Bio Data !!

01 December, 2022

புத்தகத்தின் பெயர் : அரிய நாச்சி ஆசிரியர் : வேல ராமமூர்த்தி பதிப்பகம் : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் விலை : ரூபாய் 150/- அரிய நாச்சி ஒரு ஆப்ப நாட்டு பெண் தெய்வம். அவள் வழி வந்தவர்கள் என்று நாம் சாதாரணமாக சொல்வதை அவர் “ இவளின் தொப்புள் கொடி பெருக்கம்” நானூத்தி சொச்சம் திசைகளில் வேர் பாய்ச்சி படர்ந்து கிடக்கிறது.” என்கிறார். இந்த அழகான சொல்லாடலை நான் மிகவும் ரசித்தேன். ஆசிரியர் சொல்கிறார் “ நான் ரத்தம் பற்றியே எழுதுகிறேன் என்பார்கள். என் கதைகளில் எழுத்துக்களாக வழிவது அரிய நாச்சியின் ரத்தமே.” என்று. அங்கே அரிய நாச்சி என்பது ஒரு கதாபாத்திரத்தின் பெயராக எனக்குத் தோன்றவில்லை. மற்றவர்கள் பஜார்களில் கையில் லெதர் பேக்குகளில் பணமோ பத்திரமோ இருக்கும் போது தன் இன மக்கள் இமை கொட்டாமல் இருக்கும் சூரிக் கத்திகளை சுமந்து செல்கிறார்களே என்ற அவர் ஆதங்கம் எழுத்துக்களில் தெரிக்கிறது. மனுசத்தனத்துக்கும் மிருகத்தனத்துக்கும் இடைப்பட்ட மூர்க்கத்தனத்தை பதிவு செய்கிறார். தன் இனம் சார்ந்த வெள்ளந்தி மனிதர்களையும் வெள்ளையத்தேவன் சர்க்கரைத் தேவனாக அடையாளம் காட்டுகிறார். கதை ஆரம்பமே ஜெயில் வாசலின் விவரணையுடன் தான் தொடங்குகிறது. கதையின் ஊடாகவே தன் இன மனிதர்களின் மனப் போக்கினை “ ஜெயில் கட்டினது யாருக்கு நமக்குத்தானே” “ நமக்கு எதிரா எவனும் சாட்சி சொல்ல மாட்டான் ங்கிற குருட்டுத் தைரியத்தில்” என்ற வரிகளின் மூலம் தொட்டுச் செல்கிறார். இந்த சூழலில் தான் கதை நாயகி அரிய நாச்சி நிறை சூலியாக அங்கே எண்ட்ரி கொடுக்கிறார். ஜெயிலில் இருக்கும் தன் தந்தை வெள்ளையத் தேவனைப் பார்ப்பதற்காக வந்த போது கடைசிக் கைதியாய் வந்து நிற்கிறார்.. வெள்ளையத் தேவனின் அந்தப் பொறுமையும் நிதானமும் சூழ்நிலை எந்த ஒரு மனிதனையும் கொலைகாரன் ஆக்கக் கூடியது என்பதை நிரூபித்தது. வெள்ளையத் தேவனின் தங்கை வள்ளி அத்தை. அவள் வாழ்வரசியும் இல்லை. விதவையும் இல்லை. நிச்சயம் செய்த கையோடு மாப்பிள்ளை இறந்து போக இருபத்து ஐந்து வருசமா கன்னி கழியாமல் காலம் கழித்தவள். அரிய நாச்சியின் தம்பி பாண்டி ‘ தம்பி மனைவி குமராயி. பாண்டியின் தங்கை மாயழகி. இவளை இளவட்டங்கள் “ பார்த்த பார்வையிலேயே போட்டுத் தள்ளும் கரு நாகம்” என்பார்கள். மாயழகியை தன் கணவனின் தம்பி சோலைக்கு மணமுடித்து தனக்கு உதவியாக வைத்துக் கொள்ளணும் என்பது அரிய நாச்சிக்கு ஆசை. மொத்த பெண் வழிச் சொத்தும் ஒரே குடும்பத்துக்குப் போய் விடக் கூடாது தன் தம்பி கருப்பையாவுக்கு மணமுடிக்க வேண்டும் என்பது குமராயி ஆசை. குமராயியின் தாய் செல்லம்மாவை “ மூச்சுக்கு முன்னூறு தரம் கோபப்படுறதும் நீ தான். குழையறதும் நீ தான். ஒரு குடியான குடும்பத்து பொம்பளைக்கு இந்த குணம் ஆகாதுடி. கொலைப் பழியில கொண்டு போய் விட்டிரும்” என்று சொல்ல வைத்து கதையின் போக்கை கோடிட்டு காட்டி விடுகிறார் ஆசிரியர். நன்னடத்தைக்காக வெள்ளையத் தேவன் உரிய காலத்துக்கு முன்னதாகவே விடுதலை பெற்று வரும் போது வீடு எப்படி இருந்தது. அது வரை என்னன்ன நடந்தது என்பது கண்டிப்பாக விரு விருப்பாக சொல்லிச் செல்லும் கதை. இதை படிக்கும் அத்தனை பேரும் அன்று ஒரு நாளாவது நம் கோபம் குறைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆரம்பத்தில் நின்று நிதானமாக ஒவ்வொரு கதாபாத்திரமாக சொல்லி வந்தவர் விறு விறுப்பு கூடக் கூட அரிய நாச்சியின் வீட்டில் இருக்கும் போதே சிறையில் கைதிகள் வெள்ளையத் தேவனிடம் காட்டும் அன்பைச் சொல்கிறார். திடீரென்று குமராயி பாண்டியை ஆட்டுவிப்பதாகச் சொல்கிறார். ஆசிரியரின் எழுத்து நடை வேகத்துக்கு நாம் பின் தொடர வேண்டும் இல்லையின்றால் வழி தப்பி விடுவோம். வாசிக்கும் அனைவருக்கு, இதே வேகம் சாத்தியமா என்று தோன்றியது. தவற விடக் கூடாத புத்தகம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!