Bio Data !!

08 August, 2011

சிவசு வாத்தியார் -Part III

இத்தனை ஆண்டுகளாக தன்னை ஒரு ஜடப் பொருளாக நடத்திய ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக இதற்க்கு மட்டும் எங்கிருந்து வந்தது உரிமை என்று கோபப் பட்டவளாக முகத்தை நேருக்கு நேர் பார்த்த படி சொன்னாள்" நானும் அவரும் காதலித்தோம். அவரை மணந்திருந்தால் அந்த மேடையில் இருக்க வேண்டியவள் தான் உங்களை மணந்து இப்படி அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். ஒரு பிச்சை எடுப்பவளுக்கு கிடைக்கும் சந்தோஷம் கூட இல்லாமல் அவளை விட கேவலமானவளாக இருந்து கொண்டு இருக்கிறேன். ..." இன்னும் என்னன்னவோ பொரிந்து தள்ளினாள். கண்களில் தண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.

இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்....)

அன்று இரவு அதிர்ச்சியிலும் , கலக்கத்திலும் கடந்தது.
அடுத்து வந்த இரு நாட்களும் ஒரு வித அழுத்தமான அமைதியில் அடர்ந்து இருந்தது.

சிவசு ஐயா பல விதமான குழப்பத்தில் இருந்தார். "இத்தனை ஆண்டுகள் இருவரும் தொடர்பில் இருந்திருப்பார்களோ? இல்லையென்றால் அவளுடைய என்றுமில்லாத அலங்காரத்திற்கு வேறு அர்த்தம் தெரியவில்லையே? இவளை விவாகரத்து செய்து விட வேண்டியது தான். பிள்ளைகள் இருவரும் மதுரையில் தான் படிக்கிறார்கள். இவளில்லாமல் அவர்களை சமாளித்து விட முடியாதா? " என பல விதமான எண்ணச் சூழல்களில் சிக்கிச் சுழன்று கொண்டு இருந்தார்.

சியாமளா வேறு விதமான சிந்தனையில் சிக்கிக் கொண்டு இருந்தாள். அந்த நிமிட கோபத்திலும், வெறுமையிலும், அவனைப் பார்த்த சந்தோஷத்திலும் சொல்லி  விட்டாளே ஒழிய வேறு எந்த விதமான அந்தரங்க ஆசையும் அவளிடம் இல்லை. தன் மனம் அவனிடம் செல்வதைக் கூட, தன் கணவனிடம் உண்டான அன்பை அதிகரித்துக் கொண்டு தான் தடுக்க வேண்டும் என முடிவெடுத்தாள். ஆனால் அவரது இறுக்கம் அவளுக்கு மூச்சு முட்டியது. . எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் தானாக சென்று பேசி சுமுகம் ஆக்கிக் கொள்ளும் திறமை படைத்தவள் தான். ஆனால் நெருங்கி இருக்க வேண்டிய சிவசு ஐயாவிடம் அவளால் நெருங்க முடியவில்லை. இயல்பான நேரங்களில் பேச முடிகிறதே தவிர இறுக்கமான நேரங்களில் அவரது மௌனம் அவர்களுக்கிடையே ஒரு அரணாய் நின்று விடுகிறது.

அன்று இரவு அவர் படுத்ததும் மெல்ல பக்கத்தில் போய் அவர் காலை பிடித்து விட போனாள். விருட்டென்று இரு கால்களையும் சுருக்கிக் கொண்டவர் போர்வையை இழுத்து தலை வரை மூடினார். " என்னை மன்னிச்சிருங்க, ஏதோ ஒரு வேகத்தில சொல்லிட்டேன். மற்றபடி நான் வாழ்ற வாழ்க்கையில சந்தோஷமாத்தான் இருக்கேன். " இன்னும் எவ்வளவோ பேச நினைத்தாலும் அழுகையும் துக்கமும் சேர்ந்து தொண்டையை அடைக்க வெறும் தரையில் தலையணையை தூக்கி போட்டு படுத்து கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனாள்.

அடுத்து வந்த நாட்களில் அவர் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது போல் இருந்தாலும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அவரது தேவைகளை ஒற்றை வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் பொறுமை காத்துக் கொண்டு இருந்தாள். அவர்களுக்கிடையே தாம்பத்தியம் சரியாக இருந்திருந்தால் எவ்வளவு பெரிய பிரச்னையும் பனி போல் விலகி இருக்கும். அதற்க்கு வழி இல்லாமல் இருந்தது.

கொஞ்ச நாள் சியாமா தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று தவிர்த்து ஒரு வாரம் கழித்து சந்துரு அவர்கள் வீட்டிற்க்கு புறப்பட்டான்.அதிகம் பேர் கண்ணில் படாமல் தப்பலாம் என்று மதியம் மூன்று மணியைத் தேர்ந்தெடுத்தான். டிரைவரிடம் அவர்கள் வீடு எங்கே இருக்கிறது என்று ஏற்கனவே கேட்டு வைத்து இருந்தான். வீட்டிற்க்கு கொஞ்சம் தள்ளி உள்ள சந்தில் காரை பார்க் செய்து வந்து கதவில் மெல்ல தட்டினான்.
கதவைத் திறந்த சியாமா அதிர்ச்சி ஆகி சுதாரித்துக் கொண்டு " வாங்க" என்றாள்.

' ரொம்ப வருஷங்களுக்கு பின்ன ஸ்கூல் இல உன்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டேன். ஷ்யாம். என்னால உன்னை மறக்க முடியல. நீயும் நிச்சயம் அப்படித்தான் இருந்திருப்ப. அது உன் பார்வையிலே தெரிஞ்சது. என்னடா, ஒண்ணுமே பேசாம இருக்கிற? ' அவசரம் பிடித்தவன் அவள் என்ன நினைக்கிறாள் என்பதே தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவோடு பேசிக்கொண்டிருந்தான்.

அவன் இப்படி நேரிடையாக விஷயத்துக்கு வந்ததும் அவனை முகத்தில் அடித்தாற் போல் விரட்டுவதா இல்லை மென்மையாக புரிய வைத்து அனுப்புவதா என்ற குழப்பத்தில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

'என்ன ஷ்யாம் என்னைப் பார்த்த சந்தோஷத்தில உனக்கு பேச்சே வரல்ல போல் இருக்குது. இப்போ நீ மட்டும் ம்ம்ம் னு சொல்லு ஐயா, என்ன கேட்டாலும் கொடுத்து உன்னை என்னோட கூட்டிட்டு போய்டுறேன். '

சேறு எனக் கண்டு விட்டோம் என்றால் தன் மீது தெறித்து விடாமல் ஒதுங்கிச் செல்வது தான் புத்திசாலித்தனம். மீறிக் கோபத்தில் அதனை உதைத்தால் அசிங்கப் படப் போவது தான் தான் என்பதை புரிந்தவளாய் சரம் சரமாய் வார்த்தைகளை கோர்த்து அவனை அழுத்தமாகப் பார்த்த படி சொன்னாள். " அவுக இல்லாத நேரத்தில நீங்க இங்க வரது எனக்கு பிடிக்கல. அதுவும் இந்த மாதிரி பேசுறது சுத்தமா பிடிக்கல. " என்றாள். அப்போது தான் தன்னை அவள் அமரக் கூட சொல்லவில்லை என்பது உரைத்தது.
"இல்ல ஷ்யாம், " என்று இழுத்தான். அவள் இறுக்கமான முகத்துடன் வாசலைப் பார்ப்பதைப் பார்த்து முகம் தொங்கிப் போக வெளியேறினான்.

பள்ளியில் மனம் ஒரு நிலைப் படாமல், சிவசு ஐயா வீட்டுக்கு போய் ஒரு தூக்கம் போட்டால் நல்ல இருக்கும் போல் தோன்ற அரை நாள் விடுப்பு சொல்லி வந்து கொண்டு இருந்தார். அவரை தூரத்தில் பார்த்ததுமே மனதுக்குள் ஒரு திருட்டுத்தனம் எட்டிப் பார்க்க தனது தொங்கிப் போய் இருந்த முகத்தை இஸ்திரி செய்தது போல் மாற்றிக் கொண்டு முக மலர்ச்சியுடனும் துள்ளல் நடையுடனும் அவரைப் பார்க்காதது போல் சென்று காரில் ஏறி புறப்பட்டான் சந்துரு .

அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்க்கு மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.

(இன்னும் வரும் )

11 comments:

  1. Labels: சிறுகதை என்று சொல்கிறது. தொடர்கதைதானே? நல்லா போகுது.

    ReplyDelete
  2. தொடர்கதையா....முதற் பாகத்தினைப் போய்ப் படிச்சிட்டு வாரேன்.

    ReplyDelete
  3. வேலை பிசியில் இருக்கிறேன், இன்று மாலை விரிவான கருத்துக்களைப் பகிர்கிறேன்,

    ReplyDelete
  4. அடப்பாவிகளா.. என்று சொல்லத் தோன்றியது ரூஃபினா..:((

    ReplyDelete
  5. நல்லா போகுதுங்க கதை...நன்றி சகோ!

    ReplyDelete
  6. சேறு எனக் கண்டு விட்டோம் என்றால் தன் மீது தெறித்து விடாமல் ஒதுங்கிச் செல்வது தான் புத்திசாலித்தனம். மீறிக் கோபத்தில் அதனை உதைத்தால் அசிங்கப் படப் போவது தான் தான் என்பதை புரிந்தவளாய் சரம் சரமாய் வார்த்தைகளை கோர்த்து அவனை அழுத்தமாகப் பார்த்த படி சொன்னாள். /

    ReplyDelete
  7. நல்லா புரிச்சிருக்கிறாங்க...
    எல்லாரும் அப்படிப்புரியணும்..
    நல்ல கதை...

    ReplyDelete
  8. nice shoooooooooooooooooooort story.

    ReplyDelete
  9. நன்றி விஜயன் சிறுகதைன்னு சொன்னதுக்கு நக்கலா? அது முழுவதும் எழுதினாதான் ஒரு completion கிடைக்குது

    ReplyDelete
  10. நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. முடிவையும் படித்து விடுங்கள்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!