Bio Data !!

08 June, 2025

# 2 ஆம் நாள் டேனிஷ் கோட்டை. பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தூரத்தில் இருக்கும் இடம் காரைக்கால். பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி நாலு இடங்கள் சேர்ந்து பிரெஞ்சு யூனியன் பிரதேசம். மாகி, ஏனாம் இரண்டு இடங்களையும் வரிசையில் வைத்திருக்கிறேன். பார்த்து விட வேண்டும். காரைக்கால் போகும் வழியில் தரங்கப்பாடி என்றொரு இடம் உண்டு. இது மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது. அங்கே டேனிஷ் கோட்டை இருக்கிறது. சிறிய அளவில் தான் இருக்கிறது. அந்த காலத்தில் கடல் வழி கப்பலில் வரும் தளவாடங்களை இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள். கடலை நோக்கிய வண்ணம் இரண்டு பழைய கால பீரங்கிகளை வைத்திருக்கிறார்கள். பழைய காலப் பொருட்கள் , இப்பொழுது கடல் மேலேறி வந்து வந்து கோட்டையை நெருங்கி விட்டது. ஆனால் மற்ற கடற்கரைகளைப் போல கல் வேலி கட்டி மறிக்காததால், தாய்மடியில் குழந்தை குதூகலிப்பதைப் போல நீரோடு விளையாட முடிகிறது. இங்கு தான் இந்தியாவில் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிட்டதாகச் சொல்கிறார்கள். கோட்டைக்கு போகும் வழியில் ஒரு வாயில் இருக்கிறது. அது அந்த கால அரண்மனை வாயிலை நினைவுபடுத்துகிறது. 1718 இல் கட்டப்பட்ட ஒரு. சர்ச் இருக்கிறது. பழைய கட்டடங்களை அப்படியே பழைமையோடு பாதுகாக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த வழியில் உள்ள கட்டடங்கள் எல்லாம் பெயின்ட் செய்யப்பட்டு புதிதாக இருக்கின்றன. . அதனால் பழமை மாறியது போல் தான் தெரிகிறது. பதிக்கப்பட்ட வருடங்களை வைத்துத் நான் முந்நூறாண்டு பழமையானது எனத் தெரிகிறது. முன்தன் முதலில் பெண்களுக்கான செகன்டி கிரேட் டிரெயினிங் பள்ளி இங்கு தான் வந்ததாகச் சொல்கிறார்கள். கோட்டைக்குள் செல்ல ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். காலை பத்து மணி முதல் மாலை 5.45 வரை உள்ளே இருக்கலாம். மற்ற எல்லா பீச்களிலும் இருப்பது போல தள்ளு வண்டிகளில் மாங்காய் பத்தை, ஐஸ், போன்ற தின்பண்டங்களும் கிடைப்பதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை ரசிக்கலாம். கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடமாடிய மக்கள் கால் வைத்த இடங்களில் நாமும் வைத்திருக்கிறோம் என்பதே பரவச உணர்வைத் தரும். வாசிப்பதைப் போலவே கண்களுக்கும் விருந்து அளிக்க chellanaikutti என்னும் என் யூட்யூப் சானலில் பார்க்கலாம். எழுத்துக்களை நான் கொடுத்திருப்பது போலவே கொடுத்தால் வந்து விடும். நாளை காரைக்கால் அம்மையார் ஆலயமும், நாகூர் தர்காவும் பற்றிய தகவல் கள் தருகிறேன்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!