27 June, 2025
# மாமன் தமிழ் திரைப்படம்
யூட்யூபில் பார்த்தேன்.
இயக்குநர் : பிரசாந்த் பாண்டியராஜ்
முக்கிய கதாபாத்திரங்கள்: சூரி,(இன்பா) ஐஸ்வர்ய லக்ஷ்மி, (ரேகா) ஸ்வாசிகா, அவர் கணவராக பாபா பாஸ்கர், ராஜ்கிரண், விஜி, பிரகீத் சிவன்.( சூரியின் அக்கா மகன்)
கிராமங்களில் தன் தம்பிக்கு தன் மேல் உள்ள பாசத்தை அவன் மனைவிக்குக் கூட விட்டுக் கொடுக்காத தீவிரத் தன்மையை பார்த்திருப்போம். மாமியாரோடும் நாத்தனாரோடும் போராடி தன் கணவனின் அன்பை சிறிதளவேனும் தன் பக்கம் திருப்ப ஒரு பெண் படும் சிரமம் சொல்லி மாளாது.
இங்கே அக்காவின் மகன், சிறுவன் தான் . அவன் தன் தாய் மாமனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிவதாயில்லை. தாய் மாமனான சூரிக்கு திருமணமான பின் இதனால் வரும் சிரமங்கள் தான் கதை.
ஒரு மருத்துவராய் இருந்தும், குடும்பத்தார் மேல் சூரிக்கு இருக்கும் பாசத்தைப் பார்த்தே மணக்கத் தயாராய் இருக்கும் பெண் , அந்தப் பாசம் தன்னிடமிருந்து சூரியைத் தள்ளி வைக்கும் போது எவ்வளவு கடுமையாக முடிவெடுக்கிறாள் என்பது நம்மை கலங்க வைக்கத்தான் செய்கிறது.
கடைசி அரை மணி நேரம் நம்மை உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளிக்க விடுகிறார்கள். உறவுகளின் அவசியத்தை , வலியுறுத்தும் இத்தகைய படங்கள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்.
ராஜ்கிரண், விஜி தம்பதிகள் மூலம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். சண்டையே போடாமல் வாழ்வது மட்டுமே சிறந்ததல்ல. சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்தில் இணையத் தெரிவது தான் வாழ்க்கை.
இடையே நடிகர் விமல் வந்து எங்களோடு ஜாலியா சுத்திகிட்டு இருந்த உன்னைய சீரியஸாக்கி விட்டுட்டாங்க என்கிறார். அது கதைக்கும் நிஜத்துக்கும் பொருத்தமாய் இருக்கிறது. அவர் சீரியஸாவே இருக்கட்டும் . அப்போ தான் நல்ல நல்ல படங்கள் கிடைக்கும்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!