Bio Data !!

09 August, 2011

சிவசு வாத்தியார் ‍‍ நிறைவு பாகம்

(அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்கு  மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.)

பள்ளிக்குச் சென்றதும் மகன் அவரைக் கண்டு ஓடி வந்தான். " அப்பா , எங்களுக்கு ஒரு புது சார் வந்து இருக்காங்க. அவர் உங்கள்ட தான் படிச்சாராம். உங்களை ரொம்ப புகழ்ராருப்பா.எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாங்கப்பா அவரை பார்க்கலாம். "
மகன் பெருமையாக ஓடி சென்று அழைத்து வந்தான். வந்தது ஐயாவின் பழைய மாணவன். "இன்று வரை தன் வாழ்வின் எந்த அடியும் அவரை நினைத்து தான் எடுப்பதாகவும் எந்த இடத்திலும் தவறியதில்லை என்றும், தன்னைப் போல் அவருடைய பல மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் தான் எடுக்கும் வகுப்பு மாணவர்களிடம் அவரை குறிப்பிடத் தவறியதில்லை" என்றும் பேசிக் கொண்டே சென்றார். 

ஆசிரியர் ஒரு வித மயக்க நிலைக்கு போய் விட்டார். தான் எடுக்கும் எந்த முடிவும் தன்னை மட்டும் பாதிப்பதில்லை இன்னும் எத்தனை பேரை?ஓய்வு பெரும் வரை யாவது.  வெளி உலகுக்காக இந்த வாழ்க்கை வாழ்ந்து தான் ஆக வேண்டும். முடிவு எடுத்த பின் மகளை அவசர அவசர மாகப் பார்த்து விட்டு ஊர் போய் சேர்ந்தார். அதன் பின் இருவரும் நடை பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். 

அவரது மனம் சஞ்சலப் படுவதை புரிந்து கொண்ட சந்துரு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொண்டான். அவளைப் பற்றி பிறர் மூலம் பல விஷயங்களை அறிந்து கொண்டு அவளே தன்னிடம் சொன்னது போல் சிவசு ஐயாவைப் பார்க்கும் போதெல்லாம் சொன்னான். தன் மனைவியிடம் வெளிப்படையாக பேசி இருந்தால்  சுலபத்தில் சரி செய்யக் கூடிய விஷயத்தை இடியாப்பச் சிக்கலாக்கினார். அவளிடம் பேசுவதையே முற்றிலுமாக குறைத்துக் கொண்டார். 

சியாமளாவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. பள்ளி விழாவன்று சொன்ன சொல்லுக்காகத்தான் இந்த தண்டனை என்று நினைத்துக் கொண்டாள். அங்கே மேலும் மேலும் அக்னி சேர்ந்து கொண்டே இருப்பதை அவள் அறியாமலே போனாள். அவரது வைராக்கியம் அவள் அறிந்த ஒன்று என்பதால் அவரிடம் பேசிப் பார்க்கும் தைரியம் இல்லாமல் போனது. திரௌபதியின் ஒற்றைச் சிரிப்பு ஒரு இதிகாசத்தையே உருவாக்கியது. இவளது ஒற்றை சொல் இவள் வாழ்வையே பறித்தது. 

 சிவசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதற்கு மேல் பிறருக்காக வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்த பாரம் நெஞ்சில் கருங்கல்லாய் இறங்குகிறது. ஒரு வக்கீலைப் பார்த்து தன் பிரச்சினையை பட்டும் படாமலும் சொல்லி விட்டார்." இப்படியே மிச்ச நாளையும் போக்கி விடலாமே . இந்த வயதில் விவாகரத்து தேவையா" என்ற அவரின் கேள்விக்கு " நான் மட்டும் இந்த வாத்தியார் தொழில் பார்க்காமல் இருந்தால் என்றோ அவளை விட்டு பிரிந்து இருப்பேன். அவளாவது சந்தோஷமாய் இருந்திருப்பாள். என்னைக் கட்டிய பாவத்துக்கு இவ்வளவு நாள் என்னோட இருந்தது போதும். மிச்ச நாளாவது அவள் விருப்பப்படி இருக்கட்டும். சந்துரு சொன்னதெல்லாம் வைச்சு பார்த்தா எந்த வயசிலும் அவளை ஏத்துக்கிடுவான் போலத் தான் தெரியுது. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்களேன்" என்று பரிதாபமாகச் சொன்னதும் வக்கீலும் சம்மதித்து விட்டார்.

சியாமளா வக்கீலிடம் இருந்து வந்த நோட்டீஸ் ஐப் பார்த்து பதறிப் போனாள். ஐயா பேசாமல் இருந்தாலும் மிச்ச நாட்களை அவரைப் பார்த்துக் கொண்டே ஓட்டி விடலாம் என்று இருந்தாள். இது பேரிடி. வருடங்கள் பல கடந்ததால் அவளால் அவரிடம் பேச முடிய வில்லை. தயங்கி தயங்கி அவர் அருகில் போய் பேசுவதற்கு நின்றாலும் அழுகை தான் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவரோ அதற்குள் இடத்தை காலி செய்து விட்டு இருந்தார். இப்படிப்பட்டவர்கள் தன்னைப் போல் வைராக்கியம் யாருக்கு உண்டு என்ற வெட்டி ஜம்பத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு மீதி அனைத்தையும் இழக்கிறார்கள். சியாமளா இந்த பிரச்சினையை யாரிடமும்  கொண்டு செல்வதாய்  இல்லை. நேராக குடும்ப வழக்கு நடக்கும் இடத்திற்கே சென்று என்ன ஆனாலும் தான் அவரை பிரிவதாக இல்லை என்றும் ஆயுள் முடியும் வரை அவருடனே வாழ விரும்புவதாகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். 

அவள் எடுத்த முடிவை பற்றி அறியாமல்கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார் சிவசு  வாத்தியார்.அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம் " நீங்கள் நினைப்பது போல் எனக்கும் சந்துருவுக்கும் எதுவும் இல்லை நான் உங்களுடனே வாழ விரும்புகிறேன் " என்று அவள் சொல்லி விட மாட்டாளா என்று மனதின் ஒரு ஓரம் அவருக்கு முனங்கிக் கொண்டு தான் இருந்தது. 


(முற்றும்)


(இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும். பதிவர் ஒருவரின் விருப்பத்திற்காக மனச் சிக்கலை கொண்டு ஒரு கதை எழுதிப் பார்த்தேன். வெற்றி பெற்றேனா தெரியவில்லை. ஒரு நல்ல செய்தியை சொன்ன நிறைவிருக்கிறது. முடித்து விட்டேன் நாடோடி, நன்றி ) 

20 comments:

  1. சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும்.


    .... so true. The root cause for many problems are miscommunication or lack of proper communication. Thank you, Nadodi for helping her to bring a nice story.

    ReplyDelete
  2. இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும்.//

    மிக சரியாக சொன்னீர்கள்.....

    ReplyDelete
  3. நிறைவு பகுதிக்குதான் வந்திருக்கேன் போல...

    ReplyDelete
  4. ஆமாம் சித்ரா நாம் என்ன நினக்கிறோம் என்பதை சரியாக மற்றவர்க்கு புரிய வைக்காததில் தான் பல பிரச்னைகள்

    ReplyDelete
  5. நன்றி மனோ, இழப்பது சுலபம் பெறுவது மகா கஷ்டம்

    ReplyDelete
  6. நன்றி சௌந்தர், எல்லா பாகங்களையும் படித்து எப்படி இருக்குனு சொல்லுங்களேன்

    ReplyDelete
  7. முழுவதும் புரிந்தால் சுவாரஸ்யம் இல்லை. அதனால் கொஞ்சம் புரிந்தால் தான் நல்லது சிபி

    ReplyDelete
  8. வெளிப்படை பற்றிய உங்கள் இந்த தொடர் பதிவு பல உண்மைகளை தெளிவாக விளக்குகிறது சகோ நன்றி....இருந்தாலும் இது உறவுகளுக்கு சிறிய அளவில் மட்டுமே பயன் படும் என்பது என் தாழ்மையான கருத்து...நன்றி!

    ReplyDelete
  9. நன்றி விக்கி, நான் பல முறை நினைப்பதுண்டு வாழ்க்கையின் தொடக்கத்தில் நமக்கு வழி காட்ட நல்ல நபர்கள் இல்லாததால் காட்டாற்று வெள்ளம் போல் ஓடி விட்டது. இளைய தலைமுறை ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் வெளிப்படையாக இருந்தால், வெளிப்படையாக iruppathai துருப்புச் சீட்டாக பயன்படுத்தாமல் இருந்தால் உண்மையான, போலித்தனம் இல்லாத வாழ்க்கை இறுதி வரை நடத்தலாம் என்ற ஆதங்கம் தான். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கிறேன்

    ReplyDelete
  10. நிறைவான முடிவு என்பது புலப்படுகிறது. உங்கள் முயற்சியில் சிறப்பான முறையில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  11. வார்த்தைகளின் தெரிவு, முந்தைய பாகங்கள் இயல்பாக கணிக்க வைத்திருக்கிறது. அதற்கும் சிறப்பான பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. //வெற்றி பெற்றேனா தெரியவில்லை. ஒரு நல்ல செய்தியை சொன்ன நிறைவிருக்கிறது. //
    ஆத்ம திருப்தியே, அடைந்த வெற்றிதான்.

    ReplyDelete
  13. சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!!!!!!


    இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    ReplyDelete
  14. மிக அழகாகச் கதை சொல்லி இருக்கிறீர்கள்
    நேரத்தில் தைக்காத துணியைப் போல
    ஆரம்பத்திலேயே சரிசெய்யப் படவேண்டிய
    பல விஷயங்களை கவனிக்காது அல்லது
    தவறாகத் தொடர்வதால் நேரும் பேராபத்து குறித்து
    மிக அழகாகச் சொல்லிச் செல்லும் கதை
    அருமையிலும் அருமை
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நன்றி ஸ்பார்க் கார்த்தி, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  16. பின்னூட்டத்தில் கூட படிமம் சொல்லும் அழகு, ரமணி சார், தங்கள் வரவால் என் வலைபூ பெருமிதம் கொள்கிறது

    ReplyDelete
  17. வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும்.//தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நன்றி மாலதி, பதிவர்கள் வாசித்து விமர்சிக்கும் போது கதை எழுதத் தூண்டுகிறது

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!