மாய ஏணி
ஆம் இதுவொரு மாய ஏணி. கீழே பதித்து மேலே சாய்க்கப்பட்ட மர ஏணி அல்ல இது மேலிருந்து கீழே தொங்கும் நூலேணி. இதில் மேலே ஏற ஏற கீழே உள்ள படிகளை உருவினாலும் பாதகமில்லை. ஆம் நாம் ஓரங்களை பற்றி மேலே சென்று கொண்டே இருக்கலாம்.
வாழ்விலும் அது போலத்தான். நாம் பிறரை அறிமுகம் செய்து கொள்கிறோம் என நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்களால் நமக்கு நடக்க வேண்டிய ஒரு காரியத்துக்காகத் தான் அவர்களை பிரபஞ்சம் நமக்கு அறிமுகம் செய்கிறது. அந்த காரியம் முடிந்ததும் சில நேரங்களில் அவர்கள் நம்மை விட்டு ஒதுங்கி விடலாம் இந்த நூலேணியின் கீழ்ப்படிகள் சுருட்டப்பட்டது போல. சில நேரம் நம்மை அவர்கள் தொடர்ந்தும் வரலாம். அவர்களைக் கொண்டு நம் வாழ்வில் ஒரு படி முன்னேற அவர்கள் உதவுகிறார்கள். அவ்வளவு தான்.
இப்ப சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலரை நன்றி மறந்தவர்கள். காரியத்துக்காக என்னை பயன்படுத்திக் கொண்டான் என பழிக்கிறோம். அது தேவையில்லை அல்லவா. அந்த செயல் அவர்களுக்கு நம்மால் ஆக வேண்டுமென்பது பிரபஞ்சத்தின் முடிவு.
அதைப் போலவே பல துரோகங்கள், கோபங்கள் வருத்தங்கள் போன்றவற்றையும் நாம் சுமந்து கொண்டு மேலேற வேண்டியதில்லை. அது நம் வேகத்தைக் குறைக்கும். அவற்றை அங்கங்கேயே விட்டு வரப் பழகுவோம். இலகுவான மனதோடு மேலேறுவோம்.
ஒரு பிறந்த நாளில் ஒருவரை Long Live என்று வாழ்த்துவது முன்னெப்போதையும் விட இப்போ வலிமை வாய்ந்தது. ஆம் இப்போ பலருக்கு கண் முன் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது கொரோனா. நம் அன்புக்குரியவர்களின் நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் மரணம் நம்மை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் Long Live என்னும் வாழ்த்தின் உன்னதம் பெரிது.
மனதார பிறரை பாராட்டுவோம். வாழ்த்துவோம். சோகங்கள் துக்கங்களை உதறி முன்னேறுவோம். இது நம்மை காக்க வந்திருக்கும் மாய ஏணி. ஏறியவர்கள் மேலே மேலே ஏறிக் கொண்டே இருக்கலாம். அதற்கு வானமே எல்லை. இன்னும் ஏறாதவர்களே! என்ன தயக்கம். உடனே உங்கள் சோகங்கள் துக்கங்களை உதறித் தள்ளி ஏறத் தொடங்குங்கள்.
Ready steady Go
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!