Bio Data !!

16 September, 2025

பர்தா

அமேசான் ப்ரைம் ல paradha தெலுகுப்படம். தமிழில் வசனம் வருகிறது. இயக்குநர்: praveen kandragula முக்கிய கதா பாத்திரத்தில் நடிப்பவர்கள் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா, சங்கீதா. இப்போ பான் இந்தியா படங்கள் தான் அதிகம். ஆனாலும் இரண்டு மலையாளப் பெண்களையும், ஒரு தமிழ்ப்பெண்ணையும் முக்கிய கதாபாத்திரத்தில் போட்டு எடுத்த தெலுங்குப்படம் என்பதற்காக சிறப்புப் பாராட்டுக்கள். பர்தா என்ற பெயரைப் பார்த்ததும் இஸ்லாமியப் பின்னணியில் கதை இருக்கும் என நினைத்தேன். ஆனால் ஒரு கிராமத்தில் மக்கள், பெண்கள் பர்தா போட்டு முகம் மூடாவிட்டால் குழந்தைகள் பிறந்து உயிரோடு இருக்காது என நம்புகிறார்கள். அத்தனை பெண்களும் வீட்டில் உள்ளவர் தவிர வெளி ஆண்களுக்கு தன் முகம் காட்டுவதில்லை. தன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகிறது. அவள் தன் தோழியுடன் ஒரு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் போது காற்றுக்கு ஒரு நொடி பர்தா பறந்து விடுகிறது. அவள் ஒரு நொடிக்குள் பர்தாவை எடுத்து முகம் மூடி விடுகிறாள். தெரியும் அந்த முழு மதி போன்ற முகத்தை ஒருவன் புகைப்படம் எடுத்து அது ஒரு பத்திரிகையின் அட்டைப் படமாக வந்தும் விடுகிறது. அது நிச்சயம் பண்ணப் போகிற நேரத்தில் தெரிந்து விட நிகழ்வு நின்று விடுகிறது. அவர்கள் வழக்கப்படி அந்தப் பெண்ணைக் கொன்று விட வேண்டும். கொன்று தான் பரிகாரம் தேட முடியும். இன்றும் வட இந்தியக் கிராமங்களில் முகத்தை மூடி மறைத்து பெண்கள் செல்லும் வழக்கம் உண்டு. மறைப்பதனால் தான் பல குற்றங்கள் நடக்கின்றன என்று துணிச்சலாய் உடலரசியல் பேசும் பெண்கள் இருக்கும் உலகில் பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு எதிராய் நடக்கும் குற்றங்களுக்கு காரணமல்ல என்பதை பூடகமாகச் சொல்ல எடுக்கப் பட்ட கதை போல் இருக்கிறது. எடுத்த புகைப்படக் காரரைத் தேடி வட இந்தியாவுக்கு செல்வது போல் வருவதால் பல இயற்கைக் காட்சிகளையும் படம் பிடித்துக் காட்ட ஏதுவாகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் சதி போன்ற வழக்கங்கள் ஒழிய ஒரு பெண் தான் துணிந்து முடிவெடுக்க வேண்டி இருந்தது. அதே போல் இந்த சுப்பு என்னும் பெண் எடுக்கும் முன்னெடுப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒரு பெண் உயர்வடைவதை விரும்புவார்கள் ஆனால் உச்ச பதவியை அடைய எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவள் பெண் என்பதே அவளுக்கு எதிரியாக இருக்கிறது என்பதைச் சொல்லும் ஆமி கதா பாத்திரம் திரைப்படத்தில் முக்கியமான ஒன்று தான். நகைச்சுவைக்காக என்றாலும் ஒரு பெண் தன் கணவன் குடும்பம் குழந்தைகள் தாண்டி சிந்திப்பது அவசியமில்லை என நினைப்பது எவ்வளவு மூடத்தனம் என் பதைக் காட்டும் சங்கீதா கதாபாத்திரமும் நன்றாகக் கையாளப் பட்டு இருக்கிறது. ரொம்ப நல்ல படம். பெண்களுக்கு முக்கியமாய் ரொம்ப பிடிக்கும். என் மதிப்பீடு 4.5/5

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!