Bio Data !!

Showing posts with label தெரிந்து கொள்வோமே. Show all posts
Showing posts with label தெரிந்து கொள்வோமே. Show all posts

23 May, 2011

அவரை விதை அரக்கர்கள் !!

ரொம்ப நாள் ஆச்சு உடல் உறுப்புகளிடம் நாம் பேசி, நம்மிடம் அவை பேசி,

சிறு நீரகம் சம்பந்தமான நோய்கள் பற்றிய சிந்தனை மனதில் எழும் போதெல்லாம் எழுத நினைப்பேன், தட்டிப் போகும். இன்று உச்ச நடிகரின் சுகவீனம் பலருக்கு இறைவன் பற்றிய நம்பிக்கையை உயர்த்தி உள்ள நேரம் சிறு நீரகம் பற்றி நாம் தெரிந்து கொள்ள சரியான நேரம். 

 நான் சிறு நீரகத்திடம் கேட்ட சில கேள்விகளும் அது தந்த பதில்களும் கீழே உங்கள் பார்வைக்கு:

1) எங்களின் உங்களை பார்க்கத்தான் முடியல நீங்களே சொல்லுங்க நீங்க எப்படி இருப்பீங்க? 
                                    நாங்கள் இரட்டையர்கள், உங்கள் முஷ்டியின் அளவு தான் எங்கள் முழு அளவும். நிறம் கருஞ் சிவப்பு, உருவம் அவரை விதை வடிவில், சிறுநீர் என்ற கவர்ச்சியற்ற திரவத்தை உருவாக்குவதால் சுய கவர்ச்சி இழந்த ஒரு உறுப்பு. 

2 ) உங்கள் பணி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
                                      ஒரு சுத்திகரிப்பு ஆலையின் நேர்த்தியோடு எங்களுள் தொடர்ந்து பாயும் இரத்தத்தை சுத்தம் செய்து, கசடுகளை வடிகட்டி அனுப்புகிறோம். உடலின் நீரின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறோம். அதிகப்படியான பொட்டாசியம், விட்டமின்கள், அமினோ ஆசிட், க்ளுகோஸ் போன்றவற்றை பிரித்து சிறு நீரின் வழியாக வெளியேற்றுகிறோம். அவற்றின் அளவு குறையும் போது ஒரு கஞ்சனின் கருமித்தனத்தோடு இருப்பதை பத்திரமாக சேமிக்கிறோம்.

3 ) உங்கள் பணியில் நீங்கள் சந்தித்த சவால்களைப் பற்றி கூறுங்களேன்.
                                       நீங்கள் உண்ணும் உணவில் ப்ரோட்டீன்களில் ஜீரணமானது போக மிச்சமான யூரியா தான் எங்களுக்கு மிகப் பெரிய சவாலான கழிவு. அதை வெளியேற்றச் செய்யும் முயற்சியிலேயே தான் நாங்கள் தளர்ந்து போகிறோம், 

4 ) எங்கள் கோபம் உங்களைப் பாதிக்கிறதா?
                                        ஆமாம்க ஆமாம், உங்கள் அதிகப் படியான கோபம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலின் பல பாகங்களுக்கு அதிக இரத்தம் பாய்கிறது, அப்படியே எங்களுக்கும். அதிக இரத்தம் பாய்வதால் அதிக சிறுநீர் பிரிக்கப்படுகிறது. அதிகப் பணி அழுத்தத்தால் மேலும் தளர்ந்து போகிறோம். 

5 ) நீங்கள் சந்தித்த வேறு ஏதாவது சிக்கல்கள் பற்றிச் சொல்லுங்களேன்.
                                             முன்ன மாதிரி இல்லாம இப்போ அதிகம் தண்ணீரே குடிக்கிறதில்லை. ஒன்று சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை, மற்றொன்று குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறையில் அநேகம் பேர் பணி புரிவதால் அவர்களுக்கு தாகமே எடுப்பதில்லை. தாகம் நமது உடலின் நீர்த் தேவையை நமக்கு உணர்த்தும் ஒரு கருவி. அதை இன்று நாம் காயடித்து வைத்திருக்கிறோம். குடிக்கும் நீரின் அளவு குறையும் போது சிறு நீரின் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. அதனால் அது வெளியேறும் போது எரிச்சலை தருகிறது. 
                                                  மேலும் கல் அடைப்பு ஏற்பட ஏதுவாகிறது. சிறிய அளவில் சிறுநீரில் கற்கள் இருந்தால் நீங்கள் அறியாமலே வெளியேறி விடும். அதுவே கொஞ்சம் பெரிசா பட்டாணி அளவில் இருந்தால் வெளியேறும் போது அதிக வலியைத் தரும். ஒரு கட்டத்தில் திராட்சை பழத்தின் அளவிற்கு வளர்ந்து விட்டால் அதை நீக்க அறுவை சிகிச்சையே தேவைப்படும். 

6) எங்களுக்கு குறிப்பாக எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?
                                                   நாங்கள் இருவராய் இருப்பதால் முடிந்தவரை ஒருவர் பணி செய்ய முடியாமல் போனாலும் மற்றவர் அதை சேர்த்துக் கட்டி இழுத்து செல்கிறோம். அதனால் உங்களுக்கு எங்கள் சோர்வு தெரியாமலே போகிறது. வயதாகும் போது எங்களுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறைவதாலும் எங்கள் செயல் திறன் குறைந்து விடுகிறது. அப்பொழுது கூட உங்கள் கவனத்தை ஈர்க்குமளவுக்கு நாங்கள் தொல்லை தருவதில்லை, அதனாலேயே நாங்கள் கவனிக்கப்படாமல் போய் விடுகிறோம், ஒரு கட்டத்தில் எங்களால் எதுவுமே செய்ய முடியாமல் போய் எங்கள் ஆலையின் இரு பகுதிகளையும் இழுத்து மூடி விடுகிறோம். உங்களை அவசர ,ஆபத்தான நிலைக்கு கொண்டு நிறுத்தி விடுகிறோம். 
                                                      அதனால் உங்கள் உடல் நலனில் அக்கறையோடு இருங்கள், வயதாகும் போது உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். இளைஞர்கள் தானே என்று உங்கள் முழு நேரத்தையும் சூரியக் கூரையின் அடியிலேயே கழிக்காமல் அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே வாருங்கள். சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளாதீர்கள் ஒத்துழையாமை செய்து விட்ட அரக்கர்கள் என்று எங்களை பழிக்காமல் அரவணைப்போடு கவனித்துக் கொள்ளுங்கள்.
                                                    நன்றி ! வணக்கம் !

     
ஆர்வமுள்ளவர்கள் உடன் பிறவா சகோதரிகளை பற்றியும் பார்க்கவும் 
http://venthayirmanasu.blogspot.com/2010_04_01_archive.html

19 April, 2010

உடன் பிறவா சகோதரிகள்.

நமது உடலின் உள் உறுப்புகளில் அதிக எடை உள்ள உறுப்பு எது தெரியுமா? கல்லீரல் அதன் எடை ஒன்றரை கிலோ. இறைவனின் படைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்படுவது என்ன வென்றால் 'the arrangement of internal organs of our body' பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறுப்புகளை மிக மிக பாதுகாப்பாக வைத்துள்ள அவரின் நேர்த்தி.

பௌர்ணமி நிலவின் ஒளியில் நட்சத்திரங்கள் மறைவதைப் போல இதயமும், நுரையீரலும் பெறும் முக்கியத்துவத்தை கல்லீரல் பெறத் தவறி விட்டது.

கல்லீரல் தன் வருத்தத்தை சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க.

ஒரு சின்ன கீறலின் மூலம் வெளியேறும் ரத்தம் கூட உறையலேன்னா உங்க உயிருக்கே ஆபத்து. அது உறையிரதால தான் ரத்தம் வர்றதே நிக்குது. ரத்தத்தை உறைய வைக்கிறதே நாம தானுங்கோ

இதயத்துக்கு வர்ற ரத்தத்தின் அளவு திடீர்னு உயர்ந்திட்டுன்னா நான் பலூன் மாதிரி ஊதி, ஏற்கனவே நான் மெத்து மெத்துன்னு இருப்பேனா, அந்த ரத்தத்தை உறுஞ்சி மெதுவா தேவையான அளவ மட்டும் இதயத்துக்கு கொடுப்பேன்.

ஆனா உங்கள்ள பலருக்கு காக்டெயில் தினசரி மெனுவில் ஒரு பகுதி ஆகி விட்டது. ஒரு முதலாளி தொழிலாளியின் உழைப்பை உறுஞ்சுவது போல் ஆல்கஹால் என் உழைப்பை உறுஞ்சி உறுஞ்சி ஒரு கட்டத்தில என்னை பிளாட் ஆக்கிடுது.

மஞ்சக் காமாலை வந்ததும் பதறி அடிச்சு டாக்டர்ட்ட ஓடுறீங்க. அது ஒரு வியாதின்றத விட எனக்கு கோளாறு தொடங்கிடுச்சு னு உங்களுக்கு நான் காட்டுற அறிகுறி தான் அது. கான்செர் என் 80% பகுதியை அழிச்சிட்டாக் கூட நான் பயப்படறதில்ல. எனக்கு இறைவன் கொடுத்து இருக்கிற ஒரு வரம் என்னனா பீனிக்ஸ் போல நான் அழிய அழிய முழு உருவத்தை அடைஞ்சிடுவேன். ஆனா நோயின் தீவிரத்தை பொறுத்து எனது மிருதுத் தன்மை கடினப் பட்டு கடினப் பட்டு போகும் போது நீங்களே நினைச்சாலும் என்னைக் காப்பாற்ற முடியாது. அப்பறம் யார் நினைச்சாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.

எப்படி அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாம வேலை பார்க்கிறவங்கள உங்கள்ள அங்கீகரிக்க மாட்டாங்களோ அது போல இரைச்சலற்று இருக்கிற என்னையும் யாரும் மதிக்கிறதே இல்லேங்க .

எனக்கு ஒரு தங்கச்சி இருக்குதுங்க. அதும் பேரு கணயம் உங்களை எப்போவாவது பெரிய நாய் ஏதாவது தொரத்தி இருக்குதா. இல்லைனா அடுத்த தடவை தொரத்தும் போது பாருங்க. அதோட நாக்கு மாதிரி தான் அழகா இருப்பா என் தங்கச்சி. குட்டியா 85gm எடையில இருந்தாலும் ஒரு நாளைக்கு 900 gm இன்சுலின் உற்பத்தி செய்வா. அவள் வேலை செய்றதில்ல ஏதாவது தடங்கல் வந்தா அவ்வளவு தான் உங்களுக்கு சர்க்கரை வியாதி தான்.

எங்க குடும்பத்தில நிறைய பேர் இருக்கிறதாலையும் எல்லோரும் ரொம்ப ஒட்டி நெருக்கமா இருக்கிறதாலேயும் எங்கள்ள யாருக்காவது நீங்க செய்யற அறுவை வைத்தியம் கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தாலும் அடுத்தவங்களை பாதிச்சிடும்.

கணயத்துக்கு ஏதாவது ஆச்சுனா உங்களுக்கு கடுமையா வயிறு வலிக்கும். ஆனா அதுக்கும் மற்ற வயிற்று வலிக்கும் ரொம்ப வித்தியாசம் தெரியாது. அது தான் கஷ்டம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்லித் தாரேன் தொடர்ந்து வயிற்றோட்டம், எடை இழப்பு, மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இருந்ததுன்னா உடனே டாக்டர் பார்த்திடுங்க.

எவ்வளவு வியாதிகள் வருது, காரண காரியம் தெரியாமலே. ஆனா நாங்க பாதிக்கப் படுறதுக்கு முக்கிய காரணம் 'குடி' தாங்க.

தெரிஞ்சே அந்தத் தப்பை பண்ணலாமா? நல்லதில்லீங்க. இப்போல்லாம் சின்ன புள்ளைங்க கூட பழகிடுறாங்க. விட்டுடுங்க.

குடி குடியை மட்டும் கெடுக்கிறதில்லீங்க .
கூடவே கல்லீரலையும் கணயத்தையும் கூட

22 March, 2010

தண்ணீ !! தண்ணீ !!

குடி நீருக்கு பயங்கரமான தட்டுப்பாடு வரப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி தான் அறிவிக்கப் பட்டுள்ள "World Water Day"

கடலைப் பற்றி ஒரு கவிஞர் சொன்னது "Water water everywhere , not a drop to drink" தான் நினைவிற்கு வருகிறது. ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு வரப் போகிறது என்றால் அது இல்லாமல் போவது. இது அப்படி இல்லை இருந்தும் பயனற்றுப் போவது. நீரின் தரம் இழந்து போவது.

நாம் இது வரை நீரின் உபயோகம் என்ன என்று கேட்டால் குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க என ஐந்தாம் வகுப்பு மாணவனைப் போல பதில் சொல்வோம். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கீழே நான் கொடுத்துள்ளதைப் பார்க்காமல் பதில் சொல்லவும்.

" நம் உடலின் எந்தெந்த பாகங்களில் நீர் எவ்வளவு இருக்கிறது?"
எல்லோருக்கும் முதலில் தோன்றும் பதில் சிறு நீரகம் தான். ஆனால்

இரத்தத்தில் 83%
தசைகளில் 75%
எலும்புகளில் 22% (!!!)
ஒரு பெண்ணின் உடலில் 55% இலிருந்து 65% அதுவே ஆணின் உடம்பானால் 65% இலிருந்து 75% நீர் இருக்கிறது .

நாம் வழக்கமாக தாகம் தணிக்க தண்ணீர் குடிப்போம். ஆனால் 'உடலின் தேவைக்கு உரிய நீரின் அளவு குறைகிறது, தணித்துக்கொள்' என்னும் அறிவிப்பு மணி தான் தாகம். ஆனால் நம் உடலின் நீர்த்தேவை பூர்த்தி அடையும் முன்பே தாகம் தணிகிறது. தேவையான நீரை உட் கொள்ளாத போது தான் மலச்சிக்கல் உண்டாகிறது. அத்தனை வியாதிகளின் ஆரம்பப் புள்ளி மலச்சிக்கல் தான்.


இரத்தத்தில் எதற்காக நீர். ஏதாவது ஒரு உறுப்பு காயம் பட்டால் உடனடியாக படை வீரர்களாய் நோய் எதிர்ப்பு செல்கள் அங்கு குமியும் என்பது நமக்கு தெரியும். அதை குரியர் சர்வீஸ் போல உடனடியாக கொண்டு சேர்க்கத் தான் இரத்தத்தில் நீர். தாயின் வயிற்றில் கருவுக்கு ஒரு மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தருவதும் நீர் தான். கருவுற்ற தாய்க்கும் பாலூட்டும் பெண்களுக்கும் நீரின் தேவை அதிகம். இந்தக் கொளுத்தும் வெயிலில் பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு பாலூட்டலுக்கும் இடையில் தண்ணீர் தரத் தயங்காதீர்கள்.

உணவுக்கு இடையே தண்ணீ குடிக்காதே என்பது வழக்கமான கண்டிப்பு. ஜீரண நீரை நீர்த்து போகச் செய்து ஜீரனத்தைக் குறைக்கும் என்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தேவையான உணவு எடுக்கும் முன்பே வயிறு நிறைந்தது போல் உணர்வைக் கொடுக்கும். இது யாருக்கு உபயோகம்னு கண்டு பிடிங்க பார்க்கலாம். Right .உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள் உணவின் நடுவே நீர் அருந்துவது எடுக்கும் உணவின் அளவைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். மாரத்தான் நெடும் ஓட்டத்தில் நீர் பற்றாக்குறையால் மரணங்கள் கூட நிகழ்வது உண்டு.

நான் ரொம்ப பயப்படுற ஒரு விஷயம் சுட்டெரிக்கும் சூரியனில் வெளியே பயணம். அதிக பட்ச நேரம் அலுவலகத்தில் AC யில் இருப்பதாலோ என்னவோ வெயில் பட்டால் உடல் எரியும். அதற்கு நான் கண்டு பிடித்துள்ள வழி "வரு முன் காப்போம்' தான். தாகம் எடுத்த பின் தண்ணீர் அருந்துவதில்லை. வெளியே கிளம்பும் முன் தேவையான தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். இடையில் தேவைப்பட்டால் கொஞ்சம் குடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின் வெயிலினால் இழந்த நீரை சமன் செய்து கொள்ள வேண்டும்.

எல்லாம் சரி. இதெல்லாம் நல்லாப் போகணும்னா நீரின் தரத்தைக் காக்க வேண்டும். செய்வோம். நீரின் தரத்தைக் காப்பதைப் பற்றி நிறைய பேர் எழுதிட்டதால இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம்.

02 March, 2010

இனியவை இருபது.

நேரம் இன்மை காரணமாக கொஞ்சம் ஒப்பேத்தல் போல் தோணினாலும், கவனிச்சு வாசியுங்கள் நமக்கு தேவையானவை தான் இந்த இனியவை இருபது.
--> நமக்கு கிடைக்கும் நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை பனைமரம், தென்னை மரம், பாக்கு மரம்.
நம்மைத் தேடி வந்து வலிய உதவி செய்பவர்கள் பனை மரம் போன்றவர்கள்.
பனை மரம் தானாக முளைத்து, தானாக தண்ணீர் குடித்து, தானாக வளரும்.
எப்போதோ நாம் செய்த உதவியை நினைவில் வைத்து நமக்கு அடிக்கடி உதவுபவர்கள் தென்னை மரம் போன்றவர்கள். எப்போதாவது தண்ணீர் விட்டால் போதும் தென்னை வளர்ந்து விடும்.
தினமும் உதவி செய்தால் தான் நம்மைக் கவனிப்பார்கள். அவர்கள் பாக்கு மரம் போன்றவர்கள். தினமும் தண்ணீர் விட்டால் தான் பாக்கு வளரும்.
--> மனிதன் ஒரு கருத்தைக் கேட்கும் போது அவன் சிந்திக்கும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 500 சொற்கள், பேசும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 100சொற்கள் என கணக்கிட்டு இருக்கின்றனர்.
--> கடலின் பாசிகள் சிகப்பு, நீளம், பச்சை என் பல வண்ணங்களில் காணப்படுகின்றன. வழவழப்பும் மென்மையும் நிறைந்த பாசி தான் கடல் தாயின் முதல் குழந்தை. இது ஜப்பானியர்களின் விருப்ப உணவு.
--> மோர், தயிர், தேன் போன்றவற்றை சாப்பிட்டவுடன் சூடான பொருட்களை உண்ணக் கூடாது.
--> கோதுமையை நல்லெண்ணையுடன் சமைத்து சாப்பிடக் கூடாது.
--> வெறும் வயிற்றில் காபி சாப்பிடக் கூடாது. {இது நம்மால் ஆகாதுன்னு சொல்லறீங்களா , சிரமம் அதிகம் இல்லை gentle man முதலில் தண்ணீர் குடித்து பின் காபி குடிக்கவும்.}
--> பழங்களை தனியே சாப்பிட வேண்டும். உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது.
--> ஓசோன் கலந்த காற்றைப் பற்றி நாம் இப்போ அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் அன்றே வள்ளலார் அதைப் பற்றி காலை நான்கு மணி முதல் ஐந்தே முக்கால் மணி வரை அமுதக் காற்று வீசுவதாக சொல்லி இருக்கிறார். அதி காலையில் எந்தக் காரியம் செய்தாலும் சித்திக்கும். காலையில் நான்கு மணிக்கா ? அது எங்கள் mid night ஆச்சேனு சொல்றீங்களா, முயற்சி செய்து பார்க்கலாம்.
--> நம் உடலில் தோன்றும் பல வியாதிகள் நம் கால்கள் மூலமாகவே பரவுகின்றன என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள். { சிக்கென் குனியா அதில் உண்டா? தெரியவில்லை. நாட்டில் பலரும் நடப்பதே பரிதாபமாக இருக்கிறது.}
--> கடினம் மிகுந்து ஒளிகதிர்களுடன் குளிர்ச்சியான பச்சை நிறத்துடன் இருக்கும் மரகதக் கல் நரம்பு மண்டலத்தின் சகல நோய்களையும் தீர்க்க வல்லது.
--> காலம் துவங்கிய போதே புழக்கத்திற்கு வந்து விட்டது தங்கம். (அட!) இந்த உலகத்தின் முக்கால் பகுதி தங்கம் தென் ஆப்பிரிக்காவில் தான் இருக்கிறது. { உடனடித் தேவை தென் ஆபிரிக்காவில் இருந்து ஒரு பெண், நம் பதிவு உலகத்தின் திருமணம் ஆகாத நண்பர்களுக்கு!}
--> வலம்புரிச் சங்கு கிடைத்து விட்டால் அதன் நீளம், அகலம், எடை, வாய் நிறம் இனம் இவற்றைப் பொறுத்து அது மதிப்பிடப் படுகிறது.
--> சுறா மீன் நீரில் மிதக்கும் ஒரு பொருளை பிடிக்க வேண்டும் என்றால் அது மல்லாந்து தான் பிடிக்க வேண்டும். ஏன் என்றால் அதன் வாய் அடிப்பாகத்தில் தான் அமைந்திருக்கிறது.
--> ஒரு நிமிடத்திற்கு குறைந்தது பத்து முறை கண்கள் இமைக்க வேண்டும். கண்களை எப்போதும் அகலத் திறக்கக் கூடாது. { அதாவது எதிரில் யாராவது நச்சுனு போனா இமைக்காம முழிச்சு பார்க்க கூடாது.} இதனால் இமைப்பது தடைப் படும். பார்வை திருப்பும் திசையில் தலையும் திரும்ப வேண்டும். { ஓரக் கண்ணால் பார்க்கிற கதையெல்லாம் கூடாது.}
--> "பெண்ணே ! ஏழு அடி தூரம் என்னுடன் வந்த நீ எனக்கு "சகா" வாவாய். நாம் இருவரும் சிநேகிதர்கள் ஆகி விட்டோம். உன்னை விட்டு நான் பிரிய மாட்டேன். என்னை விட்டு நீ பிரியக் கூடாது. நம் இருவர் மனமும் ஒத்து இருக்கட்டும்" எங்கேயோ கேட்ட குரலாக் கீதா? திருமணத்தின் போது சொல்லும் மந்திரத்தின் தமிழ் பதிவு.
--> கேசல் எனும் ஒரு வகை மானும் ஒட்டகக் குடும்பத்தை சேர்ந்த லாமாவும் தண்ணீரே குடிப்பதில்லை.
--> முன் காலத்தில் எவ்விதப் பதவியும் வகிக்காத ஒரு சாதாரணப் பிரஜையை "இடியட்" என்று அழைப்பார்கள். அதுவே பிற்காலத்தில் ஒரு வகை சொல்லாக மாறி விட்டது.
--> வாசனை அறியும் சக்தி பாம்பிற்கு அதன் நுனி நாக்கிலே இருப்பதாலேயே அது அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுகிறது.
--> தேவைக்கு அதிகமாக நாணப்படும் ஆண் பிள்ளையும் தேவைப்படும் போது கொஞ்சம் கூட நாணப் படாத பெண்ணும் சந்தேகத்திற்கு உரியவர்கள். { ரஜினி படத்தில இந்த வசனத்தை உபயோகித்தால் எனக்கு ராயல்டி வேணும்.}
--> மனிதன் உயிர் வாழ ஒரு நுரையீரலே போதுமானது.

27 January, 2010

மடல் விரித்த மலர்கள்!

இந்திய நாட்டுக்கு இயற்கை அரணாய் இருக்கும் இமய மலை இன்று சூரியக் கோபத்துக்கு ஆளாகி அழுதுகொண்டு இருக்கிறது . அது உருகி உருக்குலைந்து கொண்டு இருப்பதோடு கடல்களில் சீற்றம். இயற்கை அழியும் அபாயம். காலச் சுழற்சிகளில் மாற்றம். "பனி தொடங்கியதால் மழை நின்றது " என்ற அந்தக் கால நம்பிக்கைகளைப் பொய்க்க வைத்து திடீர் மழை பனியுடன் கூடி. யாரைப் பார்த்தாலும் காதுகளுக்கு கதவு போடத் தொடங்கி விட்டார்கள். சின்னக் கொம்பு முளைத்த வேற்று கிரக மனிதர்கள் போல் இப்போது காதுமுளைத்த மனிதர்கள்.
காதுகள் எந்தக் கவிஞராவது பாட மாட்டார்களா என மடல் விரித்துக் காத்துக் கிடக்கும் மலர்கள். தன்செயல்களை விருப்பம் இல்லாத நேரத்தில் நிறுத்திக் கொள்ள எல்லா உறுப்புகளுக்கும் கதவு வைத்த இறைவன் காற்றோட்டமாக விட்ட பால்கனி. சிலருக்கு செதுக்கி வைத்த காதுகள். சிலருக்கு மீசை முளைத்த காதுகள். காதுகளுக்குள் இருக்கும் ஆரவாரம் இல்லாத ஒரு கடல். அதன் அசைவுகளை உணர்ந்த மயிர்க் கால்கள் மூளைக்கு கொடுக்கும் செய்தி தான் நம் இயக்கத்துக்கு மூல காரணம்.
கருவில் இருக்கும் போதே தன் அலுவலை முதலில் தொடங்குவது காதுகள் தான். அதனால் தான் கருவுற்ற தாய் நல்ல செய்திகள், இனிய பாடல்கள் கேட்க வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். அபிமன்யு வயிற்றில் இருந்தே வியூகம் உடைக்க தெரிந்த கதை நாம் அறிந்தது தானே. எல்லா உறுப்புகளுக்கும் பிறந்ததில் இருந்து செயல் பாடுகள் அதிகரிக்கும் போதுகாதுகளுக்கு மட்டும் குறையத் தொடங்கு கிறது. குழந்தைகளுக்கு ஒரு வினாடியில் 16 -> 30,000 சக்கர சுழற்சிகள் இருக்கும். (cycles/second ) பதினாறுக்கு கீழே போய் விட்டால் நமக்கு நம் உடம்பின் அதிர்வுகள் கூட கேட்கத் தொடங்கும். அப்போது ஒரு வேளை " என்னை இப்படி அதிக வேலை செய்ய வைத்து அராஜகம் செய்கிறாயே?" னு வயிற்றின் குரல் கூட கேட்டாலும் கேட்ட்கும்.
பதின் மூன்றில் இருந்து பத்தொன்பது வயது வரை சுழற்சிகள் 20,000ஆகக் குறைந்து விடுகிறது. வயது ஏற ஏற குறைந்து முற்றிலுமாக செயல் திறன் இழந்து விடுகிறது. புரியாத மோனாலிசா புன்னகைகள் செயல் திறன் இழப்பை காட்டிக் கொடுத்து விடும்.
காது கேளாமைக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சில குறிப்புகள் நமக்கு உதவலாம். உங்கள் காதுகளைக் கொஞ்சம் கொடுங்கள்.
.... நீச்சலடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் குளித்து முடித்ததும் காதுகள் நன்கு ஈரம் போகத் துடைத்து விடுங்கள் . தலையை லேசாக உலுக்கி அதிகப் படியான நீர் காதுகளில் இருந்தால் வெளியேற்றுங்கள்.
.... நீங்கள் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவராய் இருந்தால் வானில் ஏறும் போதும் , இறங்கும் போதும் சூயிங்கம் மெல்லுங்கள். தூங்காதீர்கள். அதிக ஜலதோஷம் இருக்கும் போது விமானப் பயணத்தை தவிர்க்க முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
.... அதிர வைக்கும் சத்தத்தில் பாடல்கள் கேட்கும் போது தற்காலிகமாக காதுகள் கேட்கும் திறன் இழந்து பின் சரியாகும். ஆனால் அதுவே அடிக்கடி நடந்தால் இழப்பு நிரந்தரமாகும்.
.... புகைப்பதினால் உட்காதுகளுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி தேவையான ரத்தம் போய் சேருவதில்லை. நாளாக நாளாக கேட்கும் திறன் குறையும்.
முழு அமைதியான உலகத்தில் இருப்பது என்பது மிகவும் சோகமானது. இனிமையான சத்தங்கள் இழப்பதோடு கூடி நம் குரலே நமக்கு கேட்காமல் போவது எவ்வளவு வருத்தமானது. காதுகளுக்கு கவனம் செலுத்துவோம்.