06 November, 2023
#திருமண கலாசார மாற்றங்கள்.
லட்சுமி ராஜரத்தினம், ஜோதிர் லதா கிரிஷா போன்ற பெண் எழுத்தாளர்கள் அவர்கள் காலங்களில் பெண்களின் திருமணம் நடப்பது எவ்வளவு சிரமமானது என்பதை கதைகளில் சொல்லி இருக்கிறார்கள். அது நல்லது. இல்லையென்றால் காலம் மாறிய பின் அப்படி ஒன்று இருந்தது என்பதே தெரியாமல் போய் விடும் அபாயம் உண்டு.
அலங்காரம் செய்து, பெண் பார்க்க வருபவர் கால்களில் விழுந்து, நமஸ்கரிப்பது. அவர்கள் முடிவு சொல்லும் வரை அவரையே கணவனாக நினைத்து கனவு காண்பது, அது இல்லையென்றானதும் அடுத்தவர் . இது தொடர்கதையாக இருந்தது.
அதுவும் ஒரு நாலைந்து பெண் குழந்தைகள் இருந்தால் நெட்டையோ குட்டையோ சம்மதிச்சிடு என்று மூத்த பெண் குழந்தைகளை வற்புறுத்துவது. மூத்த பெண் சம்பாதிப்பவளாக இருந்தால் " உனக்கு எப்படியும் மாப்பிள்ளை கிடைச்சிடும் என்று அவர்களை வைத்துக் கொண்டே இளையவர்களை திருமணம் செய்து கொடுத்து கடைசியில் உழைத்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விடுவது. இது ஒரு காலம்.
அடுத்து, பெண்களில் பாதிக்கு மேல் உழைக்கத் தொடங்கி தனக்கு வேண்டாம் என்று நினைப்பவரை அழுத்தமாக மறுக்க முடிந்த காலம். குடும்ப முன்னேற்றத்துக்கு அவளால் உதவ முடிகிறது என்பதாலேயே அவளைக் கொஞ்சம் கூடுதலாய் மதிக்கத் தொடங்கினார்கள். அப்போதும் கூட நீ சம்பாதிப்பதில், உன் செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள உன்னை அனுமதிப்பதே, நான் உனக்கு காட்டும் பெரும் கருணை, என்று நடத்தியவர்களும் உண்டு. இந்த சமயத்தில் காதல் திருமணங்கள் கொஞ்சம் அதிகரிக்கத் தொடங்கின. . சம்பாதிக்கும் பெண் இருந்தால் குடும்பத்துக்கு நல்லது என தன்னுடன் பணி புரியும் பெண்ணையே பலர் காதலித்து மணந்தார்கள். தன் மகன் காதலிக்கும் பெண், வேற்று மதம் ஜாதி சார்ந்திருந்தாலும் அவள் சம்பாதிக்கிறாள் என்பதாலேயே அவளை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள். இந்த காலத்திலும் காதலுக்கு எதிரிகள் சிலர் பெற்ற பிள்ளைகளையே கொன்று கொண்டும் இருந்தார்கள்.
அடுத்து ஒரு கால கட்டம். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை என்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் போதும். நான் உனக்கும் சேர்த்து சம்பாதிக்கிறேன் என்று பெண்களின் மன நிலை மாறியது. அங்கே மாறத் தொடங்கியது ஆண்களின் மனம். தன் மனைவி தன் குழந்தைகளுக்காக உழைக்க வேண்டியது தனக்கு மட்டும் கடமையில்லை. தன் பொறுப்பு இல்லை. முடிந்தால் செய்வேன். இல்லையென்றால் மனைவி பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்ற பொறுப்பற்ற மனநிலை வந்து விட்டது. அதுவே பல விவாகரத்துகளுக்கும் வழி வகுத்தது. என் மேல் அன்பு காட்டாத உன்னை, தவறுகள் செய்தும் உன்னை , சகித்து வாழ அவசியமில்லை என்று பெண்களின் மன நிலை மாறிப் போனது. இதனாலேயே பல குழந்தைகள் ஒற்றை பெற்றோருடன் வாழும் நிலை ஏற்பட்டது. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. அது இல்லாமல் பெற்றோர் பிரியும் போது அதை குழந்தைகளால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சகித்து சேர்ந்திருந்திருக்கலாமே என்பது தான் பெரும்பான்மையோருடைய எண்ணமாக இருக்கிறது. ஏனென்றால் சமூகத்தில் குழந்தைகள் சந்திக்கும் அழுத்தங்கள் அப்படிப்பட்டவை.
இப்போ அதற்கும் அடுத்த நிலை. விவாகரத்தை தவிர்க்க நான் வாழ்ந்து பார்த்து விட்டு ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற மனநிலை. Living together. இது ரொம்ப ஆபத்தானது. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்கள் தான். ஏனென்றால் ஆண் தனக்கென உரிமைப்பட்ட ஒருத்தியிடம் மட்டுமே அதிகாரம் காட்டுவான். ஆணவமாய் நடந்து கொள்வான். எத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தாலும் திருமணமாகி கணவன் என்றானபின் அவன் நடவடிக்கை மாறித் தான் போகும். அது தனிப்பட்ட ஒருவரின் குண நலன், வளர்க்கப்பட்ட முறை சார்ந்தது. சிலர் லிவிங் டுகெதரில் குழந்தை பெற்றுக் கொள்ளாமலாவது இருக்கிறார்கள். சில முட்டாள்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் குழந்தையும் பெற்று அந்த குழந்தைகளையும் சிக்கலுக்கு உட்படுத்துகிறார்கள்.
ஒரு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாய் இருந்தது. இப்போ தலை கீழாகி ஆண் பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பது பிரம பிரயத்தனமாய் இருக்கிறது.
சமுதாயத்தில் ஆணும் உயர்த்தியில்லை. பெண்ணும் உயர்த்தியில்லை. இருவரும் சமமே என்ற எண்ணம் வந்து பரஸ்பரம் புரிதல் இருந்தால் மட்டுமே நாம் பாரம்பரியமாக காத்து வரும் குடும்பம் என்ற அமைப்பு சிதையாமல் இருக்கும்.
அதற்கான முயற்சியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். சிதைப்பது எளிது. மறு உருவாக்கம் மிகக் கடினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!