Bio Data !!

17 September, 2025

தள்ளிப் போடாதீர்கள் தங்கங்களே!

# லலிதா டீச்சர். என் அம்மா வேலை பார்த்தது காந்திமதி பள்ளியில் ஆசிரியராக. அப்போ அடிக்கடி அந்தப் பள்ளிக்குச் செல்வோம். பள்ளி வாகனம் வீட்டுப் பக்கம் வரும். அதில் தான் அம்மா போவாங்க. அந்தக் காலத்திலேயே அந்த வாகனத்தின் கண்டக்டர் வேலை ஒரு பெண் பார்த்தார்கள். அவர்கள் பேரு சூடி. அந்த அக்காவோட மகன் மணி இப்போ திரைப்படங்களில் காரெக்டர் ஆர்ட்டிஸ்டாக வருகிறார்கள். என்றாவது பஸ்ஸை விட்டு விட்டாங்கன்னா நான் அம்மாவை சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வேன். எங்க அம்மாவுக்கு மகனாகவும் மகளாகவும் நான் இருந்தேன். பள்ளி ஆண்டு விழாவில் லலிதா டீச்சர் நாடகங்களில் நடிப்பாங்க. இவங்க தமிழ் ஆசிரியை. நல்ல கலரா உயரமா இருப்பாங்க. அதிகம் ஆண் வேடம் ஏற்று நடிப்பாங்க. காமெடி தூள் பறக்கும். ஜோல்னாப் பையும் கண்ணாடியுமாக அந்த உருவம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அங்கே என் பிள்ளைகளும் விடுமுறையில் போயிருக்காங்க. எங்களுக்கு எல்லாம் ஒரு சரணாலயம் அது. நம்மைச் சேர்ந்தவர்கள் ஆசிரியராக இருக்கும் பள்ளிக்கு நாம போகும் போது வேற லெவலான உபசரிப்பு கிடைக்கும். ரொம்ப காலமாக அங்குள்ள ஆசிரியர்களிடம் தொடர்பு விட்டுப் போயிருந்தது. திடீரென ஒரு தொடர்பு ஏற்பட்டது. அப்போ தான் 90 வயதுக்கு மேற்பட்ட அந்த பள்ளியில் பணி புரிந்த நாலு ஆசிரியைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அப்போ இன்னொரு ஆசிரியையின் மகளிடம் நான் சொன்னேன். ரெண்டு பேரும் போய் அந்த நாலு ஆசிரியைகளையும் பார்த்து வருவோம். அதில் 95 வயதான லலிதா டீச்சர் சீனியர் மோஸ்ட்டாக இருப்பதால் முதலாவதாக அவர்களைச் சென்று பார்ப்போம் என்றிருந்தேன். புதன்கிழமை போவதாக முடிவெடுத்திருந்தோம். திங்களன்று அவர்கள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. ரொம்ப கஷ்டமா போச்சுது. போய் அவர்கள் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்தேன். 94 வயது வரை தனக்கான வேலைகளை அவர்களே தான் பார்த்திருக்கிறார்கள். காலையில் நேரத்தில் மருமகள் காப்பி கொடுப்பதில்லை என்று குற்றம் சொல்லும் இந்தக் காலத்தில் அந்த வயதிலும் எழுந்ததும் தனக்கான காப்பியைத் தானே போட்டுக் கொள்வார்களாம். அவர்கள் ஒரு early bird. கண் பார்வை நன்றாக இருந்திருக்கிறது. தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் தான் பிறந்த நாள் கொண்டாடியதாக சொன்னார்கள். அப்போ எடுத்த புகைப்படத்தைப் பார்த்தேன். மெலிந்து போயிருந்தாலும் முகத்தில் அந்த தேஜஸ் மட்டும் குறையாமல் அப்படியே இருந்தது.அந்த கண்ணாடிக்குள்ளிருந்து கண்கள் ஒரு இரண்டு நாள் முன்னாடி வந்திருக்க மாட்டியா என்றன. மறுபடி மறுபடி மனது சொன்னது " யாரையும் பார்க்க நினைத்தால் உடனே போய் விடு. தள்ளிப் போடாதே" அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன். தள்ளிப் போடாதீர்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!