02 September, 2025
விஜய் டீவி கோபிநாத் அவர்கள் நடத்திய , தெரு நாய்களுக்கு உணவு அளித்து வளர்ப்பது பற்றிய நீயா நானா? நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே எனக்குள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஊருக்குள் பன்றிகள் நடமாட்டம் மிகவும் அதிகமாய் இருந்தது. சாக்கடை பகுதிகளில் தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்துக் கிடக்கும். அதன் அருகில் குட்டிப் பன்றிகள் பால் குடித்த வண்ணம் உருண்டு கொண்டு வரும். நாங்கள் சிறு பிள்ளைகள் அதைக் கண்டு கொள்ளாமல் வேறொரு பக்கம் விளையாடிக் கொண்டிருப்போம். நான் சொல்வது ஊருக்குள்ளேயே நடக்கும்.
அதன் பின் ஊருக்குள் மூளைக் காய்ச்சல் வந்து பலர் பாதிப்படைவதைக் கண்ட பின், அது பன்றிகளிடம் இருந்து பரவுகிறதோ என்ற சந்தேகம் வரும் போது ஊருக்குள் பன்றிகளின் நடமாட்டத்தை முழுவதுமாக ஒழித்தார்கள். பன்றிகளை வளர்ப்பவர்கள் அதிகம் அடித்தட்டு மக்களாகத் தான் இருந்தார்கள். அதிகம் எதிர்ப்பெழுப்பாமலே ( இல்லை எதிர்ப்பு நமக்குத் தெரியாமலேயா) அது முடிந்தது. இன்று ஊருக்குள் பன்றிகளைக் காண்பது அரிதாகிப் போனது.
இன்று தெரு நாய்களால் ரேபீஸ் பாதிப்பு அதிகரிக்கிறது என்று அரசு ஒரு நிலைப்பாடு எடுக்கும் போது அந்தப் புரிதல் வேண்டும். எதிர்ப்பவர்கள் அடித்தட்டு மக்களை விட புரிந்துணர்வு இன்னும் கொஞ்சம் கூடுதல் உள்ளவர்களாய் இருந்தும் ஏன்??? மீடியா வளர்ச்சியால் அதிகம் தெரிகிறதா?
என் மனதின் குரல் கேட்டது போல் கோபி நிகழ்ச்சி இறுதியில் அதே கேள்வியை கேட்டு விட்டார். அவர் சொன்னது போலவே கழுதைகளும் முழுவதுமாக இல்லாமல் போய் விட்டன. இரண்டு பக்கமும் பொதி மூட்டையை சுமந்து செல்லும் கழுதைகள், இரண்டு கால்கள் கட்டப்பட்ட நிலையில் துள்ளிச் செல்லும் கழுதைகள், கர்ண கடூரமாய் சத்தமிட்டுச் செல்லும் கழுதைகள், இன்னும் என்னென்னவோ என் நினைவில் ஊர்வலம் போகின்றன. இப்போ முழுவதுமாய் கண்ணில் படுவதில்லை.
எல்லா உயிர்களும் வாழ்வதற்கானது இந்த பூமி என்று கண் மூடித்தனமாக சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது என்பது என் எண்ணம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!