30 September, 2026
ஓநாய குலச் சின்னம் 2
#ஓநாய் #குலச்சின்னம் 2
மங்கோலியர்க்கள் சம்பந்தப்பட்ட போர்த் தந்திரங்கள் எல்லாம் சேர்த்து பார்த்தால் அவை ஓநாய்களிடமிருந்து பயின்றவையாகத்தான் இருக்கும் எனக்கிறார் ஓநாய் குலச் சின்னம் நாவலின் ஆசிரியர்.
ஓநாய்கள், நாய்கள் எல்லாம் ஊளையிடும் போது வானத்தை நோக்கி தலையை உயர்த்துகிறதே. இவை இறைவனிடம் தன் குறைகளை முறையிடுகின்றனவோ என எனக்குத் தோணும்.
மங்கோலியர்கள் கெட்டியான பனியின் மீது பயணிக்க இரண்டு கம்பளித் துணிகளை எடுத்துக்கொண்டு ஒன்றில் இவர்கள் ஏறியதும் இரண்டாவதை முன்னால் போட்டு, பின் அதில் ஏறியதும் முதல் துணியை அதற்கு முன் போட்டு இப்படியாக அவர்கள் செல்வதுண்டு. கம்பளித்துணிப் படகுகளை ஓட்டிச் செல்வதைப் போல இருக்கும். அப்போது அவர்களுக்கு கீழ் இருந்த கெட்டிப் பனி நொறுங்கவும் மொறு மொறுக்கவும் செய்யும். மாயாஜால கம்பளத்தில் செல்வது போல அது தோற்றம் தரும் என்கிறார்.
ஒரு வித்தியாசமான தத்துவம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது புல்லும் மேய்ச்சல் நிலமும் தான் பெரிய உயிர். ஓநாய்களும் மனிதர்களும் சிறிய உயிர். புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சி உண்ணும் ஜீவன்களையும் விட மோசமானவை . எதிரிகளைக் கண்டால் மான்கள் ஓடித் தப்பிக்கும். ஆனால் புல் அதன் மீது எவரும் ஏறி மிதிக்கலாம் பிடுங்கலாம், உண்ணலாம் புல்லால் ஓட முடியாது.
பல கோணங்களிலும் நம்மை சிந்திக்க வைக்கும் இந்த நாவல்.
29 September, 2026
ஹபீபி தமிழ்த் திரைப்படம்
"ஹபீபி " திரைப்படம் தியேட்டரில் வெளியிடப்படும் போதே முக நூலில் நல்ல வரவேற்பு. நான் தற்போது சோனி லைவில் பார்த்தேன்.
இயக்குநர் : மீரா கதிரவன்.
முக்கிய நடிகர்கள் : கார்த்திக் ராஜா ( நடிகர் தனுஷின் அப்பா. ஏன் சார் இவ்வளவு நாள் நடிக்க வரல? ) மற்றும் பலரும் புதியவர்களே.
மகேஷ் முத்துசாமி அவர்களின் ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சி.
கதையில் யூசுப்பின் மகளாக வரும் இஸ்மத் பானு "வெப்பம் குளிர் மழை" திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எடுத்து திறம்படச் செய்தவள். திரையுலகம் குறிப்பிட்ட நிறம், உயரம் பருமனெல்லாம் பார்க்காமல் திறமை பார்த்து வாய்ப்பு கொடுக்கத் தொடங்கினால் நலம்.
ஒரு இஸ்லாமிய சமூகம் சார்ந்த கதை. குடும்பத்துக்காக வெளிநாடு போய் சம்பாதிப்பவர்கள் அவர்களில் அதிகம். களம் நெல்லைப் பகுதியைச் சார்ந்தது. எங்கள் பேச்சுத் தமிழில் அன்பும் நெருக்கமும் வழியும். தறி நெய்தல் இந்தப் பகுதி இஸ்லாமிய மக்களின் ஒரு வகை கைத்தொழில் . கதை நாயகனின் குடும்பமும் தறி நெய்பவர்கள் தான். ஏழ்மையான குடும்பம். அந்தப் பகுதியின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வெளிநாடு சென்று சம்பாதிக்கத் தொடங்கியதும் அவர்கள் வீட்டுத் தறி செயல் நிறுத்துகிறது.
கதாநாயகனின் தந்தை யூசுப்பின் தம்பி வெளிநாடு் சென்று இவர்கள் குடும்பமும் முன்னேறத் தொடங்குகிறது. வெளிநாடு சென்று குடும்பம் முன்னேறுவதற்காக செய்யும் அந்தத் தம்பதிகளின் தியாகம் மிக அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.
மனைவியை தனியே விட்டு வெளிநாடு செல்லும் கணவரின் வலியை பார்வையிலேயே உணர்த்திய சாச்சாவும் அவர் மனைவியும் கதைக்கு வலுவூட்டிய கதா பாத்திரங்கள்.
யூசுப்புக்கும் அவரது இந்து நண்பருக்கும் இடையேயான நட்பும் அற்புதமாக நெய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவுக்கும் இடையே சொல்லப்பட்டு இருப்பது தான் யூசுப்பின் மகன் அபு தாகிரின் காதல் கதை.
பள்ளியில் மௌனமாகக் காதலிக்கும் அபு தன் நண்பனிடம் "அந்த புள்ளைக்கு என்னைப் பிடிக்குமான்னு தெரியல. ஆனா எனக்கு அந்தப் புள்ளைய பிடிக்கும்கிறத எப்படியாவது சொல்லிறணும்." என்பான். காதலைத் தெரிவிக்க ஆண்கள் எடுக்கும் அந்த மௌன முயற்சியே பெண் பிள்ளைகளை காதல் கொள்ளச் செய்து விடும்.
ஆனால் அபுவின் நண்பர்கள் காதல்ல உள்ள பிரச்னைகளைச் சொல்லி விட்டு விலகச் சொல்லும் போது " அந்த புள்ள தான் என்னைப் பாக்குது. நான் எங்கல அந்தப் புள்ளைய பார்க்கிறேன். " என்பான். இதுவும் ஆண்கள் தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் சமாளிக்கும் வித்தை தான். ஆணின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் சாட வேண்டிய இடத்தையும் தவற விடவில்லை இயக்குநர்.
தனுஷ் அப்பா இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு யூசுப் கதாபாத்திரம் கன கச்சிதமான பொருத்தம். Tailor made character. ஒரு இஸ்லாமிய ஆணின் மென்னுணர்வுகளை அவ்வளவு அழகாக பிரதிபலிக்கிறார்.
தலை முறை தலை முறையாக பார்த்து வந்த தொழில் முடிவடையும் வேதனையை அந்தக் காட்சியில் கஸ்தூரி ராஜா அவர்கள் மிகச் சரியாக நமக்குள் கடத்துகிறார்.
முக்கியமா ஒண்ணு சொல்லணும்.
ஒரு கதாபாத்திரத்தின் பெயர் Rufina. எங்க அப்பா்என்னை அழைப்பது போலவே Rufi னு சொல்லும் போது படம் அவ்வளவு பிடித்து விட்டது. இது வரை யாரும் பார்க்காம விட்டிருந்தா பார்த்திடுங்க.
27 September, 2026
"ஓநாய் குலச் சின்னம்" ஜியாங் ரோங் எழுதி சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது . அதிர்வு பதிப்பகம். விலை 250 ரூபாய். பக்கங்கள் 696.
நண்பர் தீன் இது நான் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நாவல் என்று சொன்னதால் வாசிக்க தொடங்கினேன் . ஜென் என்பவர் ஒரு ஆட்டைப் போல கொஞ்சமும் துணிச்சல் அற்றவன். பில்ஜியிடம் அவன் பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொள்கிறான். முக்கியமாக ஓநாய்களின் போர்த் தந்திரங்கள் மூலம் படிப்பிக்கிறார். மேய்ச்சல் நிலத்தில் தங்கத் திட்டமிட்டால் ஓநாய்களை விடவும் வலிமை மிகுந்தவராக இருக்க வேண்டும் என்கிறார்.
ஓநாய்கள் மான்களை வேட்டையாடும் முறைமையை சொல்லிக் கொடுக்கும் போது நமது வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைத்தது போல் இருக்கிறது.
வேட்டையாடும் ஓநாய்களை ஒரு இனம் தன் குலச் சின்னமாக வைத்திருக்கிறது. அதற்கான காரணம் மிகவும் சுவாரசியமானது. புல்வெளிகளை மான்கள் கூட்டம் கபளீகரம் செய்துவிடும். அந்த மான்களை ஓநாய்கள் வேட்டையாடுவதால் தான் மேய்ச்சல் நிலம் பிழைக்கிறதாம். அதனால் தான் ஓநாய்களுக்கு தெய்வ வழிபாடு. மங்கோலியர்களின் குலம் சின்னம் ஓநாய்.
மான்கள் வயிறு நிரம்ப புல் மேயும் வரை ஓநாய்கள் காத்துக் கிடக்குமாம். அதன்பின் விரட்டினால் ஓடத் தொடங்கும். மான்கள் ஓடிய படியே சிறுநீர் கழிக்க முடியாதவை. அதனால் அப்படி அடக்கி ஓடும் போது மான்களின் பின்னங்கால்களில் சதைப்பிடிப்பு ஏற்பட்டு இறுக்கமாகி ஓட முடியாமல் ஆகிவிடும். அந்த சமயம் "மஞ்சள் கடல்" என அழைக்கப்படும் மான்களை ஓநாய்கள் வேட்டையாடும் என்கிறார்.
மான்கள் தூங்கிக் கொண்டிருந்தால் கூட அதன் மூக்கம் காதுகளும் உஷராகவே இருக்கும் என்கிறார். இன்னும் ஓநாய்களை பற்றி நிறைய தெரிந்து கொள்வோம். தொடர்ந்து எழுதுகிறேன்.
26 September, 2026
#நிகழ்ச்சியை கலவரமில்லாமல் நடத்துவதெப்படி
ஒரு நிகழ்வு வெற்றி பெறுவது என்பது வெறும் ஏற்பாடுகளால் மட்டும் வருவது அன்று. அதற்கு அழைப்பவர்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. உதாரணமாக புத்தகக் கண்காட்சியில் பேச வருபவர் வாசிப்பில் ஆர்வமுள்ளவராய் இருத்தல் அவசியம்.
ஒரு திருமணத்தில் ஒவ்வொரு ஏற்பாட்டையும் பார்த்துப் பார்த்துச் செய்து பின் வந்த இடத்தில் ஏதாவது ரகளை செய்து அத்தனை பேர் கவனத்தையும் தன் பால் திருப்பி மொத்த ஏற்பாட்டின் சிறப்பையும் சிதறடிக்கும் வழக்கத்தைக் கொண்ட ஒருவரையும் அழைத்து விட்டால் நம்முடைய மொத்த முயற்சியும் பாழ்.
நாம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தன் agenda வை நிறைவேற்றிக் கொள்பவர்களையும் அழைக்கக் கூடாது. நான் கலந்து கொண்ட ஒரு சிறு கூட்டத்தில் முன்னேற்பாடாக அமைப்பாளர் சொன்னது "யார் வேண்டுமானாலும் சில நிமிடங்கள் பேசலாம். ஆனால் அரசியல் பற்றி பேசக் கூடாது. தன்னை முன்னிலைப்படுத்தி தன் செயல்கள் பற்றி பெருமையாகப் பேசக் கூடாது. தனிப்பட்ட மனிதரையோ ஒரு குழுவையோ தாக்கித் தவறான வார்த்தைகளில் பேசக்கூடாது . " இப்படி ஒரு முன்னுரை கொடுத்து விட்டுப் பேச அனுமதித்தால் அதை மீறிப் பேசுபவர்களை அங்கேயே நிறுத்த முடியும். நிகழ்வும் வெற்றி பெறும்.
ஒரு நிகழ்ச்சிக்குப் பேசத் தேர்ந்தெடுக்கும் போது திறமையானவர்கள் பிரபலமானவர்கள் என்பதைக் கருத்தில் கொள்வதோடு , அதன் கருப் பொருளுக்கு சம்பந்தமான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பேச வருபவர்களும் அதற்கு உடன்பாடு இல்லாதவர்களாக இருந்தால் பேசத் தான் வரவில்லை என்பதை நாசுக்காகச் சொல்லி மறுத்து விடலாம். மேடையில் வந்து நிகழ்ச்சிக்கு இழிவாய் உரை கொடுப்பதும் சரியல்ல. ஒரு நிகழ்ச்சிக்கு வந்து அதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் மீதி எல்லா விஷயங்களையும் பேசிச் செல்வது உச்ச பச்ச அவமரியாதை.
ஒரு நிகழ்வை வெற்றிகரமாக எடுத்து நடத்துவது என்பது சுலபமான விஷயமல்ல. நடந்து முடிந்த பின்னும் திசை திரும்பி விட வாய்ப்புண்டு. வரும் விமர்சனங்களில் தனி மனித தாக்குதல் சார்ந்தவைகளை துச்சமென ஒதுக்கி ஆக்கபூர்வமானவைகளை கவனத்தில் கொண்டு முன்னேற வேண்டும்.
துணிந்து நிகழ்வுகளை முன்னின்று எடுத்து நடத்தும் பெண்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.
24 September, 2026
நூலின் பெயர் : நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
ஆசிரியர் : நரசய்யா
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2023
கடலோடி நரசய்யா இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமையக் கூடிய எல்லாத் தகுதியும் உடையவர். டாக்டர் க.சுபாஷினி இந்த நூல் கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் வீடுகளில் அனைவரும் முடங் கிக் கிடந்த கால கட்டத்தில் ஸூம் இணையத் தொடர்பு வழியாகத் திரு நரசய்யா ஐந்து நாட்களாக வழங்கிய உரைகளின் எழுத்து வடிவம் என்கிறார்.
வரலாற்று ஆய்வறிஞர்களின் உரைகளிலிருந்து இவருடையது மாறுபட்டு ஆழமாக உணரக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் அவரது கடல் வழிப் பயணத்தின் வழியாகப் பெற்ற உலகளாவிய அனுபவங்கள் தான்.
கடலோடி நரசய்யாவுடனான சுபாஷினி அவர்களின் உரையாடல்கள் மூன்று முக்கிய விஷயங்களை மையப்படுத்தியதாக இருக்கும். பயணங்கள், நகரங்களின் வரலாறு , இருவரும் வாசித்து திறனாய்வு செய்த நூல்கள்.
திரு நரசய்யா பள்ளிக் காலங்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் ஒருவர். இயல்பியல் பாடப் பிரிவில் திருச்சி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றார். ஒருநாள் வகுப்பில் பட்டாளத்தில் சேர்வதற்கான சுற்றறிக்கையை வாசித்தனர். அந்தக் காலத்தில் ஏழை மாணவர்களே அதிகம் பட்டாளத்தில் சேருவார்கள். நரசய்யா தான் ஆயுதம் ஏந்திய படையில் கண்டிப்பாக சேர்ந்து காட்டுவேன் என்றார். பின்னாளில் அதையே ஒரு கதையாக எழுதி விகடனில் வெளி வந்தது.
இவரது பதினாறாவது வயதில் கடற் படை தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுப்பதில் நமது நாட்டுக்கும் வெளி நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாகச் சொல்கிறார். இந்திய அதிகாரிகள் ஒருவருக்கு எவ்வளவு தெரியவில்லை எனப் பார்க்கிறார்கள். ஆனால் வெளிநாட்டினரோ வெட்டப்படாத வைரத்தை எடுத்து பட்டை தீட்டுகிறார்கள் என்கிறார்.
இவர் விகடனுக்கு அனுப்பிய முதல் சிறுகதை "தேய்பிறை" இந்த பெயரின் ராசி கதை தேர்ந்தெடுக்கப் படாது என நண்பர் சொல்ல அது முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. முதல் கதையே முத்திரைக் கதையானது முதன் முதலில் திரு ஜெயகாந்தனுடையது. இரண்டாவது திரு நரசய்யா உடையது தான். மூன்றாவதாக திரு இந்திரா பார்த்தசாரதி உடையதாம்். திரு நரசய்யா அவர்கள் கதை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிலேயே செப்டம்பரில் இவருடையதும் அக்டோபரில் திரு இந்திரா பார்த்தசாரதி உடையதும் வெளியாகி இருக்கிறது. ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார் திரு நரசய்யா அவர்கள்.
இவரது மகனும் கப்பலில் பணி புரிந்திருக்கிறார். "சென்னை செல்வம்" என்ற அந்தக் கப்பல் தான் ஆசிரியர பணி புரிந்த கடைசி கப்பலும், இவர் மகன் பணி புரிந்த முதல் கப்பலுமாகும்.
இத்தகைய பல அறிய தகவல்களையும் வாழும் வாழ்க்கை முறைகளையும் இந்த புத்தகம் நமக்கு அறிமுகம் செய்வது சிறப்பு.
22 September, 2026
கல்வெட்டில் தேவதாசி
"கல்வெட்டில் தேவதாசி" குமிழ் முனை அமைப்பு வைத்த போட்டியில் புத்தக விமர்சனத்துக்காக நான் எடுத்த புத்தகம். போட்டிக்கு நாவல், சிறுகதை, கட்டுரை , கவிதை போன்ற எந்தப் பிரிவில் வரும் புத்தகங்களையும் எடுத்துக் கொள்ளலாம். நான் கட்டுரைப் புத்தகமான இதைத் தேர்ந்தெடுத்தேன். இதை எனக்கு பரிசளித்த Arsha வுக்கு சிறப்பு நன்றி.
நான் கண்டிப்பா கலந்துக்கணுமான்னு தளர்வடைந்த போது ஊக்குவித்து எழுத வைத்த தோழி கி. இளம்பிறை அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று இதைப் பேச உதவியதே.
இதைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கல்லூரியில் என் விடுதி அறைத் தோழியிடம் ஒரு நாள் கேட்டேன் " எல்லோரும் வீட்டுக்குப் போனாலும் ஏன் நீ மட்டும் போவதில்லை"
"போனால் என்னை எங்க அம்மா படுகுழியில் தள்ளி விடுவாங்க"
எனக்கு ரொம்ப ஆச்சர்யம். காக்கும் தெய்வங்களான அம்மாக்களில் படுகுழியில் தள்ளுபவர்களும் இருப்பார்களா?
ஆனால் அவள் சொன்னாள் "நாங்க தேவதாசி பரம்பரையைச் சேர்ந்தவங்க. நான் ரொம்ப போராடி படிக்க வந்திருக்கிறேன். கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு ஒரு வேலையும் கிடைச்ச பின்ன தான் வீட்டுக்குப் போவேன்" அந்த வயதில் அப்படி ஒரு செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சி. ஆனால் செய்தியின் கனம் அன்று புரியவில்லை. இன்று புரிகிறது.
இந்தப் புத்தகம் அந்த நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தது. மிகுந்த மனவலியோடு பெங்களூருக்கு செல்வதற்கு முந்தின நாள் போட்டிக்கு அனுப்பி விட்டுச் சென்றேன்.
போட்டியின் விதிப்படி கைகளால் எழுதி அனுப்ப வேண்டும். ஆறு பக்கங்கள் . விட்டுப் போன பழக்கத்தால் விரல்கள் கெஞ்சின. தாஜா பண்ணி எழுதி முடித்தேன். பரிசுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டேன்.
வரும் அக்டோபர்2 ஆம் தேதி தூத்துக்குடி சென்று அதற்கான பரிசை வாங்க இருக்கிறேன்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்தின கதையெல்லாம் பேசுறத விட்டுட்டு இன்று பல பள்ளிக் குழந்தைகள் சீரழிக்கப்படுகிறார்கள். அதை முடிவுக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று பேசுவோம். தவறு செய்த அயோக்கியர்கள் எப்படித் தண்டிக்கப்பட வேண்டும் என்று பேசுவோம்.
அன்றைய பெருந்தனக்காரர்களும், அரசர்களும் நோய் பற்றிய எந்த பயமும் இன்றி பல பெண்களோடு உறவு கொண்டார்கள் என்றால் காரணம் அந்தப் பெண்கள் வேறு எந்த ஆடவரோடும் தொடர்பில் இல்லை. பெண்களுக்கு எதிரான தீமையை அழிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அப்படி அழித்த ஒரு விஷயத்தைப் பெருமைப்படுத்தி பேசுவது என்பது அறிவீனம்.
அன்று அதற்குக் கொடுக்கப்பட்ட சாட்டையடி பதில் தான் இணைப்பில் உள்ளது. இன்றைய பிரச்னைகளைப் பேசுவோம் தீர்வு காணுவோம். பழங்கதை வேண்டாம்.
21 September, 2026
Nellai reads experience
பெங்களூரில் இருந்த போது ஒரு தோழி போனில் சொன்னார்கள். Nellai reads னு ஒண்ணு தொடங்குறாங்க. வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இணைகிறாங்க. எனக்கு உங்க நினைவு வந்தது. சேர்ந்துக்கிறீங்களான்னு கேட்டாங்க. விவரம் கேட்டப்போ. ஞாயிறு அதிகாலை ஆறரை மணிக்கு சரோஜினி பார்க்கில் சந்திக்கிறாங்க என்றார்கள். அப்போ வீட்டிலிருந்து ஆறுக்கு கிளம்பணும். சாத்தியப்படாதேன்னு விட்டுட்டேன்.
அது நேற்று நிறைவேறியது. பொருநை அரங்கத்தில் காலை பத்து மணிக்கு கூடுவதாகத் தெரிந்ததும் போனேன். சதக் அப்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் குரேஷி கான் முன்னெடுத்துச் செய்கிறார். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இத்தனை பேரா? அதுவும் இளைஞர்கள்......வாழ்வில் நம்பிக்கை ஏறுகிறது. நாம் அறியாமல் அங்கங்கே அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
பத்து மணிக்கு தொடங்கினோம். ஒன்றரை மணி நேரம் பொருநை அரங்கத்தில் வசதியான இடங்களில் அமர்ந்து அவரவர் கொண்டு வந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினோம். அது கொஞ்ச நேரத்திலேயே நூலகமாகிப் போனது. கட்டுப்படுத்துவார் யாருமில்லாமலே அமைதியாக வாசிக்கத் தொடங்கினார்கள். எனக்குப் பெரிய ஆச்சர்யம். அந்ம இளங்காற்று சூழ்ந்த சூழலில் கண்கள் கிறங்காமல் ஒன்றரை மணி நேரம் வாசித்து முடித்தேன்.
அதன் பின் அவரவர் வாசித்த புத்தகங்களைப் பற்றி சுருக்கமாகப் பேசி முடித்தார்கள். இளைஞர்கள் அதிகம் ஆங்கில நாவல் வாசித்திருந்தார்கள். நானே நாற்பது வயது வரை ஆங்கிலம் மட்டுமே வாசித்து அதன் பின் தமிழின் இனிமையை அறிந்தவள் தானே.
ஒரு பெண் archiyalogy படிப்பதாகச் சொன்னாள். பணம் கொழிக்க சம்பாதிக்கப் படிப்பைத் தேடும் இந்த காலத்தில் , ஒரு பெண் தொல் பொருட்களைத் தேடி ஓடுகிறாள். ஆச்சர்யம்.
ஒரு மருத்துவரும் கலந்து கொண்டார். அவரும் இள வயதுக்காரரே. வாசிப்பிற்கான புதிய வகை சாதனத்தை அறிமுகப்படுத்தினார். ரூபாய் 6000 ஏ மதிப்பு கொண்ட ETK Link ( சரி தானா?) வைத்திருப்பதால் கிடைக்கும் ஐந்து பத்து நிமிடங்களெல்லாம் வாசிப்பேன் என்றார்.
ஒரு எட்டு வயதுப் பையன் சுதா மூர்த்தி அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தைப் பற்றி பேசினான். இவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டது மிகச்சிறப்பு.
என் ஆதர்ஸ எழுத்தாளர் பெருமாள் முருகனின் "கூள மாதாரி" பற்றி ஒருவர் பேசினார்.
இறுதியில் அனைவரும் வாசித்த புத்தகங்களை புல்லிலமர்த்தி சுற்றி நின்று புகைப்படமெடுத்து ஆவணப்படுத்திக் கொண்டோம்.
மிகச் சிறந்த முன்னெடுப்பு
வாழ்த்துகள் குரேஷி கான்.
வாழ்க வளர்க!!!!
19 September, 2026
19.9.2023 நிகழ்வு
இன்று காலைச் செய்தியில் விஜய் ஆன்டனியின் மகள் தற்கொலை என்று பார்த்ததும் இதை எழுதத் தோன்றியது.
நமது இளமைப் பருவத்தில் டீன் ஏஜ் என்பது பொற்காலம். என்னைப் போல ஒரு சிலர் "காதல்" என்ற வேலியில் போற ஓணானை எடுத்து விட்டுக் கொள்பவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு பொற்காலம் தான்.
ஆனால் இன்று டீன் ஏஜ் என்பது போராட்டக் காலம். எத்தனை வகையான பிரச்னைகள். பெற்றவர்களாலேயே "பெட்" பண்ணி வளர்க்கப்பட்டு திடீரென ஒரு நாளில் உதவாக்கரை போல் உணர வைக்கப்படுபவர்கள்.
பள்ளி என்பது ஒரு அற்புத உணர்வைக் கொடுக்காமல் மதிப்பெண் என்னும் அச்சுறுத்தலைக் கொடுத்து கொண்டே இருப்பது.
பொதுவாகவே குறைந்து போன ஆரோக்கியம். அதனால் குறைந்து போன உற்சாகம்.
பேசவே முடியாத இன்னும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள்.
காதல் தான் எத்தனை விதமான நாடகங்களை நடத்தி விடுகிறது. ஒரு பக்க காதல். தான் விரும்பும் ஒருவர் பார்வை தன் பக்கம் திரும்பவே இல்லையே என்ற கவலை. அதை மீறி காதலிப்பவர்களில் இருவரில் ஒருவரின் தோழமையே தன் காதலை தட்டிப் பறிப்பதால் வரும் கவலை. இருவரும் நேர்மையாக காதலித்தாலும் பெற்றவர்களால் வரும் பிரச்னை. எத்தனை எத்தனை சிக்கல்கள். இவற்றோடு எப்படி வரும் பொற்காலம்.
பெற்றவர்களின் பொறுப்பு இப்போ கூடுதலாகி விட்டது. அன்று பிள்ளைகளை கண்டித்து வளர்ப்பதே சிறந்த வளர்ப்பாய் இருந்தது. இன்று கத்தி மேல் நடப்பது போல. கண்டிச்சது மாதிரியும் இருக்கணும் கண்டிக்காத மாதிரியும் இருக்கணும். "இருக்கு ஆனா இல்ல" ஸ்டைல்.
இந்த வயதில் தூக்கு முடிச்சை எப்படி போடுவது என்பதை எல்லாம் எப்படி தெரிந்து கொள்கிறார்கள். சொல்லிக் கொடுக்கத் தான் யூட்யூப் என்ற பேராசான் இருக்கிறானே!!
பிள்ளைகள் இப்படி முடிவெடுத்து முடிந்து போனால் பிறகு பெற்றவர்களுக்கு வாழ்க்கையில் என்ன இருக்கிறது. பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
16 September, 2026
நம் வாழ்வில் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கும். ஒன்று நம்மால் அவருக்கோ அல்லது அவரால் நமக்கோ.
அந்தப் பணி முடியும் வரை நம்மோடு பயணிப்பார்கள். அந்த உறவு நம்மைப் பல ஆக்க பூர்வமான காரியங்களைச் செய்ய வைக்கும்.
அந்தப் பணி முடிந்ததும் அந்த உறவும் விலகி விடும். சில நேரங்களில் நாமே ஒரு கணக்குப் போட்டு ஒருவரை நெருங்கும் போது பிரபஞ்சம் நம்மோடு விளையாடிப் பார்க்கும்.
அந்த உறவை நம்மை விட்டுப் பிரித்து வைக்கும். சேர நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் முறித்துப் போடும். பிரிவில் உருகித் தவிக்க வைக்கும். வெகு அபூர்வமாய் சிலருக்கு அந்த உறவை நிரந்தரமாய் பிரித்து விடும். வேறு சிலரை அவர்கள் பிரிவிற்கு மனதை தயார் செய்யும் நேரம் வரும் போது இணைத்து விடும். இதெல்லாம் பிரபஞ்சத்தின் கைங்கர்யம்.
13 September, 2026
நாவலின் பெயர் : ருத்ரா
ஆசிரியர் : வான்மதி ஹரி
விலை : ரூ 280
AVR publishing.
"ருத்ரா" நாவலின் மூலம் வான்மதி ஹரி என்ற எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார்.
ருத்ராவைப் பற்றிய அட்டைப் பட அறிமுகமே வாசிக்கத் தூண்டியது.
" அனலில் முக்குளித்த அக்னியவள்.
காரிகையின் கை கோர்த்து கயவர்களின் பிடியிலிருந்மு தப்பித்த கங்கையவள்.
ஆதவனின் அகம் சேர்ந்த ஆழியவள்
தன் குருதி தெறிக்க
அரக்கர்களை வதம் செய்ய
அவதாரம் எடுத்த ருத்ர சக்தியவள்"
இது தான் ருத்ரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்ட பவித்ரா பற்றிய அறிமுகம்.
தீரன் ஒரு விபத்தில் தாய் தந்தை இருவரையும் பறி கொடுத்த இளைஞன். காவல் துறை அதிகாரி.
ருத்ராவைப் பார்த்ததும் அவள் பின்புலம் எதைப் பற்றியும் ஆராயாமல் இவள் தான் தனக்கு உற்ற வாழ்க்கைத் துணை என முடிவெடுத்து மணக்கிறான்.
தீரனின் உயிர் நண்பன் அருண். உயிர் நண்பன் என்றால் உயிரையும் கொடுக்கத் துணிந்த நண்பன். அவனும் காவல் துறையைச் சேர்ந்தவன் தான்.
கதையின் ஆரம்பம் தீரன் , ருத்ரா இருவரின் காதல் வாழ்க்கையை அழகுற உரைக்கிறது. திடீரென்று கதை திசை மாறி பவித்ரா ருத்ராவாக ஏன் மாறினாள். எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பி வந்திருக்கிறாள் உலக அளவில் பெண்ணுடல் வியாபார சந்தையை துவம்சம் பண்ண எவ்விதம் உதவுகிறாள் என்று பரபரப்பாக பயணிக்கிறது.
புதிது புதிதாக புதுக் களங்களைக் கொண்டு கதை உருவாக்குபவர் பிறப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி தான்.
நான் ரொம்ப ரசித்த வாசித்த நாவல்.
10 September, 2026
OTT : Netflix
படம் பெயர் : Newton's 3rd law
இயக்குநர் : ராஜேஷ் கர்னா
மொழி தெலுங்கு. தமிழிலும் டப்பிங் உண்டு.
முக்கிய கதாபாத்திரங்கள்: சுமந்த், ஜெகதி பாபு, ட்ரிநாத் வர்மா, ரவி வர்மா, நேகா பத்தன் ஷெல்லி கிஷோர்.
கல்லூரியில நியூட்டனின் மூன்றாம் விதி படித்த ஞாபகம் இருக்குதா?
Every action has an equal and opposite reaction.
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.
அது தான் கதையின் ஒரு வரி.
கர்மா என்று சொல்கிறோம். அது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான வினையை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்துவது. ஒரு காலத்தில் தெய்வம் நின்று கொல்லும் என்றார்கள். இப்போ அப்படி இல்லை. நம் கண் எதிரே வினை புரிந்தவர்கள் அதன் பலனை அனுபவிப்பதை பார்க்கிறோம்.
இந்த கருத்துத் தான் படமெடுக்க வைத்திருக்கும். நன்றாக வாழ்ந்த குடும்பம் ஒன்று தங்கள் நகைக் கடை ஒன்று திருட்டுப் போனதால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறது. குடும்பத் தலைவன் இந்த துயரத்தில் குடியில் மூழ்கி விடுகிறார். தாய் குடும்பப் பாரம் தூக்கிச் சுமக்க செவிலியாகப் பணிக்குச் செல்கிறாள். தங்கள் ஒரே மகனை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் எனப் பாடுபட அவனோ தன் தாயையும் தந்தையையும் கடனில்லா சுபிட்ச வாழ்வு வாழ வைக்கத் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறான்.
காவல் துறை அதிகாரியாக வரும் சுமந்த் கட்டுடலுடன் கூட திருத்தமான முகத்துடன் அந்தக் கதாபாத்திரத்தின் குணநலன் பிரதிபலிக்க தோதாக வருகிறார்.
மகனாக கல்லூரி மாணவனாக வரும் ட்ரிநாத் வர்மா இள வயதின் துடிப்பை , வேகத்தை, அன்பும் அராஜகமும் கலந்த அந்த வயதின் வெளிப்பாட்டை சிறப்புறக் காட்டுகிறார்.
யதார்த்தம் உணர்ந்து நடிக்கிறாரே ஷெல்லி கிஷோர் என்று தேடிப் பார்த்தால் "தங்க மீன்கள்" படத்தில் நடித்திருக்கிறார். 2006 இல் கேரளா அரசு தொலைக்காட்சி விருது வாங்கி இருக்கிறார்.
மகன் தேர்ந்தெடுத்த தவறான வழியில் குடும்ப நிலை உயர்ந்ததா?? தன் தாய் தந்தையை சந்தோஷமாக வைத்திருக்க முடிந்ததா ? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். தவற விடக் கூடாத சிறந்த படம்.
த்ரில்லர் படங்கள் எடுப்பதில் மலையாளமும் தெலுங்கும் போட்டி போட்டு முன்னேறும் போது நாம் தமிழில் மட்டும் ஏன் இன்னும் பொட்டு வெடி வெடித்துக் கொண்டு இருக்கிறோம்.
08 September, 2026
நான் பொதுவாக அரசியல் பேசுவதில்லை. ஆனால் ஓரளவு அரசியல் தெரியும். என் தனிப்பட்ட கருத்தை நண்பர்களிடம் தனியாகப் பகிர்ந்து கொள்வேன்.
எந்தக் கட்சியின் கண் மூடித் தனமான தீவிர ஆதரவாளரும் இல்லை நான். கலைஞர் காலத்தில் அவர் பேசும் தமிழ் , வயதான காலத்திலும் அவருடையதான கடும் உழைப்பு பிடிக்கும். ஆனாலும் செல்வி ஜெ உடனான மோதலில் அவருடைய செயல்பாடு ரொம்ப அதிருப்தியைக் கொடுத்தது. எங்கள் வீட்டுக்குள்ளேயே எதிரெதிர் அணியாக நிறைய வாக்குவாதங்களைக் கொண்டு வந்தது.
ஆனால் திரு ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியேற்ற பின் விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே குறியாக முன்னேறியது ரொம்பப் பிடித்திருந்தது . எவ்வளவோ நல்லது செய்தும் அவரது தொகுதியில் தோற்கடிக்கப் பட்டது மன உளைச்சலைத் தந்தது.
தற்போதைய சூழல் எல்லார் மேலும் அதிருப்தியைத் தருகிறது. பாவப்பட்ட பொது ஜனங்களுக்கு நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையைப் போக்குகிறது்
ஒரு சாரார் கூச்சலிடுவதும். அந்தச் சத்தத்தை மீறி பேசுபவர் பேசுவதும், தனது கை அசைவுகளாலேயே கூச்சலிடுபவர்களை மேலும் கூச்சலிட வைப்பதும் அயர்வைத் தருகிறது. ஒரு விதமான எதிர் மறை வைப்ரேஷன் பரவும். அது நல்லதில்லை. நாட்டுக்கும் தனிப்பட்ட மனிதர்களின் உடல் நலத்துக்கும்.
இது வரை நடந்ததைக் கூட அப்பாவி பொது ஜனம் அனுபவமின்மை என மறந்து போக வேண்டுமென்றால் ஒழுங்கைக் காக்க வேண்டியவர் கையறு நிலையில் அமர்ந்திருக்காமல் தலையிட வேண்டியது அத்தியாவசியம். வெளி நடப்பு என்பது நாகரீகமான முறையில் காட்டும் எதிர்ப்பு. பேசும் அத்தனை பேருமே கண்ணியம் காக்க வேண்டியது அத்தியாவசியம். அரசியல் மாற்றம் வேண்டும் என்று களமிறங்கிய 30+ 40+ காரர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடக் கூடாது.
இது தவிர்க்க முடியாமல் வந்த அரசியல் பதிவு தான்.
07 September, 2026
#நாவல் அறிமுகம் #கருணைநதி
நாவலின் பெயர் : கருணை நதி
ஆசிரியர் : மிதையா கானவி
பதிப்பகம் : புக் வைப்
விலை. : 180 ரூபாய்
நூலாசிரியர் போர்க்களத்தில் கோரமான யுத்தத்தை நேரில் கண்டு , களத்தில் காயமடைந்து, உயிர் தப்பிய நேரடி சாட்சியம் .
கதை இலங்கைப் போரின் போது மக்கள் பட்ட அவதிகளை சொல்கிறது. சொந்த வீடு விட்டு, நாடு விட்டு , தான் சேர்த்த அத்தனை செல்வங்களையும் இழந்து புலம்பெயர்வது பெரும் வலி. அதை விடக் கொடுமை போர் நடக்கும் இடங்களில் போராடிக் கொண்டே உயிர் வாழ்வது.
ஆனால் அந்தத் தளத்திலும் அழகான ஒரு காதலை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். திவா 17 5 2009 வரை வன்னியிலிருந்து பின் இடம் பெயர்ந்து வவுனியா புனர்வாழ்வு மையத்தில் தஞ்சமடைந்தவன்.
மையத்தில் அவர்களை மாடுகள் போல் அடைத்து வைத்திருந்ததாகவும் நம் நாட்டில் மாடுகளுக்கு கூட அதைவிட அதிக சுதந்திரம் இருந்ததாகவும் எரிச்சல் அடைகிறான். போரில் தப்பி வந்து முகாமில் இருந்த சிலர் நோய்வாய்ப்பட்டும் இறக்கிறார்கள். படுத்துறங்கவோ உடைமாற்றவோ தனியிடம் எவருக்குமில்லை. ஒவ்வொரு வேளை உணவுக்கும் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது. கொஞ்சம் சமயம் தப்பிச் சென்றாலும் உணவு இல்லாமல் தவிக்க வேண்டி வந்தது.
உணவு திண்டாட்டம் இப்படியானால் குடிப்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடான இடத்தில் குளிப்பது எப்படி . அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கே போராட்டம் . இதுதான் போரின் அவல நிலை.
அங்கே ஒழுங்காக வாரப்படாத தலைமுடி, செருப்பில்லாத கால்கள் அழுக்கான ஆடையோடு தான் ஒரு காலத்தில், ஒருதலையாகக் காதலித்த மருத்துவர் சங்கவியை பார்க்கிறார் திவா.
தன் நண்பன் கரன் மூலம் தன் உயிரோடு, பலரையும் காத்த அவள் இருப்பிடத்தை அறிந்து போரில் தான் தாக்கப்பட்டது, தனக்கு சங்கவி மருத்துவ உதவி செய்தது, காக்க முற்படும்போது அவளுடன் பணிபுரிந்த மருத்துவர் குண்டடிப்பட்டு இறந்தது எல்லாம் விளக்கமாக எழுதி கடிதம் போடுகிறான்.
போரின் வலிமிகு தருணங்களை வாசிக்க வாசிக்கப் பதை பதைத்து போகிறது நெஞ்சம் . ஆனால் அந்த கடிதம் சங்கவியின் மனநிலையை மாற்றி தன் அத்தியாவசிய கடமை என்ன என்று உணரச் செய்கிறது . கடிதம் எழுதியது யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே சங்கவியின் மருத்துவத் தொழிலுக்கு உதவி செய்கிறான் திவா.
ஒரு முறை காதலைச் சொல்லத் தயங்கி இழந்த தன் காதலியை மறுபடியும் இழந்து விடக்கூடாது என்று பயத்தால் வந்த தயக்கம் அவன் காதலைச் சொல்ல தடை போட்டுக்கொண்டே இருக்கிறது.
கடமையைக் காதலிக்கும் சங்கவியுடன் இடையில் வந்த தன் காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? முகாமிலேயே இருந்தார்களா? புலம் பெயர்ந்து வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்களா? எனப் பலப்பல கேள்விகள் எழலாம். "கருணை நதி " அதற்கான பதிலைத் தரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.
06 September, 2026
உள்ளம் நொறுங்காமலிருக்க
உடைத்துப் பேசுவோம் பாகம் ஒண்ணு.
பெண்கள் வேலைக்கு போகணும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேணும். பெண்கள் முன்னேறணும்னு பேசும் போதெல்லாம் சந்தோஷமாத் தான் இருக்குது. ஆனால் அந்தப் பெண்கள் மாதாந்தர நோவினால் படும் அவஸ்தைகளை நினைத்துப் பார்க்கிறோமா? இப்போ ஒரு சில பதிவுகளைப் பார்த்ததால் எனக்கும் எழுதத் தோன்றியது.
ஆரம்ப காலங்களில் பெண்கள் பழைய துணியைப் பயன்படுத்தினார்கள். அது எந்த அளவுக்கு சுகாதாரமாய் இருந்திருக்கும்னு இப்போ நினைச்சாலே நடுங்குது. (நாப்கின் கண்டு பிடிச்ச மகராசனை கை எடுத்து கும்பிடணும். ) அந்தத் துணியை நம்ம சொந்த வீடே ஆனாலும் மறைவாய் பிறர் கண்ணில் படாமல் அலசிக் காயப் போட அவ்வளவு சிரமப்படணும். பதிமூணு பதினாலு வயதில் தண்ணீரை ஊற்றி காலால் தேய்த்து அதன் பின் சோப்பு போட்டு துவைப்பது மனதைக் கல்லாக்கும் முதல் கட்டம். துவைத்தாலும் கறையின் வெளிவரி மறையாமல் தான் இருக்கும். காற்றடிக்கும் போது வரும் மெல்லிய நாற்றம் உள்ளூர கூச வைக்கும். சகோதரர்களோடு பிறந்த பிள்ளைகளை, பொதுவான கழிவறை கொண்ட காம்ப்பௌண்ட் வீடுகளில் வாழ்ந்த பெண் பிள்ளைகளின் நிலை நினைத்தால் கண்ணில் இரத்தமே வரும்.
அந்த அழுத்தமான துணி பட்டு தொடையின் உள் பக்கம் சில நேரம் ரணமாகிப் போகும். ஒரு சிலருக்கு அந்த நேரத்தில் தொடை ஒன்றோடொன்று உரசுவதால் தீப்பட்டது போல் எரியும்.
இந்தக் கஷ்டங்கள் தான் காரணமோ பல பெண் குழந்தைகள் தாம் பெரிய பொண் ஆகி விட்டோம் என்று அறிந்ததும் அழும். காரணம் கேட்டால் தெரியாது. இப்போ பரவாயில்லை. ஓரளவு விளம்பரங்கள் பார்த்து விஷய ஞானம் கொஞ்சம் இருக்குது. அதெல்லாம் தான் மாறிடுச்சே அப்புறம் ஏன் பதிவு?
இன்னும் பேச வேண்டிய விஷயங்கள் , அனுசரணையோடு பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏகமாய் இருக்குது. சில பெண் குழந்தைகளுக்கு முதல் முறை இரத்த கசிவு வந்த பிறகு சில மாதங்கள் வராது. அதன் பின் தொடர்ந்து வரத் தொடங்கும். ஆனால் ஒரு சிலருக்கு அப்போதே மாதா மாதம் வரத் தொடங்கி விடும். பன்னிரெண்டு வயது தொடங்கி ( இப்போது பத்து வயதுக் குழந்தைகளே மெச்சுவர்ட் ஆகி விடும் பரிதாபம்) கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் விக்ரமாதித்தன் வேதாளத்தைச் சுமந்தது போல் இந்த துயரத்தைச் சுமக்க வேண்டும்.
ஆனால் சில குழந்தைகளுக்கு சில மாதங்கள் வராமலே இருந்து பின் அதிகமாக இரத்தப் போக்கு இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு மாதம் தோறும் முதல் அல்லது இரண்டாம் நாள் கடுமையான வயிற்று வலி இருக்கும். மாதா மாதம் அன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்து வந்த பின் ஆசிரியர்களிடம் திட்டும் வாங்கிக் கட்டுவாள்.
சிலருக்கு முந்தின மாதம் வந்த தேதியில் இருந்து 28, 29, 30 இவற்றில் ஏதாவது ஒரு முறையில் மாதம் தோறும் வரும். அப்படி வந்தால் சிறப்பு. அப்படி இல்லாமல் தாறுமாறாக வந்தாலோ அதிகப்படியான அடி வயிற்று வலி வந்தாலோ தாமதிக்காமல் பெண் மருத்துவரை அணுகுங்கள். நீர்க்கட்டிப் பிரச்னைகளோ அல்லது வேறு ஏதாவது பிரச்னைகளோ இருந்தால் ஆரம்பத்திலேயே , அல்லது திருமணம் செய்து கொடுக்கும் முன்பாவது சரி செய்து விட வேண்டும். திருமணமாகி குழந்தை பிறக்காமல் தவிக்கும் பல பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது.
மனித குலம் தழைக்க இந்த வேதனை கடக்கும் பெண்களுக்கு வீட்டிலோ சமுதாயத்திலோ சுய மரியாதையாவது தரப்படுமா என்றால் அதுவும் இல்லை.
ஏன் பெண் குழந்தைகளுக்கு மட்டும் தான் பிரச்னையா ஆண் குழந்தைகளுக்கு இல்லையா என்றால் அவர்களுக்கும் வேறு விதமான பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையும் பேசுவோம். பேசத் தோன்றும் போதெல்லாம் எழுதுகிறேன். நீங்களும் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
02 September, 2026
நாவல் : பஃறுளி
ஆசிரியர் : நர்சிம்
மிளிர் பதிப்பகம் .
விலை ரூ 300
முதல் பதிப்பு : மே 2024
" குமரியில் இருந்து மதுரை நோக்கிப் பாய்ந்த நதி " னு சிலப்பதிகாரத்துல வரும் ஒரு நதியின் பெயர் தான் பஃறுளி. ஆம். அதாவது எல்லா நதிகளும் கடலை நோக்கிப் போகும் போது கடலிலிருந்து நகரத்தை நோக்கி ஒரு நதி ஓடி வந்தால் எத்தகைய விநோதமோ அதைப் போன்றது கதையின் கரு.
2007 இல் எழுதத் தொடங்கி இருக்கிறார் நர்சிம். சிறுகதை, நாவல் , கவிதை என மூன்று தளங்களிலும் எழுதக் கூடியவர்களுள் ஒருவர் இவர். மனித உறவுகளின் எழுத்தாளர் என்று எழுத்தாளர் பிரபஞ்சனால் பாராட்டப்பட்டவர் . இவர் எழுதிய "அய்யனார் கம்மா" என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு பெட்னா உட்பட பல விருதுகளை வென்று உள்ளது சிறுகதைகளிலேயே காதலை அழகுபடச் சொல்லும் ஆசிரியருக்கு பஃறுளி நாவல் ஒரு பெரும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது
ஆசிரியர் கோவலன் கண்ணகியை விட்டுச் சென்று மாதவியுடன் வாழ்ந்து பின் திரும்பி வந்தது போல கண்ணகி சென்றிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற சிந்தனையில் எழுந்தது இந்த கதை என்கிறார் ஆசிரியர் .
மாயக்கண்ணன், கோமதி இருவரும் புதிதாகத் திருமணமான இளம் தம்பதிகள். ஆசிரியர்கள். திருமணத்துக்கு பின் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்கள். அது மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளி. மதுரைக்காரரான நர்ஸிமுக்கு மதுரை தமிழில் கொஞ்சி விளையாட ஏற்ற தளம்.
காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மதுரை மக்கள் . நட்பும் அன்பும் விருந்தோம்பலும் அவர்கள் பேச்சிலேயே நடம் புரியும். மாயக்கண்ணனும் , அவர் தோழர்களும், முக்கிய உயிர்த்தோழனான தேவாவும் பேசும் இடங்கள் அவ்வளவு ரசிப்புக்குரியதாய் இருக்கும். கம்யூனிசத்தில் ஆர்வமுள்ள தோழர்களின் உரையாடலும் , கதை நடந்த காலத்தைக் குறிக்க தோழர் லீலாவதியின் மரணத்தை பேச்சின் நடுவில் கொண்டு வந்ததும் சிறப்பு.
அந்தப் பள்ளி வளர்ச்சியின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் எம் கே என்னும் மாயக்கண்ணன் தான் வரவேண்டிய உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கு மாதவன் என்பவர் வருகிறார் என்பதாலேயே எதிரியாக பாவிக்கிறார். மாதவன், தன் மனைவியிடம் முகம் மலர பேசும் பொழுது மாயக்கண்ணனுக்கு பெரும் வில்லனாகவே மாறிவிடுகிறார்.
கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவது ஒரு சில அனுகூலங்கள் இருந்தாலும் பல நேரங்களில் இடைஞ்சலாகத் தான் இருக்கும். பணி நேர செயல்பாடுகளின் தாக்கம் வீட்டிலும் தொடரும்.
நர்சிம்மின் கதைகளில் எப்பொழுதுமே நாம் தெரிந்து கொள்ள ஒரு புது விஷயம் இருக்கும். இரும்பு ஸ்டாண்டில் மாட்டை நிறுத்தி அசை விடாமல் வைத்து மருத்துவர் வைத்தியம் பார்க்கும் விஷயம் இந்த நாவலில் எனக்கு பதாய் இருந்தது.
" அடுத்து என்ன கேட்க போகிறாய் எனும் நோக்கில் நிமிர்ந்து நின்றது அவனை சலனமற்று இருக்கச் செய்தது." கோமதியை சந்தேக வார்த்தைகளால் கொல்லும் போது அவள் நேர் கொண்ட பார்வை அவனை மௌனமாக்குகிறது. பொதுவாக ஒருவர் மேல் சந்தேகம் வர பெரிதாக காரணம் ஒன்றும் இராது. அதை அலட்சியப்படுத்தினால் ஒன்றுமில்லாமல் போகக்கூடிய விஷயம் தான் நடந்திருக்கும். அதை பெரிதுபடுத்துவதாலேயே சில நேரங்களில் உண்மையாகி விடும் வாய்ப்புண்டு. மாதவனிடம் கோமதி இயல்பாக பேசுவது கூட மாயக்கண்ணனுக்கு விகல்பமாகத் தோன்றி அவன் மனதின் அமைதியை குறைக்கிறது . மொத்த வீட்டின் அமைதியையே அழிக்கிறது.
அன்பைக் காட்டுவது போல் அக்கரை இருப்பது போல் காட்டி பெண்ணைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் தந்திரம் தான் மாயக் கண்ணன் பயன்படுத்துவது.
"நம்மளப் பிடிக்காமப் போயிடுமோங்கிறத விட இன்னொருத்தர பிடிச்சிறக் கூடாதுன்ற பயம் தான மதி மருள வைக்கிது" // ஆண் மனதை பெண்களுக்கு புரிய வைக்கும் இது போன்ற வரிகள் பல உண்டு.
"நீயெல்லாம் ராஜா மாணிக்க இருந்தா மட்டும் போதாதுடா ராஜா மாணிக்க யோசனையும் பண்ணணும் . சிலத பத்தியெல்லாம் யோசனை கூட பண்ணக் கூடாது"
"தகரத்துல சேர் செஞ்சு பளபளன்னு இருக்கேன்னு சொல்லுறதா தேக்குல உட்கார்ந்தவன் போவியா"
அதே போல தன்னம்பிக்கை அற்ற ஆண்களுக்கு சரியான அறிவுரை சொல்லும் இது போன்ற வரிகளும் உண்டு.
"யாரும் யாரிடமும் தன்னை குற்றவாளியாகக் காட்டிக் கொள்ள தயாராக இல்லை எல்லோருக்கும் ஒரு நியாயம்" இன்றைய நடைமுறையில் மனித மனம் கொண்டுள்ள மாற்றத்தை எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளாத மன நிலையையும் நடுவே காட்டுகிறார்.
எம். கே ( மாயக் கண்ணன்) தன் நண்பனின் கல்யாண வேலையா சுத்தும் போது கோமதி அவளுக்குப் பிடிச்சதைச் செய்யலாம்னு சொல்ற லிஸ்ட்ல "நினைச்ச நேரம் கழிவறை போகலாம்' னு எப்படி சேர்த்தீங்க நர்சிம். காலை நேர அவசர வேளை(லை)யில் இந்தக் கழிவறைப் பிரச்னையால் உடல் நலம் குன்றிய பெண்கள் எத்தனை பேர் தெரியுமா. அதிகம் பேசப்படாத ஒரு பிரச்னையை மெல்லத் தொட்டு கடந்து விட்டீர்கள்.
யதார்த்தமான வாழ்க்கையைச் சொல்லி நகர்ந்து செல்லும் கதை. மதுரையின் கள்ளழகர் ஆற்றிலிறங்கும் வைபவத்தை நேரிலிருந்து பார்த்தது போல் உணர வைக்கும் கதை.
Subscribe to:
Posts (Atom)
