Bio Data !!

23 December, 2022

புத்தகத்தின் பெயர் : புஷ்பப் பல்லக்கு ஆசிரியர் : கல்கி வானதி பதிப்பகம் இது ஒரு சிறு கதை தொகுப்பு. அமரர் கல்கி அவர்களின் நூற்றாண்டை ஒட்டி அவரது நினைவு நாளில் சிறப்பு வெளியீடாக பிரசுரிக்கப் பட்டது. இதில் உள்ள கதைகள் இதற்கு முன் வேறு எந்த தொகுதியிலும் வெளி வராத கதைகள். அதை விட சிறப்பு கல்கி இதழ் தொடங்கப் படுவதற்கு முன்னாலேயே பிற பத்திரிகைகளில் வெளியாகி கல்கியில் மறு பிரசுரம் ஆனவை. அது மட்டுமல்லாமல் “சித்திரக் கொத்து “ என்னும் தலைப்பில் அமரர் கல்கி 1930 இல் எழுதிய நகைச்சுவை கட்டுரை ஒன்றும் சேர்க்கப் பட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு சிறு கதைகளும் ஒரு நகைச்சுவை கட்டுரையும் உள்ளன. முதல் கதை “அருணாச்சலத்தின் அலுவல்” ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது. “ இது ஒரு கதை என்ற செய்தியை ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இல்லை என்றால் சம்பவம் உண்மை என்று நம்பி நீங்கள் ஆசாமியை தேடி புறப்பட்டு விடலாம். அதை என் நண்பன் அருணாச்சலம் ஒரு வேளை விரும்ப மாட்டான்” இந்த கதை 1932 இல் எழுதப் பட்டு கலைமகளில் பிரசுரமாகி இருக்கிறது. சிறப்பு என்னவென்றால் அந்த காலத்திலேயே வீட்டுக் கணவர்களை[ House Husband} பற்றி கதை எழுதி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் வீட்டு வேலைகளையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் கணவனுக்கு மனைவி பணம் கொடுப்பதைப் போல தன் மனைவி வீட்டு வேலைகளை செய்வதற்கு பணம் கேட்டு விட்டால் என்ன செய்வது என்று கவலைப் படுகிறார். எனக்கு இங்கே கமலஹாசன் வீட்டில் வேலை செய்யும் மனைவிகளுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று பேசியது நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன் அதை சிந்தித்திருக்கிறார். எத்தகைய அறிவு!!! இரண்டாவது கதை “ புஷ்பப் பல்லக்கு” அது தான் புத்தகத்தின் தலைப்பும். இந்த கதையின் சிறப்பு கதை மாந்தர்களின் பெயர்கள். உதாரணத்துக்கு ஒரு சில பெயர்களை சொல்கிறேன். தீராத்துயரமய்யங்கார், விகாரம் பிள்ளை, லஞ்ச நாத சாஸ்திரி. பெயர்களே கதா பாத்திரங்களின் குணங்களை சொல்வது போல் இருக்கிறது. இந்த கதை 1934 இல் ஆனந்த விகடனில் வந்திருக்கிறது. மூன்றாவது கதை “ குலசேகரன் அதிர்ஷ்டம் “ கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு செல்லும் ஒரு அல்ட்டாப் பேர்வழி வழி நெடுக ரயிலில் செய்யும் அலப்பரைகளும் பட்டணத்தில் ஒரு நவ நாகரிக பெண்ணிடம் மயங்கி ஏமாறுவதும் ஒவ்வொரு கடையிலும் தன்னிடம் இருக்கும் நூறு ரூபாய்க்கு சில்லரை இருக்கிறதா எனக் கேட்பதும்,கடைசியில் ரயிலில் தன் பெட்டியை நூறு ரூபாயோடு பறி கொடுத்ததுமாக முடித்தாலும் இறுதியில் வாசகர் மகிழும் வண்ணம் மகன் ஏமாந்து விடுவான் என தாய் கிளம்பு முன்னமேயே பணத்தை எடுத்து விட்டதால் அது பத்திரமாக அரிசிப் பானையில் இருந்ததாக சொல்லி இருக்கிறார். இது 1935 இல் ஆனத்த விகடனில் வந்திருக்கிறது. சிறு கதை எழுத தொடங்குபவர்கள் இந்த தொகுப்பை வாசிக்கலாம். எப்படி எழுத வேண்டும் என்று ஒரு யோசனை கிடைக்கும். நான்காவது “ பரிசல் துறை” என்னும் ஒர் அருமையான காதல் கதை. இது 1937 இல் ஆனந்த விகடனில் பிரசுரமானது. கள்ளங் கபட மில்லாத காதலை எழுத்தில் பார்க்க அவ்வளவு அழ்காக இருக்கிறது. ஐந்தாவது கதை “ ஸூசீலா எம். ஏ “ எனக்கு இந்த கதை அவ்வளவு ரசிக்கவில்லை. கதாநாயகி சுசிலா திருநெல்வேலியைச் சேர்ந்தவள். பாக சாஸ்திரம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் செய்து பட்டம் பெறுகிறாள் . அதன் பின் உணவே எப்படி வெறுத்துப் போகிறது என்பது பற்றிய கதை. 1938 இல் ஆனந்த விகடனில் பிரசுரமாய் இருக்கிறது. ஆறாவது கதை “ பித்தளை ஒட்டியாணம்” இந்த கதையில் அவருடைய எழுத்தில் கண் சிமிட்டிய நகைச்சுவை ரசிக்க வைத்தது. “ அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் ஒரே வைரமாய் வைத்து இழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதற்குப் போதுமான வைரம் அவர்கள் மேல் இருந்தது.” { எப்படி இருக்கு கதை!} இந்த ஒரு வரி தான் நகைச்சுவை.சபலத்தில் பணக் கையாடல் செய்யும் கணவனும் அவனுடைய நேர்மையான மனைவியால் எப்படி காப்பாற்றப்படுகிறான் என்பதும் தான் கதை. இது 1940 இல் ஆனந்த விகடனில் பிரசுரிக்கப் பட்டது. இன்னும் இரண்டு கதைகள் “ மாஸ்டர் மெதுவடை’ “ கொள்ளிடத்து முதலை” மேலும் “ சித்திரக் கொத்து” என்னும் நகைச்சுவைக் கட்டுரை. நான் மிகவும் ரசித்து வாசித்த கதைத் தொகுப்பு. அந்த காலத்தில் எவ்வளவு நல்ல கருத்துகளை கதைகள் மூலம் சொல்லி இருக்கிறார்கள். ஒரு முப்பது வருடம் முன்னால் பிறந்திருக்கலாமோ?

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!