Bio Data !!

13 September, 2023

நாவலின் பெயர் : மரணங்கள் மலிந்த பூமி ஆசிரியர் : செங்கை ஆழியான் கவிதா வெளியீடு விலை ரூ 100/- முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005. பெயரைப் பார்த்ததும் எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நமக்கு பக்கத்து நாடான இலங்கை.ஆம். இலங்கை தான் கதைக் களம்.. இரண்டு பக்க நியாயங்களை சொல்லி வந்தாலும் கதை நெடுக இத்தனை பேரை பலி கொடுக்க நேரிட்டதே என்ற ஆதங்கம் ஒலிக்கிறது. யாழ்ப்பாண மாநகரத்தையும் வெளிக் கிராமங்களையும் பிரித்த படி நீண்டு செல்கின்ற பெர்லின் சுவர் இராணுவ வேலி யாழ்ப்பாணத்தின் சோகத்தைக் கதை கதையாக சொல்கிறது. காங்கேசன் துறையிலிருந்து வீடு வாசல்களை எல்லாம் ஒரே இரவில் இழந்து ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக ஓடி வந்தவர்களை மறுபடியும் அத்தனையும் விட்டு விட்டு சாவகச் சேரிக்கு ஓட விடுகிறார்கள். அங்கிருந்து அடுத்து எங்கோ?? போகும் போது சுவாமிநாதன் அதிக விலை கொடுத்து வாங்கிய பியர் பாட்டிலை விட மனசில்லாமல் காருக்குள் எடுத்து வைக்கிறார். செல்லும் வழியில் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து வாட்டும் மரண விடாயில் குழந்தைகளுக்கு அந்த பியரைக் கொடுத்து தாகம் தீர்க்கிறார். கொடுமை?? பத்து மாதம் தன்னைக் கருவில் சுமந்த தாய்க் கிழவியை இராசையா தூக்கி வரும் போது “என்னை இப்படியே போட்டுட்டு ஓடிப் போடா” என்று கிழவி சொல்வது நெஞ்சை குறு வாள் கொண்டு குத்திக் கிழிக்கிறது. கதை நெடுக இலங்கைத் தமிழில் எழுதப்பட்டு இருப்பதால் முடிக்கும் போது நமக்கு அது மிகவும் பரிக்கயமான மொழியாகிறது. உயிரின் பெறுமானம் தெரிந்தவர்கள் ஆயிரக் கணக்கில் இரவோடிரவாக வெளி நாடுகளுக்கு ஓடி விட்டார்கள். தெரிந்தவர்களிலும் மண்ணின் மீதுள்ள பாசம் மிகுந்து அங்கே இருந்தவர்கள் வெளியேற்றப் பட்டார்கள். “ ஓடு என்றால் ஓடுவதற்கும் வா என்றால் வருவதற்கும் நாமென்ன மந்தைகளா. எங்கேயாவது மாறி மாறி இருப்போம்” என்று ஒரு குரல் வேகமாக ஒலிக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. யாழ்ப்பாணத்தை நான்கு லட்சம் மக்களுக்காகத் தன் மடியில் தேக்கி வைத்து நன்னீரை கிணறுகள் மூலம் பாலாகத் தருகிற மாதா. இந்த பூமியில் பூகம்பங்கள் எட்டியும் பார்ப்பதில்லை. பெருஞ் சூறாவளிகள் தாக்கிக் காவு கொண்ட வரலாறு இல்லை என்று தன் தாய் நாட்டின் மீது கொண்ட பாசத்தை வர்ணிக்கிறார் ஆசிரியர். மக்கள் கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்கிறார்கள். ஆடுகளும் நாய்களும் பூனைகளும் அலமந்து பார்க்கின்றன. யுத்த பூமியின் பரிதாபத்தை நன்கு உணர முடிகிறது. அங்கே இருப்பவர்கள் காலியாக இருக்கும் வீடுகளைக் கொள்ளையிடுகிறார்கள். வீதியெங்கும் அவலக் குரல்கள். அல்லல்பட்டு அவலமாக ஓடிக் கொண்டிருந்த மக்களிடம் தம் கை வரிசையைக் காட்டிய திருடர்களும் இருந்தனர். தான் விட்டு வந்த மாட்டையும் கன்றையும் கூட்டி வரச் சென்ற போது எதிரே ஒருவன் அதை தன் மாடு கன்று என கூட்டி வரும் அவலமும் நடந்தது. ஆரம்பத்தில் போரிட்டவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் மெச்சிக் கொண்டவர்கள் கூட பெரும் இடப் பெயர்வோடு தம் பேச்சுகளை மாற்றிக் கொண்டார்கள் என்கிறார் ஆசிரியர். என்னைக் குலை நடுங்க வைத்த ஒரு நிகழ்வும் வந்தது. “ வடக்கு வீதியில் ஏறியவர் கோயில் சுவருடன் குப்புறக் கிடக்கின்ற ஒரு சடலத்தையும் சுற்றி இரண்டு நாய்கள் நிற்பதையும் காகங்கள் வேலியில் அமர்ந்து அவதானிப்பதையும் கண்டார். நாய்கள் மெதுவாக உறுமிய போது சடலத்தின் ஒரு கரம் அதைத் துரத்தும் பாங்கில் அசைத்தது. உயிர் இருக்கிறது” என்கிறார். எத்தகைய நிலை. இந்த நாவலில் ரசித்த வரிகள் எழுத முடியாது. என்னை பாதித்த வரிகள் வேண்டுமானால் எழுதலாம். “ எங்கட எத்தனை பிள்ளைகள் வாழ்கிற வயதில துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டும் உடலில் குண்டுகளைக் கட்டிக் கொண்டும் இந்த நாட்டின் இன வாத வன்செயல்களுக்கு பாதையைத் திறந்து விட்டது. இந்த பூமியில் இருக்கின்ற எல்லாத் துப்பாக்கிகளும் வெடிக்காது போய் விட வேண்டும். ஷெ;ல்கள் குண்டுகள் கண்ணிகள் எல்லாம் அவற்றை செய்தவர்களோடு செயலிழந்து போகக் கடவது” புரட்சிக்காரி சுகந்தி , அவள் தோழி மாலதியின் மரணம் நம்மை உலுக்கி விடும். இனி ஒரு யுத்தம் வேண்டாம். ஒருவர் மற்றவரது உரிமைகளை மதிப்போம். சமாதானமாய் வாழ்வோம். அதை வீடுகள் தொடங்கி நாடுகள் வரை நீட்டிப்போம். புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது மனம் கனத்துப் போனது நிஜம். நாம் எத்தகைய நிலையில் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்றும் ஒரு எண்ணம் மின்னல் போல் வந்து போனது. *************************************************************************************************************************

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!