19 November, 2023
நாவலின் பெயர் : அவர்கள் கிடக்கிறார்கள்.
ஆசிரியர் : ஜோதிர் லதா கிரிஜா
முத்து சுந்தரி பதிப்பகம்
விலை : ரூ 300
முதல் பதிப்பு : 2019
ரா.கி..ரங்கராஜன் அவர்களால் ஜோதிர் லதா அவர்கள் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். தமிழ்வாணன் , ஆர் வி, அழ. வள்ளியப்பா ஆகியவர்களால் ஊக்குவிக்கபட்டு 1968 ஆனந்த விகடனில் பெரியோர்களுக்கான எழுத்தாளராக அறிமுகப் படுத்தப் பட்டார்.
“ அவர்கள் கிடக்கிறார்கள்” மூன்று கதைகளின் தொகுப்பு. அதில் முதல் கதை தான் அவர்கள் கிடக்கிறார்கள். கதையின் தலைப்பினாலேயே வெற்று விமர்சனம் மட்டும் செய்யும் சமுதாயத்தை சாடும் கோபம் தெரிகிறது.
தகப்பன் மட்டும் பணி புரிந்து தன் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழலில் பொறுப்பற்ற தந்தையால் பாரம் சுமக்கும் தாய். ஜாதகக் கோளாரினாலும் ஏழ்மையினாலும் முப்பது வயது வரை திருமணம் ஆகாத ஒரு முதிர் கன்னி. அவளுக்கு முடித்துத் தான் தனது திருமணம் என்று இருக்கும் சூழலிலும் காதலித்து, சாகக் கிடக்கும் தன் காதலியின் தாய்க்காக வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் முடித்துக் கொண்ட அண்ணன். இவர்கள் இருவருக்கும் அடுத்து பிறந்திருந்தாலும் பொறுப்பாய் சிந்திக்கும் இளைய மகள் தேவகி.
இவர்கலைக் கொண்ட குடும்பத்தின் மூலம் கதையைச் சொல்லி ஊடாக சமுதாய சீர்திருத்தக் கருத்துகளையும் தெளித்திருக்கிறார். பெண் பார்க்கும் படலம் எப்படி பெண்களின் உணர்வுகளைக் கொன்று ஜடமாக்குகிறது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்.முதன் முறை பெண் பார்க்க வரும் போது வேர்த்து விறுவிறுத்து வரும் பெண் மறுபடி மறுபடி அது வழக்கமாகும் போது எப்படி எந்த ஒரு உணர்வும் இல்லாமல் நடந்து கொள்கிறாள் என்று அழகாக சொல்கிறார். இத்தகைய நிகழ்வுகள் கதைகள் மூலம் ஆவணப்படுத்தப் பட வேண்டும். அப்போது தான் இளைய தலைமுறை தாம் எவ்வளவு முன்னேறிய நிலையில் இருக்கிறோம் என்பதை உணரும்.
படப்பிடிப்பு: இது இரண்டாவது கதை. ஒரு கிராமத்துக்குள் ஒரு சினிமா படப்பிடிப்பு யூனிட் வருகிறது. அதன் டைரக்டர் பாலா. அவனது வலது கை போன்ற எடுபிடி நட்டு. படம் எடு[ப்பதை வேடிக்கை பார்க்க வந்த பெண் வேலம்மா பாலாவைக் கவர்ந்து விடுகிறாள். ரசிக்கலாம். தன் படத்தில் நடிக்க வைக்க விரும்பலாம். ஆனால் பாலா அவளை அனுபவிக்க விரும்பி எடுக்கும் ஆபத்தான முயற்சிகள். அதன் விளைவு. வழக்கப்படி தப்பு செய்தவர் தைர்யமாக இருக்க பாதிக்கப்பட்ட பெண் தான் அசிங்கப்பட்டு விடுவோம் என மறைக்கிறாள். அவள் திருமணமாகி மறுபடி டைரக்டர் கண்ணில் பட்டு விடுகிறாள். சூடு கண்ட பூனையாய் இருந்தால் தானே பாலைக் குடிக்காது. இவன் மனிதன் அல்லவா. அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.
ரகசியம் பரம ரகசியம் : இது மூன்றாவது கதை. :தன் மகளைக் காணோம் என்று தேடுகின்ற ஒரு தந்தையை இரயிலில் சந்திக்கிறார்கள் மணியனும் அவர் தங்கையும். அவர்கள் தொடங்கி உள்ள துப்பறியும் தொழிலின் முதல் கேசாக அதை எடுத்து கண்டு பிடிக்கிறார்கல்> நாம் எப்படி எல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை கதையின் நடுவே சொல்கிறார் ஆசிரியர். கண்டு பிடித்தார்களா? கிடைத்த செய்தியில் வயதான தந்தை மகிழ்ந்தாரா? துடித்தாரா? கதை முழுவதும் ரகசியம் அழகாக காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
****************************************************************************
14 November, 2023
நண்பர் ஒருவர் பேசிய ஸூம் மீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு ராணுவ வீரர். விடுப்பில் வந்திருக்கிறார். அவர் ஆனந்தம் ஃபௌண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் பேசினார். அவரது அனுபவங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் உங்களுக்காக இதோ!!
"யாரெல்லாம் எல்லாம் கிடைத்து நிறைவான வாழ்க்கை வாழ்கிறீர்கள்" என்ற கேள்வியோடு தொடங்கினார். "எனக்கு இன்று கிடைப்பதெல்லாம் மிகவும் நிறைவாக இருக்கிறது ஏனென்றால் லடாக்ல பணி புரிந்த போது வீட்டுக்கு ஒரு போன் பண்ண நாலு மணி நேரம் காத்திருந்திருக்கிறேன். லடாக் ல இருந்து ஊருக்கு வரும் போது எப்போ வரவேன்னு உறுதியா சொல்ல முடியாது. வான நிலை மாற்றம். பணி புரியும் இடத்தில் உள்ள சூழல் இப்படி பல விஷயங்கள் சார்ந்தது நம் பயணம்" என்றார்.
ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் பணி புரியும் போது பாதை தவறி நாம் சென்று கொண்டிருக்கும் குழுவை விட்டுப் பிரிந்து விட்டால் அவர்களைக் கண்டு பிடித்து சேருவது மிக கடினம். இப்படி பல கஷ்டமான சூழலில் பணி புரிவதால் கிடைக்காத எதுவுமே எனக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் இன்றைய தலைமுறையோ சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கும் தற்கொலை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறார்கள்" என்றார். இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை் வயது நாற்பதுக்குள் தான்.
ஒரு துக்கமான சூழலை விவரித்தார். நண்பர்களோடு சேர்ந்து ஜாலி மூடில் பேசி சிரித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவரின் தந்தை மூன்று நாள் முன்னதாக இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இறந்த துக்கத்தைக் காட்டிலும் தந்தை அங்கே இறந்திருந்த பொழுது நான் இங்கே சந்தோஷமாக சிரித்து விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறேனே என்று நண்பரின் கதறல் வாழ்நாளில் மறக்க முடியாதது என்றார்.
" H"abitual improvement ஐ பற்றி பேசினார். இதனால் முதலில் நான் என்னை உணர்வேன். அதன்பின் உலகம் என்னை தானாய் அறியும் என்றார். இது நமக்கான முக்கிய படிப்பினை. உலகம் புரிந்த பின் அடுத்த செயலில் இறங்குவோம் என்றிருந்தால் சரிப்படாது.
"A" for apple சொல்லிக் கொடுக்காமல் ஒவ்வொரு எழுத்துக்கும் இப்படி நல்ல செயல்களைச் சொல்லிக் கொடுக்கலாம் என்றார்.
"E"arly to bed early from bed. இதை இன்று வரை கடைப்பிடித்து வருவதாக சொன்னார். விடியலில் எழுந்து விட்டால் எனக்குப் பின் எழும் அத்தனை பேரையும் நான் வெல்கிறேன் என்று வைரமுத்து சொல்லியதை மேற்கோள் காட்டினார். அப்படியானால் எழும் போதே பலரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
"லவ் டுடே. " இன்றை மட்டுமே நேசியுங்கள்
"L"earning and listening. ஐந்து வயது மகனின் பேச்சையும் உன்னிப்பாய் கேட்பேன். அது கூட பல சந்தர்ப்பங்களில் உதவி இருக்கிறது என்றார்.
"S"ay sorry. And say thanks . அது நம் எதிரில் இருப்பவரிடம் நம்மைப் பற்றிய நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும் என்றார்.
"P"lanning and punctuality
"D"edication
காலம் என்பது பொன் போன்றது அல்ல. உயிர் போன்றது. பொன் போனால் திரும்ப பெற்று விடலாம். உயிர் அப்படி அல்ல.
எதை எவர் கண் விடல் என்பது மட்டுமல்ல எந்த சமயம் விடுவது என்பதிலும் நாம் கவனமாய் இருக்கணும். ஒரு காரியம் அது தவறான காலத்தில் செய்யப்பட்டதாலேயே கூட தவறாகிப் போகும் என்றார்.
மொத்தத்தில் மிகச் சிறந்த உரையையும் இன்றைய மாணவர்களின் தெளிவான சிந்தனையை கேள்விகளிலும் கேட்க முடிந்தது. நன்றி வினோத்!!!
அஞ்சலி கோபாலனின் சிறப்புரை கேட்க வாய்க்கப்பெற்றது. விஷயம் கொஞ்சம் கடினமானது தான். ஜீரணித்துக் கொள்ளுங்கள்.
HIV யிலிருந்து தொடங்கினார்கள். ஆரம்பத்தில் AIDS ஆண்களுக்கு மட்டுமே வருகிறது என்றும் அவர்களது தவறான நடவடிக்கைகளே காரணம் என்றும் இருந்த காலங்களை விட அது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட வருகிறது என கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் தான் மருந்துகள் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்ட தொடங்கினராம்.
நீங்கள் பிறரைப் பார்த்து எந்த வயதில் ரசிக்கத் தொடங்கினீர்கள் என்று கேட்டார். 10, 11, 14 என பல பதில்கள் வர 8யிலிருந்து 14 லுக்குள் என்றார். அப்படி நீங்கள் முதன் முதலில் ரசிக்க தொடங்கியவர் உங்கள் gender ஐ சேர்ந்த வரா எதிர் பாலினத்தவரா என நினைவிருக்கிறதா? என் றார். இல்லை. ஏனென்றால் அது அந்த வயதில் தவறு என கற்பிக்கப்படவில்லை. வளர்ந்த பிறகு ஒரே பாலினத்தில் வரும் ஈர்ப்பு சமுதாயத்தால் தவறு என்று கற்ப்பிக்கப்பட்ட காரணத்தால் அது மன உளைச்சலை தருகிறது. ஆனால் இந்தியா வில் அங்கீகரிக்க படாத சமயத்தில் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது போல ஒரு குற்ற செயலாகவே கருதப்பட்டது.
இங்கு அவர் நடந்த ஒரு கதையை சொன்னார். இரண்டு ஆண்கள் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்ப்பட்ட ஈர்ப்பால் திருமணத்தில் இணைந்து முப்பது ஆண்டுகள் இருந்தனர். அரசல் புரசலாய் அவர்கள் குடும்பங்களுக்கும் தெரிந்திருந்தது. ஒருவர் நோய் வாய் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்தவர் அவரருகில் வர மறுக்கப்படுகிறார். தன் இணை இறந்த பின்பு அந்த சடங்குகளிலும் அவரை கலந்து கொள்ள விடவில்லை.
நடிகை மவுனிகா இயக்குனர் பாலு மகேந்திரா இறந்த சமயத்தில் "அவர் கன்னம் தொட்டு முத்தம் கொடுக்க அவர் குடும்பத்தினர் சம்மதிக்க வில்லை என ஒரு பேட்டியில் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது. இரண்டும் ஒரே விதமான சோகம் தான். அன்பில் பாலினம் ஏது?
நான் நினைப்பதுண்டு இது சந்தர்ப்பம் , இயல்பு, சூழல் என பல காரணங்களால் ஏற்படும். இதற்கு சட்ட திருத்தம் தேவையா? இதற்கு போய் போராடுகிறார்களே என. ஆனால் இதை கேட்ட பின் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு விஷயத்தை இயல்பாக பேசுவதும் மாணவர்கள் அதை விட இயல்பாக கேட்டுக் கொள்வதும் அவர்கள் துணிந்து கேட்ட சந்தேகங்களும் சந்தோஷம் தருவதாய் இருந்தது. விருப்பமற்ற தருணத்தில் தன் பாலினர் அணுகும் போது அதை எப்படி எதிர் கொள்வது என்பது ஒரு ஆக்க பூர்வமான கேள்விக்கு உதாரணம்.
முக நூலில் மெசெஞ்சரில் கூட இந்த மாதிரி தொல்லைகள் வருவதாக நண்பர்கள் குறிப்பிடுவதுண்டு. அதை மென்மையும் கடுமையும் கலந்த விதத்தில் மறுக்க வேண்டும். பஸ்களில் இரவுப் பயணங்களில் ஸ்லீப்பர் பஸ்களில் ஆண்கள் இந்த விதமான தொல்லைகளை சந்திக்கிறார்கள்.
காமம் இப்பொழுதெல்லாம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. அது ஆண், பெண், குழந்தைகள், முதியவர் என யாரையும் விட்டு வைக்காமல் பஸ்பமாக்கி கொண்டு செல்கிறது.
குழந்தை கள் தினமான இன்று ஆண் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என உறுதி எடுப்போம். இந்த உலகில் வாழும் உரிமை பெற்ற அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுப்போம்.
இது நான் 2019 இல் எழுதிய பதிவு.
12 November, 2023
Bigg Bosd 7 poornima maya controvercy
பிக் பாஸ் பற்றி நான் ரிவ்யூ போடலைன்னாலும் தினமும் பார்ப்பேன். பலரும் இவ்வளவு நாளும் அது scripted programme. என்ன செய்யணும்னு எல்லாம் சொல்லிடுவாங்கன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. பல பங்கேற்பாளர்களே நான் scripted னு நினைச்சு போனேன் ஆனா அப்படி இல்லைன்னு சொன்னாலும். சொல்றவங்க அதை தொடர்ந்து கிட்டுத் தான் இருந்தாங்க. எனக்கு என்ன சந்தேகம்னா அப்போ அவர்கள் மாயா, பூர்ணிமா குரூப்பை ஏன் கழுவி ஊத்தறாங்க. அவர்களும் அவர்களுக்கு சொல்லப்பட்டதைத் தானே செஞ்சிருப்பாங்க. இப்படியும் இல்லாம அப்படியும் இல்லாம மாத்தி மாத்தி பேசுறதைத் தான் புரிஞ்சுக்கவே முடியல.
எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருது. ஒரு உறவுக்காரப் பெண் எங்க அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆதங்க ப் படுவாங்க . எங்க வீட்டுக்கு வர மாட்டேங்கிறீங்க. எங்களை மதிக்க மாட்டேங்கிறீங்கன்னு. எங்க அம்மா விசேஷ வீடுகளுக்கு வரவே பயந்தாங்க. பார்த்ததும் முதல் அரை மணி நேரம் திட்டு வாங்கணுமேன்னு. நான் இதற்கு முடிவு கட்ட நினைத்தேன்.
ஒரு திருமண வீட்டில் இப்படியே ஆரம்பித்தாங்க. நான் கேட்டேன். "பெரியவங்க சின்னவங்களை வந்து பார்க்கணுமா? சின்னவங்க பெரியவங்களை வந்து பார்க்கணுமா??" நான் ஏதோ வில்லங்கமா கேட்கிறேன்னு அவங்க பதில் சொல்லல.
நானே தொடர்ந்தேன். பெரியவங்க சின்னவங்களை வந்து பார்க்கணும்னா உங்க ஊர்லயே தனியா இருக்கிற என் தங்கையை நீங்க எத்தனை தடவ போய் பார்த்திருக்கிறீங்க. இல்ல சின்னவங்க தான் பெரியவங்களை போய் பார்க்கணும்னா நீங்க எத்தனை தடவை எங்க அம்மாவை வந்து பார்த்தி்ருக்கிறீங்க. ரெண்டுல ஒண்ணு தெளிவா இருங்க. பார்க்கிற நேரமெல்லாம் குறை சொல்வதையும், யாரா இருந்தாலும் எங்க வீட்டில வந்து எங்களைப் பார்க்கணும்னு எதிர்பார்க்கிறதையும் நிறுத்துங்கன்னு சொன்னேன். அதோட குறை சொல்வது முடிவுக்கு வந்தது. ஒண்ணு சொன்னாலும் நன்றாய் சொல்லி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரணும்.
அதே தான் இங்கேயும் scripted னு நம்பினால் சந்தோஷமா சீரியல் பார்க்கிற மாதிரி பாருங்க. இல்லைன்னா உள்ளே இருப்பவர்கள் சாம்பிள் மனிதர்கள் என்று சந்தோஷமா பாருங்க. நான் காரியவாதியான விசித்ரா அர்ச்சனாவுடன் போடப்போகும் சண்டைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
# Big Boss7
06 November, 2023
#திருமண கலாசார மாற்றங்கள்.
லட்சுமி ராஜரத்தினம், ஜோதிர் லதா கிரிஷா போன்ற பெண் எழுத்தாளர்கள் அவர்கள் காலங்களில் பெண்களின் திருமணம் நடப்பது எவ்வளவு சிரமமானது என்பதை கதைகளில் சொல்லி இருக்கிறார்கள். அது நல்லது. இல்லையென்றால் காலம் மாறிய பின் அப்படி ஒன்று இருந்தது என்பதே தெரியாமல் போய் விடும் அபாயம் உண்டு.
அலங்காரம் செய்து, பெண் பார்க்க வருபவர் கால்களில் விழுந்து, நமஸ்கரிப்பது. அவர்கள் முடிவு சொல்லும் வரை அவரையே கணவனாக நினைத்து கனவு காண்பது, அது இல்லையென்றானதும் அடுத்தவர் . இது தொடர்கதையாக இருந்தது.
அதுவும் ஒரு நாலைந்து பெண் குழந்தைகள் இருந்தால் நெட்டையோ குட்டையோ சம்மதிச்சிடு என்று மூத்த பெண் குழந்தைகளை வற்புறுத்துவது. மூத்த பெண் சம்பாதிப்பவளாக இருந்தால் " உனக்கு எப்படியும் மாப்பிள்ளை கிடைச்சிடும் என்று அவர்களை வைத்துக் கொண்டே இளையவர்களை திருமணம் செய்து கொடுத்து கடைசியில் உழைத்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விடுவது. இது ஒரு காலம்.
அடுத்து, பெண்களில் பாதிக்கு மேல் உழைக்கத் தொடங்கி தனக்கு வேண்டாம் என்று நினைப்பவரை அழுத்தமாக மறுக்க முடிந்த காலம். குடும்ப முன்னேற்றத்துக்கு அவளால் உதவ முடிகிறது என்பதாலேயே அவளைக் கொஞ்சம் கூடுதலாய் மதிக்கத் தொடங்கினார்கள். அப்போதும் கூட நீ சம்பாதிப்பதில், உன் செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள உன்னை அனுமதிப்பதே, நான் உனக்கு காட்டும் பெரும் கருணை, என்று நடத்தியவர்களும் உண்டு. இந்த சமயத்தில் காதல் திருமணங்கள் கொஞ்சம் அதிகரிக்கத் தொடங்கின. . சம்பாதிக்கும் பெண் இருந்தால் குடும்பத்துக்கு நல்லது என தன்னுடன் பணி புரியும் பெண்ணையே பலர் காதலித்து மணந்தார்கள். தன் மகன் காதலிக்கும் பெண், வேற்று மதம் ஜாதி சார்ந்திருந்தாலும் அவள் சம்பாதிக்கிறாள் என்பதாலேயே அவளை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள். இந்த காலத்திலும் காதலுக்கு எதிரிகள் சிலர் பெற்ற பிள்ளைகளையே கொன்று கொண்டும் இருந்தார்கள்.
அடுத்து ஒரு கால கட்டம். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை என்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் போதும். நான் உனக்கும் சேர்த்து சம்பாதிக்கிறேன் என்று பெண்களின் மன நிலை மாறியது. அங்கே மாறத் தொடங்கியது ஆண்களின் மனம். தன் மனைவி தன் குழந்தைகளுக்காக உழைக்க வேண்டியது தனக்கு மட்டும் கடமையில்லை. தன் பொறுப்பு இல்லை. முடிந்தால் செய்வேன். இல்லையென்றால் மனைவி பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்ற பொறுப்பற்ற மனநிலை வந்து விட்டது. அதுவே பல விவாகரத்துகளுக்கும் வழி வகுத்தது. என் மேல் அன்பு காட்டாத உன்னை, தவறுகள் செய்தும் உன்னை , சகித்து வாழ அவசியமில்லை என்று பெண்களின் மன நிலை மாறிப் போனது. இதனாலேயே பல குழந்தைகள் ஒற்றை பெற்றோருடன் வாழும் நிலை ஏற்பட்டது. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. அது இல்லாமல் பெற்றோர் பிரியும் போது அதை குழந்தைகளால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சகித்து சேர்ந்திருந்திருக்கலாமே என்பது தான் பெரும்பான்மையோருடைய எண்ணமாக இருக்கிறது. ஏனென்றால் சமூகத்தில் குழந்தைகள் சந்திக்கும் அழுத்தங்கள் அப்படிப்பட்டவை.
இப்போ அதற்கும் அடுத்த நிலை. விவாகரத்தை தவிர்க்க நான் வாழ்ந்து பார்த்து விட்டு ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற மனநிலை. Living together. இது ரொம்ப ஆபத்தானது. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்கள் தான். ஏனென்றால் ஆண் தனக்கென உரிமைப்பட்ட ஒருத்தியிடம் மட்டுமே அதிகாரம் காட்டுவான். ஆணவமாய் நடந்து கொள்வான். எத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தாலும் திருமணமாகி கணவன் என்றானபின் அவன் நடவடிக்கை மாறித் தான் போகும். அது தனிப்பட்ட ஒருவரின் குண நலன், வளர்க்கப்பட்ட முறை சார்ந்தது. சிலர் லிவிங் டுகெதரில் குழந்தை பெற்றுக் கொள்ளாமலாவது இருக்கிறார்கள். சில முட்டாள்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் குழந்தையும் பெற்று அந்த குழந்தைகளையும் சிக்கலுக்கு உட்படுத்துகிறார்கள்.
ஒரு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாய் இருந்தது. இப்போ தலை கீழாகி ஆண் பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பது பிரம பிரயத்தனமாய் இருக்கிறது.
சமுதாயத்தில் ஆணும் உயர்த்தியில்லை. பெண்ணும் உயர்த்தியில்லை. இருவரும் சமமே என்ற எண்ணம் வந்து பரஸ்பரம் புரிதல் இருந்தால் மட்டுமே நாம் பாரம்பரியமாக காத்து வரும் குடும்பம் என்ற அமைப்பு சிதையாமல் இருக்கும்.
அதற்கான முயற்சியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். சிதைப்பது எளிது. மறு உருவாக்கம் மிகக் கடினம்.
05 November, 2023
புத்தகத்தின் பெயர் : அன்புள்ள அம்மாவுக்கு.
ஆசிரியர் : லட்சுமி ராஜரத்தினம்.
இது மூன்று குறுங் கதைகளின் தொகுப்பு.
சில நேரம் லைட் ரீடிங் தேவைப்படும். இது அந்த வகையைச் சார்ந்தது.
முதல் கதை அன்புள்ள அம்மாவுக்கு.
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் பாடுகளைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு இந்த புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு ஏழை அப்பாவுக்கு நான்கு பெண் குழந்தைகள். ஒவ்வொருவர் திருமணமும் ஒவ்வொரு விதமாய்.
பெற்ற தாய் தந்தையாகவே இருந்தாலும், பணம் தரும் பிள்ளைகளுக்கு இடையே வேறுபாடு காட்ட வைத்து விடுகிறது. அது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. தனக்குத் தருபவர்களை குளிர வைத்துக் கொண்டால் தானே, தருவது தடங்கலின்றி வரும். இது ஏழ்மை நடத்தும் நாடகம்.
கதையில் ஆரம்பத்திலிருந்தே பிறருக்காகவே வாழும் ப்ரீதா. சுய நலம் மிகுந்த குழந்தைகளை துணிச்சலாய் ஒதுக்கும் போதும் வாழ்க்கை அதே பிறர் நலம் தொடரவே வழி காட்டுகிறது.
எனக்கு பிடித்த வரிகள்:
"மரணம் எப்பொழுது, எப்படி, எங்கே நிகழ்கிறது என்பது யாருக்காவது தெரியுமா? மனித உடல் காற்றடித்த பலூனா? அப்படியானால் யார் அதை இப்படி ரகசியமாக பிடுங்கி காற்றை வெளியே அனுப்புகிறார்கள்"
இரண்டாவது கதை : நெஞ்சம் எங்கே.
இது இரண்டாவது கதை. மலையின் மேல் பணி புரியும் சுந்தரின் மனைவி பாலா, தன் முதல் குழந்தை ரவியை தன் பெற்றவர்களிடம் விட்டு விட்டு, குழந்தை சத்யாவுடன் , சுந்தருடன் வாழ வந்த இடத்தில் , சத்யாவைத் தொலைத்து விடுகிறாள். அதன் பின் சுந்தர் தன் வேலையை உதறி ஊருக்கே வந்து விடுகிறான்.
ரவி நல்ல உயரமான , அழகான ஆண் பிள்ளையாக வளர அவனைப் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அவன் மேரியைக் காதலிக்க, சித்ராவை அவன் அப்பா மருமகளாக்க முடிவு செய்ய , காவல் அதிகாரி பணி கிடைத்த சோனாவும் ரவியை விரும்புகிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழி பிறந்து ரவி யாரைத் திருமணம் செய்கிறான. என்பது தான் கதை.
மூன்றாவது கதை : உனக்காக மட்டும்.
அது மட்டும் உங்களுக்காகவே. முதல் இரண்டு கதைகளும் நம் வாசிக்கும் ஆசையை தூண்டி இருக்கும். மூன்றாவது நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)