Bio Data !!

04 May, 2011

பெண் என்னும் பேரதிசயம் !!

செக்கு மாடு தன் உணர்வின்றியே சுற்றி சுற்றி வருவது போல் ராஜி எப்படி சரியான பஸ் ஏறி, சரியான இடத்தில் இறங்கி, வீடு வந்து சேர்ந்தாள் என்பதே ஆச்சர்யம் தான். ஜன்னல் வழியாக பார்க்கும் போது அப்பா ஏதோ தெலுங்கு டப்பிங் படத்தை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. எப்படி இந்த இரவு நேரத்தில் இந்த படத்தை இவ்வளவு ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எப்போதும் போல் ஆச்சர்யப் பட்டாள். அம்மா எப்படியும் நாள் முழுவதும் உழைத்த உழைப்பில் உறங்கிக் கொண்டு தான் இருப்பாள். அவளை இந்த நேரத்தில் தொல்லை செய்கிறோமே என்று வருத்தமாய் இருந்தது. அப்பாவின் குணத்தால் உறவினர் அத்தனை பேரிடமும் சண்டை. இல்லை என்றால் யார் வீட்டிலாவது இரவு தங்கி விடிந்து வந்து பெரியவர்களை தொந்தரவு பண்ணி இருக்கலாம். 

விரல்களால் மெல்ல தட்டிய படி 'அப்பா, அப்பா' என்று அழைத்தாள். மூன்றாம் முறை நிமிர்ந்து, கதவைத் திறந்தவர், 
"என்னம்மா இந்த நேரத்தில, அவர் வரல்ல?" 
"இல்லப்பா, நான் மட்டும் தான் வந்தேன்"
சம்பிரதாயக் கேள்வி கேட்டு மறுபடியும் டி வியில் தன்னை நட்டுக் கொண்டார்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு வந்த அம்மா தான் பதறினாள்."என்னடி இந்த நேரத்தில? கையில பையையும் காணோம் ஒண்ணையும் காணோம்.என்ன விஷயமா வந்தே? வீட்டில அவரோட சண்டையா?" கேள்விச் சரம் தொடுத்தாள்.
'நீ ரொம்ப உஷாரும்மா "என்று மனதுள் நினைத்த படியே, "நம்ம வீட்டுக்கு நான் வர காரணம் வேணுமாம்மா .சாப்பிட ஏதாவது இருந்தா தாம்மா பசிக்குது" என்னும் போது கண்களில் நீர் ஊற்று. அம்மா அவள் உயரத்துக்கு சற்று எம்பி ராஜியின் தலையை தடவியபடி, 'வாடி என் செல்லம் ரெண்டு நிமிஷத்தில தோசை வார்த்திர்றேன். சாப்பிட்டு அம்மாவைக் கட்டிய படியே படுத்திருந்தாள் ராஜி. திடீரென அழுகை அதிகமாகும் போது உடல் விம்முவதும் உடனே அம்மா அனிச்சையாக தட்டிக் கொடுப்பதுமாக அன்றைய இரவு நீண்டு முடிந்தது. 

மறு நாள் நடந்ததை சொல்லி முடிக்கும் போது, தன் மகளுக்கு வந்த நோய்க்காக வருந்துவதா? இல்லை அவள் புகுந்த வீட்டாரை சமாதானம் செய்வதா? தன் மகளின் கவலையைக் களைவதா ஒன்றும் புரியாமல் சுழன்று வந்தாள். நாட்கள் நகர்வது நின்றா போகும்? ஓரிரு முறை சம்பந்தியை சென்று பார்த்து சமரசம் பேசியும் ஒன்றும் நடக்காமல் சரி நடப்பது போல் நடக்கட்டும் என்று தினசரி வாழ்க்கை சக்கரத்தை சுற்றத் தொடங்கினர். 

அன்று சேலையை முழங்கால் வரை வழித்த படி ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி கீரையை நறுக்கிக் கொண்டிருந்தாள் ராஜி. அவசர அவசரமாக நுழைந்த அம்மா காலில் இருந்து செருப்பை உதறிய படி வேகமாக வந்து ராஜியின் அருகில் அமர்ந்தாள். நறுக்கி வைத்திருந்த கீரையை ஒரு பாத்திரத்தில் போட்ட படி "பகவான் என் குரலைக் கேட்டுட்டான் ராஜி, உன்னை தண்டிச்ச அவனை அந்தப் பரமன் தண்டிச்சுட்டான். " என்றாள்.
திடுக்கிட்ட ராஜி "என்னம்மா சொல்ற" என்றாள். 

"மாப்பிள்ளைக்கு சனி தசை இருக்குதுன்னு சனீஸ்வரன் கோயிலுக்கு கூட்டிட்டு போனாளாம் அவர் அம்மா, ரெண்டு பேரும் திரும்பி வரப்போ அவங்க வந்த பஸ்சில இன்னொரு பஸ் மோதின வேகத்தில சன்னலில இருந்த கண்ணாடி உடைஞ்சு, ஜன்னல் ஓரமா இருந்த மாப்பிள்ளை மேல விழுந்து அவர் வலது கை துண்டாப் போச்சாம். தையல் எல்லாம் பிரிச்சு வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தான் ஆச்சாம். டிரஸ் பண்ணிக்கிறதுக்கும், மற்ற கைக் காரியங்கள் பார்க்கிறதுக்கும் அவன் படுற அவஸ்தை கண் கொண்டு பார்க்க முடியலன்னு உன் மாமியார் ராஜம் அத்தைட்ட புலம்பினாள் னு செய்தி.

நில அதிர்ச்சி போல் அடுக்கடுக்காய் அதிர்வு. "அம்மா மீதிக் காரியம் நீ பார்த்துக்கோம்மா, நான் கிளம்பறேன்."
"எங்கேடி"
"எங்க வீட்டுக்கு தான் . இந்த நேரத்தில தானேம்மா நான் அவர் கூட இருக்கணும்."
"அந்த ராட்சசங்களுக்கா இரக்கப் படுறே?" 
"ராட்சசனை மனிதனாக்க கடவுள் கொடுத்த சந்தர்ப்பம் இது. நழுவ விட்டுட்டா தப்பு நான் பண்ணினதாயிடும். " அவசரமாக அறைக்குள் சென்று பணத்தை எடுத்த படியே, வெறுங்கையை வீசிய படி வந்தது போலவே திரும்பி சென்றாள். 

ராஜியை பாராட்டுவது போல வானில், வாண வேடிக்கைகள் வர்ணப் பூக்களாய் வெடித்து சிதறின. உலகக் கோப்பையை வென்று விட்டதாமே இந்தியா! 
(இப்போ தான் முற்றும்)

5 comments:

  1. அருமை
    தொடக்கமும் தொடர்ந்ததும் முடிவும்
    மிக மிக அருமை
    அரக்கன் மனிதனாக ஆண்டவன் சில
    அதிர்ச்சிகள் தருகையில்
    மனிதன் அரக்கனாகி
    ஆண்டவனை நிந்திக்கலாமா
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ரமணி சார், எல்லோரும் 'வானம்' படம் போயிட்டாங்களா? ஒருத்தரையும் காணோமே?

    ReplyDelete
  3. க‌தை எழுத‌ உங்க‌ளுக்கு வார்த்தைக‌ள் கோர்வையாக‌ வ‌ருகிற‌து.. வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  4. பெண்கள் குழந்தையின் கருவை வயிற்றிலும் கணவன் மீதான பாசத்தை இதயத்திலும் சுமப்பவர்கள் என்பதை உணர்த்திய கதை. நன்றி சகோதரியே!
    : : கிளிஞ்சல்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!