Bio Data !!

15 May, 2011

எண்ணச் சிதறல்கள் !!

இந்த முறை தேர்தல் ரொம்ப வித்தியாசமானது. தேர்தல் கமிஷனின் இறுக்கமான நடவடிக்கை. பணப் பட்டுவாடா குறைக்கப் பட்டது என்று சொல்லலாமே தவிர முழுவதுமாக நிறுத்தப்பட்டது என்று சொல்ல முடியாது. மீடியாக்களின் தொடர்ந்த நினைவுறுத்துதலால் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடும் விதத்தில் கூடுதல். பெண்களும் முதன் முதலாக வாக்களிப்பவர்களும் இந்தக் கூடுதலில் அதிக பங்கேற்பவர்கள். மொத்தத்தில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது 
தி.மு.க. "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள் " என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சி ஒத்துக் கொள்ள வேண்டியது தான். 
இன்று (16.5.2011) மதியம் 12 .15 (கூட்டுத் தொகை ஒன்பது; ரயில்வே நேரம் அல்ல )க்கு முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார் ஜெயலலிதா. 
பழி வாங்கும் படலம் இருக்காது என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் ஏனோ 'ஐயோ கொல்றாங்களே" னு எங்கேயோ கேட்ட குரல் மறுபடியும் நினைவலைகளில் . கடந்த முறையை விட இன்னும் ஐந்து ஆண்டுகள் அனுபவ முதிர்ச்சி, செயல்பாட்டின் திறனைக் கூட்டும் என்று எதிர்பார்க்கிறோம் .  அப்பாவி பொது மக்கள் ஒவ்வொருமுறை ஏமாறும் போதும் எதிர்பார்ப்போடு ஆட்சியை மாற்றுவதும், மறுபடியும் ஏமாறுவதுமே தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 

பணக்காரர்கள் ஆயிரங்களிலும், ஏழைகள் லட்சங்களிலும் எண்ணிக்கையில் கூடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது சர்வே. அப்படி என்றால் பல லட்சம் ஏழைகளின் பணம் சில ஆயிரம் பணக்காரர்களிடம் சென்று சேர்கிறது என்று அர்த்தம். புதிய அரசு எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் இது நடக்கக் கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். BEST OF LUCK AMMA !!

*** பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ருபாய் கூடி இருக்கிறது. எதோ ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கூடினால் பரவாயில்லை ஒரே சமயத்தில் ஐந்து ரூபாய் என்பது மிக அதிகமாக தெரிகிறது. இதன் பின் தொடரும் மணி ஓசையாக எல்லாப் பொருட்களின் விலையும் ஏறும் அபாயம் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக எனக்கு வந்த ஒரு எஸ் எம் எஸ் செய்தி " 2100  இல் இப்படியும் விளம்பரம் வரலாம். பத்து லிட்டர் பெட்ரோல் வாங்கி ஒரு HONDA 125  ஐ இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள். " இதில் எனக்கு ஒரே ஒரு திருத்தம் மட்டும் தோன்றியது. இந்த விளம்பரம் வர 2100  வரை காத்திருக்கத் வேண்டுமா என்பது தான்.

ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு வார்த்தை பயமுறுத்துவது போல் தற்போதைய பயமுறுத்தல் "என்டோ சல்பான் " கேரளாவில் பாதிக்கப் பட்ட ஒரு குழந்தையின் புகைப்படத்தை பார்த்ததும் முப்பது ஆண்டுகளுக்க் முன் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அப்போ என் முதல் மகள் பிறந்த முப்பதே நாட்கள் ஆன நிலையில் மஞ்சள் காமாலை வந்து மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். எங்களுக்கு பக்கத்து அறையில் ஒரு குழந்தையை சேர்த்திருந்தார்கள். அதன் பெற்றோர் அதீத ஆர்வத்தின் காரணமாக வயிற்றில் உருவான ஆரம்ப காலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் எக்ஸ்ரே எடுத்திருக்கிறார்கள். தலை இரண்டு பாகமாக இருந்து இறுதி மாதங்களில் தான் இணைந்து வருமாம். அதன் இறுதி இணைப்பு பிறந்த பின் தான், அதை தான் 'உச்சிக் குழி' என்று சொல்வோம். அவர்கள் எக்ஸ்ரே எடுத்ததன் காரணமாக தலையின் இரண்டு பாகமும் இணையாமலே இருந்து விட்டது. குழந்தை சில நாட்களில் இறந்தும் விட்டது.  இன்று ஸ்கேன் செய்வதால் இந்த பாதிப்பு இல்லை என்கிறார்கள். குழந்தைகளைத் தாக்கும் இந்த வினோத தாக்குதல்கள் மனதை பிசையத் தான் செய்கிறது.

*** வழக்கம் போல் BSNL  செய்தி. 15 .5 .2011 அன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ 110  க்கு மேல் டாப் அப் ; ரீசார்ஜ் செய்பவர்களுக்கு FULL டாக் டைம் வழங்குகிறோம்.  

*** நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சமையல் குறிப்பு, 
உருளைக்கிழங்கு முட்டை போண்டா: 
உருளைக்கிழங்கை நன்கு  வேக வைத்துக் கொள்ளுங்கள். தோலை உரித்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணை விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் உருளைக்கிழங்கு மசித்ததைப் போட்டு காயத் தூள், உப்பு, வத்தல் தூள் போட்டு நன்கு வதக்கவும். அதில் உள்ள ஈரத் தன்மை போகும் வரை வதக்கவும். பின் அதை சிறுதளவு எடுத்து கையில் அழுத்திப் பிடித்து உருண்டை பிடிக்கவும். நன்கு அழுத்திப் பிடிக்கவில்லை என்றால் கலைந்து எண்ணையில் சிதறி விடும் அபாயம் உண்டு. முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி உப்பு சிறிதளவு, மிளகுத் தூள் சிறிதளவு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். பிடித்த உருளைக்கிழங்கு உருண்டையை முட்டை கரைசலில் முக்கி எடுத்து எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும். சூடாக சாப்பிடும் போது சூப்பரா இருக்கும். தோலை உரிக்கவும், அடிக்கவும்னு கொஞ்சம் வன்முறையாத் தெரிஞ்சாலும் மெத்து மெத்து னு சாப்பிட அவ்வளவு மென்மையாக இருக்கும் என்ஜாய்

11 comments:

  1. இன்று ஸ்கேன் செய்வதால் இந்த பாதிப்பு இல்லை என்கிறார்கள். குழந்தைகளைத் தாக்கும் இந்த வினோத தாக்குதல்கள் மனதை பிசையத் தான் செய்கிறது.


    .....http://www.americanpregnancy.org/prenataltesting/ultrasound.html

    ReplyDelete
  2. Thank you for the Bonda recipe. I usually make it with besan (kadalai maavu) batter. I will try it with egg dip too.

    ReplyDelete
  3. உங்க பதிவுக்கு வரும்போதுலாம் எதாவது குளருபடி செய்வதே எனக்கு வேலை.இன்று என்னால் இண்டிலியில் வோட் போட போனால் 27 நாளுக்கு முன் பிரபலமாக்கப்பட்ட எண்ணச் சிதறல்தான் வருகிறது.3,4 முறை உங்க பதிவை ஓபன் செய்தும் அதே வருகிறது.எனவே அங்கே 20 to 21 வோட்டை பதிவு செய்துட்டு வந்துடேன்.

    இந்த பதிவின் தகவல்கள் எப்போழுதும் போல பயனுள்ளதாகவே இருக்கு

    ReplyDelete
  4. The long term effects of repeated ultrasound exposures on the fetus are not fully known.//
    இதே தான் சித்ரா மருத்துவரின் ஆலோசனை இன்றி, முக்கியமாக கர்ப்பக் காலத்தில் எந்த ஒரு மாத்திரையோ சுய சிகிச்சையோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது. இதை வலியுறுத்தத் தான் அதைகுறிப்பிட்டேன்.

    ReplyDelete
  5. கடலை மாவு உருளை குளிருக்கு ஸ்வெட்டர் போடுற மாதிரி, முட்டை கவரிங் casuals .

    ReplyDelete
  6. நன்றி திருமதி bs ஸ்ரீதர் என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்

    ReplyDelete
  7. அரசியல் பற்றியும் அவ்வப்போது எழுதுவது வரவேற்கத்தக்கது..

    அதே போல பி எஸ் என் எல் தகவலும் உபயோகமாக இருக்கிறது.. தொடருங்கள்..

    சமையல் குறிப்பை பொறுத்தவரை, செய்து சாப்பிட்டு பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்

    ReplyDelete
  8. அரசியல்., பிஎஸெனெல்., சமையல்னு கலக்குறீங்க..

    எண்டோ சல்ஃபான் தான் வருத்தமா இருக்கு

    ReplyDelete
  9. நன்றி பார்வையாளன். சமையல் குறிப்பு இன்னும் முயற்சி செய்யலியா? அப்பாடா அதற்குள் எங்கேயாவது ஓடிடுறேன்.

    ReplyDelete
  10. நன்றி தேனம்மை, உறவுகள் நகர்தலைப் பற்றிய கவிதை அருமையா இருந்தது.இன்றைய காலத்தில் இந்த நகர்தலின் வேகம் கூடியது போல் இருக்குது. நல்ல உறவு கிடைத்தால் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி விடவேண்டும்

    ReplyDelete
  11. அரசியல் சமையல் சமூகம் என
    ஒரே பதிவில் மூன்று விஷயங்களைக்
    கொடுத்துள்ளீர்கள் மூன்றும் சிறப்பாக இருந்தன
    படங்களும் அருமை
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    (நானும் தனித் தனி பதிவாகப் போட்டிருக்கலாமே என
    முதலில் யோசித்தேன் ஆனால் செய்திகள் பழையவை போல்
    ஆகிவிடுகிற சங்கடங்கள் இருக்கு போண்டா தவிர )

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!