27 June, 2025
# மாமன் தமிழ் திரைப்படம்
யூட்யூபில் பார்த்தேன்.
இயக்குநர் : பிரசாந்த் பாண்டியராஜ்
முக்கிய கதாபாத்திரங்கள்: சூரி,(இன்பா) ஐஸ்வர்ய லக்ஷ்மி, (ரேகா) ஸ்வாசிகா, அவர் கணவராக பாபா பாஸ்கர், ராஜ்கிரண், விஜி, பிரகீத் சிவன்.( சூரியின் அக்கா மகன்)
கிராமங்களில் தன் தம்பிக்கு தன் மேல் உள்ள பாசத்தை அவன் மனைவிக்குக் கூட விட்டுக் கொடுக்காத தீவிரத் தன்மையை பார்த்திருப்போம். மாமியாரோடும் நாத்தனாரோடும் போராடி தன் கணவனின் அன்பை சிறிதளவேனும் தன் பக்கம் திருப்ப ஒரு பெண் படும் சிரமம் சொல்லி மாளாது.
இங்கே அக்காவின் மகன், சிறுவன் தான் . அவன் தன் தாய் மாமனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிவதாயில்லை. தாய் மாமனான சூரிக்கு திருமணமான பின் இதனால் வரும் சிரமங்கள் தான் கதை.
ஒரு மருத்துவராய் இருந்தும், குடும்பத்தார் மேல் சூரிக்கு இருக்கும் பாசத்தைப் பார்த்தே மணக்கத் தயாராய் இருக்கும் பெண் , அந்தப் பாசம் தன்னிடமிருந்து சூரியைத் தள்ளி வைக்கும் போது எவ்வளவு கடுமையாக முடிவெடுக்கிறாள் என்பது நம்மை கலங்க வைக்கத்தான் செய்கிறது.
கடைசி அரை மணி நேரம் நம்மை உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளிக்க விடுகிறார்கள். உறவுகளின் அவசியத்தை , வலியுறுத்தும் இத்தகைய படங்கள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்.
ராஜ்கிரண், விஜி தம்பதிகள் மூலம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். சண்டையே போடாமல் வாழ்வது மட்டுமே சிறந்ததல்ல. சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்தில் இணையத் தெரிவது தான் வாழ்க்கை.
இடையே நடிகர் விமல் வந்து எங்களோடு ஜாலியா சுத்திகிட்டு இருந்த உன்னைய சீரியஸாக்கி விட்டுட்டாங்க என்கிறார். அது கதைக்கும் நிஜத்துக்கும் பொருத்தமாய் இருக்கிறது. அவர் சீரியஸாவே இருக்கட்டும் . அப்போ தான் நல்ல நல்ல படங்கள் கிடைக்கும்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
19 June, 2025
OTT Amazon Prime
மொழி : மலையாளம்
படத்தின் பெயர் : மதுர மனோகர மோஹம்.
இயக்குநர் : ஸ்டெஃபி சேவியர்.
முக்கிய நடிகர்கள் : ஷரப் உதின், ரஜிஷா விஜயன். பிந்து பணிக்கர்.
ஒளிப்பதிவாளர் : சந்துரு செல்வராஜ்
காமெடி ஸோனர்.
பல உறுப்பினர்கள் கொண்ட அழகிய குடும்பம். அந்தக் குடும்பத்து பள்ளி மாணவி தன் நண்பனோடு பக்கில் வந்து இறங்கினாலே குடும்பம் பதறும். சோஷியல் இன்ஃப்ளூயன்ஸர்கள் பார்த்து வீடியோ எடுத்துப் போட்டால் என்ன செய்வது என்று அவள் அண்ணன் அஞ்சுவான்.
உண்மை தான். சமுதாயத்தைப் பாதிக்கும் வீடியோ எடுத்துப் போடுபவர்கள் அந்த அளவுக்கு நேர்மை அற்றுப் போய் விடக் கூடாது. பத்திரிகை தர்மம் பொல் இதற்கு ஒரு தர்மம் இழுக்க வேண்டும்.
ஆனால் அதே அண்ணன் தன் ஜாதிப் பெண்ணக்க் காதலிக்கும் போது எந்தப் பிரச்னையும் இல்லாது போகும். பஞ்சாயத்தில் ஒருவர் சரித்திர முக்கியத்துவம் ( 😀) வாய்ந்த ஒரு உண்மையைச் சொல்லுவார்.
" நம் குடும்பத்துப் பையன் வேற ஜாதிப் பெண்ணை மணந்தால் பிரச்னை இல்லை. அதுவே நம் ஜாதிப் பெண் வேற்று இனத்துப் பையனைத் திருமணம் செய்தால் நம் இனத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறையும். அடே!! அது அப்படியா?
அந்த கூட்டத்தில் ஒரு தந்தை கேட்பார் " என் மூத்த பெண்ணை நம் இனத்துப் பையனுக்குத் தான் திருமணம் முடித்தேன். அவளுக்கு ஒரு சிக்கல் வந்தால் எத்தனை பேர் உடன் வந்து பையனைக் கேள்வி கேட்பீர்கள்" .
இதே கேள்வி எங்கள் ஊர் தைர்யத் தமிழச்சி ஒரு நிகழ்ச்சியில் கேட்டாள். "ஆணவக் கொலை செய்யும் இந்தப் பெற்றோர் தான் தன் ஜாதிப் பையனைத் திரிமணம் செய்த பெண்ணுக்கு ஒரு பிரச்னை வரும் போது பெண் அனுசரித்துத் தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள் என்று கோபமாக பேசியது நினைவுக்கு வருகிறது.
ஒரு இடத்தில் தன் தங்கையின் தவறான போக்கு கண்டுபிடிக்கப்பட அண்ணன் இடிந்து போல் படியில் அமர்ந்து மேலே பார்க்க காமரா இன்னொரு தங்கை தன் வெள்ளை நிறப் புதுப் பாவாடையை குடை போல் சுற்றி வட்டமிடுவதைக் காட்டும். அழகான காட்சி இது.
ஒரு ஆண் பல பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து , பின் வீட்டில் பார்க்கும் பெண்டைத் திருமணம் செய்வதாக்க் கதைகளில் வருவதுண்டு. நிஜத்திலும் கண்டதுண்டு. இதில் மாத்தி யோசித்திருக்கிறார்கள். அதுவும் நகைச்சுவை விரவி.
2023 இல் வந்த படம். இப்போது தான் OTT க்கு வந்திருக்கிறது. மனதை ரிலாக்ஸ் செய்ய பார்க்கலாம். நாம் செய்யும் தவறு கண் முன்னே காட்சியாக விரியும் போது. ஒரு சிலர் மாறவும் வாய்ப்பிருக்கிறது.
படம் பார்க்கும் போது எனக்கு வழக்கமாக வரும் சந்தேகம் எழுந்தது. தன் குடும்ப பெண்களைப் பற்றிய தவறான விஷயங்களக ஆண்கள் தம் நண்பர்களோடு பகிர்ந்து அதைச் சரி செய்ய பார்க்கிறார்களே அந்த நணபர்களுக்கு இவர்கள் வீட்டுப் பெண்கள் மேல் எந்த அளவுக்கு மரியாதை இருக்கும். எனக்குத் தெரியல. நீங்களாவது சொல்லுங்க.
16 June, 2025
# தகப்பன் சாமி
சிவப்பு ரெட், மேல் டாப் ல ஒரு சொற்றொடர்.
தகப்பனே சாமி தானே.
எனக்கு எங்க அப்பாவை நினைச்சாலே பல எண்ணங்கள் குதித்துக் கொண்டி கிளம்பும்.
அப்போ நான் பதினொன்று படித்துக் கொண்டு இருக்கிறேன். அது தான் பள்ளி இறுதி ஆண்டு. இப்போ மாதிரி +2 இல்லை. எங்களுக்கு ஆறு பாடங்கள். தமிழ், ஆங்கிலம் , கணக்கு, அறிவியல் , சரித்திரம் & பூகோளம், எலக்டிவ் ( எனக்கு அதுவும் கணக்கு)
என் வகுப்பு ஆசிரியை பிச்சம்மாள் மிஸ் எங்க அம்மவோட நெருங்கிய தோழி. வந்து எங்க அப்பாட்ட கேட்கிறாங்க." ASPP (assistant school pupil leader) தமிழ் மீடியத்துல எடுப்பாங்க. ரூஃபியை போடச் சொல்லலாம்னு நினைக்கிறேன். நல்லா சுறுசுறுப்பா இருக்குறா". அது வரை பள்ளியில் என்னை தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாத ஒருவர். என்னைப் புகழ்ந்து சொல்லவும் எனக்கு தலை கால் புரியல.
உடனே எங்க அப்பா" வேணாங்க. படிப்பு டைவர்ட் ஆகிடும். அதை உட்கார்ந்து படிக்க வைக்கிறதே கஷ்டம்" என்று என் ஆசை பலூனை புஸ்ஸாக்கி விட்டார்கள். " நல்ல மூளை இருக்குது. உட்கார்ந்து படிக்க மாட்டேங்குதே" இது தான் அவங்க கவலையா இருக்கும்.
தேர்வு தொடங்கியது . ஆறு பாடங்களோடு தமிழ் ஆங்கிலம் இரண்டும் இரண்டு பேப்பர்களாக மொத்தம் எட்டு. பாதிக் கிணறு தாண்டி இருக்கிறேன். படிச்சு ( நாம படிக்கிற லட்சணத்துக்கு) உடம்பு சூடாகும்னு மாலையிலும் ஒரு தரம் குளிக்க சொல்வாங்க.
குளிக்கும் போது காலில் தொடை பக்கமாக ஒரு நீர்க்கொப்பளம். எதுக்கும் அம்மாவிடம் சொல்லிடுவோம்னு கூப்பிட அவங்க பார்த்தால் வேறு ஒன்றிரண்டு இடங்களிலும். பதறிய படி அப்பாவிடம் சென்று " அம்மன் போட்டிருக்கிற மாதிரி இருக்குது என்று சொல்ல. அவரும் பார்த்து உறுதி செய்தார்கள். எனக்கு அதன் பாரம் புரியவில்லை. அம்மாவும் அப்பாவும் ஆடிப் போயிட்டாங்க.
உடனே பிச்சம்மா மிஸ்ஸோட கலந்து ஆலோசிக்கிறாங்க. " அவள் எழுதிடுவான்னா பெர்மிஷன் வாங்கிடலாம்" னாங்க. எங்க அம்மாவும். உயர் பள்ளி ஆசிரியை தான். நான் தேர்வெழுதும் பள்ளியில் அவர்கள் தேர்வு சூப்பர்வைசர் வேறு ஒரு அறையில். ஒரு வருடம் வீண் செய்வதா? தோற்று விட்டால் என்ன செய்வது? பல யோசனைக்குப் பின் என்னிடம் கேட்டார்கள். நமக்கு எல்லாமே விளையாட்டுத் தானே. அதெல்லாம் எழுதிடுவேன்னு சொல்லிட்டேன்.
மறு நாள் உடம்பெல்லாம் கொப்பளம் போட்டுட்டுது. கண் இமைகளின் மேல் கூட. கண்ணிலிருந்து தண்ணீரா வடியுது. உடம்பு பலவீனமா இருக்குது. எழுத எழுத கை தளறுது. எனக்கு இடம் வாசலுக்கு அருகில் என்பதால் அது வரை காரில் கூட்டிப் போய் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் உட்கார வைத்து விட்டார்கள். என. கண் பார்வையில் படும் படி அப்பா .
நான் சோர்ந்து தலை சாய்க்கும் போது கொண்டு வந்த ஹார்லிக்ஸ்சை ஆசிரியரிடம் கொடுத்து அனுப்பி குடிக்கச் சொல்வார்கள். பாடங்களை நான் படிக்க முடியாததால் அப்பாவும் அம்மாவும் மாடியில் இருந்த என்னருகே வந்து வாசிப்பார்கள். கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த நாளிலேயே படுத்துக் கொண்டே ஜெயித்தவள் நான். 😀. உன் முன் தைர்யமா இருந்து கீழே போய் அப்பா அழுவாங்கன்னு பின்னாளில் அம்மா சொல்வாங்க.
அப்போ ரிசல்ட் மார்க் எல்லாம் வர நாளாகும். மார்க் வந்ததும் எங்க அப்பா என்னைத் தூக்கி ஒரு சுற்று சுற்றினாங்க. கணக்கில் 100/100. ஆங்கிலத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண். மொத்த மார்க் 486/600 . 81%
அதன் பிறகு B Sc., B. ed., என படித்தாலும் அந்த பள்ளி மதிப்பெண்ணின் அடிப்படையில் கிடைத்த வேலை தான் தொலைத் தொடர்பு. 81% + 10% (டிகிரி முடித்ததற்காக) . வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் வந்தேன். ஒருவர் கிடைத்த வேலையில் சேராததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பின் அரசுத் தேர்வு எழுதி அதிகாரியும் ஆனேன்.
அந்த உயர்வைப் பார்க்க தகப்பன் சாமிக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை.
14 June, 2025
# ST. Thomas Mount
4 ஆம் நாள் பதிவாக இருந்தாலும் போனது முதல் நாளில். உறவினர் வீட்டுத் திருமணம் சென்னையில் ST. Thomas Mount இல். அவர்கள் CSI. அந்த சர்ச் மலை அடிவாரத்திலிருக்கிறது. மலை மேல் RC Church. நான் ஒரு வருடம் சென்னையில் டிரெயினிங்கில் இருக்கும் போது போயிருக்கிறேன். படி வழியாக ஏறி. இடம் கொஞ்சம் ஒதுக்குப் புறமாய் இருப்பதால் அங்கங்கே காதல் ஜோடிகள். இப்போ காலச் சூழ்நிலையால் கூடியிருக்கலாம். இல்லை மக்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால் குறைந்திருக்கலாம். தெரியவில்லை. நாங்கள் காரிலேயே மலை முகடு வரை சென்று விட்டதால் ஒரு பதினைந்து படிகள் மட்டும் ஏற வேண்டி இருந்தது.
கடந்த மாதம் தான் பஸிலிக்காவாக (திருத்தலமாக ) போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்ச் இடித்துக் கட்டும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. மேலிருந்து நகரமும் வானூர்தி நிலையமும் பார்க்க கொள்ளை அழகாய் இருக்கும். அதுவும் இரவு நேரத்தில். மூன்று நிமிட வீடியோ என் chellanaikutti youtube channel இல் இணைத்திருக்கிறேன் பாருங்கள்.
அடுத்து ரிசப்ஷன் AVM Gardens vada palani. உள்ளே போகும் போதே மேலே உள்ள உலக உருண்டை என் பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் சென்றது. அப்பா தெரிந்தவர் மூலம் ஷூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்கள். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டிங் அலங்காரம் மட்டும். மஞ்சுளாவோடு படிகளில் ஏறி நடனம் ஆடுவார். அந்த இடம்.
இன்னொன்று ஜெய்சங்கர் நடித்த நூற்றுக்கு நூறு. அது ஷூட்டிங் பார்த்தோம். சலித்தோம். ஒரு வசனத்தை எத்தனை முறை ரீடேக். அப்பப்பா!!
இப்பொழுது முன் பாதியில் காவேரி மருத்துவமனை இயங்குகிறது. பின் பாதியில் தான் பஃபே. நல்ல வேளையாக மழை இல்லை.
புனித தேற்றரவு அன்னை ஆலயம் என்று ஒன்று காரைக்காலில் இருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பழமையான சர்ச். இந்த ஆலயத்தின் பெயர் அதிகம் கேள்விப்படாதது. 1739 இல் ஒரு சின்ன ஆலயமாக தொடங்கி இருக்கிறது.
காரைக்காலில் லகட் ஹவுஸ், படகுத்துறை, பீச் என்று நேரம் கழிக்க இடங்கள் உள்ளன. வண்ணமடித்த படகுகள் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது வானவில் இறங்கி வந்து கடலில் நீந்துவது போல் இருந்தது.
அழகை ரசிப்பவர்கள் தூசியும் துரும்பும் கூட அழகு தான்.
ஐந்தாம் பதிவு நான் ராஜஸ்தானில் பயணித்த போது நடந்த திடுக்கிடும் நிகழ்வை சொல்லி நிறைவு செய்கிறேன்
13 June, 2025
விமான விபத்து 12.6.2025
(அகமதாபாதிலிருந்து லண்டனுக்கு மதியம் 1.38 க்கு கிளம்பியது
ஏர் இந்தியா விமானம். நான்கு நிமிடங்களுக்குள் எரிந்து கீழே விழுந்தது. அவசர வழி வழியாக குதித்துத் தப்பிய ஒருவரைத் தவிர 241 பேரும் மரணம். 😭)
# விமான விபத்து.( 12.6. 2025)
எல்லா பறவையும்
சிறகை விரிப்பதைப்
போலத் தானே
நானும் விரித்தேன்.
சிறுவர்கள்
கற்பனையில்
கார் ஓட்டுவதைப்
போலத் தானே
உற்சாகமாய்
மேலெழும்பினேன்.
ஒரு தாய்
தன் கருவில்
தாங்குவதைப்
போலத்தானே
அத்தனை பேரையும்
கரை சேர்க்க நினைத்தேன்.
சில ஆண்டுகள்
தனிமையில் வாடிய
என் மகன்
சந்தோஷமாய் தன்
மனைவியோடும்
மூன்று குழந்தைகளோடும்
ஏறினானே.
உலகத்திலிருந்தே
விடை பெறப் போவதை
அறியாத
இரண்டு செல்வங்கள்
"குட் பை இந்தியா"
என உற்சாகமாய்
விடை கொடுத்து
ஏறினார்களே!!
எல்லா நிலை மாற்றியும்
இயங்க மறுக்கிறதே
என சலிப்போடே
தன்
பயணத்தை
தொடங்கினானே
ஒருவன்.
உழைப்பாளர்
தினமாக
உற்சாகமாக
இருந்தது போய்
"மே தின அழைப்பு"
அலமந்து போய்
கொடுத்தானே
என் செல்வம்.
என்னோடிருந்தவர்கள்
மட்டுமின்றி
"சிவனே" ன்னு
நின்றவர்களையும்
அல்லவா காவு
கொடுத்து விட்டேன்.
மறைந்தவர்களின்
குடும்பத்து உறவுகள்
எப்படி
மீளப் போகிறார்கள்
இருந்தும் செத்தவர்கள்
அல்லவா அவர்கள்.
***( SOS னு அவசரத் தேவையில் இருப்பவர்கள் குரல் கொடுப்பதை அறித்திருக்கிறோம். "மே டே கால்" என்று ஒரு அறிவிப்பு இருக்கிறதாம். வேற வழியில்லை. நாங்கள் சாகப் போகிறோம் என விமான ஓட்டி அறிவிக்கும் அறிவிப்பாம் அது. அதைக் கொடுத்திருக்கிறார் விமான ஓட்டி. உற்சாகமாக புறப்பட்ட சில நொடிகளுக்குள் விமானத்தின் பழுது புலப்பட்ட அந்த நரக நொடி எப்படி இருந்திருக்கும்.)
*** (விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் அங்கே இருந்த சிலரும் மரணம்)
11 June, 2025
# ரயில் பயணங்களில்
இந்த தலைப்பு என்னை நாற்பதாண்டுகளுக்கு முன் கொண்டு விட்டுத் திரும்பியது.
அப்போ எனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்து, என் கணவர் வேலைக்குச் சென்று, இரண்டாவது குழந்தையும் வயிற்றில்.
அம்மா இன்னும் என் கணவருடன் சுமுகமாகவில்லை. அப்போ நாகரகோவிலில் நான் இருந்தால் வயிற்றில் குழந்தையுடன் முதல் குழந்தையைப் பார்ப்பது படினம் என்பதால் பாளையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கணவர் கேரளாவில் இருந்து வரும் போது மட்டும் அங்கே போவேன். மற்ற நேரங்களில் அம்மா வீட்டில் இருப்பேன்.
அங்கிருந்து நாகர்கோயிலுக்கு தினம் ரயிலில் பயணம். பல இடங்களிலிம் பணி புரிபவர்கள் ஒன்றாக வந்து சேர்வார்கள். ஒரே பெட்டியில் ஏறி விடுவோம். அமர்க்களம் தான். நான் மட்டும் தான் திருமணமாகி வயிற்றில் குழந்தையோடு. ரொம்ப நல்லா கவனிச்சுக்குவாங்க.
என் பெண் பிறந்தது ஜனவரி 19. அக்டோபர் 31 ஒரு முக்கியமான தினம் . ஆம் அன்னை இந்திராவை சுட்டுக் கொன்று விட்டார்கள். ஒரே பரபரப்பு. மாலை ரயில் ஓடுமோ என மதியமே எல்லோரும் கிளம்பி ஸ்டேஷன் வந்திடுங்கன்னு சொல்லிட்டாங்க. நான் ஆட்டோவில் போகிறேன். அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் அரை மணி நேரம் பயணம். ஆட்டோவை கலகக்காரர்கள் வழி மறிக்கிறார்கள். புள்ளத்தாச்சின்னு சொன்னபடியேஆட்டோக்காரர் பத்திரமா கொண்டு ரயில் சேர்க்கிறார்
நெல்லை சென்று சேர்ந்து விட்டோம். பஸ் எல்லாம் நிறுத்தி விட்டார்கள். மறு நாள் நவம்பர் 1 நாகர கோயிலுக் கு முதன் முதலாக ரயில் விட்ட தினம். கொண்டாடுவதற்காக தோவாளை என்னும் இடத்தில் பூ கேட்டிருந்தோம். அவர்கள் கொடுத்து விட்ட பூக்குவியலை அப்படியே கூடையோடு பஸ் ஸ்டான்டில் வைத்து விட்டு நடக கத் தொடங்கினோம். அங்கிருந்து எங்க வீட்டுக்கு அரை மணி நேரம் நடக்கணும்.
முத்து என்றொரு நண்பர் வங்கி ஊழியர் உடன் வந்தார். வீட்டில் எங்க அம்மாவிடம் என்னை ஒப்புவித்து "இப்போ தான் அப்பாடான்னு இருக்குது" என்றபடி வீட்டிற குச் சென்றார்.
மறக்க முடியாத ரயில் நட்புகள்
10 June, 2025
Su sheela Sujeeth மராத்தி படம்
Su sheela su jeeth
இயக்குநர் : இரண்டு மராத்தி பிலிம்ஃபேர் விருதுகளும், ஒரு தேசிய விருதும் பெற்ற பிரசாத் ஓக்.
முக்கிய கதாபாத்திரங்கள் : சோனாலி குல்கர்னி, ஸ்வப்னில் ஜோஷி, ராஜேந்திர ஷிசத்கர்.
பாடல்களும், படப்பிடிப்பும் அருமை.
இது ப்ரைமில் உள்ள ஒரு மராத்திப் படம். மலையாளப் படங்களைப் போலவே மராத்தியிலும் நுணுக்கமான பிரச்னைகளை கையாண்டு , மிக ஆழமாக, அழகாக ஆராய்ந்து படம் எடுப்பார்கள். இதுவும் அத்தகைய ஒரு படம் தான்.
சந்தேக புருஷன். அவன் சந்தேகத்துக்கு ஒரு காரணம் இருக்கிறது. மனைவி திருமணத்துக்கு முன் ஒருவரைக் காதலித்தது கணவனுக்குத் தெரியும்.
வேலைக்கு கிளம்பும் நேரம் பாத்ரூம் பைப்பை சரி செய்ய வருபவர் மனைவியின் பழைய காதலனைப் போலவே இருப்பதால் இவர்கள் இருவரும் தனிமையில் என்ன செய்வார்கள் என்ற கணவனின் கற்பனையில் திரைப்படத்தில் சில காட்சிகளைப் புகுத்தி ஒரு டாக்குமென்ட்டரி மன நிலைக்கு நாம் போய் விடாமல் காக்கிறார்கள். நகைச்சுவைக்கும் வழி வகுக்கிறார்கள்.
இன்றைய பல வீடுகளில் ஆட்டோமாடிக் கதவு இருக்கிறது. அதனாலேயே அவசரத்துக்கு, அதாவது திறவுகோல் உள்ளே இருக்கும் போது கதவு மூடி விட்டால் திறப்பதற்கு நண்பர்கள் வீடுகளில் மாற்று திறவுகோல் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் வீட்டிலோ பாத்ரூமின் கதவு இவர்கள் இருவரும் உள்ளே இருக்கும் போது ஆட்டோமாடிக்காக மூடி விடுகிறது. பக்கத்தில் யாரையும் உதவிக்கு அழைத்து விட முடியாத படி 15 (அ) 20 மாடிகள் உள்ள உயரமான கட்டடம். பிரச்னைகளை ஆழமாக ஆராய்ந்து எடுப்பார்கள் என்று சொன்னது சரியாப் போச்சுதா?
ஒரு பிரச்னையை மையக் கருவாக வைத்துக் கொண்டு நிகழ்வுகளை அதைச் சுற்றி நகைச்சுவை கலந்து பின்னியும் இறுதியில் தொடர்பு கொள்ளுதல் ( communication) என்பது எவ்வளவு முக்கியமானது என்ற மிக அழகான வாழ்க்கைப் பாடத்தையும் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
படங்களுக்கு பெயர் வைக்கும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கரை காட்டலாமோ எனத் தோன்றுகிறது.
பாருங்கள். பலர் ரசிக்கலாம். ஒரு சிலர் திருந்தக் கூடச் செய்யலாம்.
09 June, 2025
#நாகூர் தர்கா & காரைக்கால் அம்மையார் ஆலயம்.
3 ஆம் நாள் காரைக்கால் அம்மையார் ஆலயம் & நாகூர் தர்கா
பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தொலைவில் காரைக்கால் இருக்கிறது. காரைக்கால் அம்மையாரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதால் அவர்கள் பெயர் கொண்ட ஆலயத்தை பார்க்க முடிவு செய்தோம். சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் முடிந்து உள்ளதால் புதிதாக பெயின்ட் அடித்து பள பளவென்று இருந்தது கோயில். 63 நாயன்மாரில் மொத்தம் மூன்று பேர் பெண்கள். இவர் அவர்களுள் ஒருவர். பெரிய சிவ பக்தை.
இவரது இயற் பெயர் புனிதவதி. இவர் காரைக்காலில் கிபி 300 யிலிருந்து 500 க்குள் பிறந்திருக்கலாம் என்கிறார்கள். பேரழகும் தெய்வீக அம்சமும் கொண்டவர். இவர் கயிலை மலையில் கைகளால் "நடந்து" சென்று சிவபெருமானைக் காண விரும்பியதால் சிவனே இவரை "அம்மையே " என அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் முக்தி பெற்ற இடம் திருவாலங்காடு. இவர் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வொன்றின் நினைவாக காரைக்காலில் மாங்கனித் திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. வேற எங்கேயும் அம்மையாருக்கு கோயில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
காரைக்காலில் வெளி நாட்டுப் பொருட்கள் கிடைக்கும் என ஆசைப்பட்டுத் தேடினேன். அவ்வளவு திருப்தியாக எதுவும் கிடைக்கவில்லை்
அடுத்த நாங்கள் சென்ற இடம் காரைக்காலில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள நாகூர். அங்கே உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா. இது நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள ரொம்ப பிரபலமான ஒரு இடம். சுபி துறவி சையத் சாகுல் ஹமீது அவர்களின் கல்லறையின் மேல் கட்டப்பட்டது. இங்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. நம் நட்பில் இருக்கும் நண்பர்களுக்காக அங்கேயும் சென்று ஒரு வீடியோ எடுத்திடுவோம்னு போனோம்.
என்னுடைய "chellanaikutti" என்னும் யூட்யூப் சானலில் பாருங்கள்.
மிக உயரமான தர்கா.
நெருக்கமான தெருவுக்கு நடுவில் இருக்கிறது. உள்ளே போகு முன் கை கால் கழுவி உள்ளே வரச் சொல்கிறார்கள். நம் காலடிகளை கழற்றி விட ஒரு இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
மயில் பீலியால் தலையை வருடி நம் பெயர்களைக் கேட்டு சில மந்திரங்கள் சொல்கிறார்கள்.
பசித்தவர்களுக்கு உணவளிப்பதாகச் சொல்லி பண உதவி கேட்கிறார்கள். விரும்பினால் கொடுக்கலாம்.
அழகான கண்ணாடி அலங்காரங்களால் மேற்கூரை அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அனைவரும் வெளிப்புறம் அமர்ந்திருக்க கருவறை போன்ற ஒரு அறைக்குள் ஆண்கள் செல்கிறார்கள். இரண்டு அறைகள் சாத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதை அங்கே வருபவர்கள் தொட்டுக் கும்பிட்டு செல்வதைப் பார்த்த நான் விவரம் கேட்டேன் அது இருவரை அடக்கம் செய்த இடம் என்று சொன்னார்கள். ஆண்டு தோறும் சந்தனக் கூடு என்னும் திருவிழா நடக்கிறது.
பக்கத்திலேயே தான் திருநள்ளாறு இருக்கிறது. ஹிந்துக்கள் சனிப் பெயர்ச்சி சமயங்களில் தரிசிக்கும் ஆலயம்.
இதைத் தவிர ஏடுகளை எடுத்து நம் முன் ஜென்ம பலன்களை சொல்லும் வைத்தீஸ்வரன் கோவிலும் அருகிலேயே உள்ளது.
காரைக்காலில் இருந்து பாண்டி திரும்பும் வழியில் சாலையை நோக்கிய படி பிரம்புக் கடைகள் இருக்கின்றன. ஏகப்பட்ட பிரம்பு சாமான்கள் வைத்திருக்கிறார்கள். பார்க்கலாம் . வாங்கலாம்.
நாளை சென்னை AVM Gardens பற்றியும் , St. Thomas Mount பற்றியும், புனித தேற்றரவு அன்னை ஆலயம், காரைக்கால் பற்றியும் சொல்கிறேன்.
08 June, 2025
# 2 ஆம் நாள் டேனிஷ் கோட்டை.
பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தூரத்தில் இருக்கும் இடம் காரைக்கால். பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி நாலு இடங்கள் சேர்ந்து பிரெஞ்சு யூனியன் பிரதேசம். மாகி, ஏனாம் இரண்டு இடங்களையும் வரிசையில் வைத்திருக்கிறேன். பார்த்து விட வேண்டும்.
காரைக்கால் போகும் வழியில் தரங்கப்பாடி என்றொரு இடம் உண்டு. இது மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது. அங்கே டேனிஷ் கோட்டை இருக்கிறது. சிறிய அளவில் தான் இருக்கிறது. அந்த காலத்தில் கடல் வழி கப்பலில் வரும் தளவாடங்களை இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள். கடலை நோக்கிய வண்ணம் இரண்டு பழைய கால பீரங்கிகளை வைத்திருக்கிறார்கள். பழைய காலப் பொருட்கள் , இப்பொழுது கடல் மேலேறி வந்து வந்து கோட்டையை நெருங்கி விட்டது. ஆனால் மற்ற கடற்கரைகளைப் போல கல் வேலி கட்டி மறிக்காததால், தாய்மடியில் குழந்தை குதூகலிப்பதைப் போல நீரோடு விளையாட முடிகிறது.
இங்கு தான் இந்தியாவில் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிட்டதாகச் சொல்கிறார்கள்.
கோட்டைக்கு போகும் வழியில் ஒரு வாயில் இருக்கிறது. அது அந்த கால அரண்மனை வாயிலை நினைவுபடுத்துகிறது. 1718 இல் கட்டப்பட்ட ஒரு. சர்ச் இருக்கிறது. பழைய கட்டடங்களை அப்படியே பழைமையோடு பாதுகாக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த வழியில் உள்ள கட்டடங்கள் எல்லாம் பெயின்ட் செய்யப்பட்டு புதிதாக இருக்கின்றன. . அதனால் பழமை மாறியது போல் தான் தெரிகிறது. பதிக்கப்பட்ட வருடங்களை வைத்துத் நான் முந்நூறாண்டு பழமையானது எனத் தெரிகிறது.
முன்தன் முதலில் பெண்களுக்கான செகன்டி கிரேட் டிரெயினிங் பள்ளி இங்கு தான் வந்ததாகச் சொல்கிறார்கள். கோட்டைக்குள் செல்ல ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். காலை பத்து மணி முதல் மாலை 5.45 வரை உள்ளே இருக்கலாம்.
மற்ற எல்லா பீச்களிலும் இருப்பது போல தள்ளு வண்டிகளில் மாங்காய் பத்தை, ஐஸ், போன்ற தின்பண்டங்களும் கிடைப்பதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை ரசிக்கலாம்.
கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடமாடிய மக்கள் கால் வைத்த இடங்களில் நாமும் வைத்திருக்கிறோம் என்பதே பரவச உணர்வைத் தரும்.
வாசிப்பதைப் போலவே கண்களுக்கும் விருந்து அளிக்க chellanaikutti என்னும் என் யூட்யூப் சானலில் பார்க்கலாம். எழுத்துக்களை நான் கொடுத்திருப்பது போலவே கொடுத்தால் வந்து விடும்.
நாளை காரைக்கால் அம்மையார் ஆலயமும், நாகூர் தர்காவும் பற்றிய தகவல் கள் தருகிறேன்.
05 June, 2025
# பயணக் கட்டுரை.
பயணங்கள் நம் மனதில் அடைந்து கிடக்கும் சோர்வெனும் ஒட்டடையை சுத்தம் செய்து மிச்ச வாழ்வை புத்துணர்வோடு கொண்டு செல்ல உதவும்.
பணியில் இருக்கும் வரை இதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இருந்ததில்லை. மத்திய அரசு அலுவலகத்தில் நாலாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் சென்று வரும் தொகையைத் தந்து விடுவார்கள். அப்படி ஒரு வசதி இருந்தும் நாங்கள் சென்றதில்லை. என் கணவருக்குப் பயணங்கள் பிடிப்பதில்லை. நானோ அலுவலகமே கதி என்றிருந்தேன்.
ஓய்வு பெற்ற பின் இருவர் மனமுமே கொஞ்சம் மாற்றம் அடைந்தது. வருடத்துக்கு இரண்டு முறை எங்கேயாவது சுற்றுலாவாக போய் வருவது என முடிவெடுத்தோம். ஒரு முறை பெங்களூர் சென்று மகள் குடும்பத்துடன் கொஞ்ச காலம் கழிப்பது. ஒரு முறை விடுமுறைக்கு மகள் குடும்பம் எங்கள் வீட்டிற்கு வருவார்கள் ஆக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரொட்டீன் வாழ்க்கையில் இருந்து மாற்றம் கிடைக்கும். அது மனதை உற்சாகமாக வைத்திருக்கும் என்று முடிவு செய்தோம்.
நல்ல பலன் கிடைத்தது. ஆரம்பத்தில் எனக்காக வந்த என் கணவர் போகப் போக அவரே எங்கே போகலாம் என யோசிக்கத் தொடங்கினார். பலரும் ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்த காரியம் தான் நாங்கள் ஓய்வு பெற்ற பின் தொடங்கினோம். Better late than never.
சமீபத்தில் ஒரு ஐந்து நாள் பயணம் சென்று வந்தோம். அதைப் பற்றி ஒரு பயணக் கட்டுரை எழுதலாம் என நினைக்கிறேன். மக்கள் விருப்பம் பார்த்து போய் வரும் இடங்களைப் பற்றியும் அங்கு நேர்ந்த நிகழ்வுகள் பற்றியும். எழுதுகிறேன்.
இந்த முறை பார்த்த இடங்கள் சென்னை, பாண்டிச்சேரி, தரங்கம்பாடி,காரைக்கால் , நாகூர், வேளாங்கண்ணி. நான் பொதுவாகவே கடவுள் நம்பிக்கை உடையவள் ஆதலால் தேவாலயம் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இந்த முறை ஒரு வித்தியாசமாக வேற்று மதத்திலும் இருக்கும் நம் நண்பர்களுக்காக ஹிந்து, கிறிஸ்டின், முஸ்லிம் என மூன்று மத நண்பர்களும் பார்ப்பதற்கான மத வழிபாட்டு தலங்களை கவர் செய்தோம். வீடியோக்களை என் யூட்யூப் சானலில் பதிவேற்றவும் உதவியது.
இன்னுமொரு வழக்கம் உண்டு. யார் வீட்டில் தங்கி இருந்து இடங்கள் சுற்றி பார்க்க செல்கிறோமோ அந்த குடும்பம் மகிழ்வோடும் ஆரோக்கியத்தோடும் இன்னல்கள் இன்றி வாழ வேண்டுமென ப்ரார்த்தித்து நான் செல்லும் சர்ச்களில் பூஜைக்கு கொடுப்பேன்.
அது அப்படி ஒரு மன நிறைவைத் தரும்.
இந்த முன்னுரையோடு நாளை டேனிஷ் கோட்டை பற்றி எழுதுகிறேன். தங்கள் கருத்தை பகிருங்கள். விமர்சனங்கள் தானே எழுத்தின் தரத்தைக் கூட்டும். எதிர் நோக்கி இருக்கிறேன்
Subscribe to:
Posts (Atom)