Bio Data !!

19 January, 2010

ஜில்லுனு ஒரு காதல்!

காலனி ஸ்டாப்பில் நிஷா, தூரத்தில் பஸ் பார்த்ததும் அவள் ஒரு இனம் புரியாத அவஸ்தையை உணர்ந்தாள். அவளறியாமல் கை சேலையை ஒரு நொடி சரி செய்தது. அவள் மாமன் மகன் அதில் தான் வந்து கொண்டு இருக்கிறான். வரும் போதே பஸ்சின் படிகளில் செந்திலைப் பார்த்து விட்டாள்.
செந்தில் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறான். அது வரை மாமாவுக்கு சொந்தமான பஸ்சில் கண்டக்டர் வேலை செய்து கொண்டு இருக்கிறான். அந்த வேலையில் இருக்கிறதுக்கு அது மட்டும் காரணம் இல்லை. மாமாவுக்கு அழகான பெண் இருக்கு. அதுவும் காரணம்.இதோ தூரத்தில் நீல தேவதையாக நின்று கொண்டு இருக்கிறது. பஸ்ல அவள் ஏற வேண்டிய இடம் வரும் போது அவள் கண்ல படற மாதிரி நிற்பான். அப்படியும் விழி அம்பு பாயலன்னா "டிக்கெட், டிக்கெட்" னு சத்தம் கொடுப்பான் பாய்ந்து விடும். ஒரு புன்னகையும் போனசாக் கிடைக்கும். நிஷா வாயாடி, அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்து வாயடைக்க வைக்கிற ரகம். செந்திலின் முன் மட்டும் முழுவதுமாய் மாறிப் போவாள். வாய் வார்த்தையா
" ஐ லவ் யு " சொல்லிக்கலன்னாக் கூட ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மற்றவர் மேல் வைச்சிருக்கிற அன்பும் அக்கறையும் தெரியும். டிரைவருக்கும் செந்திலின் காதல் தெரியும். அவன் தேடித் தேடி கொண்டு தந்த காதல் பாடல்களை சமயம் பார்த்து காசெட்டில் போடுவார். நிஷா தரும் பொருள் நிறைந்த புன்னகைக்காக என்ன வேணா செய்யலாம்னு அப்ப தோணும் செந்திலுக்கு. நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இப்போ ரெண்டு நாளாத்தான் அவள் நிமிர்வதும் இல்லை, புன்னகைப்பதுவும் இல்லை. எதிலயும் கவனம் செலுத்த முடியறதில்ல. இன்று எப்படியும் காரணத்தைக் கேட்டு விட வேண்டும். நிஷா இறங்கத் தயாராக,
"நிஷாஏன் ரெண்டு நாளா டல்லா இருக்கிற ?"
"ஒண்ணுமில்லையே நல்லாத்தான் இருக்கிறேன்."
அதற்குள் ஸ்டாப் வந்து விட படிகளில் இருந்து செந்தில் கீழே இறங்கி வழி விட்டான். இறங்கி நடந்த நிஷா கொஞ்சம் தூரம் சென்றதும் திரும்பி கூர்மையாகப் பார்த்தாள். என்ன சொன்னது அந்தப் பார்வை?
மறு நாளிலிருந்து அவள் வரவே இல்லை. மாமா வீட்டுக்குப் போனாலும் கண்ல படறதில்லை. துடித்துப் போனான் செந்தில். வேறு ஜாதி, வேறு மதம்னு எந்தத் தடையுமில்லாமல் தன் காதல் சுகமாய் சுபம் வரை வரும்னு நினைத்திருந்தான். நினைப்பில் மண். தனியாக பேச சந்தர்ப்பமே கொடுப்பதில்லை.
இரண்டு நாள் வேலைக்கு போகவில்லை லீவும் சொல்லவில்லை. தன்னைப் பற்றி எப்படியும் விசாரித்துக் கொண்டு வருவாள்னு நினைத்தான். வரவில்லை. மேலும் ஒரு வாரம் போனது.
"அத்தை"
பால் வார்த்தது குரல். பட்டினிப் போராட்டம் முடித்து முதல் சொட்டு ஜூஸ் தொண்டையில் இறங்கும் போது வரும் உணர்வு. "நல்லவேளை வீட்டில் யாரும் இல்லை." மனதுக்குள் நினைத்தபடியே
"வா நிஷா"
"அத்தை இல்ல?"
"முதல்ல உள்ள வா. இப்ப வந்துருவாங்க."
"நீங்க ஏன் இப்படி இருக்கீங்க."
"எப்படி"
"ஷேவ் பண்ணாம கறுத்து மெலிஞ்சு"
" ஏன்னு உனக்குத் தெரியாதா?"
கொஞ்ச நேரம் மௌனம். "என்னால முடியல நிஷா. காரணம் புரியாம தலை வெடிச்சுடும் போலிருக்கு. என்ன தப்பு பண்ணி இருந்தாலும் சொல்லு மாற்றிக்கறேன்“........கனத்த மௌனம்.
"வீட்டில ஏதும் சொன்னாங்களா?"
.......
"யாரையாவது லவ் பண்றியா?" உதடுகள் துடிக்க நிமிர்ந்தாள்." சொல்லு நிஷா, நடத்திக் கொடுக்க வேண்டியது ஏன் பொறுப்பு."
கட்டிலில் அவன் பக்கத்தில் ரெண்டு கைகளாலும் முகத்தை மூடியபடி உட்கார்ந்தாள் செந்தில் அவள் தோளை அணைத்து லேசாகத் தட்டியபடி
"சொல்லும்மா, பயப்படாதே."
உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள். " எனக்கு பயம்மா இருக்கு."
இப்பொழுது செந்தில் பயப்பட ஆரம்பித்தான்.
"என்ன பயமா இருக்கு."
"ம்ம்கூம், சொல்ல மாட்டேன்."
"நிஷா, இங்கே பாரு. உனக்கு பேசத் தெரிஞ்ச நாளிலிருந்து நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா இருக்கோம். என் கிட்ட உனக்கு என்ன தயக்கம்“
“சொல்லு."
"சொல்லுடா, என்ன பயமா இருக்கு."
"அத்தை எப்போ வருவாங்க."
"சாயங்காலம் ஆகும் நீ சொல்லு."
தயங்கி தயங்கிச் சொன்னாள் "போன வாரம் தான் குளிக்கும் போது கவனிச்சேன். ஒரு கட்டி போல இருக்கு."
அப்பாடா எந்த ஹீரோ பயலும் வில்லனா வரலை. "எங்கே"
தலையை குனிந்த படியே கையை மெல்ல மார்பின் பக்கம் கொண்டு போனாள். "எனக்கு கான்செர் கட்டியோனு பயமா இருக்கு. அம்மா சும்மாவே கத்தும். வேணாம் மாமா நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. நான் இப்படியே இருந்திறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
"அட மண்டு. இதுக்குத்தானா? விஞ்ஞானம் இப்போ எவ்வளவு வளர்ந்திடுச்சு. எந்த வியாதியையும் ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கிற வசதி வந்தாச்சு. மார்பகக் கட்டியை டெஸ்ட் பண்ண பெண்கள் மட்டுமே உள்ள சென்டர் இருக்கு. இது ஒரு விஷயமே இல்ல. நாளைக்கு அம்மாவோட வா. ஜெம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்.
மறு நாள் டெஸ்ட் ரிசல்ட் பார்த்த டாக்டர் அவனைப் பார்த்து,"நீங்க யாரு?"
"நான் தான் அவளை கட்டிக்கப் போறவன்."
மலர்ந்த டாக்டர் " கல்யாணமான பிறகு வர்ற பிரச்சினைகளுக்கே பயந்து பின் வாங்கிற உலகத்தில, ஏன் வம்புனு நினைக்காம நீ தைரியமா இருக்கிற. என்ன சொல்லி உன்னை பாராட்டுறதுன்னு தெரியல. பயப்படற மாதிரி எதுவும் இல்லை. ஒரு கோர்ஸ் மருந்து எடுத்தா சரியாயிடும்.”கொடுக்க வேண்டிய மருந்துப் பட்டியலை கொடுத்த டாக்டர் அந்த ரெண்டு பேரையும்
வாசல் வரை வந்து வழியனுப்புவதை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அங்கு இருந்தவர்கள். அது ஒரு உயர்ந்த மனதுக்கு கொடுக்கும் மரியாதை என்பதை உணராமல்.

14 comments:

  1. உங்கள் சிறுகதையை படித்துவிட்டேன். நாய்க்குட்டி மனசு. விடலைகளின் காதல் போன்று துவங்கினாலும், நிஜமான காதலாய் பயணித்து, நேர்மையாக வாழ்வின் அர்த்தங்களை- அதாவது அன்பினை சொன்ன சிறந்த கதை.

    ReplyDelete
  2. நன்றி தமிழ், எழுத்து பழக நல்ல தளம் வலைப்பூ. உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்கள் எழுத்துக்கு உரம் சேர்க்குது.

    ReplyDelete
  3. நன்றி அண்ணாமலையான், பொங்கல் செய்தீங்களா?

    ReplyDelete
  4. ஒஹோ.. கிளைமாக்ஸ் அருமையா இருக்கு :)

    ReplyDelete
  5. ஸ்வீட் ஸ்டோரி. சுபமான் முடிவாநு பாக்க வேக வேஹமா படித்தேன். :-)

    ReplyDelete
  6. அழகான கதை. அதற்கு மேல அருமையான கருத்து. சூப்பர்.

    சின்ன வேண்டுகோள். பத்திகளுக்கு நடுவில் இன்னும் ஒரு வரி இடைவெளி விட்டால், படிக்க இன்னும் எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  7. சிறுகதை போட்டியில் (http://simpleblabla.blogspot.com/2010/01/33.html)
    முதல் பரிசுக்கு இக்கதை தேர்வானதற்கு மிக்க மகிழ்ச்சி..
    ரொம்ப சந்தோசம்... இது உங்களுக்கு மேலும் பல வெற்றி பெற வழி செய்யும்
    என நம்புகிறேன்.. இனி எல்லாம் நலமே..
    ப்ரியங்களுடன்
    ~ சிவாஜி சங்கர் ~

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!