நாவல் : குற்ற பரம்பரை
ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : ₹ 400
இந்த கதைக்கு முன்னுரை எழுதிய செம்மலர் ஆசிரியர் எஸ். ஏ. பெருமாள் இதை "பூர்விக ரத்த தடயங்கள்" என்கிறார். கொம்பூதி என்னும் கிராமத்துக் கள்ளர் இனத்தவரின் வாழ்க்கை தான் இந்நாவலின் கரு.
தென் மாவட்டங்களில் இன்று முரண்பட்டுக் கிடக்கும் இரு இன மக்களும் கடந்த காலத்தில் எவ்வளவு ஒற்றுமையாய் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாவல் தெளிவாக்குகிறது. பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு எனவும் இந்த இரு சாதிப் பிரிவினர் மோதினால் சாதிக் கலவரம் எனவும் அக்னி வளர்த்தார்கள் என்கிறார் ஆசிரியர்.
திருடுவதற்கு ஒரு வீட்டைத் தேர்த்தெடுத்து ஒருவரை அனுப்புகிறார்கள். அவர்கள் சொல்லும் 'லெக்கை' வைத்து பணம் இருக்கும் அறையில் கன்னமிடுகிறார்கள்.பின் ஆட்காட்டிக் குருவியை ஒரு நூலைக் கட்டி பொந்துக்குள் விடுகிறார்கள். உள்ளே சென்ற குருவி சத்தமிடவில்லை என்றால் கன்னம் போட்ட அறையில் ஆள் இல்லை என்று அர்த்தம். சத்தம் வெளியே கேட்காமல் குத்துக் கம்பியால் சுவரில் இடித்து ஒவ்வொரு கல்லாய் உருவுகிறார்கள். ஒரு ஆள் நுழையுமளவு பொந்து போட்டதும் ஒருவன் பொந்துக்கு நேராக நெடுஞ்சாண்கிடையாக படுத்து மெல்ல ஊர்ந்து ஊர்ந்து உள்ளே போய் கொண்டு வர வேண்டிய பொருளை பொந்து வழியாக மெல்ல நகர்த்த வெளியே இருப்பவன் அணைவாய் பற்றி வெளியேற்றுகிறான். எவ்வளவு தொழில் சுத்தம்!!!
கூழானிக் கிழவி மூலம் காளத்தி கதையைச் சொல்லுகிறார் ஆசிரியர். காளத்தி கதையை கன்னிப் பொண்ணுக கேட்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லியே அன்னமயிலுக்கு கதை சொல்கிறாள் கிழவி. ஆறு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த காளத்தியை கொண்டாடுகிறார்கள் தந்தையும் அண்ணன்களும். அது பொறுக்காத மதினிமார் செய்யும் சூழ்ச்சி தான் கதை.நம்மை பதற வைக்கும் கதை. காளத்தியின் மகன் தான் வையத்துரை. வையத்துரை பிறந்த நாளும் அவன் பெற்றோர் இறந்த நாளும் ஒன்றே!
"ஆம்பளைக எல்லாம் தொழிலுக்கு போயிருக்காகளாம். களவுக்குப் போறது தான் அவுகளுக்கு தொழிலு. களவு பண்றது தப்புன்னு கூட தெரியல" இந்த ஒரு வரியிலேயே அந்த காலத்தில் அவர்கள் தவறென்றே அறியாமல் செய்த காரியத்தை விளக்கி விடுகிறார்.
"எறும்பு புத்திலே துருவனைக் கட்டிப் போட்ட மாதிரி கொடுமை எல்லாம் இன்னிக்கு நேத்தா நடக்குது. தொன்று தொட்டு நடக்குது. அதை எதிர்க்கிறதா? ஏத்துக்கிறதான்னு விளங்கலே. ஏத்துக்கிட்டால் அவமானம். எதிர்த்தால் பட்டினி." இந்த வரிகள் சட்டத்தை அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டதால் வரும் ரெண்டுங்கெட்டான் சிக்கலை சொல்கிறது.
"நம்பியவர்களுக்கு உயிரைக் கொடுக்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளைக் கொலை செய்கிறார்கள். வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இவர்கள்" கொம்பூதிக்காரர்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார் ஆசிரியர். ஒரு காட்சியை விவரிக்கிறார் ஆசிரியர். "வடக்கே இருந்து வில்லாயுதம் தலைமையில் திருடிய நகைப் பெட்டியும் கிழக்கே இருந்து பெரு நாழிக்காரர்கள் போலீஸ் உடன் வர முதல் கரை தங்கச்சாமி தலைமையில் தாம்பூலத்தட்டோடும் கோயிலை நெருங்கி வந்து கொண்டு இருந்தனர்" எப்படி செம த்ரில்லிங்ல?
கொம்பூதிக்காரர் ஒருவரையே போலீஸ் அதிகாரியாக்கி அவரை வைத்தே அந்த கிராமத்தை திருட்டுத் தொழிலில் இருந்து மீட்பதும் இருந்தாலும் சில புல்லுறுவிகள் செய்த செயலால் கதை துன்ப முடிவே கொண்டிருக்கிறது.
தீர்ப்பிடாமல் பிற மனங்களை புரிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம். கண்டிப்பாக வாசியுங்கள்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!