Bio Data !!

23 August, 2025

வானொலி நினைவுகள்

#வானொலி நினைவுகள் தலைப்பைப் பார்த்த உடன், கூடப் படித்த பள்ளித் தோழியை ரொம்ப வருடங்கள் கழித்துப் பார்த்த உணர்வு. ஆமா படித்ததெல்லாம் வானொலியைக் கேட்டுக் கொண்டு தானே. அது எப்படி படிக்க முடியும்கிறீங்களா? கணிதப் பாடம் . பாட்டு ஒரு பக்கம் கேட்டுக்கிட்டு இருக்கும். கை ஒரு பக்கம் எழுத்து வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கும். காலை ஏழு மணி என நினைக்கிறேன். கே. எஸ் ராஜா நிகழ்ச்சிப் பொறுப்பேற்ப்பார். அவர் தன் பெயரைச் சொல்லும் அழகு அன்றைய வேலைக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுத்து விடும். பி எச் அப்துல் ஹமீது மற்றும் ஒருவர். ஒருவர் எம் ஜி ஆர் என்றால் மற்றவர் சிவாஜி. ஒருவர் ரஜினி என்றால் மற்றவர் கமல். ஒருவரின் ஸ்டைலும் மற்றவரின் தமிழும் அவ்வளவு கவரும். இந்தியாவில் உள்ளவர்களில் சரோஜ் நாராயணசாமியின் குரல் தான் அப்படித் தனித்து நினைவில் இருக்கிறது. அந்தக் குரலில் செய்தி கேட்பது தனி சுகம். எங்க வீட்டில சுவரோடு இணைந்து ஒரு shelf இருக்கும். கதவு இருக்காது. அதன் மேல் தளத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிலிப்ஸ் ரேடியோ. அதற்கு துணியால் கவர் செய்து போட்டு இருப்பாங்க. அம்மா நல்லா எம்ப்ராய்டரி போடுவாங்க. வுல்லன் நூல் பார்த்திருக்கீங்களா? சின்னதா பேப்பர் உருண்டை மேல சுற்றி இருக்காது. நீள நீளமாய் மடக்கி அதன் இருபுறமும் கருப்பு நிறக் கவர் போட்டு இருப்பாங்க. முதலில் அதைப் பிரித்துப் பின் அந்த மொத்த நூலிலிருந்து ஒரு நூலைப் பிரிக்க வேண்டும். அந்த நூலால் ரோஜாப் பூக்கள், மொட்டு, இலைகள் எல்லாம் போட்டு இருப்பாங்க. ஒவ்வொன்றும் அதற்கான பிரத்யேகக் நிறத்தில் இருக்கும். மொட்டுகள் ரத்தச் சிவப்பு நிறம். பூக்கள் அடர் சிவப்பும் மென் சிவப்பும் கலந்து, இலைகள் பச்சை நிறமாய். தொட்டுப் பார்க்கவே மெத்து மெத்துனு இருக்கும். அந்தக் கால இன்னொரு அதிசயம். ரேடியோவில் கரகரன்னு சத்தம் வந்தா அதன் தலை மேல் கை வைத்தால் துல்லியமா இருக்கும். கையை எடுத்தால் கரகரப்புத் தொடங்கி விடும். அது அப்போ பெரும் அதிசயம். ஒலியலைகள் நம் வழியாக earth ஆவது தான் பாடல் தெளிவா இருக்கக் காரணம்னு தெரிந்து கொள்ளும் போது வயதில் பல வருடங்கள் நான் கடந்திருந்தேன். அப்போ பாடல்களைக் கூடச் சேர்ந்து பாடிக்கிட்டே இருப்பது வழக்கம். பிடித்த அர்த்தம் மிகுந்த பாடல்களை நோட்டில் எழுதி வைத்துக் கொள்வோம். சில படங்களின் எல்லா பாடல்களும் பிடிக்கும் என்றால் பத்து பைசா கொடுத்து பாடல் புத்தகங்கள் வாங்கி சேர்த்து வைப்போம். நிறைய எழுதலாம். நாஸ்டால்ஜிக்கா இருக்கும். ஏன்னா அந்தக் காலக் காதல் போராட்டங்களைக் கடந்தது பாடல் என்னும் இந்தத் துரும்பைப் பற்றிக் கொண்டு தானே. "தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமா?" ன்னு ஒரு காதலி மென்குரலில் பாடினால் எந்த காதலனது கோபம் தணியாது. அதெல்லாம் நீயா நானான்னு போட்டி இடாத அந்தக் காலம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!