Bio Data !!

31 August, 2025

#கந்தர்வன் கதைகள் - தனித்தனியாய் தாகம்

கந்தர்வன் கதைகள் என்று ஒரு சிறுகதைகளின் தொகுப்பு வாசித்துக் கொண்டு இருக்கிறேன். தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்கு கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கை போட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வனுடையது என்று ச. தமிழ்ச்செல்வன் சொல்கிறார். சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். அதில் "தனித்தனியாய் தாகம்" என்றொரு சிறுகதை. தலைப்பே எவ்வளவு அழகாய் இருக்குது. வெயிலின் உக்கிரத்தைச் சொல்வதோடு கதை தொடங்குகிறது. "தோட்டத்தில் இன்று பூத்த பூக்களைத் தொட்டால் சுடுமோ?" [ வெயிலின் கடுமைக்கு பூக்கள் வாடுவதே அன்றி சுடுவதில்லை. சுட்டால் அங்கங்கே தீப்பற்றிக் கொள்ளுமே. இந்த வகையில் பூக்கள் தியாகிகள் தான். ] அன்று நாள் முழுவதும் பவர்கட். அத்தனை பேரும் எரிச்சலில் இருக்கிறார்கள். நெடுஞ்சாலையில் ஒற்றையாய் நிற்கும் டீக்கடையைப் பற்றிச் சொல்லும் போது " சத்தம் போடாமல் நிற்கும் பிச்சைக்காரனைப் போல் இந்த காலனிக்கு அந்த டீக்கடை" என்கிறார். [ ஒரு பரிதாபமான யாசகன் டீ ஆத்துவது போல் கண் முன் காட்சி விரிகிறது. ] ஒரு இளநீர்க்காரன் தினம் அமுதக் கடலான இளநீரை சுமந்து கொண்டு அந்த வீட்டின் முன் நிற்பான். [ நாலு இளநீர் வாங்கி வந்த என் மருமகன் எல்லோரும் குடிக்க ஏதுவாய் உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்க வீட்டில் வேலை செய்யும் பெண் கர்ம சிரத்தையாய் அது புழங்கிய நீரென்று கொட்டி கழுவி வைத்துப்போன ஒரு "சம்பவம்" நினைவுக்கு வருகிறது. ] அந்தப் பகுதியிலுள்ள பங்களாக்களுக்கு தினம் இளநீர் கொண்டு கொடுக்கும் ஒரு வயதானவர். நேரமாகி விட்டதால் வேகு வேகென்று வந்து இளநீரைவெட்டிக் கொடுத்துப் பின் ஓட்டமாய் ஓடி அந்த டீக்கடை டிரம்மிலிருந்த அழுக்குத் தண்ணீரை வேக வேக மாகக் குடித்து திரும்பி பங்களாக்கள் பக்கம் வருகிறார் என்பதோடு கதை முடிகிறது. நம் உள்ளே துயரம் ஊறத் தொடங்குகிறது. புதிய பகுதியாக நான் வாசிக்கும் நல்ல சிறுகதைகளைச் சொல்லத் தொடங்குகிறேன்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!