28 September, 2025
ஆனி டீச்சர்
ஆனி டீச்சர்.
இவர்களும் எங்க அம்மா கூட வேலை பார்த்தவங்க தான். லலிதா டீச்சரை அடுத்து நான் பார்க்க நினைத்தது இவர்களைத் தான். இவர்களும் 90+ வயதுடையவர்கள். இவர்கள் நெல்லை காந்திமதி பள்ளியில் PT assistant. நாம games teacher னு சொல்வோமே அவங்க தான்.
பொதுவா கேம்ஸ் டீச்சர்ஸ் ரொம்ப கடுமையா நடந்துக்குவாங்க. ஆனா இவங்க ரொம்ப மென்மையானவங்க. இவங்க கணவருடன் பிறந்தவங்க ஒன்பது பேர். ஒன்பது ஆண்கள். பெரிய குடும்பம். இவங்க தான் முதல் மருமகள். அத்தனை பேரையும் அவ்வளவு அழகா அனுசரிச்சுப் போனாங்க. அவர்களும் இங்ங்களிடம் ரொம்ப மரியாதையா நடந்துக்குவாங்க.
எங்க சின்ன வயசுல அம்மா இவங்க வீட்டுக்கு ஏதாவது வேலையா அனுப்புவாங்க. முக்கியமா நிறைய ரோஜாச் செடிகள் இருக்கும். அதற்கு முட்டை ஓடுகள், காய்ந்த டீத் தூள் இதெல்லாம் கொண்டு கொடுக்கச் சொல்வாங்க. வரும் போது அவர்கள் கொடுக்கும் ரோஜாப் பூக்களைக் கொண்டு வருவோம்.
அதை நினைவு படுத்திக் கேட்டேன். இப்போ செடிகள்லாம் ரொம்ப இல்லைன்னு சொன்னாங்க. என் கணவரும் அவங்களோட ஒரு கொழுந்தனும் நண்பர்கள். " நாங்க ஜானை பம்பை முடின்னு சொல்வோம் " னாங்க. இப்போ எல்லாம் போயிடுச்சுன்னு சொல்லி போட்டோவைக் காட்டினேன். அந்த பம்ப முடியைப் பார்த்துத் தானே காதலில் விழுந்தேன்.
கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். என் கணவரோட கண்டிப்பா மறுபடியும் பார்க்க வரேன்னு சொல்லி வந்தேன். எல்லா விஷயங்களையும் நல்லா நியாபகம் வச்சு பேசினாங்க.
இந்த வயதில் அவங்க ஞாபக சக்தி என்னை ஆச்சர்யமூட்டியது. உடல் நலம் பற்றியோ தனிமை பற்றியோ எந்தக் குறைபாடோ , வருத்தமோ இல்லாமல் இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு பேசினார்கள். அவரகள் ஆரோக்கியத்துக்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.
நாமும் அப்படியே இருக்க முயற்சி பண்ணுவோம்.
27 September, 2025
மலையாள சினிமா : மீஷ
படம் பெயர் மீஷ
நம்ம தமிழ் ல மீசை தான் மலையாளப் படம் என்பதால் இப்படி பெயர்.
இயக்குநர்: Emcy Joseph.
போட்டோகிராஃபி : சுரேஷ் ராஜன்.
முக்கிய நடிகர்கள் : கதிர், ஹக்கிம் ஷாஜகான், ஷைனி டாம் சாக்கோ.
ஒரு இறப்பு வீட்டில் நிற்பவரிடையே தலைவன் போல் இருப்பவரிடம் ஒருவர் வந்து "அனந்து' என்கிறார். அனந்து வந்திருக்கிறான்னு சொல்லாம வெறும் அனந்து. வசனங்கள் ரொம்ப crisp ஆ இருக்கும் போல எனத் தோன்றியது.
அனந்துவுக்கு இமோத் என்றொரு நண்பன். இவர்கள் இருவரும் ஹீரோ மிதுன் உடன் ஒரு ட்ரிப் ப்ளான் பண்றாங்க.
ஷைனி டாம் வித்தியாசமான நடிப்பு. அவர் தான் நடிப்பில் புலி ஆகிட்டே.
ஹீரோ காட்டிலாகா அதிகாரி. ஹீரோ ஆனால் வில்லத்தனம் செய்கிறவன். காட்டைக் காக்க வேண்டிய அதிகாரியே வன விலங்குகளை அழித்தால் வில்லத்தனம் தானே.
எனக்கு ஏற்கனவே காட்டுலா பிடிக்குமாதலால் காட்டுக்குள்ளே பயணம் செய்த காமராவோடே நானும் பயணித்தேன்.
ரகு ( மாட்டு ரகு) என்ற அரசியல்வாதியின் பலம் மிதுன். மூளை அனந்து. ஆனால் பலிகடாக்கள்.
நண்பர்கள் மூவருக்கிடையே இருக்கும் ஆழமான நட்பும் அதே நேரம் சந்தர்ப்பம் வரும் போது சபலப்பட்டு நண்பனையே காட்டிக் கொடுப்பதுமாக கதை நகர்கிறது.
இன்னொரு பிறவி எடுத்து ஆணின் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அப்போ பெண்ணின் வாழ்க்கை சரியில்லையான்னு கேட்டா அது தான் ஒரு தடவ வாழ்ந்தாச்சே. இந்த படம் பார்க்கும் போது இந்த எண்ணம் வலுத்தது. என்ன ஜாலியா இருக்காங்க.
மிதுன் : அந்தப் பொண்ணு என்னைப் பார்த்தாளா?
அனந்து : பார்த்த மாதிரி தான் இருந்துச்சு
மிதுன் : அப்போ நம்ம ஒண்ணும் அவ்வளவு மொக்கை இல்ல போல. இல்ல?
வசனம் ரசிக்கும் விதமாய்.
" போராட்டங்களில் தான் தலைவன் உருவாகிறான்" என்று ஒரு வசனம் வருகிறது. கட்சிகள் பிளவுபட்டு புதுத் தலைவன் உருவாவதும் போராட்டங்களில் தானே.
அருமையான போட்டோகிராபி. உதாரணமாக நத்தையின் க்ளோஸ் அப். ஜீப் வேகமாக செல்லும் போது தெரிக்கும் தண்ணீர், குளிக்கும் அறையின் கீழ் பகுதியில் இருந்து வரும் வெளிச்சம். ரயில் பூச்சியின் க்ளோஸ் அப்.
பான் இந்தியா படங்கள் வர ஆரம்பித்த பிறகு நல்ல முன்னேற்றம். நம்ம கதிர் மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வருவார் என்று நம்பலாம்.
17 September, 2025
தள்ளிப் போடாதீர்கள் தங்கங்களே!
# லலிதா டீச்சர்.
என் அம்மா வேலை பார்த்தது காந்திமதி பள்ளியில் ஆசிரியராக. அப்போ அடிக்கடி அந்தப் பள்ளிக்குச் செல்வோம். பள்ளி வாகனம் வீட்டுப் பக்கம் வரும். அதில் தான் அம்மா போவாங்க. அந்தக் காலத்திலேயே அந்த வாகனத்தின் கண்டக்டர் வேலை ஒரு பெண் பார்த்தார்கள். அவர்கள் பேரு சூடி. அந்த அக்காவோட மகன் மணி இப்போ திரைப்படங்களில் காரெக்டர் ஆர்ட்டிஸ்டாக வருகிறார்கள்.
என்றாவது பஸ்ஸை விட்டு விட்டாங்கன்னா நான் அம்மாவை சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வேன். எங்க அம்மாவுக்கு மகனாகவும் மகளாகவும் நான் இருந்தேன்.
பள்ளி ஆண்டு விழாவில் லலிதா டீச்சர் நாடகங்களில் நடிப்பாங்க. இவங்க தமிழ் ஆசிரியை. நல்ல கலரா உயரமா இருப்பாங்க. அதிகம் ஆண் வேடம் ஏற்று நடிப்பாங்க. காமெடி தூள் பறக்கும். ஜோல்னாப் பையும் கண்ணாடியுமாக அந்த உருவம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
அங்கே என் பிள்ளைகளும் விடுமுறையில் போயிருக்காங்க. எங்களுக்கு எல்லாம் ஒரு சரணாலயம் அது. நம்மைச் சேர்ந்தவர்கள் ஆசிரியராக இருக்கும் பள்ளிக்கு நாம போகும் போது வேற லெவலான உபசரிப்பு கிடைக்கும்.
ரொம்ப காலமாக அங்குள்ள ஆசிரியர்களிடம் தொடர்பு விட்டுப் போயிருந்தது. திடீரென ஒரு தொடர்பு ஏற்பட்டது. அப்போ தான் 90 வயதுக்கு மேற்பட்ட அந்த பள்ளியில் பணி புரிந்த நாலு ஆசிரியைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அப்போ இன்னொரு ஆசிரியையின் மகளிடம் நான் சொன்னேன். ரெண்டு பேரும் போய் அந்த நாலு ஆசிரியைகளையும் பார்த்து வருவோம். அதில் 95 வயதான லலிதா டீச்சர் சீனியர் மோஸ்ட்டாக இருப்பதால் முதலாவதாக அவர்களைச் சென்று பார்ப்போம் என்றிருந்தேன். புதன்கிழமை போவதாக முடிவெடுத்திருந்தோம். திங்களன்று அவர்கள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. ரொம்ப கஷ்டமா போச்சுது.
போய் அவர்கள் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்தேன். 94 வயது வரை தனக்கான வேலைகளை அவர்களே தான் பார்த்திருக்கிறார்கள். காலையில் நேரத்தில் மருமகள் காப்பி கொடுப்பதில்லை என்று குற்றம் சொல்லும் இந்தக் காலத்தில் அந்த வயதிலும் எழுந்ததும் தனக்கான காப்பியைத் தானே போட்டுக் கொள்வார்களாம். அவர்கள் ஒரு early bird. கண் பார்வை நன்றாக இருந்திருக்கிறது. தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் தான் பிறந்த நாள் கொண்டாடியதாக சொன்னார்கள்.
அப்போ எடுத்த புகைப்படத்தைப் பார்த்தேன். மெலிந்து போயிருந்தாலும் முகத்தில் அந்த தேஜஸ் மட்டும் குறையாமல் அப்படியே இருந்தது.அந்த கண்ணாடிக்குள்ளிருந்து கண்கள் ஒரு இரண்டு நாள் முன்னாடி வந்திருக்க மாட்டியா என்றன.
மறுபடி மறுபடி மனது சொன்னது " யாரையும் பார்க்க நினைத்தால் உடனே போய் விடு. தள்ளிப் போடாதே" அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன். தள்ளிப் போடாதீர்கள்.
16 September, 2025
பர்தா
அமேசான் ப்ரைம் ல paradha
தெலுகுப்படம்.
தமிழில் வசனம் வருகிறது.
இயக்குநர்: praveen kandragula
முக்கிய கதா பாத்திரத்தில் நடிப்பவர்கள் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா, சங்கீதா. இப்போ பான் இந்தியா படங்கள் தான் அதிகம். ஆனாலும் இரண்டு மலையாளப் பெண்களையும், ஒரு தமிழ்ப்பெண்ணையும் முக்கிய கதாபாத்திரத்தில் போட்டு எடுத்த தெலுங்குப்படம் என்பதற்காக சிறப்புப் பாராட்டுக்கள்.
பர்தா என்ற பெயரைப் பார்த்ததும் இஸ்லாமியப் பின்னணியில் கதை இருக்கும் என நினைத்தேன். ஆனால் ஒரு கிராமத்தில் மக்கள், பெண்கள் பர்தா போட்டு முகம் மூடாவிட்டால் குழந்தைகள் பிறந்து உயிரோடு இருக்காது என நம்புகிறார்கள்.
அத்தனை பெண்களும் வீட்டில் உள்ளவர் தவிர வெளி ஆண்களுக்கு தன் முகம் காட்டுவதில்லை. தன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகிறது. அவள் தன் தோழியுடன் ஒரு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் போது காற்றுக்கு ஒரு நொடி பர்தா பறந்து விடுகிறது. அவள் ஒரு நொடிக்குள் பர்தாவை எடுத்து முகம் மூடி விடுகிறாள். தெரியும் அந்த முழு மதி போன்ற முகத்தை ஒருவன் புகைப்படம் எடுத்து அது ஒரு பத்திரிகையின் அட்டைப் படமாக வந்தும் விடுகிறது.
அது நிச்சயம் பண்ணப் போகிற நேரத்தில் தெரிந்து விட நிகழ்வு நின்று விடுகிறது. அவர்கள் வழக்கப்படி அந்தப் பெண்ணைக் கொன்று விட வேண்டும். கொன்று தான் பரிகாரம் தேட முடியும்.
இன்றும் வட இந்தியக் கிராமங்களில் முகத்தை மூடி மறைத்து பெண்கள் செல்லும் வழக்கம் உண்டு.
மறைப்பதனால் தான் பல குற்றங்கள் நடக்கின்றன என்று துணிச்சலாய் உடலரசியல் பேசும் பெண்கள் இருக்கும் உலகில் பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு எதிராய் நடக்கும் குற்றங்களுக்கு காரணமல்ல என்பதை பூடகமாகச் சொல்ல எடுக்கப் பட்ட கதை போல் இருக்கிறது.
எடுத்த புகைப்படக் காரரைத் தேடி வட இந்தியாவுக்கு செல்வது போல் வருவதால் பல இயற்கைக் காட்சிகளையும் படம் பிடித்துக் காட்ட ஏதுவாகிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் சதி போன்ற வழக்கங்கள் ஒழிய ஒரு பெண் தான் துணிந்து முடிவெடுக்க வேண்டி இருந்தது. அதே போல் இந்த சுப்பு என்னும் பெண் எடுக்கும் முன்னெடுப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது.
ஒரு பெண் உயர்வடைவதை விரும்புவார்கள் ஆனால் உச்ச பதவியை அடைய எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவள் பெண் என்பதே அவளுக்கு எதிரியாக இருக்கிறது என்பதைச் சொல்லும் ஆமி கதா பாத்திரம் திரைப்படத்தில் முக்கியமான ஒன்று தான்.
நகைச்சுவைக்காக என்றாலும் ஒரு பெண் தன் கணவன் குடும்பம் குழந்தைகள் தாண்டி சிந்திப்பது அவசியமில்லை என நினைப்பது எவ்வளவு மூடத்தனம் என் பதைக் காட்டும் சங்கீதா கதாபாத்திரமும் நன்றாகக் கையாளப் பட்டு இருக்கிறது.
ரொம்ப நல்ல படம். பெண்களுக்கு முக்கியமாய் ரொம்ப பிடிக்கும்.
என் மதிப்பீடு 4.5/5
14 September, 2025
நிம்மதி வேண்டும் வீட்டிலே.
# நிம்மதி வேண்டும் வீட்டிலே.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் தூங்குவது, சாப்பிடுவது, வெளியே கிளம்புவது போன்ற நேரங்களை விடுத்து வீட்டில் மீதி இருக்கும் நேரம் ரொம்பக் கொஞ்சம்.
அந்த கொஞ்ச நேரத்தில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம், சண்டை, மனஸ்தாபம், கோபம். அது அலை போல மீதி நேரங்களையும் பாதிக்கும். அதிகரித்துக் கொண்டே போனால் வீட்டுக்கு வருவதையே மனம் விரும்பாது. ஆணானால் பல பழக்கங்கள் வர வழி வகுக்கும். பெண்ணானால் பெரும்பாலும் வேறு நட்பை நாடும். அந்த நட்பு தரும் பலத்தில் தன் துயரத்தைக் கடக்க முயலும். முடியாத போது விவாகரத்தில் முடியும்.
இதுவே பிள்ளைகள் ஆனால் காதலிக்க நினைக்கும். நண்பர்களோடு சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகும்.
இது எல்லாம் இல்லாமல் போக வீட்டில் இருக்கும் அந்தக் கொஞ்ச நேரம் அடுத்தவர் விருப்பு வெறுப்புகளை மதித்து நடந்தால் போதும்.
" அந்த செய்தித் தாள்ல தேர்வா வரப் போகுது. இவ்வளவு நேரம் படிக்கிறீங்க" என்றோ
" இந்த சீரியல் எல்லாம் பார்த்து பார்த்துத் தான் உன் மைன்ட்டே பொல்யூட் ஆகிப் கிடக்குது" என்றோ
" "இதெல்லாம் ஒரு நிகழ்ச்சின்னு எப்படித் தான் பார்க்கிறீங்களோ" என்று முதியவர்களைப் பார்த்தோ
"ஒரு நாள் இல்ல ஒரு நாள் அந்த செல்லைத் தூக்கி உடைக்கப் போறேன் பாரு" என்று பிள்ளைகளைப் பார்த்தோ சொல்லாமல்
அவரவர் கடமையை முடித்த பின்னான நேரத்தை அவரவர் விருப்பப்படி செலவழிக்க அனுமதித்தாலே பாதிச் சண்டை குறைந்து விடும்.
தான், தன் விருப்பம் என்று சுய நலமாய் இல்லாமல் , கொஞ்சம் பெருந்தன்மையோடு இருப்பவரை பலி கடா ஆக்காமல் , இருந்தாலே வீட்டுக்குள் நிம்மதி இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நிம்மதியாய் இருக்க முக்கியத் தேவை பணம். குடும்பத்துக்கு தேவையான பணம் சம்பாதிப்பதிலோ, செலவழிப்பதிலோ அத்தனை பேருக்கும் கவனம் இருக்க வேண்டும்.
அவ்வளவு தாங்க. இனி அவரவர் போய் அவரவர் வேலையைப் பார்ப்போம்.
11 September, 2025
நான் இந்த வாரம் வாசித்த மிக நல்ல ஒரு சிறுகதை. கந்தர்வன் கதைகளில் "தான்"
ஒரு சிற்றூரின் விடிகாலை நேரச் சந்தடி தொடங்குவதை விவரிப்பதோடு தொடங்குகிறது சிறுகதை. அதில் வந்த ஒரு வரி இது வித்தியாசமான கதை என்று சொல்லியது. " காதுகளைக் கழற்றிக் கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு நடக்கிறார்கள். கால்களின் ராச்சியம் கடை வீதியெங்கும்," பதின்ம வயதில ரொம்ப தூரம் நடந்து கால்கள் வலிச்சதுன்னா " இந்த கால்களைக் கழட்டி தோள் மேல போட்டு நடக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு " சொல்வேன். அது ஞாபகம் வந்தது.
ரொம்ப சுய நலமாயும், பிறரைப் பற்றிய கதைகளை ஆர்வமாய் பகிர்ந்து கொண்டும் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள். அவர்களிலிருந்து வித்தியாசமானவன் நம் கதாநாயகன். அரசம்பட்டி கிராமத்திற்கு வாரத்தில் மூன்று நாள் போய் முதியோர் கல்வி எடுப்பான் முழுவதும் தன் சொந்தச் செலவில்.
ஒரு நாள் தெருவில் இவன் கண்ணுக்கு எதிரே ஒருவன் மாடியிலிருந்து தலை குப்புற கீழே விழுகிறான். அதிர்ஷ்டவசமாக விழுந்த இடத்தில் கிடந்த கல்லின் மேல் விழுந்து சிதறிப்போகாமல் குழி பறித்துக் கிடந்த மணலில் விழுந்து உயிர்பிழைக்கிறான்.
ஆனால் மருத்துவர் "ப்ளட் தலையில் க்ளாட் ஆகிடுச்சுன்னா பொழைக்கிறது சிரமம். உடனே தஞ்சாவூர் பெரியாசுபத்திரிக்கு கொண்டு போங்க " என்கிறார்.
இந்த சுயநலம் மிகுந்த உலகில் யாரென்றே தெரியாத ஒருவருக்காக பணம் செலவழித்து , ஓடி ஓடி உதவி கடைசியாக ரத்தமும் கொடுத்து காப்பாற்றும் நாயகன் தளர்ச்சியாய் இருக்கிறதென்று ஜூஸ் குடிக்க போக கடைக்காரர் " ரத்தம் கொடுத்தீங்களா? ரத்தம் கொடுத்தவரிடம் நான் ஜூஸுக்கு காசு வாங்குவதில்லை " என்று சொல்லி உலகில் சுய நலம் மிகுந்தவர்கள் மட்டுமல்ல சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று உணர்த்துகிறார்.
07 September, 2025
#No man's Land
நான் இன்று இரண்டு மலையாளப் படங்கள் பற்றி பேசப் போகிறேன்.
ஒன்று அமேசானில் no man' s land என்ற படம். இது 2021 இல் வெளி வந்திருக்கிறது. இதன் இயக்குநர் ஜிஷ்ணு ஹரீந்திர வர்மா. ஒரு சைக்கோ த்ரில்லர் படம். ஹீரோ லுக்மான் அவரன். ஹீரோயின் சிரிஜா தாஸ்.
இருவரும் ஒரு ரிசார்ட்டில் பணி புரிகிறார்கள். அங்கு தனிமையில் வந்து தங்கும் ஆண்களுக்கு அந்தப் பெண் பணம் வாங்கிக் கொண்டு கம்பெனி கொடுக்கிறாள். . அங்கு காதலித்து ஒளிந்து ஓடி வரும் ஒரு ஜோடி இவர்களால் கொல்லப்பட்டு விடுகிறார்கள். அதனை அடுத்து அவர்களைத் தேடி வரும் சகோதரன் என்று கதை நகரும்.
படம் ரொம்ப பிரமாதம் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் ஹீரோ லுக்மான், நிமிர்ந்து நேருக்கு நேர் பார்க்காத , தன்னம்பிக்கை அற்ற , மன நலம் கொஞ்சம் குன்றியவராக நடிக்கிறார். படம் முழுவதும் தான் கொல்வதைப் பற்றியோ, பின் உடல்களைப் புதைப்பதைப் பற்றியோ எந்த ஸ்மரணையும் இன்று சொன்ன படி பிரியாணி வாங்கிக் கொடுக்காமல் போய் விட்டார்கள் என்று வருத்தப்படுகிறான்.
இவரது பிரமாதமான நடிப்புக்காக இந்த படம் பார்த்து விட்டு அடுத்தது Hotstar இல் sulaika manzil பாருங்க. இது 2023 இல் வெளி வந்தது. இது ஒரு ரொமான்டிக் காமெடி படம். இயக்குநர் அர்ஷஃப் ஹம்ஸா. இரண்டிலும் கதாநாயகன் ஒருவரே. லுக்மான் அவரன். கதாநாயகி அனார்கலி மரிக்கார். இந்த படத்தைப் பார்க்கும் போது ஒரு மலையாள இஸ்லாமியத் திருமணத்தில் முழுமையாக கலந்து கொண்ட உணர்வு வரும்.
திருமணத்துக்கு முன் பெண் தன்னை விரும்பித் தான் திருமணம் செய்து கொள்கிறாளா என்று தன்னம்பிக்கை சற்று குறைவாய் உள்ள ஆண்களுக்கு எழும் இயல்பான சந்தேகம் ஹீரோவுக்கும் வருகிறது. அதை நிச்சயப்படுத்ததிக் கொள்ள விரும்பி சந்திக்க முயலும் போதெல்லாம் தட்டிப் போக சந்தேகம் வலுக்கிறது.
படிக்கும் காலத்தில் பெண் ஒருவனைக் காதலிக்க அது தெரிந்த பெண்ணின் அண்ணன் கண்டித்ததோடு தன் தங்கையிடம் பேசுவதையே நிறுத்தி விடுகிறார். பின் தங்கையின் திருமணத்தின் போது மௌல்வி பெண்ணுக்கு சம்மதமா என்று கேட்கச் சொல்ல, தன் ஈகோ நொறுங்கி நெருங்கி வரும் காட்சி உணர்வு மிகுந்தது.
ஒரு பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்குமா எனத் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருந்தும் அவள் வாய் வார்த்தையாய் அறிய வேண்டும் என்று காத்திருந்த கதாநாயகன் அதை அறிந்ததும்
எத்தர காலம் காத்திருந்து ஒண்ணு காணுவான்.
எத்தர காலம் காத்திருந்து
ஒண்ணு மிண்டுவான்
என்று சூப்பர் நடனம் ஒன்று ஆடுவார். ரசிக்கும் படி இருக்கும்.
இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்து ரசியுங்கள்.
02 September, 2025
விஜய் டீவி கோபிநாத் அவர்கள் நடத்திய , தெரு நாய்களுக்கு உணவு அளித்து வளர்ப்பது பற்றிய நீயா நானா? நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே எனக்குள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஊருக்குள் பன்றிகள் நடமாட்டம் மிகவும் அதிகமாய் இருந்தது. சாக்கடை பகுதிகளில் தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்துக் கிடக்கும். அதன் அருகில் குட்டிப் பன்றிகள் பால் குடித்த வண்ணம் உருண்டு கொண்டு வரும். நாங்கள் சிறு பிள்ளைகள் அதைக் கண்டு கொள்ளாமல் வேறொரு பக்கம் விளையாடிக் கொண்டிருப்போம். நான் சொல்வது ஊருக்குள்ளேயே நடக்கும்.
அதன் பின் ஊருக்குள் மூளைக் காய்ச்சல் வந்து பலர் பாதிப்படைவதைக் கண்ட பின், அது பன்றிகளிடம் இருந்து பரவுகிறதோ என்ற சந்தேகம் வரும் போது ஊருக்குள் பன்றிகளின் நடமாட்டத்தை முழுவதுமாக ஒழித்தார்கள். பன்றிகளை வளர்ப்பவர்கள் அதிகம் அடித்தட்டு மக்களாகத் தான் இருந்தார்கள். அதிகம் எதிர்ப்பெழுப்பாமலே ( இல்லை எதிர்ப்பு நமக்குத் தெரியாமலேயா) அது முடிந்தது. இன்று ஊருக்குள் பன்றிகளைக் காண்பது அரிதாகிப் போனது.
இன்று தெரு நாய்களால் ரேபீஸ் பாதிப்பு அதிகரிக்கிறது என்று அரசு ஒரு நிலைப்பாடு எடுக்கும் போது அந்தப் புரிதல் வேண்டும். எதிர்ப்பவர்கள் அடித்தட்டு மக்களை விட புரிந்துணர்வு இன்னும் கொஞ்சம் கூடுதல் உள்ளவர்களாய் இருந்தும் ஏன்??? மீடியா வளர்ச்சியால் அதிகம் தெரிகிறதா?
என் மனதின் குரல் கேட்டது போல் கோபி நிகழ்ச்சி இறுதியில் அதே கேள்வியை கேட்டு விட்டார். அவர் சொன்னது போலவே கழுதைகளும் முழுவதுமாக இல்லாமல் போய் விட்டன. இரண்டு பக்கமும் பொதி மூட்டையை சுமந்து செல்லும் கழுதைகள், இரண்டு கால்கள் கட்டப்பட்ட நிலையில் துள்ளிச் செல்லும் கழுதைகள், கர்ண கடூரமாய் சத்தமிட்டுச் செல்லும் கழுதைகள், இன்னும் என்னென்னவோ என் நினைவில் ஊர்வலம் போகின்றன. இப்போ முழுவதுமாய் கண்ணில் படுவதில்லை.
எல்லா உயிர்களும் வாழ்வதற்கானது இந்த பூமி என்று கண் மூடித்தனமாக சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது என்பது என் எண்ணம்.
Subscribe to:
Comments (Atom)
