#கதை விமர்சனம்
தொடர்ந்து கல்யாணச் சாப்பாடும் பிரியாணியுமா சாப்பிட்டா ஒரு தக்காளி ரசமும் பருப்புத் துவையலும் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணுமே அந்த மாதிரி நேரங்களில் நான் இலக்கியம் அதிகம் கலக்காத சாதாரண பெண்களுக்கான நாவலைப் படிப்பேன். அப்படிக் கிண்டிலில் படித்தது தான் துளசி சந்திரன் எழுதிய "எதிர் வீட்டுப் பெண்" நான் எழுதுவதெல்லாம் என் புரிதல்களே. சில கருத்துக்கள் உங்களுக்கு முரண்படலாம். சொல்லுங்கள். அந்த திசையிலும் சிந்தித்து சரியென்றால் மாற்றிக் கொள்வேன். இப்ப கதை.....
ஆதித்யா ஜனனி அவர்கள் குழந்தை ஆதித்யாவின் அம்மா இவர்களால் ஆனந்தமான வீடு. ஜனனியும் அவள் மகளும் ஒரே பள்ளியில் ஆசிரியராகவும் மாணவியாகவும் இருப்பதால் பள்ளிக்கு பக்கத்தில் வீடு மாறிச் செல்கிறார்கள். அங்கே எதிர் வீட்டில் கணவனைப் பிரிந்த ரேவதி தன் இரு பெண் குழந்தைகளுடன் வசிக்கிறாள்.
அவரவர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாளில் ஆதித்யாவுக்கு ஒரு கொரியர் வருகிறது. அவர்கள் வீட்டில் யாரும் இல்லாததால் ரேவதியிடம் கொடுக்கிறார்கள். அதை வாங்கலாமா எனக் கேட்பதற்காக கவரின் மேல் எழுதப்பட்ட ஆதித்யாவுக்கு போன் செய்கிறாள். அவள் குரல் கேட்டதும் படபடத்த ஆதித்யா வாங்கச் சொல்லி விட்டு அவள் எண்ணை செல்லில் சேமித்துக் கொள்கிறான். அங்கே விளைகிறது வினை.
மறுநாள் வாட்ஸ்அப்பில் நன்றி செய்தி. அதைத் தொடர்ந்து சில பல forwarded messages. தனிமையில் இருக்கும் ரேவதியும் தடங்கலின்றி தொடர்பு கொள்ள ஆதித்யா கனவு உலகத்திலேயே இருக்கிறான். பெண்கள் நுண்ணறிவு படைத்தவர்கள் அவனிடம் ஏற்பட்ட மாறுபாட்டை அவனுடைய அம்மா ஜனனி இருவருமே கவனித்து விடுகிறார்கள்.
சந்தேகங்கள் தனித்தனியே தான் மூளையில் சேரும். பின் ஒன்றுடன் ஒன்று பொருத்திக் கொள்ளும். தாள முடியாத ஒரு சமயத்தில் ஜனனி அழுகையோடு தன் சந்தேகத்தை வெளிப்படுத்த அவன் அம்மாவும் தானும் பல நாட்களாக கவனித்து வருவதாக திட்டத் தொடங்குகிறார்கள். எதேச்சையாக மறு நாள் அவர்கள் வீட்டுக்கு வந்த ரேவதி ஆதித்யா தன் அண்ணனைப் போல் இருப்பதால் சகஜமாக பேசியதாகச் சொல்ல ஆதித்யாவின் கனவுக் கோட்டை ஜனனியின் சந்தேக கோட்டையையும் இழுத்துக் கொண்டு தவிடு பொடியாகிறது. சுபம்!!
இதில் நான் சிந்தித்தது.
(1) அலுவலகத்திலோ பிற இடங்களிலோ பெண்களுடன் பழக வாய்ப்பிருந்தாலும் நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் பெண்களைத் தான் சந்தேகிக்கிறோமோ?
(2) கணவனை இழந்தவளோ பிரிந்தவளோ இருந்தால் நம் சந்தேகம் வலுக்கிறதோ?
(3)உடை மாற்றம் நடை பார்வையில் ஏற்படும் சிறு தயக்கங்களைக் கூட பெண் கவனித்து விட்டாலும் வெளிப்படையாக கேட்கும் வரை ஆண் தன் மனைவி கவனிக்கவில்லை என்றே நினைக்கிறானோ?
(4) உடனிருக்கும் கணவனின் வீட்டவர்கள் தவறு கண்ட இடத்தில் மனைவிக்கு சார்பாக பேச வேணடும். பேசுகிறார்களா?
(5) ஒரு பெண்ணுக்கு ஆண் காதலனாக அப்பாவாக அண்ணனாக தம்பியாக மகனாக எப்படி வேண்டுமானாலும் தெரிவான். ஆனால் ஆணுக்கு ஆரம்பத்தில் பெண் தன்னை ரசிக்கும் காதலியாக மட்டுமே தெரிகிறாளோ?
(6) இயல்பாகவே ஆண் மனம் சின்ன சின்ன சபலங்களுக்கு ஆட்படும். போடுற சண்டையை ஆரம்பத்திலேயே போட்டு முளையிலேயே கிள்ளி விட வேண்டுமோ?
இந்த காலத்தில் மண வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கும் போது ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அபஸ்வரம் தட்டும் போது உடனே வெளிப்படுத்தி முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும் என்று சொல்லித் தரும் நல்ல ஒரு நாவல்."எதிர் வீட்டுப் பெண்"
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!