Bio Data !!

19 December, 2022

புத்தகத்தின் பெயர் : தேரியாயணம். ஆசிரியர் : கண்ண குமார விஸ்வரூபன். பாவை பதிப்பகம். விலை : ரூ 270/- ஆசிரியரின் இயற்பெயர் ஆறுமுகப் பெருமாள். கண்ண குமார விஸ்வரூபன் என்ற அழகான புனை பெயரில் எழுதுகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத்தை சேர்ந்தவர். இந்த மண் ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதை சார்ந்து ஐவகை கலாசாரங்கள் உள்ளன. அந்தந்த மண் சார்ந்த ஐவகை இலக்கியங்களும் உள்ளன. இந்த ஐவகையும் சாராத ஒரு வித நில வகை தான் தேரி நிலம்” பாலையென்றும் சொல்ல முடியாத பசுஞ்சோலை என்றும் சொல்ல முடியாத புது வகை நிலப் பகுதி. தனியாக குறிப்பிடப்படாத இந்த வகை இலக்கியத்தை “தேரி இலக்கியம்” என்று பெயர் சூட்டியது மரியாதைக்குரிய பொது உடைமை போராளி தோழர் நல்ல கண்ணு என்கிறார் ஆசிரியர்.. மூன்று சிறு கதை தொகுப்புகளுக்குப் பின் நான்காவதாக இந்த நாவலை வெளியிட்டிருக்கிறார். முனைவர் நா. இராமசந்திரன் முன்னுரை எழுதி உள்ளார். நிகழ் காண்டம் என்று ஐந்து அத்தியாயங்கள். அதன் பின் பூர்வ காண்டம் என்று பத்து அத்தியாயங்கள். நிகழ் காண்டத்தின் ஆறாவது அத்தியாயம் அதைத் தொடர்கிறது. இரண்டு காண்டங்களின் அத்தியாயங்களில் வித்தியாசம் காட்ட நிகழ் காண்டத்தின் அத்தியாயங்களை எண்ணிலும் பூர்வ காண்டத்தின் அத்தியாயங்களை ரோமன் எண்ணிலும் குறிப்பிடுகிறார். சுப்பம்மாள் என்னும் வயதான பெண்ணை நமக்கு அறிமுகப்படுத்தும் போதே அந்த மண்ணின் வாழ்க்கை முறையையும் சொல்லி விடுகிறார். “ கறுத்த சேலை. தாலி அறுத்தவள் கட்டும் சேலை. மேலுடம்பில் ரவிக்கையில்லை. நுள்ளிப் பிடித்து அறுத்தெடுத்தாலும் அவளுடம்பில் அரைக்கிலோ கறியாவது தேறுமா என்ற ஐயமே” மண்ணின் வறுமைக்கு அவளொரு உதாரணமாய் இருக்கிறாள். அவள் கணவன் பலவேசம். எல்லா வித எதிர் மறை குணங்களும் உடையவன். அவள் வாசல் தேடி வந்த மகள் மாரி. அவள் பெற்றெடுத்த பிள்ளைகள் சடையன், கோசலை. தென் மேற்கு பருவக் காற்றால் இந்த மணல் பகுதிகள் மேடாவதும் பள்ளமாவதும் அடிக்கடி நிகழும். தேரிக்காட்டின் சில பகுதிகள் காற்றின் தன்மைக்கு ஏற்ப பெரிய மணல் மேடாகி இடம் மாறியது போல் தோற்றமளிக்கும். அதனாலேயே தனியாக ஒருவர் சென்றால் வழி தப்பி தொலைந்து போகக் கூடும் என்று எல்லோரும் சேர்ந்தாற் போல் தேரிக்காட்டுப் பகுதிக்கு செல்வதும் அங்குள்ள உடை மரங்களின் மெல்லிய பகுதிகளை வெட்டிச் சேர்த்து கட்டி ஒன்று போல வெளியேறுவதும் வந்து அந்த சுள்ளிகளை விற்று பணம் பெற்று அன்றாட செலவுகளை பார்ப்பதும் தான் வாழ்க்கை முறை. ஓலை இணுக்குகளை கொண்டு செருப்பு முனைந்து அதைப் போட்டுக் கொண்டு தான் காட்டுக்குள் உள்ள சுடு மணலில் நடப்பார்கள். சில நேரம் அந்த இணுக்குகளில் ஓட்டை விழுந்து கால் பொத்துப் போவதும் உண்டு. பூர்வ காண்டத்தில் சுப்பம்மாளின் திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்கள் தேரிக் காட்டின் மணலை விட சுடும் அவள் வாழ்க்கைப் பாதை வருகின்றன. ஒரு இடத்தில் “ மல்லாந்த நிலையில் கண் மூடிக் கிடந்த {இறந்து போய் கிடந்த} ஊமைப் பெண்ணின் மார் மீது தனது பிஞ்சுக் கையால் அடித்த படி குழந்தை அழுது கொண்டிருந்தது என்று எழுதி இருக்கிறார். எனக்கு இரா. பார்த்திபன் அவர்களின் “ இரவின் நிழல் “ படத்தில் இதை ஒத்த ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. படத்தின் அழுத்தமான காட்சிகளில் அதுவும் ஒன்று. அந்த ஊமைப் பெண்ணின் சடலத்துக்கு தமது வறுமை நிலையிலும் அந்த தேரிக்காட்டு மக்கள் எந்த ஒரு சடங்கையும் விட்டுக் கொடுத்து விடாமல் செய்யும் போது அங்கே மனிதம் மிளிர்ந்தது. அதை முன்னெடுத்துச் செல்லும் சுடலையாண்டி கிழவரும் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரம். ஒரு அதிமுக்கியமான வாழ்க்கை தத்துவத்தை கதையின் ஊடாக சொல்கிறார். பொஞ்சாதியால் மதிக்கப் படாவிட்டால் புருசனுக்கு நிம்மதியிருக்காது. நிம்மதியற்ற மனிதனால் வாழ்வில் எதிர் நீச்சல் போட்டுக் கெலிக்கவே முடியாது. என்கிறார். எனக்கு இன்றைய குழந்தைகளில் பலரின் வாழ்க்கை பெரும் தோல்வியாய் முடிவதற்கு இது ஒரு முக்கிய காரணமாய் தோன்றியது. தான் காதலிக்கும் ராஜ பாண்டி தன் தங்கைக்கு திருமணம் முடித்த பின் தான் தன்னை கை பிடிக்க முடியும் என்பது புரிந்து மாரி தன் தம்பிக்கும் தங்கைக்கும் திருமணம் முடிக்க ஊக்குவித்து அவர்கள் திருமணம் முடித்து பிள்ளைகளும் பெற்ற பின்னும் சந்தோஷமாக காத்திருக்கிறாள். மாரி ஒரு உயர்ந்த கதாபாத்திரம். ஒரு திருடனைப் போல அரசு அதிகாரிகளுக்கு பயந்து பயந்து விறகு வெட்டி விற்று தம் வயிற்றைக் கழுவி சுட்டுப் பொசுக்கும் வெயிலிலும் இளங் காதல் வளர்த்து மனிதம் காத்த மானம் காத்த மக்களின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக எனக்குத் தோன்றுகிறது. பல இடங்கள் என்னை கண் கலங்க வைத்தது உண்மை. அழகு தமிழில் இவர் எழுதி உள்ளதற்கு சில உதாரணங்கள்:  “ ஆனை கிடைத்த சேனை போல அனைவரும் தட தடவென எழுந்து தேரியுள் பெய்யும் மழை நீர் வெளியேறி வரும் ஓடையான அந்தத் தேரியோடையின் கரையோரமாய் தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்”  “ அவளுக்குள்ளிருந்த பொஞ்சாதி கொஞ்சங் கொஞ்சமாய் பொசுங்கிக் கொண்டிருந்தாள். அருந்தியாகத் தாயானவள் தலை நிமிர்வாய் பேரெழுச்சியாய் எழுந்து கொண்டிருந்தாள்.”  “ வயிறு நெறயச் சோறு கெடைக்கித நாளு நல்ல நாளு. வயிறு காஞ்சு பட்டினியோடப் படுக்கப் போற நாளு கெட்ட நாளுங்கி தத்தரித்திர நெலயில கலியாணத்துக்கு எங்க நல்ல நாளு பாக்க”

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!