08 August, 2025
சிறு கதைத் தொகுப்பின் பெயர் : இரத்தக்காவு.
ஆசிரியர் :செஞ்சி தமிழினியன்
விலை : ரூ 180/_
விதை நெல் பதிப்பகம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2024
இந்த தொகுப்பைப் பற்றி பேரா. வேல நெடுஞ்செழியன் " கதைகளின் வேர்களினூடே நிலவியல், வழிபாடு, நம்பிக்கைச் சடங்குகள், குழந்தைமை, அன்பின் மெல்லிய இழைகள் ஆகியவை நீரோட்டமாக சலசலக்கின்றன" என்கிறார்.
செஞ்சி தமிழினியன் கவிஞராகத் தொடங்கி சிறு கதை எழுதத் தொடங்கி இருக்கிறார். தற்போது நாவல் உலகிலும் காலெடுத்து வைக்க இருக்கிறார். "இரத்தக்காவு" இவரது மூன்றாவது சிறு கதைத் தொகுப்பு. ஏன் எழுதவில்லை எனக் கேட்க நாலு பேர் இருக்கும் வரை எழுதுவேன் என்கிறார்.
இதில் மொத்தம் பதினைந்து கதைகள். ஒவ்வொன்றின் கதைக் களமும் தனித்து நிற்கின்றது.?
முதல் கதை "மீட்கப்படும் வண்ணங்கள்." கதை நாயகிக்கு அவள் கொள்ளுப்பாட்டியின் பெயரான "பெருமாத்தா" வில் தொடங்கிதனக்குத் தானே வைத்துக் கொண்ட "காயத்ரி" யில் முடிகிறது கதை. இடையே அல்ப மனம் படைத்த சில ஆண்களைப் பற்றி அங்கங்கே சொல்கிறார்.
திருமணம் முடிந்த முதல் இரவில் "முன்ன பின்ன ஏதும் நடந்திருக்கிறதா எனக் கேட்கும் ஒரு அல்பம். அது மட்டுமல்லாம " அழகா வேற இருக்கிற. எல்லோரும் உன்னை நல்லவள்னு வேற சொல்றாங்க. அது தான் பயம்மா இருக்குது. " என்கிறான். பொறுக்க முடியாமல் அவனை விட்டுப் பிரிகிறாள்.
அடுத்து நாலு வயதில் குழந்தை உள்ள ஒருவனுக்கு இரண்டாம் தாரமா போகிறாள். அவன் முதல் மாமியார் " பார்த்து இருந்துக்கோமா. பச்சை உடம்புக்காரின்னு கூட பார்க்காம அடிச்சு கொன்னு தூக்கில மாட்டிட்டான்" என்கிறாள். அங்கிருந்தும் பிரிந்து வருகிறாள்.
இப்படி எந்த நேரமும் தற்காத்துக் கொள்ளவே சிந்தனையை செலவழிக்கும் பெண்களின் உலகம் எவ்வளவு சவாலானது என்று சொல்லி கதையை முடிக்கிறார்.
இன்னும் சில கதைகள் குறிப்பிடும் விதமாய் உள்ளன.
"நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யல. எல்லோருக்கும் நல்லது தான் செஞ்சேன் . எனக்கு ஏன் இந்த நிலைமை என அழும் பாரிஜாதம் ஆயா பற்றிக் கூறும் "அர்த்த வாசனை"
பெரும் பள்ளங்களில் விழுந்து இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் ஒருவனைப் பற்றி "இரத்தக்காவு" கதை.
"சுடும் நிழல்" என்று ஒரு கதை. அப்பா எங்கே இருக்கிறீங்க சீக்கிரம் போங்க. வீடு திறந்து கிடக்குது" என்னும் முதல் வரியே வாழ்வில் ஒரு முறையேனும் பணமோ பொருளோ தொலைத்தவர்களுக்குத் தன்னைப் பொருத்திப் பார்க்கத் தோணும்.
ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதமாய் ஈர்க்கிறது.
அருமையான சிறு கதைத் தொகுப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!