Bio Data !!

20 August, 2025

மக்கத்தப்பா ஆசிரியர் : எம் எம் தீன் மக்கத்தப்பா கதை மியாக்கண்ணு ராவுத்தர் இல்லை நப்பி மியாக்கண்ணுவோடு தொடங்குகிறது. பாய் பின்னும் சூழல் தெரியுது. அப்துல் அவர் என்ன வேலை சொன்னாலும் செய்வார். காசு கொடுக்க வேண்டிய நேரத்தில் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி வீட்டுக்கு கிளம்பினாலும் அதை சட்டை செய்யாமல் வேலை செய்வார். அப்துலுக்கு ஒரே ஆசை மக்கத்துக்கு போய் காபா சுவத்துல முட்டிக்கிட்டு நிக்கணும். ரஸூலுல்லா சந்நிதிக்கு போய் சலாம் சொல்லணும். யார் என்ன வேலை சொன்னாலும் செய்வார். பதிலுக்கு என்ன வேணும் என்று கேட்டாலும் இதைத் தான் சொல்வார். அத்துலப்பாவை நேசிக்கும் இன்னொரு நபர் தாடி காசிம். அவரிடம் பேச அத்தனை பேரும் பயப்படுவார்கள். மற்ற பையன்களை சேர்த்துக் கொண்டு தொப்பி போடாமல் தொழப் போனவர். மூன்று தடவை பள்ளி மோதிலால்கள் போன போது அப்துல் தான் அந்த வேலையை ரொம்ப நறுவிசாகப் பார்ப்பார். நிரந்தரமாக பார்க்கச் சொன்னால் மறுத்து விடுவார். எல்லோரும் அமர்ந்து ஆடு புலி ஆட்டம் ஆடுவாங்க. அப்துல் ஜெயித்து விட்டால் என்ன வேணும் என்று கேட்டால் " எப்படியாவது மெக்காவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை தான் என்பார். கதையில் ஒரு மீன் தொட்டி பற்றிய விவரணை வரூம். நான் நினைப்பதுண்டு ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும் அலைகளைப் போன்று இந்த மீன்கள் எப்படி நீந்திக் கொண்டே இருக்கின்றன. அக்கடான்னு சாஞ்சு உட்காரணும்னு தோணவே தோணாதா? ஹவுலு ( தொழப் போகும் முன் கை கால் கழுவும் இடம்) நீரிலுள்ள மீனுக்கும் அப்துலுக்கும் இடைப்பட்ட உறவை எழுதும் போது மனித இனத்தை மட்டுமல்ல உயிரினங்களையே நேசிக்கும் ஆசிரியரின் அன்பு தெரிகிறது. மோட்டார் போட்ட உடனே ஹவுலு மீன்கள் துள்ளி எழும். அவற்றை ரசித்துப் பார்ப்பார். 12 தங்க மீன்களும் 8 ஷார்ப் மீன்களும் இருக்கும். அவர் ரசித்து விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும் நான் சொல்லி நீங்க அனுபவிக்க முடியாது. வாங்கி வாசிக்கணும். ஆயிஷா அம்மா புருஷன் முத்தப்பா கர்நாடகாவில் பல சரக்கு கடையில் வேலை பார்த்தவர் திடீர்னு இறந்து போனதும் ஆயிஷாவை தங்கையாகவே தத்தெடுத்துக் கொள்கிறார். அவருக்கு சிரிக்க சிரிக்கப் பேசும் முத்தப்பாவையும் ரொம்ப பிடிக்கும். அவர் மக்காவில் பிறக்க வேண்டியவர். ஊருக்கு வந்து இறங்கி இருக்கிற மலாயிகத்து மார் அதாவது வானவர் என்பார். அவரை நக்கல் நையாண்டி பண்ணினா உணவு கிடைக்காது என்பார். வரிக்கு வரி ரசிக்கும் படி எழுதி இருக்கிறார். ஓட்டு மாவு தயாரிக்கும் முறை. வாய்வுப் பிடிப்பில் வலி வரும் போது அதற்கான மருந்து, ஊசி இலைகளையும், நொச்சி இலைகளையும் போட்டு இரவில் எரித்தால் கொசு வராது என கதை நெடுக நிறைய minute details கொடுத்திருக்கிறார். வெளிக்கா ஷாகுல் என்றொரு ஆர்வமூட்டும் கதாபாத்திரம். கொஞ்சம் வில்லங்கமான பேச்சு பேசுபவர். வெள்ளரிக்காவும் ராபியாவும் கணவன் மனைவி. இருவர் குணத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. காலையிலேயே டீக்கடையில் சாயா குடித்து மதரஸா கல்தூணில் சாய்ந்தபடி புறம் பேசும் சீனி சேட் அப்துலையும் விட்டு வைத்ததில்லை. இருந்தும் வாய்வுப் பிடிப்பில் உயிர் போய் விடுமோ என அச்சத்தில் புரண்டு அழும் போது அப்துலின் கை வைத்தியம் அவரைக் கொஞ்சம் மாற்றி விட்டது. ஆனாலும் பாம்புக்கு பால் வார்த்தாலும் கொத்தாமல் விடுமா? மறுபடியும் மாறிப் போனார் சீனி சேட். ஒற்றுமையான ஊர் இரண்டு பட்டு மியாக்கண்ணு இராவுத்தர் கனி ராவுத்தர் என்று கோஷ்டி பட்டு ஜமாத் யார் கையில் என பிரிந்து கிடந்த போது அப்துல் யாருக்கும் சிக்காமல் எங்காவது போய் இருக்க நினைக்கிறார். "பூனை எப்போதும் தன்னை மட்டும் கவனிக்க வேண்டும் என்று விரும்பும்" என்ற வரி என்னை சுமார் இருபதாண்டுகள் முன்னே அழைத்துச் சென்றது. என்னிடம் ஒரு பூனை கொஞ்சி விளையாடும். அதன் குட்டியை நான் தூக்கி கொஞ்சுவதை முறைத்துப் பார்த்தது. நாம் தான் அப்படி கற்பனை பண்ணிக்கிறோம்னு நினைச்சேன். ஆனா அதன் பின் அந்த பூனை எங்க வீட்டுக்கு வரவே இல்லை. அந்த குட்டிப் பூனை பதினைந்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்து இறந்தது. நபிகள் நாயகத்துக்கு பூனை ரொம்ப பிடிக்கும் என்பதற்கு ஒரு அழகான கதை சொல்லி இருக்கிறார். கதை வாசித்து முடிக்கும் போது எனக்குத் தோன்றியது யாருக்கான உணவு என்பது அவரவர் பெயர் அரிசியில் எழுதி இருக்கும் என்பது போல ஹஜ் பயணம் யார் யாருக்கு சாத்தியப்படும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் என்பது தான். மக்கத்தப்பா நிறைய பேரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆசிரியர் அதை விற்க வேண்டாம் என முடிவு செய்ததாகச் சொன்னார். இஸ்லாமிய மதத்தின் செழுமையை அறிந்து கொள்ள கண்டிப்பாக உதவும். நன்றி

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!