Bio Data !!

08 December, 2022

அவன் # கதை திறனாய்வு.

புத்தகத்தின் பெயர் : அவன் ஆசிரியர் : ரா.கி. ரங்கராஜன் பூம்பாவை பதிப்பகம். விலை : ரூ 260/- ரா.கி.ரங்கராஜன் கதையின் முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார். “ நான் கிருஷ்ண தேவராயன் “ என்று நான் எழுதிய சரித்திர கதையில் சக்கரவர்த்தி சொல்வதாக கதை நான் நான் நான் என்று வரும். அதிலிருந்து மாறுபட்டு எழுதுவதற்காக என்னை பற்றி எழுதிய கதையில் அவன் அவன் அவன் என்று எழுதி இருக்கிறேன். இது தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை கதை. இலக்கிய வரலாறு இல்லை"என்கிறார். . ஒரு முறை கடும் ஆஸ்துமா தொல்லையில் மாட்டிக் கொண்டு இவருக்கு பல்ஸ் கிடு கிடு வென்று விழுந்து கொண்டு இருந்திருக்கிறது. மருத்துவ மனைக்கு கொண்டு போயிருந்திருக்கிறார்கள். அப்போது இவருக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அன்று இவர் மாமனாரை ரொம்ப ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தரையில் கிடத்தி பதிவு செய்ய போகும் போது வந்து பார்த்த நர்ஸ் “ He is alreagy dead” என்கிறார்கள்..அசந்தர்ப்ப வசமாக அவருக்கு வந்த மரண நினைவு நம்மை ஒரு உலுக்கு உலுக்குகிறது. இவருக்கு ஒன்பது வயது இருக்கும் போது இவர் செய்த ஏதோ ஒரு சிறு தவறுக்காக கோமணத்தோடு வாசல் திண்ணையில் இவருடைய அப்பா அமர்த்தி வைத்ததாகவும் தெருவில் போவோரும் வருவோவும் பெருந்தன்மையாக பார்க்காமலே போனதாகவும் எழுதி இருக்கிறார். [இதை வாசிக்கும் போது எனக்கு அந்த கால தண்டனைகள் நினைவுக்கு வந்தன. கண்களில் மிளகாய் பொடி தூவுவது வீட்டு வாசலில் முழங்கால் போட்டு கைகளை விரித்து வைப்பது , பழைய சாமான்கள் இருக்கும் அறையில் தனியாக படுக்க வைப்பது { கால்களின் மேல் ஊறும் கரப்பான் பூச்சிகளை பார்த்து குழந்தகள் அலறும்{, புளியங் கம்பால் விளாறுவது இவை நான் கேள்விப்பட்ட, பார்த்த ,அனுபவித்த ,“சில” தண்டனைகள். நாகர்கோயிலில் நான் ஒரு பள்ளியை கடந்து பணிக்கு செல்வேன். அது ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி. மாணவர்களை அடிக்கும் அடிக்கு அவர்கள் கத்தும் சத்தம் காதை பிளக்கும். பெண் விடுதலைக்கு பெரியார், சட்ட நுணுக்கங்களுக்கு அம்பேத்கார். இந்த தகவல் நமக்கு தெரிந்தது. குழந்தைகளை அடிக்க கூடாது என்ற இன்றைய நிலைப்பாட்டை முன்னெடுத்தவர் யார்? அவருக்கு கோடி நமஸ்காரம்.] எஸ். ஜே என்ற புனை பெயரில் இவர் நண்பன் ஜானகிராமன் சுதேச மித்திரனுக்கு ஒரு கதை எழுதி அனுப்புகிறார். பிரசுரமாகிறது. சன்மானம் ஏழரை ரூபாய். ரசீது போல் அச்சடித்த சிறு காகிதத்தில் தொகையும் பெயரும் குறிப்பிட்டிருக்கும். அந்தக் காகிதத்தை உல்ளூர் சுதேச மித்திரன் விற்பனையாளரிடம் கொண்டு காட்டினால் ஏழரை ரூபாய் பணம் தருவார்களாம். எழுத்தாளராகி விடுவார் என்று எதிர்பார்த்த ஜானகிராமன் கணித ஆசிரியராகி கல்வித்துறை அதிகாரியாக, திருப்பி அனுப்பப் பட்ட கதைகளை எழுதிய ஆசிரியர் எழுத்தாளராகி விட்டார். “ இளம் தென்றல்” என்றொரு கையெழுத்து பத்திரிகை தயாரித்து அதற்கு ஒரு ஆண்டு மலரும் தயாரித்து அதில் கு.ப.ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி இருவரது வாழ்த்து செய்தியும் எம். வி வெங்கட்ராம் அவர்களின் ஒரு சிறுகதையும் வரச் செய்திருக்கிறார்கள். மூவருமே அந்நாளில் கும்பகோணத்தில் பிரபலமான எழுத்தாளர்கள். உலகத்தை சுவாரஸ்யமாக்குபவை உண்மைகளல்ல வதந்திகள் தான் என்கிறார். உண்மை வெறும் நிலம் வதந்தி அதில் முளைக்கும் ரோஜா. நிலம் நிலைத்து நிற்கும். ரோஜா ரெண்டு நாளில் வதங்கி விடும். இருந்தாலும் வெற்று நிலம் வெற்று நிலம் தான். ரோஜா ரோஜா தான் “ ஏன்கிறார் ஆசிரியர். { எனக்கு இதில் உடன்பாடில்லை. வதந்திகள் சில நேரம் உயிரையும் எடுத்து விடலாம்} சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த இன்னுமொரு முக்கிய நிகழ்ச்சியையும் குறிப்பிடுகிறார். காந்தியும் ராஜாஜியும் ரயிலில் தமிழ் நாட்டுக்கு வருகிறார்கள். இவர்களை பார்க்க ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம். டெல்லிக்கு போன காந்தி “ தமிழ் நாட்டில் வழி நெடுகிலும் பெரும் மக்கள் கூட்டம் ராஜாஜியைப் பார்க்கத் தான் வந்தார்கள். அவருக்கு எதிராக காங்கிரஸ் கமிட்டியில் ஒரு குழு வேலை செய்கிறதே” என்று “ ஹரிஜன் “ என்ற பத்திரிகையில் எழுதி விட்டார். அதன் பின் ராஜாஜி ஆதரவு கோஷ்டி எதிர்ப்பு கோஷ்டி என காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தது என ஆசிரியர் எழுதி இருக்கிறார். கடவுள் அவருக்கு பல விஷயங்களை கொடுக்கவில்லை என்றாலும் நல்ல சிநேகிதர்களின் நட்பை கொடுத்திருப்பதாக சொல்லி இருக்கிறார். அவரும் எதுவும் எதிர்பாராத அவரிடமிருந்தும் எதுவும் எதிர்பாராத நல்ல நட்பு அது என்கிறார். ஜா.ரா.சுந்தரேசன் வேலையிலிருந்து விலகுவதென்று முடிவெடுத்து குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி யிடம் சொன்னதும் அவர் ஏன் என்று கேட்க “ முப்பது வருஷம் உங்களுக்காக வாழ்ந்து விட்டேன். பத்து வருஷம் எனக்காக வாழலாம் என்று பார்க்கிறேன் என்று சொன்னாராம்.{ நாம் எல்லோருமே எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் இது] விகடனில் நடந்த ஒரு குறுக்கெழுத்துப் போட்டியைப் பற்றி சொல்கிறார். அதன் விடை சீலிட்ட கவரில் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. என்கிறார்.. பாமர மக்களுக்கு ஆசை காட்டுவது தப்பு என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி உட்படச் சிலர் எதிர்த்ததால் விகடன் நிறுத்திக் கொண்டதாம். [ இங்கு ஒரு கவரை எப்படி வங்கியில் டெபாசிட் செய்ய முடியும் என்ற என் சந்தேகத்துக்கு யாராவ்து விடை சொல்லுங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள்] ஆர். நாராயணன் என்பவரை பற்றி எழுதுகிறார். இவர் லயோலா கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார். ஒரு முறை மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது “ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்த சங்கத்தைக் கலைக்கிறேன்” என்று கூறி எழுந்து போனாராம். அவரைப் பின்னாளில் அழைத்து வந்து எஸ்.ஏ.பி குமுதத்தில் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டாராம். ஒரு முறை டி.வி.எஸ் பஸ்ஸில் திருநெல்வேலி லாட்ஜ் க்கு திரும்பிய பின் பார்க்கும் போது ஆசிரியரின் காமிராவின் வியூ பைன்டர் என்னும் விரல் நீளக் கருவியைக் காணவில்லை. மறு நாள் டி.வி.எஸ் பஸ் நிலையத்துக்கு சென்று மானேஜரைப் பார்த்துக் கேட்கிறார்கள். எத்தனை மணி பஸ் என்று விசாரித்து ஊழியரை அழைத்துக் கேட்கும் போது ஒரு கைக்குட்டை, ஒரு பென்சில், ஒரு கண்ணாடிப் புட்டி, மட்டுமே இருந்ததாக சொல்கிறார். பயணிகள் விட்டுச் செல்லும் பொருட்களை எடுத்து பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் அன்று இருந்திருக்கிறது. பின்னாளில் டி.வி.எஸ் சை அரசு எடுத்துக் கொண்டதாம், ஆசிரியர் “சக்தி” காரியாலயத்தில் பணி புரிந்த போது பக்கத்தில் ஒரு சிறிய தெருவில் திரு வி. க வின் “சாது அச்சுக்கூடம்” இருந்திருக்கிறது. அதனுள் போய் பார்த்து வந்த போது ஒரு தவ சிரேஷ்டரின் பர்ணசாலைக்குள் நுழைந்து விட்டு வந்தது மாதிரி இருந்தது என்கிறார். எந்தப் பத்திரிகையில் எந்தப் புதிய அம்சத்ததைப் பார்த்தாலும் அதன் மூலத்துக்கு மூலத்துக்கு மூலத்தை ஆராய்ந்தால் அது கல்கி செய்ததாகத் தான் இருக்கும் என்கிறார்.கல்கி அவர்களின் அமர ஊர்வலம் போகும் போதத கொஞ்ச தூரத்துக்கு ஒருவராக பல அபிமானிகள் மாற்றி மாற்றி தோள் கொடுத்து பெருமை பெற்றார்களாம். அந்த சில நிமிடப் பெருமிதம் இன்றைக்கும் என் மனசிலும் தோளிலும் தங்கி இருக்கிறது. எழுதுவதில் சோர்வோ அலுப்போ ஏற்படும் போது தோளைத் தொட்டுக் கொள்கிறேன் தாயத்துக் கட்டிக் கொண்ட மாதிரி ஒரு தெம்பு உற்பத்தியாகிறது என் கிறார் ஆசிரியர். எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் ஏன் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்ள விரும்புப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகமிது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!