Bio Data !!

03 September, 2020

 கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக கிடையிலடைக்கப்பட்ட ஆடுகளாக இருந்தோம். எப்போ சுதந்திரமா திரிவோம்னு பொசமுட்டிக்கிட்டு வந்தோம். ஒரு சிலர் வீட்டுக்குள்ளேயே நல்ல உடை உடுத்தி இருப்பார்கள். ஆனால் அனேகம் பேரின் உடை லுங்கியும் நைட்டியுமாய் தான் இருந்தது. 


அதில் ஒரு சில இளசுகள் இந்த காலத்தை வீணாக்க வேண்டாமென முதல் பிள்ளையோ அடுத்த பிள்ளையோ பெற்றுக் கொள்ள தயாராகி விட்டார்கள். இதில் பிரபலங்களும் அடங்குவார்கள். சில பெருசுகள் வேறு வேலையில்லாமல் குத்துப் பழி வெட்டுப் பழியென சண்டை போட்டுக் கொண்டார்கள். சிலர் விவாகரத்திலும் போய் நின்றார்கள்.

சிலருக்கு இந்த தனிமை விவாகரத்து வரை போய் நின்றவர்களை உணர்ந்து இணைத்திருக்கிறது. சில விவாகரத்தானவர்களையும்!


பல நீலக் காலர் பணியாளர்களை ஆட்டிப் பார்த்திருக்கிறது. இவர்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாய் வாழ்க்கை நடத்தியவர்கள். தன் வருங்காலத்துக்கு சேமிக்க முடியாதவர்கள். திடீரென்று வேலை என்ற ஒன்று இல்லாமல் போனதும் குழந்தை குட்டிகளோடு நடுத் தெருவில் விடப்பட்டது போல் உணர்ந்தார்கள். சிலர் ஆட்டோக்களை காய்கறி கடைகளாக்கினார்கள். சிலர் அங்கங்கே கடன் வாங்கி சமாளித்தார்கள். ஒரு சிலர் செத்தும் போனார்கள். 


இப்படியான கால கட்டத்தில் நாம் இயல்பு வாழ்க்கை முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். எல்லா கதவுகளையும் திறந்து விட்டார்கள். சுதந்திரக் காற்றை அனுபவிக்க அல்ல. உள்ளே மூச்சு முட்டிப் போய் விடக் கூடாதேயென. 


நண்பர்களே!ஆபத்து இன்னும் நம்மை விட்டு முழுவதும் விலகாத சூழலில் நாம் கவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது. எனக்கு தெரிந்து தவிர்க்க முடியாத, சில நேரங்களில் தவிர்த்திருக்கலாம் என்று கூட இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் விசேஷங்களில் கலந்து கொண்டு கொரோனாவை சிலர் பற்றிக் கொண்டுள்ளார்கள். ஒரு சிலர் இறந்தும் போய் இருக்கிறார்கள். அப்படி இறந்தவர்கள் இன்னும் ஐந்து பத்து ஆண்டுகள் நலமாய் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். எனது அவதானப்படி மற்ற கிருமிகளை பாக்டீரியாக்களை விட கொரோனா மிக சுலபமாக மிக நானோ வேகமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு  வந்து விடுகிறது. 


உங்கள் உயிர் இன்று உங்கள் கையில். ஏழு மலை ஏழு கடல் தாண்டிய கிளியின் கைகளிலல்ல. அத்தியாவசயமான நேரங்களில் அத்தியாவசியமான இடங்களுக்கு தக்க பாதுகாப்போடு செல்ல பழகுங்கள். இன்னும் கொஞ்ச காலம் தான். தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கும் வரை. கவனமாக இருங்கள். உயிர் விலை மதிப்பற்றது.


நலமோடு வளமோடு வாழ்வோம்!

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!