18 April, 2026
"பிரமிக்க வைத்த பிரபலம்"
முக நூல் தந்த வரங்களில் மிகப் பெரியது யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நெருங்கிப் பேசி விடலாம்.
அப்படி எனக்கு பலர் அறிமுகமாகி இருந்தாலும் நான் சொல்லப் போகிறவர் அதையெல்லாம் தாண்டி உயர்ந்தோங்கி நிற்பவர். இவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளரின் மகன். தன் சிறு வயதிலேயே ஒரு பாப்புலாரிட்டியை பார்த்து வளர்ந்தவர். ஆனால் அந்த பெருமிதம் அவரிடம் கொஞ்சம் கூட இருக்காது.
பரந்த வாசிப்பு உடையவர். மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர். இதையெல்லாம் தாண்டி மிகவும் ருசியாக சமைக்கத் தெரிந்தவர். நான் பிரமித்த முக்கியமான விஷயம் என்னவென்றால் ஈகோ கிஞ்சித்தும் இல்லாதவர். தான் ஆண் என்ற அகந்தை அற்றவர்.
இவர் அசோக் லேலான்டில் பணி புரிந்த போது இவர் மனைவி வங்கி மேலாளர். எனக்கு இந்த வேலை நல்லாத் தெரியும் மனைவிக்கு இந்த விஷயம் நல்லாத் தெரியும். அவரவருக்குத் தெரிந்த பொறுப்பு இரண்டு பேரும் எடுத்துக் கொண்டோம். இதில் ஆண் என்ன பெண் என்ன என்பார்.
பல பிரபலங்கள் இவர் வீட்டிற்கு வந்து தங்கி இருக்கிறார்கள். பல பிரபலங்களின் தனிப்பட்ட அலைபேசி எண் இவரிடம் உண்டு. யாரையும் தானாய் அழைத்து பேச மாட்டார்.
இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் தந்தை பற்றிய செய்தி தாய் பற்றிய செய்தி ஏன் பாட்டி பற்றிய செய்தி கூட அருவி போல் கொட்டும். நாம் உம் மட்டும் கொட்டிக் கொண்டிருந்தால் போதும்.
நான் இவர் வீட்டுக்குச் சென்று திரும்பும் போது இவர் கொடுத்து விட்ட பொருட்கள் தாய் வீட்டு சீதனம் போல் இருந்தது. மனதிலிருந்து "அண்ணா " என்று நான் அழைக்கும் ஒரு நபர். " உன் மனைவியைத் தவிர மற்ற பெண்கள் அனைவரையும் சக்தியின் வடிவமாகத் தான் பார்க்கணும் " என்று இவர் அப்பா சொல்லி வளர்த்திருக்கிறார் . அப்படியே வளர்ந்திருக்கிறார்.
இவருக்கு ஒரே ஒரு பெண். அவள் இப்போ பல் மருத்துவர். நான் நினைப்பேன் இவருக்கு ஒரு மகன் இருந்திருந்தால் சமுதாயத் துக்கு ஒரு நல்ல ஆண் மகன் கிடைத்திருப்பான்.
நான் பிரமித்துப் பார்க்கும் அந்த பிரபலம் பிரபல எழுத்தாளர் லா.ச.ர அவர்களின் புதல்வன் எழுத்தாளர் சப்தரிஷி. இவர் தன் பரந்த மனதின் முக்கியம் கூட தெரியாமல் ஒருவரை யொருவர் அன்பு செய்வது என்பது அவ்வளவு பெரிய விஷயமா என சாதாரணமாக கடந்து செல்வர்.
அவர் எனக்கு நண்பரானது முக நூல் எனக்கு செய்த அருந் தவப் பயன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!