அது ஒரு விதமான மன நோய் தானே. அவர்களை தனிமைப்படுத்தி கட்டி வைத்தால்  சுகமாக வழி ஏது? இன்னும் அதிகமாக வல்லவா செய்யும்? அனைவருமே வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்கள். மருத்துவம் அது இது என்று செலவு செய்ய வழி இல்லாதவர்கள். கண்ணுக்கு தெரியும் மனிதர்கள் மேல் நம்பிக்கை இழந்து கண்ணுக்கு தெரியாத கடவுள் தாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று நம்பி அங்கு வந்து வருடக் கணக்கில் இருப்பவர்கள். 

 என் குழந்தைகளை அங்கே அழைத்து வந்து காட்ட வேண்டும். நாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று புரிந்து தங்கள் சிரமங்களை சுலபமாக சுமந்து கொள்ளும் பக்குவம் பெறுவார்கள்

20 comments:

  1. இந்த காலத்திலுமா நம்புகிறார்கள் .பரிதாப மாக இருக்கிறது

    ReplyDelete
  2. பாவம் அவங்க. நம்ம பிள்ளைகளிடத்துல கண்டிப்பா காட்டனும் வாழ்வின் மறுபக்கத்தை அவர்களை உணர செய்ய வேண்டும். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. இந்தியா இன்னும் வளரனுமோ?

    ReplyDelete
  4. இதுபோல யாரையானும் பார்க்க நேர்ந்தால் ஒருவாரம் நம்மால் சரியா சாப்பிட முடியாது தூங்க முடியாது. ஆண்டவனின் படைப்பில் ஏன் இப்படி எல்லாம் இருக்கு?பதில் தெரியாத கேள்விகள் தான்.

    ReplyDelete
  5. என் குழந்தைகளை அங்கே அழைத்து வந்து காட்ட வேண்டும். நாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று புரிந்து தங்கள் சிரமங்களை சுலபமாக சுமந்து கொள்ளும் பக்குவம் பெறுவார்கள்//

    கண்டிப்பாக கூட்டிச்சென்று காட்டுங்கள் பிள்ளைகளுக்கு...

    ReplyDelete
  6. பார்க்க பாவமாக இருக்கிறது இவர்களை நினைத்தால், ஆண்டவா இவர்களுக்கு விடிவைக்கொடு...

    ReplyDelete
  7. ஆமா கோவை நேரம் பார்க்கவே பரிதாபமா இருந்தது

    ReplyDelete
  8. நன்றி ராஜி, ஆனால் அவங்க வயதுக்கு இது அதிக சோகமா இருந்திடுமோனு ஒரு தயக்கம் இருக்குது

    ReplyDelete
  9. எஸ் சி பி ரொம்ப ரொம்ப ரொம்பவே வளரணும்

    ReplyDelete
  10. சரியா சொன்னீங்க லக்ஷ்மி அம்மா பெப்ருவரி இல் மதுரையில் சந்திப்போம்

    ReplyDelete
  11. ரொம்ப பரிதாபமான சூழ்நிலை மனோ , மழைக்கும் வெயிலுக்கும் அங்கேயே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  12. நீங்க அப்போ மதுரையில் இருப்பீங்களா?

    ReplyDelete
  13. வந்திட்டாப் போச்சு பக்கத்து ஊர் தானே ?

    ReplyDelete
  14. சகோ ஒதுக்கப்படும் ஒவ்வொரு உறவுக்கும் ஒரு காரணத்தை சொல்வார்கள் மூடர்கள்!

    ReplyDelete
  15. ஆமாம் விக்கி நம்ம நாட்டில ஏழ்மையே கொடுமை அதிலும் ஏழ்மையில் உடல் நலமின்மை கொடுமையிலும் கொடுமை

    ReplyDelete
  16. மனதினைத் தொட்டது....தன் வினைத் தன்னைச் சுடும்....நன்மையும் தீமையும் பிறர் தர வாரா....
    வாழ்வில் இது போன்று மன நோய் வாய்ப்பட்டவர்களுக்கு, மாற்ற்த் திறனாளிகளுக்கு நம்மால் முடிந்த வ்கையில் ஏதேனும் செய்தாக வேண்டுமென்ற ஒரு உந்துதலைத் தந்தது உங்கள் கட்டுரை....மிக்க நன்றித் தோழி!

    ReplyDelete
  17. நன்றி அட்சயா , தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  18. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!