15 March, 2026
நகுலனின் நாலு கட்டு வீடு - குமரி உத்ரா
" நகுலனின் நாலு கட்டு வீடு"
ஆசிரியர் : குமரி உத்ரா.
வேரல் பதிப்பகம் .
விலை : 140 ரூபாய் .
முதல் பதிப்பு : ஜனவரி 2026 .
இந்த சிறுகதை தொகுப்பிற்கு அழகான முன்னுரை கொடுத்திருக்கிறார் நட. சிவகுமார். இவர் குமரி உத்ராவின் கதைகள் மருத நிலப்பரப்புக்குள் உலாவும் உதிரி கதை மாந்தர்களைச் சுமந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் போல் நகருகிறது என்கிறார்.
தன் 14 வயதுக்குள் தான் பயணப்பட்ட பாதைகளில், வழித்தடங்களில் தன் கண்ணில் பட்ட காட்சிகளையும், செவி வழி கேட்ட நிகழ்வுகளையும் , தன் அனுபவங்களாகவும் கதைகளாகவும் லேசாக தொட்டு விட்டு சென்றதாக சொல்கிறார் உத்ரா.
இது 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு . முதல் கதை அரளிப்பூ. வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதை. உழைப்பாளி மேனகா. எல்லோரும் அவளை மேனா என்றே அழைக்கிறார்கள். அதனால் மேனகா என முழுமையாக அழைக்கும் சின்னப் பண்ணை அழகுவை அவளுக்கு ரொம்ப பிடிக்கிறது. மேனகாவின் துள்ளலான வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது கதை . வீட்டில் வளரும் அரளிச் செடியைப் பற்றி சொல்லும் போது அரளிச்செடியின் வேர் மருந்தாக பயன்படுவதைச் சொல்லி " கெட்டது 10 இருந்தா நல்லது இரண்டு இருக்கும். நல்லதை மட்டும் நாம பயன்படுத்தணும் என்கிறார் வைத்தியர். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் தானே. அரளிச்செடி ஒரு தவறான கதை முடிவுக்கு நம்மை அழைத்துச் சென்றாலும், நேர்மறையாகவே முடித்திருக்கிறது.
"முட்டை கிறுக்கி" இரண்டாவது கதை. பாளை தெற்கு பஜார் சர்ச்சின் வாசலில் இருந்து ஸ்வட்டர் பின்னும் ஒரு வட இந்திய பெண் நினைவுக்கு வந்தார். அம்மா இல்லாத சமயம் சோறும் குழம்பும் இரண்டு வகை காய்கறியுடன் கொடுக்கும் மகளுக்கு வாழையிலை போட்டு சாப்பாடு கொடுக்க வெகு நாள் ஆசை. நாம மட்டும் சுட சுட தோசை சாப்பிடுகிறோம் ஆனால் ராப்பாடிக்கு மட்டும் கண்ணில் படாமல் வைத்து விடுகிறோம் அது தவறு என்று உட்கார வைத்து தோசை சுட்டு போட்ட ஒரு அண்ணன் இதை வாசிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தார்.
"கல்யாண குழியான்" என்றொரு கதை. சந்திரி, பஷீர் என்ற இரண்டு குழந்தைகளின் கல்மிஷமில்லா அன்பு. பஷீரின் தந்தை சில மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருக்க சந்திரி சொன்னதைக் கேட்டு மதம் தாண்டி கோயிலில் இரு குழந்தைகளும் பிரார்த்திப்பதை சொல்லும்போது இப்படி இருக்கும் குழந்தைகள் தானே வளர்ந்த பிறகு மதத்தின் பெயரால் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்கிறார்கள் என்று தோன்றியது.
" நூல் சேலை" தாய் இறந்த செய்தி கேட்ட இளைய மகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது அவளை அணைத்துப் பிடித்த அக்காவின் அன்பை சொல்லும் கதை. " இளையவளாய் பிறந்த என் சின்ன மகள் ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள் என்ற பெருமை முகம் அவளிடம் தெரிந்தது." இந்த வரி என்னைப் போன்ற தமக்கை இல்லா பெண்களுக்கும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தும். " அன்று பிடித்தது போல அவள் உடம்பு இப்போது கைகளில் இல்லை எனப் புரிந்தது " உத்ராவின் எழுத்து வன்மைக்கு ஒரு சான்று இந்த வரி.
" மஞ்சாடி முத்துக்கள்" தன் வீட்டுக்கு வேலை செய்ய வந்த தேனம்மையின் தன் வயதுப் பேத்தி மல்லிகா வளர்ந்த பின் அதே ஏழ்மை நிலையில் பார்த்ததைச் சொல்லும் கதை . " அவள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இரண்டாம் முறை சந்திக்க வாய்க்கும் போது பார்க்காமலே விலகிச் செல்லும் பாங்கு . உணர்வுபூர்வமான கதை.
" வாயில் வெற்றிலையை மென்று கன்னம் ஓரமாக ஒதுக்கி வைத்து உப்பிய கன்னத்துடன் கை வீசி பெண்ணைப் போல நடக்கும் ராஜப்பனின் தாய்மைக் கருவாக்கி வரைந்த கதை வவுலாடி . ஒன்றிரண்டு கதைகள் பலமுறை சொல்லப்பட்ட கருக்கள் கீட்சிகளைச் சொல்கின்றன என்ற சின்ன குறையைத் தவிர்க்கலாம் .
புத்தகம் விரும்புவோர் கீழ்க்கண்ட என்னை தொடர்பு கொள்ளவும்.
குமரி உத்ரா : 94865 56166
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!