என் முக நூல் நண்பர் ஒருவரின் பதிவு பார்த்தேன்.
பழைய ஞாபகம்.
சின்ன பிள்ளையா இருக்கிறப்போ எங்க வீட்டில வீட்டு உபயோகத்துக்கு மொத்தமா புளி வாங்கி உடைப்போம். தோடோட புளி வாங்கி வருவாங்க. சின்ன கண்ணனுக்கு இடுப்பில் கயிறு கட்ட சுற்றி ஓட இடம் விட்டு கல்லுரலில் கட்டுவது போல அந்த ஓட்டுக்குள் அந்த புளியம்பழம் அங்கும் இங்கும் போய் வர இடம் தாராளமாய் இருக்கும்.
அதை உடைத்து ஓடை நீக்கி அதனுள் இருக்கும் கொட்டையை பிரித்து எடுத்து புளியை ஒரு பாத்திரத்தில் போடணும். அப்பா அம்மா பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து அந்த வேலையை செய்வோம்.
அந்த காலத்தில் விடுமுறையை உபயோகமா கழிக்க என்னல்லாம் யோசிச்சிருக்காங்க.
பெரியவர்களுக்கு தெரியாமல் கொஞ்சம் புளியை வாய்க்குள் அதக்குவோம். அவர்களும் அதைப் பார்க்காதது போலவே விட்டு விடுவார்கள். வாயை மூடிய படியே அந்த புளிப்புச் சுவையை நாக்கில் ருசிப்பது அமிர்தம்.
சில நேரம் அந்த புளிக்குள் இருக்கிற கொட்டையை அறியாமல் முழுங்கி விடுவோம். திரு திருன்னு முழிக்கிறதப் பார்த்து அப்பா சொல்வார் " போச்சா! மறைச்சு மறைச்சு வாயில போட்டு கொட்டையை முழுங்கியாச்சா? ( அப்ப தான் நமக்கு உரைக்கும். அவங்க பார்க்கலன்னு நாம நினைச்சது பெருந்தப்புன்னு) நான் மெதுவா கேட்பேன் " அப்பா கொட்டை உள்ளே போய் ஒண்ணும் செய்யாதில்ல?"
"அதெப்படி? மண்ணுக்குள்ள விதையை பொதச்சு வச்சா என்ன நடக்கும்னு படிச்சிருக்கிற"
" முளைக்கும். சயன்ஸ்ல படம்லாம் வரைஞ்சிருக்கோமே!"
"அதே தான் நடக்கும். முளைக்கும்"
"எப்படி வெளியே வரும்?"
"உன் வாய் வழியா தான்"
ஆத்தீ எத்தனை நாள் தனியா இருக்கும் போது கண்ணாடியில குருவி போல வாயைத் திறந்து திறந்து பார்த்து தொண்டையில புளிய இலை தெரியுதான்னு பார்த்திருக்கோம். இந்த அனுபவம் உங்கள்ல யாருக்கெல்லாம் இருக்கு?
இப்படிக் கொஞ்ச நஞ்சமா ஙே ன்னு முழிச்சிருக்கோம்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!