Bio Data !!

16 June, 2025

# தகப்பன் சாமி சிவப்பு ரெட், மேல் டாப் ல ஒரு சொற்றொடர். தகப்பனே சாமி தானே. எனக்கு எங்க அப்பாவை நினைச்சாலே பல எண்ணங்கள் குதித்துக் கொண்டி கிளம்பும். அப்போ நான் பதினொன்று படித்துக் கொண்டு இருக்கிறேன். அது தான் பள்ளி இறுதி ஆண்டு. இப்போ மாதிரி +2 இல்லை. எங்களுக்கு ஆறு பாடங்கள். தமிழ், ஆங்கிலம் , கணக்கு, அறிவியல் , சரித்திரம் & பூகோளம், எலக்டிவ் ( எனக்கு அதுவும் கணக்கு) என் வகுப்பு ஆசிரியை பிச்சம்மாள் மிஸ் எங்க அம்மவோட நெருங்கிய தோழி. வந்து எங்க அப்பாட்ட கேட்கிறாங்க." ASPP (assistant school pupil leader) தமிழ் மீடியத்துல எடுப்பாங்க. ரூஃபியை போடச் சொல்லலாம்னு நினைக்கிறேன். நல்லா சுறுசுறுப்பா இருக்குறா". அது வரை பள்ளியில் என்னை தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாத ஒருவர். என்னைப் புகழ்ந்து சொல்லவும் எனக்கு தலை கால் புரியல. உடனே எங்க அப்பா" வேணாங்க. படிப்பு டைவர்ட் ஆகிடும். அதை உட்கார்ந்து படிக்க வைக்கிறதே கஷ்டம்" என்று என் ஆசை பலூனை புஸ்ஸாக்கி விட்டார்கள். " நல்ல மூளை இருக்குது. உட்கார்ந்து படிக்க மாட்டேங்குதே" இது தான் அவங்க கவலையா இருக்கும். தேர்வு தொடங்கியது . ஆறு பாடங்களோடு தமிழ் ஆங்கிலம் இரண்டும் இரண்டு பேப்பர்களாக மொத்தம் எட்டு. பாதிக் கிணறு தாண்டி இருக்கிறேன். படிச்சு ( நாம படிக்கிற லட்சணத்துக்கு) உடம்பு சூடாகும்னு மாலையிலும் ஒரு தரம் குளிக்க சொல்வாங்க. குளிக்கும் போது காலில் தொடை பக்கமாக ஒரு நீர்க்கொப்பளம். எதுக்கும் அம்மாவிடம் சொல்லிடுவோம்னு கூப்பிட அவங்க பார்த்தால் வேறு ஒன்றிரண்டு இடங்களிலும். பதறிய படி அப்பாவிடம் சென்று " அம்மன் போட்டிருக்கிற மாதிரி இருக்குது என்று சொல்ல. அவரும் பார்த்து உறுதி செய்தார்கள். எனக்கு அதன் பாரம் புரியவில்லை. அம்மாவும் அப்பாவும் ஆடிப் போயிட்டாங்க. உடனே பிச்சம்மா மிஸ்ஸோட கலந்து ஆலோசிக்கிறாங்க. " அவள் எழுதிடுவான்னா பெர்மிஷன் வாங்கிடலாம்" னாங்க. எங்க அம்மாவும். உயர் பள்ளி ஆசிரியை தான். நான் தேர்வெழுதும் பள்ளியில் அவர்கள் தேர்வு சூப்பர்வைசர் வேறு ஒரு அறையில். ஒரு வருடம் வீண் செய்வதா? தோற்று விட்டால் என்ன செய்வது? பல யோசனைக்குப் பின் என்னிடம் கேட்டார்கள். நமக்கு எல்லாமே விளையாட்டுத் தானே. அதெல்லாம் எழுதிடுவேன்னு சொல்லிட்டேன். மறு நாள் உடம்பெல்லாம் கொப்பளம் போட்டுட்டுது. கண் இமைகளின் மேல் கூட. கண்ணிலிருந்து தண்ணீரா வடியுது. உடம்பு பலவீனமா இருக்குது. எழுத எழுத கை தளறுது. எனக்கு இடம் வாசலுக்கு அருகில் என்பதால் அது வரை காரில் கூட்டிப் போய் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் உட்கார வைத்து விட்டார்கள். என. கண் பார்வையில் படும் படி அப்பா . நான் சோர்ந்து தலை சாய்க்கும் போது கொண்டு வந்த ஹார்லிக்ஸ்சை ஆசிரியரிடம் கொடுத்து அனுப்பி குடிக்கச் சொல்வார்கள். பாடங்களை நான் படிக்க முடியாததால் அப்பாவும் அம்மாவும் மாடியில் இருந்த என்னருகே வந்து வாசிப்பார்கள். கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த நாளிலேயே படுத்துக் கொண்டே ஜெயித்தவள் நான். 😀. உன் முன் தைர்யமா இருந்து கீழே போய் அப்பா அழுவாங்கன்னு பின்னாளில் அம்மா சொல்வாங்க. அப்போ ரிசல்ட் மார்க் எல்லாம் வர நாளாகும். மார்க் வந்ததும் எங்க அப்பா என்னைத் தூக்கி ஒரு சுற்று சுற்றினாங்க. கணக்கில் 100/100. ஆங்கிலத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண். மொத்த மார்க் 486/600 . 81% அதன் பிறகு B Sc., B. ed., என படித்தாலும் அந்த பள்ளி மதிப்பெண்ணின் அடிப்படையில் கிடைத்த வேலை தான் தொலைத் தொடர்பு. 81% + 10% (டிகிரி முடித்ததற்காக) . வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் வந்தேன். ஒருவர் கிடைத்த வேலையில் சேராததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பின் அரசுத் தேர்வு எழுதி அதிகாரியும் ஆனேன். அந்த உயர்வைப் பார்க்க தகப்பன் சாமிக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!