Bio Data !!

06 September, 2026

உள்ளம் நொறுங்காமலிருக்க உடைத்துப் பேசுவோம் பாகம் ஒண்ணு. பெண்கள் வேலைக்கு போகணும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேணும். பெண்கள் முன்னேறணும்னு பேசும் போதெல்லாம் சந்தோஷமாத் தான் இருக்குது. ஆனால் அந்தப் பெண்கள் மாதாந்தர நோவினால் படும் அவஸ்தைகளை நினைத்துப் பார்க்கிறோமா? இப்போ ஒரு சில பதிவுகளைப் பார்த்ததால் எனக்கும் எழுதத் தோன்றியது. ஆரம்ப காலங்களில் பெண்கள் பழைய துணியைப் பயன்படுத்தினார்கள். அது எந்த அளவுக்கு சுகாதாரமாய் இருந்திருக்கும்னு இப்போ நினைச்சாலே நடுங்குது. (நாப்கின் கண்டு பிடிச்ச மகராசனை கை எடுத்து கும்பிடணும். ) அந்தத் துணியை நம்ம சொந்த வீடே ஆனாலும் மறைவாய் பிறர் கண்ணில் படாமல் அலசிக் காயப் போட அவ்வளவு சிரமப்படணும். பதிமூணு பதினாலு வயதில் தண்ணீரை ஊற்றி காலால் தேய்த்து அதன் பின் சோப்பு போட்டு துவைப்பது மனதைக் கல்லாக்கும் முதல் கட்டம். துவைத்தாலும் கறையின் வெளிவரி மறையாமல் தான் இருக்கும். காற்றடிக்கும் போது வரும் மெல்லிய நாற்றம் உள்ளூர கூச வைக்கும். சகோதரர்களோடு பிறந்த பிள்ளைகளை, பொதுவான கழிவறை கொண்ட காம்ப்பௌண்ட் வீடுகளில் வாழ்ந்த பெண் பிள்ளைகளின் நிலை நினைத்தால் கண்ணில் இரத்தமே வரும். அந்த அழுத்தமான துணி பட்டு தொடையின் உள் பக்கம் சில நேரம் ரணமாகிப் போகும். ஒரு சிலருக்கு அந்த நேரத்தில் தொடை ஒன்றோடொன்று உரசுவதால் தீப்பட்டது போல் எரியும். இந்தக் கஷ்டங்கள் தான் காரணமோ பல பெண் குழந்தைகள் தாம் பெரிய பொண் ஆகி விட்டோம் என்று அறிந்ததும் அழும். காரணம் கேட்டால் தெரியாது. இப்போ பரவாயில்லை. ஓரளவு விளம்பரங்கள் பார்த்து விஷய ஞானம் கொஞ்சம் இருக்குது. அதெல்லாம் தான் மாறிடுச்சே அப்புறம் ஏன் பதிவு? இன்னும் பேச வேண்டிய விஷயங்கள் , அனுசரணையோடு பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏகமாய் இருக்குது. சில பெண் குழந்தைகளுக்கு முதல் முறை இரத்த கசிவு வந்த பிறகு சில மாதங்கள் வராது. அதன் பின் தொடர்ந்து வரத் தொடங்கும். ஆனால் ஒரு சிலருக்கு அப்போதே மாதா மாதம் வரத் தொடங்கி விடும். பன்னிரெண்டு வயது தொடங்கி ( இப்போது பத்து வயதுக் குழந்தைகளே மெச்சுவர்ட் ஆகி விடும் பரிதாபம்) கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் விக்ரமாதித்தன் வேதாளத்தைச் சுமந்தது போல் இந்த துயரத்தைச் சுமக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு சில மாதங்கள் வராமலே இருந்து பின் அதிகமாக இரத்தப் போக்கு இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு மாதம் தோறும் முதல் அல்லது இரண்டாம் நாள் கடுமையான வயிற்று வலி இருக்கும். மாதா மாதம் அன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்து வந்த பின் ஆசிரியர்களிடம் திட்டும் வாங்கிக் கட்டுவாள். சிலருக்கு முந்தின மாதம் வந்த தேதியில் இருந்து 28, 29, 30 இவற்றில் ஏதாவது ஒரு முறையில் மாதம் தோறும் வரும். அப்படி வந்தால் சிறப்பு. அப்படி இல்லாமல் தாறுமாறாக வந்தாலோ அதிகப்படியான அடி வயிற்று வலி வந்தாலோ தாமதிக்காமல் பெண் மருத்துவரை அணுகுங்கள். நீர்க்கட்டிப் பிரச்னைகளோ அல்லது வேறு ஏதாவது பிரச்னைகளோ இருந்தால் ஆரம்பத்திலேயே , அல்லது திருமணம் செய்து கொடுக்கும் முன்பாவது சரி செய்து விட வேண்டும். திருமணமாகி குழந்தை பிறக்காமல் தவிக்கும் பல பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது. மனித குலம் தழைக்க இந்த வேதனை கடக்கும் பெண்களுக்கு வீட்டிலோ சமுதாயத்திலோ சுய மரியாதையாவது தரப்படுமா என்றால் அதுவும் இல்லை. ஏன் பெண் குழந்தைகளுக்கு மட்டும் தான் பிரச்னையா ஆண் குழந்தைகளுக்கு இல்லையா என்றால் அவர்களுக்கும் வேறு விதமான பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையும் பேசுவோம். பேசத் தோன்றும் போதெல்லாம் எழுதுகிறேன். நீங்களும் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!