Bio Data !!

31 August, 2025

#கந்தர்வன் கதைகள் - தனித்தனியாய் தாகம்

கந்தர்வன் கதைகள் என்று ஒரு சிறுகதைகளின் தொகுப்பு வாசித்துக் கொண்டு இருக்கிறேன். தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்கு கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கை போட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வனுடையது என்று ச. தமிழ்ச்செல்வன் சொல்கிறார். சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். அதில் "தனித்தனியாய் தாகம்" என்றொரு சிறுகதை. தலைப்பே எவ்வளவு அழகாய் இருக்குது. வெயிலின் உக்கிரத்தைச் சொல்வதோடு கதை தொடங்குகிறது. "தோட்டத்தில் இன்று பூத்த பூக்களைத் தொட்டால் சுடுமோ?" [ வெயிலின் கடுமைக்கு பூக்கள் வாடுவதே அன்றி சுடுவதில்லை. சுட்டால் அங்கங்கே தீப்பற்றிக் கொள்ளுமே. இந்த வகையில் பூக்கள் தியாகிகள் தான். ] அன்று நாள் முழுவதும் பவர்கட். அத்தனை பேரும் எரிச்சலில் இருக்கிறார்கள். நெடுஞ்சாலையில் ஒற்றையாய் நிற்கும் டீக்கடையைப் பற்றிச் சொல்லும் போது " சத்தம் போடாமல் நிற்கும் பிச்சைக்காரனைப் போல் இந்த காலனிக்கு அந்த டீக்கடை" என்கிறார். [ ஒரு பரிதாபமான யாசகன் டீ ஆத்துவது போல் கண் முன் காட்சி விரிகிறது. ] ஒரு இளநீர்க்காரன் தினம் அமுதக் கடலான இளநீரை சுமந்து கொண்டு அந்த வீட்டின் முன் நிற்பான். [ நாலு இளநீர் வாங்கி வந்த என் மருமகன் எல்லோரும் குடிக்க ஏதுவாய் உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்க வீட்டில் வேலை செய்யும் பெண் கர்ம சிரத்தையாய் அது புழங்கிய நீரென்று கொட்டி கழுவி வைத்துப்போன ஒரு "சம்பவம்" நினைவுக்கு வருகிறது. ] அந்தப் பகுதியிலுள்ள பங்களாக்களுக்கு தினம் இளநீர் கொண்டு கொடுக்கும் ஒரு வயதானவர். நேரமாகி விட்டதால் வேகு வேகென்று வந்து இளநீரைவெட்டிக் கொடுத்துப் பின் ஓட்டமாய் ஓடி அந்த டீக்கடை டிரம்மிலிருந்த அழுக்குத் தண்ணீரை வேக வேக மாகக் குடித்து திரும்பி பங்களாக்கள் பக்கம் வருகிறார் என்பதோடு கதை முடிகிறது. நம் உள்ளே துயரம் ஊறத் தொடங்குகிறது. புதிய பகுதியாக நான் வாசிக்கும் நல்ல சிறுகதைகளைச் சொல்லத் தொடங்குகிறேன்.

# Trending

Trending தமிழ் படம் பெயர் தான் . OTT : in amazon prime இயக்குநர் : என். சிவராஜ் முக்கிய வேடங்களில் கலையரசன், பிரியலயா, பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி. படத்துக்கு 100% பொருத்தமான பெயர். குப்பையில் கிடக்கும் ஒரு சருகை சூறாவளி காற்று கோபுரத்தில் கொண்டு வைப்பது போல் டிரென்டிங் ஆகும் ஒரு வீடியோ பட்டி தொட்டியில் இருக்கும் ஒருவரை ஒரே இரவில் உலகம் முழுவதும் அறிய வைத்து விடும். கண்டம் விட்டு கண்டம் பிரபலமாக்கி விடும். கிளி பால் என்னும் ஆப்பிரிக்கர் இதற்கு உதாரணம். அவர்கள் தினம் உண்ணும் உணவைக் கூட மக்கள் ரசித்துப் பார்ப்பது வேடிக்கை. உதாரணம் வயநாடு ராஜா சாந்தா. அத்தகைய யூட்யூபர் கணவன் மனைவி தான் கதை நாயகன் நாயகி. இப்ப சொல்லுங்க பெயர் பொருத்தம் பற்றி நான் சொன்னது சரி தானா? கணவன் மனைவி பேச்சில் உண்மை மிளிர்ந்தால் , அவர்கள் பலரின் கண்களுக்கு அழகாய் தெரியத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் போடும் வீடியோக்கள் டிரென்டிங் ஆகி விடும். ஆனால் அவர்களை அறியாமலே வீடியோ கன்டென்ட் தேடி அடிமை ஆகி விடுவார்கள். இருவரும் விவாகரத்து செய்யப் போவது போல் நடித்தால் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று விடலாம் என திட்டமிடுகிறார்கள் படத்தின் நாயகன் நாயகி. ஆனால் அதே நேரம் வேறொருவன் இவர்களுக்கு ஒரு நுண்வலை விரிக்கிறான். ஆதி காலத்தில் கூட சாத்தான் விரித்த வலையில் விழுந்து ஆப்பிளைத் தின்றது ஏவாள் தானே. இங்கும் நூலிழையில் கணவன் தப்பிக்க, ஈஎம்ஐ யின் அழுத்தத்தால் மனைவி நுண்வலையில் விழுகிறாள். கண்ணுக்குத் தெரியாத மனிதன் கொடுக்கும் டாஸ்க்குகளைப் பார்க்கும் போது பிக் பாஸின் ரசிகர்களைச் சிலர் கோபமாக பழிப்பதும் நியாயம் தானோ எனத் தோன்றுகிறது. பணத்தின் மீது கொள்ளும் ஆசை ஒருவனை எதில் கொண்டு நிறுத்தும் என்று எச்சரிக்கிறது டிரென்டிங். நேர்மையாக நிதானமாக சேரும் பணம் மட்டுமே பாதுகாப்பானது. ரசித்த வசனம்: -> காதலின் அழகு என்ன தெரியுமா? -> ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது. -> இல்ல. ஒருத்தரை ஒருத்தர் முழுமையா புரிஞ்சுக்காம இருக்கிறது. -> ஏன்? -> எப்போ புரிஞ்சுக்கிறோமோ அப்போ காதல் போயிடும். இது வரை பார்த்ததில் இருந்து ரொம்ப வித்தியாசமான படம். நிச்சயம் ரசிக்க வைக்கும். முடிவு திகைக்க வைக்கும்.

29 August, 2025

#தன்னம்பிக்கை மிளிர.

# தன்னம்பிக்கை மிளிர. தலைப்பு கொடுக்க வாய்ப்பளித்த தலைமைக்கும் மாடரேட்டர்ஸ் க்கும் மனமார்ந்த நன்றிகள். ஒருவர் உயர்வடைய திறமை தேவை. வசதி வாய்ப்புகள் தேவை. பிரபலங்களின் ஆதரவு தேவை. அதிர்ஷ்டம் தேவை என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியத் தேவை தன்னம்பிக்கை. மேலே சொன்னவை எல்லாம் ஒரு படி உயர வேண்டுமானால் உதவலாம். ஆனால் உச்சத்தை அடைய நம் தன்னம்பிக்கை மிளிர வேண்டும். நம்மை தோற்கடிக்க நினைப்பவர் முதலில் அடிப்பது நம் தன்னம்பிக்கையில் தான். அதை அழுத்தமாக ஆழமாக ஊன்றி விட்டால் எந்தப் புயல் அடித்தாலும் அசையாது. நம் குழந்தைகளை நன்கு வளர்க்க நினைப்பவர்கள் முதலில் தொடங்க வேண்டியது இந்தப் புள்ளியில் தான். தன்னம்பிக்கை மிளர நான் ஒரு கருத்து சொல்கிறேன். தொடர்ந்து நீங்கள் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். ரொம்ப சென்சிடிவ்வா இருந்தால் அடுத்தவர் விமர்சனம் நம்மை பலவீனமாக்கும். விமர்சனங்களை ரெண்டு விதமா எடுத்துக்கலாம். ஒன்று நம் மேல் அக்கரை கொள்பவர் சொல்வது. அதை எடுத்துக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ளலாம். இரண்டு நம்மை பலவீனப்படுத்த சொல்லும் விமர்சனம். அதை துச்சமென நினைத்து புறம் தள்ள வேண்டும். இப்போ உங்கள் கருத்துகளைச் சொல்லத் தொடங்குங்கள்.

23 August, 2025

வானொலி நினைவுகள்

#வானொலி நினைவுகள் தலைப்பைப் பார்த்த உடன், கூடப் படித்த பள்ளித் தோழியை ரொம்ப வருடங்கள் கழித்துப் பார்த்த உணர்வு. ஆமா படித்ததெல்லாம் வானொலியைக் கேட்டுக் கொண்டு தானே. அது எப்படி படிக்க முடியும்கிறீங்களா? கணிதப் பாடம் . பாட்டு ஒரு பக்கம் கேட்டுக்கிட்டு இருக்கும். கை ஒரு பக்கம் எழுத்து வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கும். காலை ஏழு மணி என நினைக்கிறேன். கே. எஸ் ராஜா நிகழ்ச்சிப் பொறுப்பேற்ப்பார். அவர் தன் பெயரைச் சொல்லும் அழகு அன்றைய வேலைக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுத்து விடும். பி எச் அப்துல் ஹமீது மற்றும் ஒருவர். ஒருவர் எம் ஜி ஆர் என்றால் மற்றவர் சிவாஜி. ஒருவர் ரஜினி என்றால் மற்றவர் கமல். ஒருவரின் ஸ்டைலும் மற்றவரின் தமிழும் அவ்வளவு கவரும். இந்தியாவில் உள்ளவர்களில் சரோஜ் நாராயணசாமியின் குரல் தான் அப்படித் தனித்து நினைவில் இருக்கிறது. அந்தக் குரலில் செய்தி கேட்பது தனி சுகம். எங்க வீட்டில சுவரோடு இணைந்து ஒரு shelf இருக்கும். கதவு இருக்காது. அதன் மேல் தளத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிலிப்ஸ் ரேடியோ. அதற்கு துணியால் கவர் செய்து போட்டு இருப்பாங்க. அம்மா நல்லா எம்ப்ராய்டரி போடுவாங்க. வுல்லன் நூல் பார்த்திருக்கீங்களா? சின்னதா பேப்பர் உருண்டை மேல சுற்றி இருக்காது. நீள நீளமாய் மடக்கி அதன் இருபுறமும் கருப்பு நிறக் கவர் போட்டு இருப்பாங்க. முதலில் அதைப் பிரித்துப் பின் அந்த மொத்த நூலிலிருந்து ஒரு நூலைப் பிரிக்க வேண்டும். அந்த நூலால் ரோஜாப் பூக்கள், மொட்டு, இலைகள் எல்லாம் போட்டு இருப்பாங்க. ஒவ்வொன்றும் அதற்கான பிரத்யேகக் நிறத்தில் இருக்கும். மொட்டுகள் ரத்தச் சிவப்பு நிறம். பூக்கள் அடர் சிவப்பும் மென் சிவப்பும் கலந்து, இலைகள் பச்சை நிறமாய். தொட்டுப் பார்க்கவே மெத்து மெத்துனு இருக்கும். அந்தக் கால இன்னொரு அதிசயம். ரேடியோவில் கரகரன்னு சத்தம் வந்தா அதன் தலை மேல் கை வைத்தால் துல்லியமா இருக்கும். கையை எடுத்தால் கரகரப்புத் தொடங்கி விடும். அது அப்போ பெரும் அதிசயம். ஒலியலைகள் நம் வழியாக earth ஆவது தான் பாடல் தெளிவா இருக்கக் காரணம்னு தெரிந்து கொள்ளும் போது வயதில் பல வருடங்கள் நான் கடந்திருந்தேன். அப்போ பாடல்களைக் கூடச் சேர்ந்து பாடிக்கிட்டே இருப்பது வழக்கம். பிடித்த அர்த்தம் மிகுந்த பாடல்களை நோட்டில் எழுதி வைத்துக் கொள்வோம். சில படங்களின் எல்லா பாடல்களும் பிடிக்கும் என்றால் பத்து பைசா கொடுத்து பாடல் புத்தகங்கள் வாங்கி சேர்த்து வைப்போம். நிறைய எழுதலாம். நாஸ்டால்ஜிக்கா இருக்கும். ஏன்னா அந்தக் காலக் காதல் போராட்டங்களைக் கடந்தது பாடல் என்னும் இந்தத் துரும்பைப் பற்றிக் கொண்டு தானே. "தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமா?" ன்னு ஒரு காதலி மென்குரலில் பாடினால் எந்த காதலனது கோபம் தணியாது. அதெல்லாம் நீயா நானான்னு போட்டி இடாத அந்தக் காலம்.

20 August, 2025

என் மனம் ஒரு தேன்கூடு. நான் தான் அதன் ராணித்தேனீ அறைகளுக்கு ஒன்றாய் எனக்கானவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். அவர்கள் புன்னகையும் பார்வையும் பேச்சும் அத்தனையும் தேன் தேன்! என்னைக் கொன்று விட்டால் எனக்கானவர்களை விரட்டி விடலாம் எனப் பார்த்தார்கள். எனக்கானவர்கள் கொடுக்கும் ராயல் ஜெல்லியால் பிழைத்து விட்டேன். எப்படி ஆனாலும் நான் தரப் போவது தேனடை தானே இறுதி மகிழ்வு எங்களைப் போலே உங்களுக்கும் தானே ( ராயல் ஜெல்லி தேனீக்களால் ராணித் தேனீக்காக தயாரிக்கப்படும் உணவு)
மக்கத்தப்பா ஆசிரியர் : எம் எம் தீன் மக்கத்தப்பா கதை மியாக்கண்ணு ராவுத்தர் இல்லை நப்பி மியாக்கண்ணுவோடு தொடங்குகிறது. பாய் பின்னும் சூழல் தெரியுது. அப்துல் அவர் என்ன வேலை சொன்னாலும் செய்வார். காசு கொடுக்க வேண்டிய நேரத்தில் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி வீட்டுக்கு கிளம்பினாலும் அதை சட்டை செய்யாமல் வேலை செய்வார். அப்துலுக்கு ஒரே ஆசை மக்கத்துக்கு போய் காபா சுவத்துல முட்டிக்கிட்டு நிக்கணும். ரஸூலுல்லா சந்நிதிக்கு போய் சலாம் சொல்லணும். யார் என்ன வேலை சொன்னாலும் செய்வார். பதிலுக்கு என்ன வேணும் என்று கேட்டாலும் இதைத் தான் சொல்வார். அத்துலப்பாவை நேசிக்கும் இன்னொரு நபர் தாடி காசிம். அவரிடம் பேச அத்தனை பேரும் பயப்படுவார்கள். மற்ற பையன்களை சேர்த்துக் கொண்டு தொப்பி போடாமல் தொழப் போனவர். மூன்று தடவை பள்ளி மோதிலால்கள் போன போது அப்துல் தான் அந்த வேலையை ரொம்ப நறுவிசாகப் பார்ப்பார். நிரந்தரமாக பார்க்கச் சொன்னால் மறுத்து விடுவார். எல்லோரும் அமர்ந்து ஆடு புலி ஆட்டம் ஆடுவாங்க. அப்துல் ஜெயித்து விட்டால் என்ன வேணும் என்று கேட்டால் " எப்படியாவது மெக்காவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை தான் என்பார். கதையில் ஒரு மீன் தொட்டி பற்றிய விவரணை வரூம். நான் நினைப்பதுண்டு ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும் அலைகளைப் போன்று இந்த மீன்கள் எப்படி நீந்திக் கொண்டே இருக்கின்றன. அக்கடான்னு சாஞ்சு உட்காரணும்னு தோணவே தோணாதா? ஹவுலு ( தொழப் போகும் முன் கை கால் கழுவும் இடம்) நீரிலுள்ள மீனுக்கும் அப்துலுக்கும் இடைப்பட்ட உறவை எழுதும் போது மனித இனத்தை மட்டுமல்ல உயிரினங்களையே நேசிக்கும் ஆசிரியரின் அன்பு தெரிகிறது. மோட்டார் போட்ட உடனே ஹவுலு மீன்கள் துள்ளி எழும். அவற்றை ரசித்துப் பார்ப்பார். 12 தங்க மீன்களும் 8 ஷார்ப் மீன்களும் இருக்கும். அவர் ரசித்து விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும் நான் சொல்லி நீங்க அனுபவிக்க முடியாது. வாங்கி வாசிக்கணும். ஆயிஷா அம்மா புருஷன் முத்தப்பா கர்நாடகாவில் பல சரக்கு கடையில் வேலை பார்த்தவர் திடீர்னு இறந்து போனதும் ஆயிஷாவை தங்கையாகவே தத்தெடுத்துக் கொள்கிறார். அவருக்கு சிரிக்க சிரிக்கப் பேசும் முத்தப்பாவையும் ரொம்ப பிடிக்கும். அவர் மக்காவில் பிறக்க வேண்டியவர். ஊருக்கு வந்து இறங்கி இருக்கிற மலாயிகத்து மார் அதாவது வானவர் என்பார். அவரை நக்கல் நையாண்டி பண்ணினா உணவு கிடைக்காது என்பார். வரிக்கு வரி ரசிக்கும் படி எழுதி இருக்கிறார். ஓட்டு மாவு தயாரிக்கும் முறை. வாய்வுப் பிடிப்பில் வலி வரும் போது அதற்கான மருந்து, ஊசி இலைகளையும், நொச்சி இலைகளையும் போட்டு இரவில் எரித்தால் கொசு வராது என கதை நெடுக நிறைய minute details கொடுத்திருக்கிறார். வெளிக்கா ஷாகுல் என்றொரு ஆர்வமூட்டும் கதாபாத்திரம். கொஞ்சம் வில்லங்கமான பேச்சு பேசுபவர். வெள்ளரிக்காவும் ராபியாவும் கணவன் மனைவி. இருவர் குணத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. காலையிலேயே டீக்கடையில் சாயா குடித்து மதரஸா கல்தூணில் சாய்ந்தபடி புறம் பேசும் சீனி சேட் அப்துலையும் விட்டு வைத்ததில்லை. இருந்தும் வாய்வுப் பிடிப்பில் உயிர் போய் விடுமோ என அச்சத்தில் புரண்டு அழும் போது அப்துலின் கை வைத்தியம் அவரைக் கொஞ்சம் மாற்றி விட்டது. ஆனாலும் பாம்புக்கு பால் வார்த்தாலும் கொத்தாமல் விடுமா? மறுபடியும் மாறிப் போனார் சீனி சேட். ஒற்றுமையான ஊர் இரண்டு பட்டு மியாக்கண்ணு இராவுத்தர் கனி ராவுத்தர் என்று கோஷ்டி பட்டு ஜமாத் யார் கையில் என பிரிந்து கிடந்த போது அப்துல் யாருக்கும் சிக்காமல் எங்காவது போய் இருக்க நினைக்கிறார். "பூனை எப்போதும் தன்னை மட்டும் கவனிக்க வேண்டும் என்று விரும்பும்" என்ற வரி என்னை சுமார் இருபதாண்டுகள் முன்னே அழைத்துச் சென்றது. என்னிடம் ஒரு பூனை கொஞ்சி விளையாடும். அதன் குட்டியை நான் தூக்கி கொஞ்சுவதை முறைத்துப் பார்த்தது. நாம் தான் அப்படி கற்பனை பண்ணிக்கிறோம்னு நினைச்சேன். ஆனா அதன் பின் அந்த பூனை எங்க வீட்டுக்கு வரவே இல்லை. அந்த குட்டிப் பூனை பதினைந்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்து இறந்தது. நபிகள் நாயகத்துக்கு பூனை ரொம்ப பிடிக்கும் என்பதற்கு ஒரு அழகான கதை சொல்லி இருக்கிறார். கதை வாசித்து முடிக்கும் போது எனக்குத் தோன்றியது யாருக்கான உணவு என்பது அவரவர் பெயர் அரிசியில் எழுதி இருக்கும் என்பது போல ஹஜ் பயணம் யார் யாருக்கு சாத்தியப்படும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் என்பது தான். மக்கத்தப்பா நிறைய பேரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆசிரியர் அதை விற்க வேண்டாம் என முடிவு செய்ததாகச் சொன்னார். இஸ்லாமிய மதத்தின் செழுமையை அறிந்து கொள்ள கண்டிப்பாக உதவும். நன்றி

08 August, 2025

சிறு கதைத் தொகுப்பின் பெயர் : இரத்தக்காவு. ஆசிரியர் :செஞ்சி தமிழினியன் விலை : ரூ 180/_ விதை நெல் பதிப்பகம் முதல் பதிப்பு : டிசம்பர் 2024 இந்த தொகுப்பைப் பற்றி பேரா. வேல நெடுஞ்செழியன் " கதைகளின் வேர்களினூடே நிலவியல், வழிபாடு, நம்பிக்கைச் சடங்குகள், குழந்தைமை, அன்பின் மெல்லிய இழைகள் ஆகியவை நீரோட்டமாக சலசலக்கின்றன" என்கிறார். செஞ்சி தமிழினியன் கவிஞராகத் தொடங்கி சிறு கதை எழுதத் தொடங்கி இருக்கிறார். தற்போது நாவல் உலகிலும் காலெடுத்து வைக்க இருக்கிறார். "இரத்தக்காவு" இவரது மூன்றாவது சிறு கதைத் தொகுப்பு. ஏன் எழுதவில்லை எனக் கேட்க நாலு பேர் இருக்கும் வரை எழுதுவேன் என்கிறார். இதில் மொத்தம் பதினைந்து கதைகள். ஒவ்வொன்றின் கதைக் களமும் தனித்து நிற்கின்றது.? முதல் கதை "மீட்கப்படும் வண்ணங்கள்." கதை நாயகிக்கு அவள் கொள்ளுப்பாட்டியின் பெயரான "பெருமாத்தா" வில் தொடங்கிதனக்குத் தானே வைத்துக் கொண்ட "காயத்ரி" யில் முடிகிறது கதை. இடையே அல்ப மனம் படைத்த சில ஆண்களைப் பற்றி அங்கங்கே சொல்கிறார். திருமணம் முடிந்த முதல் இரவில் "முன்ன பின்ன ஏதும் நடந்திருக்கிறதா எனக் கேட்கும் ஒரு அல்பம். அது மட்டுமல்லாம " அழகா வேற இருக்கிற. எல்லோரும் உன்னை நல்லவள்னு வேற சொல்றாங்க. அது தான் பயம்மா இருக்குது. " என்கிறான். பொறுக்க முடியாமல் அவனை விட்டுப் பிரிகிறாள். அடுத்து நாலு வயதில் குழந்தை உள்ள ஒருவனுக்கு இரண்டாம் தாரமா போகிறாள். அவன் முதல் மாமியார் " பார்த்து இருந்துக்கோமா. பச்சை உடம்புக்காரின்னு கூட பார்க்காம அடிச்சு கொன்னு தூக்கில மாட்டிட்டான்" என்கிறாள். அங்கிருந்தும் பிரிந்து வருகிறாள். இப்படி எந்த நேரமும் தற்காத்துக் கொள்ளவே சிந்தனையை செலவழிக்கும் பெண்களின் உலகம் எவ்வளவு சவாலானது என்று சொல்லி கதையை முடிக்கிறார். இன்னும் சில கதைகள் குறிப்பிடும் விதமாய் உள்ளன. "நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யல. எல்லோருக்கும் நல்லது தான் செஞ்சேன் . எனக்கு ஏன் இந்த நிலைமை என அழும் பாரிஜாதம் ஆயா பற்றிக் கூறும் "அர்த்த வாசனை" பெரும் பள்ளங்களில் விழுந்து இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் ஒருவனைப் பற்றி "இரத்தக்காவு" கதை. "சுடும் நிழல்" என்று ஒரு கதை. அப்பா எங்கே இருக்கிறீங்க சீக்கிரம் போங்க. வீடு திறந்து கிடக்குது" என்னும் முதல் வரியே வாழ்வில் ஒரு முறையேனும் பணமோ பொருளோ தொலைத்தவர்களுக்குத் தன்னைப் பொருத்திப் பார்க்கத் தோணும். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதமாய் ஈர்க்கிறது. அருமையான சிறு கதைத் தொகுப்பு.