Bio Data !!

29 March, 2025

நெஞ்சுக்கும் வயிற்றுக்குமிடையே வட்டமிடும் பட்டாம்பூச்சியின் மென்னி திருகி இளங் காதலின் பரவசத்தை புதைத்து மூடிய மிதப்பில் என்னை யாருமினி ஏங்கி அழ விட முடியாது. உதடு பிதுக்கி புலம்ப விட முடியாது. கண்ணீர் முட்ட கலங்க வைக்க முடியாதென இறுமாந்திருந்தேன். தோற்றுப் போய் பட்டாம்பூச்சிப் படபடப்பு இளங் காதல் பரவசத்தை பிரசவிக்க உணர்ந்தேன் காதலென்பது முற்றாய் அழிக்க முடியா அணுக்களென.
# அழுகை பலமா பலவீனமா? நம் அடிப்படைக் குணங்கள் சிறு வயதிலேயே வெளிப்பட்டு விடும். நான் பொதுவாகவே அவ்வளவு சீக்கிரத்தில் அழுது விட மாட்டேன். அழுகை நம் பலவீனம் என நினைப்பேன். என் சின்ன வயதில் , அனேகமா எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். அப்போ நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். அதன் பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அழுகை பலமா பலவீனமா என்று. எங்க வீட்டுக்கு எதிரே ஒரு மாரி அம்மன் கோயில் உண்டு. தசரா சமயங்களில் அங்கிருந்து கிளம்பும் தேரை வேடிக்கை பார்க்க என் தோழிகளோட குடும்பந்தோட போவேன். என் தங்கை என்னை விட இரண்டு வயது இளையவள். மூத்தவர்களின் கொடுக்கு தானே இளையவர்கள். அவளும் என் கூடவே வருவாள். ஒரு நாள் தேரைப் பார்த்துக் கொண்டு பின்னாலேயே போய் விட்டோம். அது நாலு தெரு சுத்தி வரும். வீட்டுல ரொம்ப நேரம் தேடி இருக்காங்க. திரும்பி வந்ததும் அப்பா கதவைத் திறக்க மாட்டேன்னுட்டாங்க. எனக்கு எப்படியும் திறந்து விட்டுடுவாங்கன்னு தெனாவட்டு. அது இரவு நேரம். என் தங்கை "அப்பா இனி செய்ய மாட்டேன்னு" ஒரே அழுகை. கொஞ்ச நேரத்தில் கதவைத் திறந்து அவளை மட்டும் உள்ளே கூட்டிக்கிட்டு" கல்லுளி மங்கி அழுகை வருதா பாரு" ன்னு என்னைப் பார்த்து ஒரு முறை முறைச்சு சொல்லிட்டு போயிட்டாங்க. நான் வாசல்ல உட்கார்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் என்னையும் உள்ளே கூட்டிக்கிட்டாங்கன்னு வையுங்க. இப்போ சொல்லுங்க அழுகை பலமா பலவீனமான்னு. என்ன நான் சொல்லணுமா? அது இன்னும் புரியாமத் தானேங்க தலைப்பே கொடுத்திருக்கிறேன்.
Hotstar இல் "A Thursday" என்றொரு ஹிந்தி படம் பார்த்தேன். படத்தின் இயக்குநர்: Behzad Khambata. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்பை பேசிப் பேசியே கடந்து போகிறோம். ஆனால் அப்படி, தான் பள்ளிக்கு சென்று வரும் வழியில் வானில் கடைசியாக தனியாக இருக்கும் ஒரு பெண் குழந்தை டிரைவர் மற்றும் ஒருவரால் சீரழிக்கப்பட. குழந்தையின் தாய் பல வருடங்கள் அலைந்தும் காவல் துறையின் நேர்மை அற்ற போக்கினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை. பாதிக்கப்பட்ட பெண் ( யாமி கௌதம்) வளர்ந்து, நடத்தும் ஒரு ப்ளே ஸ்கூலுக்கு அதே டிரைவர் ஒரு குழந்தையை அழைத்து வருவதைப் பார்த்து பதினாறு குழந்தைகளுடன் அந்த டிரைவரையும் தற்செயலாக மாட்டிக் கொண்ட ஒரு வேலைக்காரப் பெண்ணையும் சேர்த்து அறையில் அடைத்து வைத்து போலீஸின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறாள். குழந்தைகளுடன் பேசும் போது முகத்தில் ஒரு குழைவும் அடுத்த நொடி இறுக்கமுமாக அந்த பெண் நடிப்பில் தூள் பரத்துகிறாள். அதே போல் பிரதம மந்திரியாக வருபவரும் ( டிம்பிள் கபாடியா) அழகும் கம்பீரமுமாக நம்மை கவர்ந்து விடுகிறார். வயிற்றில் குழந்தையுடன் பதட்டத்தோடும் பொறுப்போடும் வளைய வரும் காவல் துறை அதிகாரியாக வரும் பெண்ணும் ( Neha Dhupia) நம் மனதை விட்டு நீங்க வெகு நாளாகும். இது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பால் நேரும் விளைவை விளக்கும் படமாதலால் முக்கியமான கதா பாத்திரங்களை எல்லாமே பெண்களாக படைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதுல் குல்கர்னியும் கரண்வீர் ஷர்மாவும் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திரிக்கிறார்கள். குழந்தைகளை விடுவிக்க குற்றவாளி பிரதம மந்திரியிடம் வைக்கும் கோரிக்கை பெண் குழந்தைகளைப் பெற்ற அத்தனை பேருக்கும் ஏன் எல்லோருக்குமே சரியெனவே தோன்றும். தவற விடக் கூடாத ஒரு நல்ல படம்.
# தடுமாறிய தருணங்கள். அழகான தலைப்பு. தடுமாறாத மனிதன் யாரு? தடுமாறப் பயந்து இயங்காத மனிதன் வெற்று மனிதன். அவனை விட விழுந்து விழுந்து எழுபவன் எவ்வளவோ மேல். ரொம்ப வருஷங்களுக்கு முன்னால திருச்சியில ஒரு நெருங்கின சொந்தத்தோட திருமணத்துக்கு போனேன் தனியாக. திருச்சிக்குள்ள ஒரு லோக்கல் பஸ்ஸில் ஏறினேன் . உட்கார இடம் கிடைத்த சந்தோஷம். எனக்கு பொதுவாகவே மூணு பேர் அமரும் சீட்டில் நடுவில் உட்காரப் பிடிக்காது. சான்ட்விச் ஆகிடுவோம். அன்று சரியான கூட்டம். வேற வழியில்லை. நடுவில் மாட்டிக் கொண்டேன். அமர்ந்த கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கிறக்கி விட்டது. அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் என் அருகில் இருந்த பெண் மெல்ல என் கைப்பையைத் திறந்து பர்ஸை எடுத்து மூடியும் விட்டு இறங்கி விட்டாள். நான் இறங்கினதும் அங்கே ஒரு பரிசுப் பொருள் விற்கும் கடை இருப்பது தெரிந்து வாங்கச் சென்றேன். பரிசுப் பொருளைத் தேர்ந்து எடுத்து விட்டேன். பணம் கொடுக்கத் தேடினால் பர்ஸைக் காணோம்( இப்போ அந்த பிக் பாக்கெட் காரங்க எல்லாம் என்ன வேலைக்குப் போயிருப்பாங்க. இது ஜீபே யுகமாச்சே. ) என் பதற்றத்தைப் பார்த்து கடைக்காரர் "எல்லா பொருளையும் எடுத்து வெளியே வச்சு பொறுமையாத் தேடுங்க"ன்னார். இல்லை பறி போய் விட்டது. அப்போ அந்த கடைக்காரர் செய்த விஷயம் தான் பதிவு எழுதத் தூண்டியது. "நீங்க கொண்டு போங்க. திரும்பி வரும் போது பணம் கொண்டு வந்து கொடுங்க"ன்னார். வெளியூர்க்காரப் பொண்ணான என்னை எது அவரை நம்பத் தூண்டியது. இன்று இது நடக்க வாய்ப்பிருக்கிறதா? அந்த தடுமாறிய தருணத்தில் அவர் எனக்குத் தெய்வமாகத் தோன்றினார். "அங்கே பணம் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை. ஊருக்குத் திரும்பிப் போக பணம் தரேன். மொத்தமா மணி ஆர்டர் பண்ணிடுங்க"என்றார். நான் திருமணம் முடிந்து என் அக்காவை அழைத்து விஷயத்தைச் சொல்லி பணம் பெற்றுத் திரும்பும் போது கடையில் கொடுத்து ஊருக்குத் திரும்பினேன். அவ்வளவு அருமையான உலகத்தில் வாழ்ந்த நாம் இப்போ பார்ப்பது என்ன! எவரொருவரையும் சந்தேகக் கண்ணோடே பார்க்கிறோம். ஏமாந்து விடக் கூடாது என்று எப்போதும் உஷாராகவே இருக்கிறோம். காலம் மாறிப் போச்சா? கெட்டுப் போச்சா?

24 March, 2025

# சுட்டு விடும் நிஜங்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிள்ளை வாழாமல் தனித்திருப்பது இன்று நம் கண் முன்னே காணும் வருத்தமான நிஜம். குடும்பத்தில் ஆண்கள் பெண்களை அடிப்பதும், அராஜகம் பண்ணுவதும் அன்று வழக்கமாய் இருந்தது. தன் தாய் கஷ்டப்படுவதை பார்த்து வளர்ந்த பெண் குழந்தைகள் நாம் ஆரம்பத்திலேயே இடம் கொடுத்து விடாமல் துணிச்சலாய் இருக்க வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் எதிர்த்து நிற்பது இன்று பல விவாகரத்துகளுக்குக் காரணம் என்பது சுட்டு விடும் நிஜம் அன்று பெண் குழந்தைகள் கணவரையோ அவர் குடும்பத்தையோ குறை சொல்லி பெற்றவரிடம் வந்தால் "இது பெரிய விஷயமில்லை அனுசரித்து வாழ்" என்று சொல்லிக் கொடுத்தார்கள். இன்றோ " கண்ணின் மணி போல் நாங்கள் பிள்ளையை வளர்த்தது இவர்கள் கஷ்டப்படுத்தவா. முடிஞ்சா பாரு இல்லைன்னா வந்திடு " என்பது இன்றைய பெற்றோரின் போதனையாய் இருப்பதும் விவாகரத்துகளுக்கு ஒரு காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். வரவுக்கேத்த செலவு செய்யணும் என்பது போய் வானளவு ஆசை வளர்த்து திருமணத்தை ஹெலிகாப்டரில் நடத்துவோமா கப்பலில் நடத்துவோமா என்று யோசிப்பதும், தன் அளவில்லாத ஆசைகளை தீர்க்கக் கூடியவனையே திருமணம் செய்ய காத்திருப்பதும் திருமணமாகாத முதிர் கன்னிகளும் இளைஞர்களும் பலரிருக்கக் காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். திருமணமாகுமுன் தன் சகோதரிகள் திருமணத்துக்காகவும், தனக்குத் திருமணமான பின் தன் மனைவி மக்களுக்காகவும் உழைப்பது தன் கடமை என நினைத்து வாழ்ந்த தன் தந்தையர் கதை கேட்ட இளைஞர்கள் ஆரம்பத்திலேயே சுதாரிப்பதாய் நினைத்து பொறுப்பவர்களாய் மாறிப் போவதும் அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கு ஒரு காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது கணவன் சொல்வதையே வேத மந்திரமாய் நினைக்கும் பெண்ணை தாயாய் பார்த்து வளர்ந்த ஆணின், பொருளாதாரத்தில் தன்னைத் தாங்கிப் பிடிக்க வேலைக்குச் செல்லும் பெண் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதைப் புரிந்து கொள்ளாத, ஏற்றுக் கொள்ளாத ஈகோவும் பல விவாகரத்துக்களுக்கு காரணம் என்பதும் சுட்டு விடும் நிஜம். இப்படி சொன்ன சிலவும் சொல்லாத பலவும் சுட்டு விடும் நிஜங்கள்.

22 March, 2025

Amazon prime ல சுழல் பார்த்தேன். ஆமா சுழல் 1 பார்த்து ரொம்ப நாள் ஆகிட்டதால அதை மறுபடியும் பார்த்திட்டுத் தான் சுழல் 2 பார்த்தேன். கண்டிப்பா பாருங்க ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. பல விஷயங்கள் பிடித்திருந்தாலும் பிடிக்காத ஒண்ணு ரெண்டு விஷயங்களும் இருக்குது. அதையும் சொல்றேன். பிடித்த விஷயங்கள்: கோயில் திருவிழாவை மிகவும் சிரமப்பட்டு நிறைய பேரை வைத்து ஷீட் பண்ணி இருக்கிறாங்க. பாராட்டுகள். சூரசம்ஹாரம் நேரில் போய் பார்க்காத பலருக்கும் பார்த்த திருப்தி கிடைக்கும். வேஷம் கட்டியவர்கள் கடைசி நாள் ஏன் கடலில் முங்கி தன் வேஷம் கலைக்கிறாங்கங்கிறதுக்கான காரணம் ரொம்ப சூப்பர். தான் என்ற அகந்தை தானே பல பிரச்னைகளுக்கும் காரணமா இருக்குது. அதை வேஷத்தோடு சேர்த்து கரைக்கத்தான் என்கிறார்கள். அந்த தம்பி கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இரண்டிலும் கலக்கி இருக்கிறாங்க. கூடவே லாலும். கதிர் நடிப்பு underplay. வரம்பு மீறாத மெல்லிய காதல் இரண்டிலுமுண்டு. எடுத்துள்ள கரு மிகவும் வலுவானது. இன்றைய தேதிக்கு இன்றியமையாதது. சிறு குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல். நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்களால் தான் இது நடக்கிறது. அவர்களை நம்பி நாம் குழந்தைகளை விடுவதால். போட்டோகிராஃபி ரொம்ப அருமை. முக்கியமாக கடலில் படகில் வரும் சேஸ் மிக அருமையாக எடுக்கப்பட்டு இருக்கிறது. பிடிக்காத விஷயம். ஏற்கனவே ஆண்கள் படத்தில் நடத்தும் வன்முறை மிக அதிகமாக இருப்பதாக என்னைப் போன்ற பலர் எண்ணும் இச்சமயத்தில் இந்த சீரிஸில் பெண்கள் பெண்கள் மேலேயே நடத்தும் வன்முறை மிகவும் அதிகம். பெண்கள் பெண்களை நெஞ்சிலேயே எட்டி மிதிப்பதாக வரும் போது நமக்கு குலை நடுங்கி விடுகிறது. மொத்தத்தில் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டிய நல்ல வெப் சீரீஸ்

17 March, 2025

இரவானால் உன் கரங்களின் அணைப்புக்குள் கற்பனையாய் அடங்கி விடுகிறேன். புரண்டு படுக்க முடியாமல் நீ என்னைப் புறம் தள்ளுவதில்லை. பாரமாய் அழுத்துகிறேனென புலம்புவதுமில்லை. அணைப்பைக் கொண்டு கலவியில் முடிக்க என் அலுத்த உடலை அவசரப்படுத்துவதில்லை. அகால வயதில் கரு தாங்கி , அலமந்து கூனிக் குருகி பெண் மருத்துவரின் பார்வைக் குறுவாளின் பலி ஆக வேண்டியதில்லை. இரவானால் உன் கற்பனை அரவணைப்பில் அற்புதமாய் உறங்கி விடுகிறேன்.

06 March, 2025

#இயற்கையின் மனிதாபிமானம் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே இயற்கையின் மனிதாபத்தினால் தான். இந்த பதிவின் முடிவில் நீங்களும் என் கருத்துக்கே வந்து விடுவீர்கள். இயற்கை என்பது ஐந்து முக்கிய பகுதிகள் கொண்டது. அவை நிலம், நீர், காற்று, வானம், அக்னி. நிலம் தன் உடலை குலுக்கிக் கொண்டு கொஞ்சம் சரிந்தால் நிலச் சரிவு. இன்னும் கோபம் அதிகம் கொண்டால் பகலில் சரியாமல் இரவில் மக்கள் உறங்கும் போதே சரிந்து அப்படியே கபளீகரம் பண்ணும். நீர் :நிலம் தாய் என்றால் கடல் என்பது தாயின் தாய். அம்மம்மா. அவ்வளவு எளிதில் கோபப்படாது. தன்னிடம் வரும் பேரப் பிள்ளைகளிடம் அலை அலையாய் விளையாடும் அம்மம்மா கோபம் அதிகரித்தால் சுனாமியாய் வந்து மொத்தத்தையும் சுருட்டிச் செல்லும். வானம்: அந்த அம்மம்மாவின் தங்கையான சின்னப் பாட்டி மழை அன்பாய் மழை பொழியா விட்டாலும் சிக்கல். எக்கச் சக்கமாய் பெய்தாலும் சிக்கல்.இந்த மழையை சரியான அளவில் , நேரத்தில் தந்து நம்மைக் காப்பது வானம். சூறாவளியாய் காற்று அச்சுறுத்தாமலும் , அடர் நெருப்பாய் பரவி காடுகளைக் கூட விட்டு வைக்காமல் பஸ்பமாக்காமலும் நம்மைக் காக்கும் அப்பாவாய், அண்ணனாய் காற்றும் நெருப்பும். இப்போ சொல்லுங்க நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே இயற்கை மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதால் தானே. நாம் மனிதாபத்தோடு நடந்து இயற்கையை கோபப்படுத்தாமல் பாதுகாத்து நாமும் பாதுகாப்பாய் இருப்போம்.

04 March, 2025

பட்டாம்பூச்சி மென்னி திருகி

நெஞ்சுக்கும் வயிற்றுக்குமிடையே வட்டமிடும் பட்டாம்பூச்சியின் மென்னி திருகி இளங் காதலின் பரவசத்தை புதைத்து மூடிய மிதப்பில் என்னை யாருமினி ஏங்கி அழ விட முடியாது. உதடு பிதுக்கி புலம்ப விட முடியாது. கண்ணீர் முட்ட கலங்க வைக்க முடியாதென இறுமாந்திருந்தேன். தோற்றுப் போய் பட்டாம்பூச்சிப் படபடப்பு இளங் காதல் பரவசத்தை பிரசவிக்க உணர்ந்தேன் காதலென்பது முற்றாய் அழிக்க முடியா அணுக்களென.