Bio Data !!

05 December, 2022

மெல்ல விலகும் பனித்திரை. # புத்தக விமர்சனம்.

புத்தகத்தின் பெயர் : மெல்ல விலகும் பனித்திரை. ஆசிரியர் : லிவிங் ஸ்மைல் வித்யா பதிப்பகம் : பாரதி புத்தகாலயம். விலை : ரூ 50/- பாலியல் சிறுபான்மையினர் பற்றிய பதிவுகள் வரலாற்றில் மிகக் குறைவு. அதனாலேயே அவர்கள் பற்றிய புரிதலும் குறைவு. தமிழ் சங்க இலக்கியம் பாலியல் சிறுபான்மையினருக்கு சாதகமாக இல்லை. ஆரம்பத்தில் அலி, ஒம்போது உஸ்ஸு என கிண்டலாக அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திரு நங்கை என கௌரவமான பெயர் கொடுத்தவர் கலைஞர். இவர்கள் உடலால் ஒரு பாலினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனதால் வேறு பாலினத்தை உணர்ந்து அதன் படியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள். நன்னூல் இவர்களை பெண் பேடு ஆண் பேடு எனக் குறிக்கிறது. ஆரம்ப காலங்களில் திரு நங்கைகள் பற்றி எழுதப்பட்ட கதைகளில் முக்கியமானவை கி. ரா வின் “ கோமதி” சு. சமுத்திரத்தின் “ வாடாமல்லி” போன்றவை. இந்த தொகுப்பு திரு நங்கைகள் குறித்த புரிதலை அடுத்த தளத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இதில் “ இப்படியும்” என்ற கதை எழுதிய சுதா என்பவர் மட்டும் ஒரு திரு நங்கை. கதை இப்படி செல்கிறது. கடந்த இரண்டு மாதமாக பாபு சரியாகவே வேலை செய்வதில்லை என்று திட்டினார் சைக்கிள் கடை ஓனர் கஜேந்திரன். அதற்கு காரணம் மளிகை கடை ஓனரும் பாபுவின் கனவுக் கண்ணனுமான கதிர். திடீரென்று ஒரு நாள் கதிர் பாபுவிடம் பேச படபடத்துப் போனான் பாபு. தனியாகப் பேசணும்னு பெசன்ட் நகர் பீச் வரச் சொல்கிறான் கதிர். “ பாபு நீ கல்யாணம் பண்ணிப்பியா?” “யாரை?” “ ஒரு பெண்ணை” “நானே ஒரு பெண்ணா வாழறேன். எனக்கு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணினா பாவம் சார்” கொஞ்ச நாளில் கதிர் வந்து தன் கல்யாண பத்திர்கை கொடுக்கிறான். மனம் முழுக்க வலியோடு ஒரு பரிசுப் பொருளும் வாங்கிக் கொண்டு திருமணத்துக்கு செல்கிறான் பாபு. அங்கே நாம் எதிர்பாராத திருப்பத்தோடு முடிகிறது கதை. அடுத்து கி. ரா வின் “ கோமதி” மிகவும் விரிவான கதை. ஒரு திரு நங்கையின் மன அவஸ்தையை மிகத் தெளிவாக சொல்லி இருப்பார். இரா. நடராசன் எழுதிய “ மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்த கதை.. பிறந்த அன்று அன்றலர்ந்த ரோஜா போல இருந்த மதி பின் இரண்டும் கெட்டானாய் வளர்ந்த பின் வீதி ஆட்கள் அத்துணை பேரையும் கேலி செய்யவும் வேலை வாங்கவும் அனுமதித்த அப்பா. பல தலைப்புகளில் ஆசிரியர் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் அலசி இருக்கிறார். கவின்மலர் எழுதிய நீளும் கனவு” இதில் நான் மிகவும் ரசித்த வரி “ பெண்கள் அழலாம். பெண்கள் அழுது தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பெண்ணே இல்லை.” இன்னுமொரு வரி “ செந்தில் இது நாள் வரை வெளியே தெரியாமல் பொத்திக் காப்பாற்றிய பெண்மை உள்ளுக்குள் உறங்கிப் போக உலகம் அவனைப் பார்த்த ஆண்மையும் மறைந்து போக ஜேம்ஸின் மனிதம் விழித்துக் கொண்டு செந்திலை அரவணைக்க பால் பேதமர்ற இரு உடல்கள் தழுவிக் கொண்டன.” இது போல் இன்னும் நாலு கதைகளும் உள்ளன. உணர்வுகள் பிறழ்ந்து போவது யார் செய்த தவறுமில்லை. புரிந்து கொள்வோம். இப்போதைய முன்னேற்றம் பெற்றவர்களில் ஒரு சிலர் விரட்டி அடிக்காமல் அரவணைப்பதால் படித்து மிக உயர்ந்த பதவிகளுக்கு கூட வருகிறார்கள் திரு நங்கைகள். சமுதாயம் புரிந்து கொண்டால் அவர்கள் விபச்சாரம் புரிவதும் தீய நடவடிக்கைகளில் இறங்குவதும் வெகுவாய் குறைந்து போகும் குறையணும். குறைப்போம். பிக் பாஸ் சீஸன் 6 இல் பங்கேற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஷிவின் மிகுந்த நம்பிக்கை தரும் ஒரு திரு நங்கையாக விளங்கி வருகிறார்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!