Bio Data !!

01 May, 2011

கொற்கை !!

சிலரது முதல் கதைகள் (நாம் படிக்கும் )அவர்கள் மேல் அபிரிமிதமான அன்பை வைத்து விட செய்யும். அப்படிப்பட்ட ஒன்று தான் "ஆழி சூழ் உலகு"  ஆசிரியர் ஜோ டி குருஸ். எங்க பக்கத்துகாரர் என்பதில் தனிப் பிரியம். மீனவர்களை மீன் கொண்டு தருபவர்களாகவும், அப்பப்போ சிங்கள முதலைகளுக்கு இரைகளாக பலியாபவர்களாகவும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த எனக்கு அவர்களின் தினப்படி வாழ்க்கையே கடலில் எப்படி துயரகரமாக தோய்ந்து கிடக்கிறது என்பதை புரிய வைத்த கதை. 

அவரது அடுத்த படைப்பு வந்து விட்டது தெரிந்ததும் ஒரு உற்சாக துள்ளல். "கொற்கை"  கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு பக்கங்கள். பார்த்ததும் மனதுக்குள் பாடல் " கல்யாண சமையல் சாதம்"  
விலை ரூ 800 /- 
பதிப்பகம் " காலச் சுவடு" 
சுமார் நூறு ஆண்டுகள் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார். மிகக் கடுமையான ஆய்வுகளை செய்து , ஒரு வரலாற்று ஆவணமாக செய்திருக்கிறார். 
சுஜாதாவின் நாவல் விருது இதற்கு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. 

தனது குழந்தைகளுக்கு தகப்பனாய் தனது கடமையை முழுமையாய் செய்யாத வேதனையை " பாசத்தை பகிர்ந்து என் மடியில் விழுந்து அவர்கள் விளையாட வேண்டிய நேரத்தில் அவர்களை ஒதுக்கி விட்டு எழுதுவதற்காக அமர்ந்திருக்கிறேன் "  என்ற தன் சொற்களில் உணர்த்துகிறார். தன் முன் நடந்து சென்ற ஒரு முதியவர் தேய்ந்து போன மூன்று செருப்புகளை சேர்த்து தைத்து நடந்து போனதும், நெருங்கிப் பார்த்தால் அவர் அந்தக் காலத்தில் தூத்துக்குடியில் கொடி கட்டி வாழ்ந்தவர் என்பது தெரிந்ததும், இந்த நாவல் எழுதத் தூண்டிய ஒரு பொரியாக சொல்லி இருக்கிறார். கருப்பு வெள்ளையில் படங்கள், வட்டாரச் சொற்களின் அகராதி நாம் கதையோடு ஒன்ற கூடுதலாக உதவுகிறது. 

கதாபாத்திரங்களின் குடும்ப வரைபடம் இது "கதையல்ல நிஜம் " என்கிறது. 
ஆரம்ப கால பரதவர்களின் வாழ்வில் கெட்ட வார்த்தைகளும், நல்ல வார்த்தைகளும் நாகமும் சாரையுமாய் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. 

புயலும் மழையும் அலைக்கழிக்க உயிரையும் கயிறையும் கைகளில் இறுகப் பற்றிக் கொண்டு " எவனோ துப்புக் கெட்டவன்  தோணியில் இருக்காம் ' என்னும் போது  நேர்மையான தூய வாழ்க்கையில் நம்பிக்கை கொண்ட பரதவர்களின் பற்றை அடிக் கோடிட்டுக் காட்டுகிறார். 
"போர்ட் ஆபீசரு கிளார்க்கு வீட்டுக்கு கிஸ் மிஸ், சீஸ், ஆப்பிரிகட்டு எல்லாம் கேட்டாராம் போயிற்றான்னு கேளுங்க. அந்த எழவெடுப்பாம் ரசீதை அங்க அனுப்பித் தொலைச்சிறாம"  என்பதில் லஞ்சமும் கொடுத்து ரசீதும் கொடுப்பதில் உள்ள நையாண்டி ரசிக்க வைக்கிறது. 

இந்தக் கதையில் மனிதர்களின் பலவீனம் ஐயரூட்டு காபி மாதிரி சரியான தித்திப்பில் இருக்கிறது. அப்போ ஆழி சூழ் உலகில் எப்படின்னு கேட்டிங்கன்னா அது சர்க்கரை வியாதிக்காரன் 'ஆசைப்படும்' தித்திப்பு. அளவில் அதிகம். 

பரதவர்கள் மேல் தான் கொண்ட பற்று வெறும் கதை எழுதுவதோடு முடிந்து விடுவதில்லை என்பதை 4 .5 .11  தேதியிட்ட குமுதம் இதழில் "தோற்றார்கள் கொன்றார்கள் " என்ற தலைப்பில் ஒரு மீனவ எழுத்தாளனின் மனக் குமுறலை எடுத்துக் காட்டி இருக்கிறார். மதிப்பிற்குரிய ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர் எழுதி இருக்கும் கடிதம் கவன ஈர்ப்பு பெற வேண்டிய அத்தியாவசியமான ஒன்று. 
உங்கள் முயற்சி வீண் போகாது. We Love u Joe !!

6 comments:

  1. ப‌ர‌த‌வ‌ர்க‌ளின் வாழ்க்கை முறையும், அவ‌ர்க‌ளின் வ‌ட்டார‌ மொழியும் என‌க்கும் ஓர‌ள‌வு தெரியும்... வாய்ப்புக்கிடைத்தால் இந்த‌ புத்த‌க‌த்தை ப‌டிக்கிறேன்.. உங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ம் ந‌ல்லாயிருக்கு..

    ReplyDelete
  2. மிக சிறப்பாக எழுத்தை உள் வாங்கி , ரசித்து எழுதியிருக்கிறீர்கள் . படிக்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்

    ReplyDelete
  3. கண்டிப்பாக படியுங்கள் பார்வையாளன், அதற்கு முன் "ஆழி சூழ் உலகு" க்கு முன்னுரிமை கொடுங்கள்

    ReplyDelete
  4. நன்றி நாடோடி, படிக்க அதிக பொறுமை வேணும். ஆனால் படித்து முடிக்கும் போது என்னை ஒரு பரதவப் பெண்ணாக உணர்ந்தேன்.

    ReplyDelete
  5. நாவலில் மதலேன் தன்னை தானே அழித்து கொள்ளும் நிகழ்ச்சியை படிக்கும் போது என்னை உறைய வைத்தது... கடந்த மாதம் உவரியில் அவரது இல்லத்தில் வைத்து அவருடன் உரையாடினேன்... மிக சிறந்த மனிதர்.. மிகவும் எளிமையானவர்.. எங்கள் சந்திப்பு சுமார் நான்கு மணி நேரம் நீண்டது.... அந்த சந்திப்பை நினைத்து மிகவும் உவகை கொள்கிறேன்..

    நீங்கள் எந்த ஊர்..???

    ஜெபஸ்டின் ரோட்ரிகோ

    ReplyDelete
  6. me from tirunelvlei அவரது நாவலில் அவரது கடும் உழைப்பு தெரிகிறது .அவர் தான் குழந்தைகள் நெருங்கி வரும் போது கூட ஒதுங்கி எழுதியதன் வேதனையை சொல்லும் போது அப்படியே உணர முடிகிறது

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!